|
ஞானி,
தன் பணியைத் தொடர்கிறான்
செயல்படாமையை மேற்கொண்டு
எனவே, அவன் தன் போதனைகளைப்
போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்
‘லாவோட்சு’
எழுத்தாளனையும் வாசகனையும் எது இணைக்கிறது? இனமா மொழியா தேசமா? இந்தக் குறுகிய
எல்லைகளை எல்லாம் தாண்டியது எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு. மனித இன மேம்பாடு
குறித்த அக்கறையுடையவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் இணைகிற அந்த உறவு. உலகின் ஏதோ
ஒரு மூலையில், ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பைத் தேடிப் படிப்பது, அதைப்
படிக்கச் சொல்லிப் பிறரிடம் கூறுவது, குறிப்பிட்ட படைப்பைத் தந்த எழுத்தாளனின்
மறைவிற்காகத் துக்கப்படுவது இவையெல்லாம் எதனால் நிகழ்கின்றன? நல்ல எழுத்தாளனுக்கும்
நல்ல வாசகனுக்குமான உறவு என்றுமே கசந்துபோவதில்லை. குறிப்பிட்ட எழுத்தாளன் தரமற்ற
படைப்புகளைத் தந்தால் மட்டுமே வாசகனுக்கு அந்த எழுத்தாளனின் மீது லேசான கசப்பு
ஏற்படுகிறது. அந்தக் கசப்புகூடத் தற்காலிகமானது தான். ஆனால் சராசரி
மனிதர்களுக்கிடையில் உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்பட்ட உறவுகள் கசந்துபோவதற்கும்
பொருளாதாரரீதியிலான காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். பொருளாதாரரீதியிலான
உறவுகள் கசந்துபோவதற்கும் பெரிய காரணங்கள் என்று எதுவும் இருக்க வேண்டியதில்லை.
அந்த வகையில் சுந்தர ராமசாமி (1931-2005) என்னும் பன்முகத்தன்மை கொண்ட
எழுத்தாளருக்கும் இமையம் என்ற எனக்குமான உறவு என்பது எழுத்தாளனுக்கும்
வாசகனுக்குமான உறவு. இன்னொரு வகையில் சொன்னால் மூத்த எழுத்தாளனுக்கும் இளம்
எழுத்தாளனுக்குமான உறவு. இந்த உறவு மொழி சார்ந்தது; படைப்பிலக்கியம் சார்ந்தது;
சமூகம் குறித்த அக்கறை சார்ந்தது. இந்த உறவின் அடிப்படை சமூக மேம்பாடு, சமூக
முன்னேற்றம் சார்ந்தது. சுயத் தேவைகள் சார்ந்தது அன்று. சுயத் தேவைகள் சார்ந்து
உருவாகாத காரணத்தால் எங்களுக்கிடையே கடைசிவரை கசப்புகள் ஏற்படவில்லை. மனித உறவில்
கசப்புகள், வெறுப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதுதான் மிக முக்கியமான பண்பும்
அறமும் ஆகும். இந்த இரண்டையும்தான் சுந்தர ராமசாமி தன் வாழ்வின் அடிப்படை அறங்களாகக்
கொண்டிருந்தார். இந்தப் பண்புதான் பல எழுத்தாளர்களை, வாசகர்களை அவரிடம்
கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்தப் பண்பால்தான் எழுத்தாளராக மட்டுமல்ல; எழுத்து
இயக்கமாகவே அவர் இருந்தார். ஓர் எழுத்தாளராக மட்டுமே அவரை வரையறுத்துவிட முடியாது.
1985 மே மாதத்தில் நான் முதன் முதலாக சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். அவர் உயிருடன்
இருந்தவரை மொத்தம் 15 முறைதான் சந்தித்திருக்கிறேன். இதில் 13 முறை இலக்கியக்
கூட்டங்களில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஐந்தாறு முறை தொலைபேசியில்
பேசியிருக்கிறேன். அவை நலம் விசாரிப்புகளாக மட்டுமே இருந்தன. இவ்வளவுதான் எனக்கும்
அவருக்குமான உறவு. நான் அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசியது இரண்டே முறைதான். நான்
அவரைச் சந்தித்த பெரும்பாலான சந்தர்ப்பங்களில் என் தோள்மீது கையைப் போட்டு
அணைத்துக் கொள்வார். அவர் அப்படிச் செய்கிற தருணங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை.
சுந்தர ராமசாமியைத் தவிர வெங்கட் சாமிநாதன் மட்டும் தான் என் தோள்மீது கையைப்
போட்டுக்கொண்டு நடப்பார்.
கொடைக்கானல் எழுத்தாளர் முகாமில்தான் சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தேன். அந்த
முகாமிற்குச் சிறப்பு விருந்தினராக அவர் வந்திருந்தார். எஸ். ஆல்பெர்ட், எம். டி.
முத்துக்குமாரசாமி, ஜே. டி. ஜெரி, டி. தருமராஜன், அரங்க மல்லிகா போன்றவர்கள்தான்
மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்பட்டனர். அதோடு ஓயாமல் சுந்தர
ராமசாமியிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பேச்சு நீண்ட நாள்
பழகிய நண்பர்களுடையதைப் போன்றிருந்தது. அவர்கள் பேசிக்கொள்வதை நான் வேடிக்கை
மட்டுமே பார்த் தேன். அப்படி நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம்
சுந்தர ராமசாமி என்பவர் யார் என அன்று எனக்குத் தெரியாது.
அதற்கு முன் அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை; அவருடைய எழுத்தை நான்
படித்திருக்கவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியம் என்றால் என்ன,
இலக்கியவாதிகள் யார் என்பது குறித்து எந்தத் தகவலுமே எனக்கு அப்போது தெரியாது.
அதனால் அன்று சுந்தர ராமசாமி பார்ப்பதற்கு வாட்டசாட்டமான மனிதர் என்பதற்குமேல் எந்த
அபிப்ராயமும் எனக்கு ஏற்படவில்லை. ஒரு நாள் தான் அந்த முகாமில் அவர் இருந்தார்.
ஆனால் அந்தப் பயிற்சி முகாம் முடியும்வரை அவருடைய பெயரும் அவர் எழுதிய
எழுத்துக்களும் பேசப்பட்டன. சுந்தர ராமசாமி பெயரோடு பல பெயர்கள் திரும்பத்
திரும்பச் சொல்லப்பட்டன. அந்தப் பெயர்களில் ஜெயகாந்தன், மௌனி, கு.ப.ரா, தி.
ஜானகிராமன், பிரமிள், புதுமைப்பித்தன், ஞானக் கூத்தன், அசோகமித்திரன், கலாப்ரியா,
கி.ராஜநாராயணன், சண்முகசுந்தரம், சா. கந்தசாமி, லா. ச. ராமாமிர்தம் போன்ற பெயர்கள்.
அதற்குமுன் இந்தப் பெயர்களை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை. இவர்கள் எழுதிய
இலக்கியப் படைப்புகள் குறித்தும் நான் அறிந்திருக்கவில்லை. காரணம் அன்று இலக்கியம்
என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அந்த முகாமில் பசுவய்யாவின் ‘சவால்’, ‘பின்
திண்ணைக்காட்சி’ கவிதைகளைப் படித்துக்காட்டி, அக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் விதம்,
பயன்படுத்தியிருக்கும் படிமங்கள், நுணுக்கங்கள், பூடகத்தன்மை குறித்தெல்லாம்
ஆல்பெர்ட் விரிவாக விளக்கிப் பேசினார். பசுவய்யாவின் கவிதையும் புரியவில்லை; அதை
விளக்கிப் பேசிய ஆல்பெர்ட்டின் பேச்சும் புரியவில்லை. பசுவய்யாவின் கவிதையிலோ
ஆல்பெர்ட்டின் பேச்சிலோ நான் எதிர்பார்த்த புரட்சி, விடியல், வர்க்கப் போராட்டம்
எதுவுமே இல்லை. இவை இல்லாத கவிதை என்ன கவிதை?
சுந்தர ராமசாமி கட்டுரைகள் (க்ரியா வெளியீடு) என்னும் நூலை ஆல்பெர்ட் 1986இல்
என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதுதான் நான் படித்த சுந்தர
ராமசாமியினுடைய முதல் புத்தகம். அந்தப் புத்தகத்தைப் படித்தபோது எனக்குக் கவிதைப்
புத்தகத்தைப் படிப்பதுபோலவே இருந்தது. அப்படி ஒரு வளமான உரைநடை நூலை அதற்குமுன்
நான் படித்ததே இல்லை. அதன் மூலம் தான் நான் சுந்தர ராமசாமி என்னும் எழுத்தாளரை
அறிந்துகொண்டேன். இந்த அறிமுகம் பலமாக அமைந்தது. இதன் பிறகு தான் பசுவய்யாவின்
கவிதைகளைப் படித்தேன். பிறகு பள்ளம் என்னும் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன்.
மலையாளத்திலிருந்து அவர் மொழி பெயர்த்திருந்த செம்மீனையும் (1962) தோட்டியின்
மகனையும் (1951) படித்தபோது எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புகளை
விவரிப்பது எளிதல்ல. இப்படித்தான் எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான உறவு வளர்ந்தது.
அவருடைய எழுத்துக்களை நான் தேடித்தேடிப் படித்தேன். இந்தப் படிப்பால் எனக்கும்
அவருக்குமான உறவு பலப்பட்டுக்கொண்டே வந்தது. இதே காலத்தில் எஸ். ஆல்பெர்ட், க.
பூர்ணச்சந்திரன், நவீனம் புத்தகக் கடை விஜயகுமார் போன்றவர்கள் சுந்தர
ராமசாமியினுடைய எழுத்துக்கள் குறித்துப் பேசிப்பேசி எனக்குள் ஒரு பிம்பத்தை
உருவாக்கினார்கள். அந்த பிம்பத்தால் அவர்மீதும் அவருடைய எழுத்துக்கள்மீதும் மிகுந்த
ஈடுபாடு ஏற்பட்டது. அந்த ஈடுபாட்டால்தான் அவர் 1988இல் காலச்சுவடை ஆரம்பித்தபோது
திருச்சி நண்பர்களோடு சேர்ந்து நானும் சந்தாக் கொடுத்தேன். நண்பர்களிடமும் சந்தா
வசூலித்துக் கொடுத்தேன். காலச்சுவடை நானே ஆரம்பிப்பது போல ஓர் உணர்வு இருந்தது.
1994இல் மதுரை என்.சிவராமன் வீட்டில்தான் நான் மீண்டும் சுந்தர ராமசாமியைச்
சந்தித்தேன். கோவேறு கழுதைகள் நாவலுக்கான விமர்சனக் கூட்டத்தை வர்ஷா விஜயகுமார்
ஏற்பாடு செய்திருந்தார். அதற்காகத் தான் சுந்தர ராமசாமி வந்திருந்தார். விமர்சனக்
கூட்டத்தில் அவர் ஒரு அரை மணிநேரம் பேசியிருப்பார். அப்போதுதான் முதன்முதலாக நான்
அவருடைய மேடைப் பேச்சைக் கேட்டேன். தடங்கலே இல்லாமல், தயக்கமே இல்லாமல்
எழுதிவைத்துப் படிப்பது மாதிரி ஒருவர் பேச முடியுமா? அதோடு அவருடைய இன்னொரு முகம்
வெளிப்பட்டதை அன்று பார்த்தேன். ஒரு எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளன் மனம் திறந்து
பாராட்டுவது தமிழில் மிகவும் குறைவு. இதற்கு நேரெதிரான குணத்தைக் கொண்டிருந்தார்
அவர். புகழ்பெற்ற எழுத்தாளனை, நீண்ட காலமாக எழுதிக்கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளனைப்
பாராட்டுவது, புகழ்ந்து பேசுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒரே ஒரு நாவலை
மட்டுமே எழுதியுள்ள, அதுவும் நாவல் வந்த இரண்டே மாதத்தில் தூக்கிவைத்துப் பேசுகிற
குணம் அவரிடம் மட்டுமே இருந்தது. “மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும்
பிரிவுகளின் சகல கீழ்மைகளையும் மனம் திறந்து கலைபூர்வமாக முன்வைத்து மனித துக்கத்தை
இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும்
சரி, இதற்கு இணையாகச் சொல்லத் தமிழில் மற்றொரு நாவல் இல்லை” என்று பேசினார்.
அந்தப் பேச்சு என்னை மட்டுமல்ல; அங்கு வந்திருந்தவர்களுக்கு மட்டுமல்ல;
தமிழகத்திலிருந்த எல்லா இலக்கியவாதிகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பேச்சும்
அதைத் தொடர்ந்து காலச்சுவடு (அக்டோபர் 1994) இதழில் கோவேறு கழுதைகளுக்கு அவர்
எழுதிய விமர்சனமும் இலக்கியவாதிகளுக்கிடையே ஒரு சலசலப்பை உருவாக்கின.
கோவேறு கழுதைகள் நாவலை மிகையாகப் பாராட்டி எழுதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அவர்
கடைசிவரை பொருட்படுத்தவுமில்லை, தன் கருத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை என்பது
அவருடைய ஆளுமையையே காட்டுகிறது. அவர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தவர், சூது,
தந்திரம், சமரசம் செய்துகொள்ளாத எழுத்தாளராகவே கடைசிவரை இருந்தார் என்பதற்கு
உதாரணமாகும். பிறருடைய புத்தகத்தைப் பொருட்படுத்திப் படிக்கிற, படித்த புத்தகம்
குறித்த மதிப்பீடுகளை எந்தவிதமான மனத்தயக்கமும் இல்லாமல் பேசுகிற, எழுதுகிற பண்பு
அப்போது இருக்கவே செய்தது. என்.சிவராமன் வீட்டிலும் கோவேறு கழுதைகள் நாவல்
விமர்சனக் கூட்டத்திலும் நானும் அவரும் அன்று ஒரு வார்த்தைக்கூடப்
பேசிக்கொள்ளவில்லை.
அசைட் (ஏப்ரல் 1995) ஆங்கில இதழுக்குப் பேட்டி அளித்தபோது, கோவேறு கழுதைகள்
நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.
தனக்குக் கிடைக்காத ஒரு விருதை ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதியுள்ள எழுத்தாளனுக்குத்
தர வேண்டும் என்று வற்புறுத்திய ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமி. இந்தக் குணம்
என்னிடமும் கிடையாது. தன்னுடைய எழுத்து மட்டுமல்ல; பிறருடைய எழுத்தும் மதிப்பு
வாய்ந்தது, மதித்துப் போற்றப்பட வேண்டியது என்னும் எண்ணம் அவரிடம் இருந்தது.
பரந்துபட்ட மனம் அவரிடம் தான் இருந்தது; அவருக்கு மட்டும் தான் இருந்தது. இந்த
நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குமுன் எனக்கும் அவருக்கும் நேரடியான சிறு தொடர்புகூட
இருந்ததில்லை.
1994 கடைசியில் நான் சுந்தர ராமசாமியைச் சந்திப்பதற்காக முதன்முறையாக
நாகர்கோவிலுக்குச் சென்றேன். விடியற்காலை ஐந்து மணிக்குப் பேருந்து நிலையத்திலேயே
குளித்துவிட்டு எட்டு மணிவாக்கில் தான் நான் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.
கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒன்பது மணி வாக்கில் வந்தார் சுந்தர ராமசாமி.
என்னைச் சாப்பிட அழைத்தார். சாப்பிடும்போது என்னுடைய பயணம் எப்படி இருந்தது என்பது
பற்றி மட்டும் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு மேல் அவரும் கேட்கவில்லை. நானும்
வாயைத் திறக்கவில்லை. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். மீண்டும் மதியச்
சாப்பாடு. அப்போது க்ரியா ராமகிருஷ்ணன் குறித்துச் சில கேள்விகளைக் கேட்டார்.
அவ்வளவுதான். சாயுங்காலம் ஹாலில் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது
என்னைப் பற்றி, என்னுடைய குடும்பம், என் சகோதரர் தி. மு. க. வில் சட்டமன்ற
உறுப்பினராக இருந்தது, அது தொடர்பான அரசியல் சூழல் இப்படித்தான் அந்த ஒரு மணி
நேரமும் கழிந்தது. இலக்கியம்-எழுத்தாளர்கள்-சிறு பத்திரிகைகள் குறித்து அவரும்
பேசவில்லை. நானும் வாயைத் திறக்கவில்லை.
அன்று மட்டுமல்ல நானும் அவரும் கூட்டத்திலும் சரி, தனியாக சந்தித்தபோதும் சரி,
இலக்கியம் தொடர்பான ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொண்டது கிடையாது. நான்
ஆரம்பித்திருந்தால் அவர் பேசியிருக்கக்கூடும். அந்தப் பேச்சைத் தொடர்ந்து
வளர்த்திருப்பார். கடைசிவரை நான் அந்த வாய்ப்பை அவருக்குத் தரவே இல்லை. அதற்குக்
காரணம் பயம்தான். அவரிடம் பயம்கொள்ள, தயக்கம்கொள்ளத் தேவையில்லை என்பது
தெரிந்திருந்தும்கூட என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
1994இல் நாகர்கோவிலில் சந்தித்த பிறகு, தமிழ்இனி 2000 மாநாட்டில் தான் சுந்தர
ராமசாமியைச் சந்தித்தேன். அதைச் சந்திப்பு எனச் சொல்ல முடியாது. மாநாட்டின்
தொடக்க உரையாக அவர் பேசும்போது பார்வையாளனாக இருந்து அவருடைய பேச்சைக் கேட்டேன்.
அதன் பிறகு புதுச்சேரியில் நடைபெற்ற மௌனி கருத்தரங்கில் பார்த்தேன். பார்வையாளனாக
இருந்து மட்டுமே பார்த்தேன். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு நான் வந்தது அவருக்குத்
தெரியுமோ தெரியாதோ?
தமிழ் இனி 2000 மாநாட்டின் துவக்க உரையைவிட மௌனி குறித்த கருத்தரங்கில் அவர் பேசிய
பேச்சு மிகவும் முக்கியமானது. அந்தப் பேச்சு ஆளை மயக்கக்கூடிய, வசீகரிக்கக்கூடிய
பேச்சு. அவர் பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் சொல்வது
பொய்யல்ல என்பது அவருடைய பேச்சைக் கேட்டவர்களுக்குத் தெரியும். பார்த்துப்
படித்தால்கூட அவ்வளவு துல்லியமாக ஏற்ற இறக்கத்துடன், போதிய இடை வெளிவிட்டுப்
படிக்க முடியாது. அவ்வளவு கச்சிதம். பிசிறு என்பதே அவருடைய பேச்சில் இருக்காது.
மனப்பாடம் செய்துகொண்டு வந்து பேசுவாரோ என்றுகூட நான் சந்தேகப்பட்டதுண்டு. எந்த
வார்த்தையில் ஆரம்பித்து எந்த வார்த்தையில் பேச்சை முடிக்க வேண்டும் என்பது
அவருக்குத் தெரியும். ஏற்கெனவே பேசுவதற்காகத் தீர்மானித்து இருந்த வார்த்தைகளில்
ஒன்று கூடவும் செய்யாது; இன்னொன்று குறையவும் செய்யாது. திடீரென்று அவருடைய
பேச்சில் ஒரு சொல்லோ சம்பவமோ இடம் பெறாது. பேச்சில் மட்டுமல்ல, அவருடைய
படைப்புகளில் இதே கச்சிதத் தன்மையை காண முடியும். அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற -
2004இல் ‘தமிழ் நாவல்கள்’ குறித்த கருத்தரங்கில் அவர் பேசும்போது நான்
பார்வையாளனாக இருந்திருக்கிறேன். 2004-ஜனவரியில் ‘கதா சூடாமணி விருது’ சுந்தர
ராமசாமிக்கு வழங்கப்பட்டபோது அதற்கு ஏற்புரை வழங்கினார். கதா சூடாமணி விருது
வழங்கப்பட்ட மறுநாள் தில்லியிலுள்ள சாகித்திய அகாடமி அலுவலகத்தில் ‘எழுத்தாளர்
சந்திப்பு’க் கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். அவருடைய
உரை ஆங்கிலத்தில் இருந்தது. டைப் செய்த உரையைப் படித்ததை முதன்முதலாகப் பார்த்தேன்.
தமிழில் பேசும்போது வசீகரித்த அளவுக்கு அவருடைய ஆங்கிலப் பேச்சு ஈர்க்கவில்லை
என்றுதான் நான் நினைக்கிறேன்.
சென்னை புக் பாயிண்ட்டில் 1998 டிசம்பரில் நடந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவல்
வெளியீட்டு விழாவில் சுந்தர ராமசாமியினுடைய பேச்சைக் கேட்டேன். அன்று நான் அவரைச்
சந்திக்காமலேயே சென்றுவிட்டேன். மறுநாள் காலை அவர் எக்மோரில் தங்கியிருந்த ஒரு
லாட்ஜில் சென்று சந்தித்தேன். வழக்கமான இரண்டு மூன்று கேள்விகளோடு அந்தச்
சந்திப்பு முடிந்தது. அதன் பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சென்னை உட்லண்ட்ஸ்
ஓட்டலில் தங்கியிருந்தபோது பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போது அவருடன் கமலா
சுந்தர ராமசாமியும் பத்திரிகையாளர் மணாவும் இருந்தனர். அந்தச் சந்திப்பு ஐந்து
அல்லது பத்து நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
மதுரையிலுள்ள லாட்ஜில் தங்கியிருந்த அவரை என். சிவராமன், சுரேஷ் குமார் இந்திரஜித்
ஆகியோருடன் சென்று பார்த்தேன். அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்ததை நான்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணிநேரம் லாட்ஜில் இருந்தோம்.
இதுதான் எனக்கும் அவருக்குமான உறவு. இந்தச் சந்திப்புகள் இல்லாமல் என்னையும்
அவரையும் இணைத்த மூன்று சம்பவங்கள் இருக்கின்றன.
2.2.2002இல் திருச்சியில் எனக்கு ‘அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு’ கொடுத்தார்கள்.
அந்த நிகழ்ச்சிக்குச் சுந்தர ராமசாமி வந்தால் நன்றாக இருக்கும் என நிகழ்ச்சியின்
ஒருங்கிணைப்பாளர் அமுதன் அடிகளிடம் நான் கட்டாயப்படுத்திக் கூறினேன். திருச்சிக்கு
வர முடியுமா என்று சுந்தர ராமசாமியிடம் அமுதன் அடிகள் கேட்டதற்கு வர முடியாது என்று
அவர் கூறிவிட்டார். எவ்வளவு வலியுறுத்தியும் அவர் திருச்சிக்கு வரச்
சம்மதிக்கவில்லை. அமுதன் அடிகள் விசயத்தை என்னிடம் கூறினார். அதற்கு நான் எஸ்.
ஆல்பெர்ட்டையும் க. பூர்ணச்சந்திரனையும் விட்டுப் பேசவையுங்கள் என்று சொன்னேன்.
அதே மாதிரி அவர்கள் இருவரையும் அமுதன் அடிகள் பேசவைத்தார். சுந்தர ராமசாமி
நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். இலக்கியத்தைவிட அவர் நண்பர்களுக்கே முன்னுரிமை
தந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம். நிகழ்ச்சிக்குத் திருச்சியிலுள்ள தமிழ்நாடு
ஹோட்டலிலிருந்து சுந்தர ராமசாமி, சல்மா ஆகியோருடன் நானும் சென்றேன். ஹோட்டலிலும்
சரி, காரிலும் சரி, மேடையிலும் சரி மொத்தத்தில் பத்து வார்த்தைகளுக்குமேல் அன்று
பேசியிருக்க மாட்டோம்.
திருச்சிக்கு நண்பர்களுக்காக வந்ததுபோலவே எனக்காக விருத்தாசலத்திற்கும் ஒருமுறை
வந்தார். அது புதுச்சேரியில் நடை பெற்ற மௌனி குறித்த கருத்தரங்குக்கு மறுநாள்.
விழுப்புரத்தில் ரயில் ஏற இருந்த சுந்தர ராமசாமியை அதே ரயிலில் விருத்தாசலத்தில்
ஏறும்படி கேட்டுக்கொண்டேன். இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்துதந்தவர் கண்ணன்தான்.
பாண்டிச்சேரியில் எழுத்தாளர் பா.விசாலம் வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.
அவரையும் திருமதி கமலா சுந்தர ராமசாமி அவர்களையும் நான்தான் அழைத்து வந்தேன்.
அவரிடம் பேசுவதற்கு அதைவிட மிகச் சிறந்த வாய்ப்பு எதுவுமே இல்லை. ஆனால் நான்
எதையும் பேசவில்லை. விருத்தாசலத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘சுந்தர ராமசாமியுடன் ஒரு
சந்திப்பு’ கூட்டத்திற்கு நிறையப் பேர் வர வேண்டும்; ஒலிபெருக்கிக் கோளாறு செய்யக்
கூடாது; மின்சாரம் நின்றுவிடக் கூடாது எனப் பல கவலைகள். இந்தக் கவலையில் என்ன பேச
முடியும்? எல்லாவற்றும் மேலாக அந்தக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி குறித்து நான்
என்ன பேச வேண்டும் என்ற கவலையும் இருந்தது. அவரும் கூட்டத்தில் தான் என்ன பேச
வேண்டும் என்பது குறித்து யோசித்துக்கொண்டு வந்திருக்கலாம். ஆக இருவருமே
பேசவில்லை. கிட்டத்தட்ட விரோதிகளைப் போல ஒரே காரில் உட்கார்ந்து இருந்தோம்.
வடலூர் வந்தபோது வள்ளலாருடைய சபையைப் பார்க்கலாமா என்று கேட்டேன். “ஓ, தாராளமா”
என்று சொன்னார். சபையைச் சுற்றிப் பார்த்தோம். பிறகு நேரே என்னுடைய வீட்டுக்கு
வந்து டீ மட்டும் குடித்தார். பிறகு கூட்டம் நடக்க இருந்த இடத்திற்கு சென்றோம்.
நல்லகூட்டம் கூடியிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுந்தர ராமசாமியினுடைய
எழுத்துக்கள் என்னை எப்படி வசீகரித்தன என்பது குறித்து முதலில் நான் பேசினேன்.
பிறகு சுந்தர ராமசாமி பேசினார். சரியாக ஒரு மணிநேரம் பேசினார். அடுத்த ஒரு மணிநேரம்
பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் தந்தார்.
இரவு 9:15 மணிக்கு வரவேண்டிய ரயில் காலதாமதமாக வந்துகொண்டிருந்தது. அதனால் நானும்
சுந்தர ராமசாமியும் பிளாட்பாரத்தில் சிறிது தூரம் நடந்தோம். அப்போது “ஏன்
பதற்றமாக இருக்கிறீர்கள்? என்னைப் பத்திரமாகக் கண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற
கவலையா?” என்று கேட்டார். “நீங்கள் கண்ணனுடைய சொத்தல்ல. கண்ணனுடைய அப்பாவாக
மட்டுமே நீங்கள் இருந்திருந்தால் எனக்கும் உங்களுக்கும் எந்த உறவும்
இருந்திருக்காது. அப்படி இருந்திருந்தால் இன்று நீங்கள் விருத்தாசலத்திற்கு
வந்திருக்கமாட்டீர்கள். அதற்கான அவசியமும் இருந்திருக்காது. நீங்கள் ஒரு பொதுச்
சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கும் இருக்கிறது” என்று
சொன்னபோது, என்னுடைய தோளில் கையைப் போட்டு அணைத்துக்கொண்டார்.
சுந்தர ராமசாமியுடனான சந்திப்புகளிலேயே மிகவும் முக்கியமானதும் என் வாழ்க்கையில்
மறக்க முடியாததுமான சந்திப்பு என்றால் அது குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல்
இரண்டாம் பதிப்பு வருவதற்கு மூன்று நான்கு மாதத்திற்கு முன்பு நான் அவரை நாகர்
கோவிலில் அவருடைய வீட்டில் 2002இல் சந்தித்ததுதான். அது எப்போதும்போல் இல்லாமல்
இரண்டு நாள் நீடித்தது. தனி அறையில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கிட்டத்தட்ட
காதலர்களைப் போல இருந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தை கண்ணன் தான் ஏற்பாடு
செய்துதந்தார். முதல்நாள் மாலைவரை நான் எதுவுமே அவரிடம் பேசவில்லை. ஏழு மணிவாக்கில்
தான் நான் “குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரக்கூடிய ஸ்ரீதர், தன் படிப்பைப்
பாதியிலேயே விட்டு விட்டு வருவதற்குமுன் இந்தியாவுக்கு வந்தானா?” என்று கேட்டேன்.
“இல்லியே” என்று கூறினார். “அப்படியானால் ஸ்ரீதர் அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்த
பொருள் ஒன்று ரமணி அறையில் இருப்பதாக 46ஆம் பக்கத்தில் குறிப்பு வருகிறதே” என்று
சொன்னேன். அதோடு என் கையிலிருந்த பிரதியை அவரிடம் கொடுத்துப் பார்க்கச்
சொன்னேன். பார்த்தார். வேறு ஒன்றுமே சொல்லவில்லை. “மாத்திடலாம்” என்று மட்டுமே
சொன்னார். நாவலில் எனக்குள்ள சந்தேகங்களைப் படிப்படியாகக் கேட்க ஆரம்பித்தேன்.
என்னுடைய தயக்கத்திற்கும் பயத்திற்கும் அவசியமே இல்லை என்பது பேசப் பேசத்தான்
எனக்குப் புரிந்தது. சிறிதுநேரம் கழித்து அவருடைய அறையில் உட்கார்ந்து பேச
ஆரம்பித்தோம். ஒரு இடத்தில் நான் “ஆங்கிலத்தில் யோசித்துத் தமிழில்
எழுதுகிறீர்களா?” என்று கேட்டேன். “அப்படிச் சொல்ல முடியாது” என்று சொன்னார்.
அதற்கு நான் “எனக்கு வெளிக்காற்று வேண்டும் என்று எஸ். ஆர். எஸ் கூறுவதுபோல
இருக்கிறது. இந்த வடிவம் மி ஸீமீமீபீ யீக்ஷீமீsலீ ணீவீக்ஷீ என்ற ஆங்கிலப் பதத்தின்
நேரடி மாற்றம்போல இருக்கிறது” என்று சொன்னேன். சிரித்துக்கொண்டே
“தமிழ்ப்படுத்திடலாம்” என்று சொன்னார். பென்சிலை எடுத்துக் குறித்துக்கொண்டார்.
இப்படி அவருடைய அறையில் இரண்டு நாள்கள் கழிந்தன. நான் நாகர்கோவிலுக்குச் சென்ற
வேலை முடிந்து திரும்பும்போது இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களை நினைத்துப்
பார்த்தேன். வியப்பாக இருந்தது. அதிகமாகச் சந்தித்துக் கொள்ளாமல், அதிகமாகப்
பேசிக் கொள்ளாமல் எப்படி இப்படியொரு நெருக்கமான உறவு ஏற்பட்டது? இன்றுவரை அதற்கான
காரணம் எனக்குப் புரியவில்லை. செறிவும் நுட்பமும் சூழலும் கொண்ட அவருடைய
எழுத்துக்கள்தான் காரணமாக இருக்கும்.
அந்த இரண்டு நாளும் நான் பார்த்த சுந்தர ராமசாமி புனிதர் அல்ல. மனிதர்களை அசட்டை
செய்யாத, மனிதர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்திய, மதித்த ஒரு மனிதர். எப்படிப்பட்ட
மனிதர்களிடமிருந்தும் விசயங்களைக் கற்றுக்கொள்ள முடியும், தெரிந்துகொள்ள முடியும்
என்று நம்பிய மனிதர் மட்டுமல்ல; கற்றுக்கொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும்
கண்களையும் காதுகளையும் மனத்தையும் எப்போதும் திறந்தே வைத்திருந்த மனிதர். எந்த
நிலையிலும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவனே படைப்பாளன். கற்றுக்கொள்ளாதவன்
தேங்கிப் போகிறான். கற்றுக்கொடுப்பது என்பது, தானே கற்றுக்கொள்வதுதான். தன்னைவிட
உயர்ந்தவன், அறிந்தவன் எவனும் இல்லை என இறுகிப்போன மனத்திற்கு இலக்கியப் படைப்பு
சாத்தியமல்ல. சுந்தர ராமசாமி ஒரு எழுத்தாளராக இருந்தார். இறுமாப்போ இறுகிப்போன
மனமோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. பிறர் சொல்வதைச் சரியோ தவறோ
காதுகொடுத்துக் கேட்கிற பக்குவம் எனக்குமில்லை. என் தலைமுறையைச் சார்ந்த எந்த
எழுத்தாளனுக்கும் இல்லை. இந்தப் பண்பு சுந்தர ராமசாமியிடம் இருந்தது. இந்தப்
பண்பால்தான் அவர் எழுத்தாளராக மட்டுமல்ல, எல்லோராலும் மதிக்கப்படுகிற
எழுத்தாளராகவும் இருந்தார். பிறர் சொல்வதைக் கேட்கிற, சொன்னதை மதித்துப்
பரிசீலித்துப் பார்க்கிற குணம் தொடக்க காலத்திலிருந்தே அவரிடம் இருந்திருக்கிறது
என்பதற்கு 31.10.1997இல் காற்றில் கலந்த பேரோசை நூலுக்கு அவர் எழுதியுள்ள
பின்னுரையில்:
“1956இல் க.நா.சு.வைச் சந்தித்தேன். அவருடைய தொடர்பால் ஒரு படைப்பைச் சுதந்திரமாக
மதிப்பிட அவசியமான தெளிவையும் நம்பிக்கையையும் பெற்றேன்” என்று எழுதியிருக்கிறார்.
பிறரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று அறிவித்த வேறு ஒரு தமிழ் எழுத்தாளனை என்னால்
அடையாளம் காட்ட முடியாது. இது மட்டுமல்ல இப்படிப் பல பண்புகளை அவர்
பேணியிருக்கிறார். குறிப்பாக அவருடைய ஒவ்வொரு நூலின் முன்னுரையிலும் பல பெயர்கள்
இடம்பெறும். அந்த நூலுக்கு எந்தெந்த வகையில் யார் யார் உதவினார்கள் என்று பட்டியல்
இருக்கும். இது அவருடைய ஒளிவு மறைவற்ற தன்மைக்கு உதாரணம். இதை நாம் காற்றில் கலந்த
பேரோசை நூலின் முன்னுரையில் : “என் மதுரை நண்பர்களான சிவராமன், ரமணி, என். எஸ்.
விஜய குமார் ஆகியோரிடம் படித்துக் காட்டினேன். அவர்கள் கூறிய யோசனைகள் என்
மொழியைத் தெளிவுப்படுத்திக்கொள்ள உதவின” என்று எழுதியதிலிருந்து அறிந்துகொள்ள
முடியும். இதே போன்று 21.2.1991இல் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமி
சிறுகதைத் தொகுப்பிலும் எழுதியிருக்கிறார். “என் கதைகள், நாவல்கள், கட்டுரைகள்
ஆகியவற்றிலுள்ள பிழைகளைத் திருத்தி உதவி வருபவர்கள் நண்பர்கள் கே. நாராயணனும் அ.
ஸ்ரீனிவாசனும். நவீன எழுத்தாளனின் மொழிப் பிரச்சினைகளையும் படைப்புப்
பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு இருக்கும் சிரத்தை காரணமாக எழுந்த
விவாதங்கள் என்னைச் செழுமைப்படுத்திக்கொள்ள உதவியிருக்கின்றன” என்று
எழுதியிருப்பதோடு, அதே முன்னுரையில் இன்னொரு முக்கியமான விசயத்தையும் அவர்
எழுதியிருக்கிறார். அது “என் வளர்ச்சி, மாற்றங்கள், தடுமாற்றங்கள், கவலைகள்
எல்லாவற்றையும் என் வாசகர்கள் தெரிந்துகொள்ள வசதியாகக் கதைகளைக் காலக்கிரமத்தில்
தந்திருக்கிறேன்.” இப்படிச் சொல்வதற்கு, எழுதுவதற்கு ஒரு மனத் தைரியம் வேண்டும்.
அந்தத் தைரியம் என்னிடம்கூட இல்லை. நான் இதுவரை ஐந்து புத்தகங்கள்
எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட முன்னுரையை நான் எழுதியதில்லை. இப்படி
வெளிப்படையாக எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளர் சுந்தர ராம சாமி மட்டும்தான். அப்படி
எழுதிய காரணத்தால்தான் இன்று அவரைப் பற்றிப் பேச நேர்ந்திருக்கிறது. இப்படிப் பேச
நேர்வதுதான் பொய்க் கலப்பில்லாத பேச்சாக இருக்கும்.
சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு, அவருடைய நண்பர்களாலும் என்னுடைய
நண்பர்களாலும் ஏற்பட்டதுதான். 1992வரையில் திருச்சி நண்பர்களான எஸ். ஆல்பெர்ட், க.
பூர்ணச்சந்திரன், ராஜன் குறை, நவீனம் புத்தகக்கடை விஜயகுமார் போன்ற பல நண்பர்களால்
உருவாக்கப்பட்ட சித்திரம் எதுவோ அதுதான் எனக்குள் இருக்கிற சுந்தர ராமசாமி என்ற
எழுத்தாளர். 1992க்கு பிறகு க்ரியா ராமகிருஷ்ணன், மதுரை என். சிவராமன், என். ரமணி
போன்ற பல நண்பர்கள் பேசுகிற, விவரிக்கிற, உருவாக்குகிற சித்திரங்கள்தான் எனக்குள்
இருக்கிற சுந்தர ராமசாமி. இந்த நண்பர்கள் பேசிய பேச்சைக் கேட்டுக்கேட்டு எனக்கு
சுந்தர ராமசாமி மீதும் அவருடைய எழுத்துமீதும் மிகுந்த மதிப்பும் ஈர்ப்பும்
உண்டாயின. கிட்டத்தட்ட அதைக் கவர்ச்சி என்றுகூடச் சொல்லலாம். இன்று மட்டுமல்ல
எப்போதுமே அந்தக் கவர்ச்சியிலிருந்து விடுபட முடியாது என்று தான் தோன்றுகிறது.
அவருடைய நண்பர்களைச் சந்திக்கும்போதெல்லாம் புதுப்புதுத் தகவல்கள், செய்திகள்,
சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. பேசித்தீராக் கதைகளாக அவை வளர்ந்துகொண்டே
இருக்கின்றன. நாங்கள் சந்திக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெரும்பகுதி நேரம்
அவர்தான் எடுத்துக்கொள்கிறார். திரும்பத்திரும்ப நாங்கள் அவரைப் பற்றித்தான்
பேசிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்களுடைய வாழ்க்கையில்
சுந்தர ராமசாமி என்னும் எழுத்தாளனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.
காலத்தோடும் சமூகத்தோடும் நேரடித் தொடர்புகொண்ட எழுத்தாளர்கள் வெகு சிலரே. அந்த
வெகு சிலரில் சுந்தர ராமசாமி முதன்மையானவராக இருந்தார். நான் மட்டுமல்ல தமிழ்
இலக்கிய உலகம் அவருடைய வளமான உரைநடையையும் படைப்புத்திறனையும் எளிதில் மறக்காது.
எழுத்தாளன் மட்டுமே படைப்பை உருவாக்குவதில்லை. வாசகனும் சேர்ந்துதான் படைப்பை
முழுமையடையச் செய்கிறான் என்பதில் உறுதியாக இருந்த எழுத்தாளர் அவர். அதனால்தான்
அவர் இளம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஊக்குவிப்பதையே முதல்
நோக்கமாகக்கொண்டிருந்தார்.
சுந்தர ராமசாமி இறந்த செய்தி எனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரியவந்தது. நண்பர்களிடம்
கேட்டுச் செய்தியை உறுதிசெய்து கொண்டேன். செய்தியை நம்ப முடியவில்லை.
நம்புவதற்குச் சிரமமாக இருந்தது. அவரை அருகில் இருந்து பார்த்த தருணங்கள், மேடையில்
பேசும்போது பார்த்த நேரங்கள், காரில் பிராயணம் செய்தது, தொலைபேசியில் பேசியது,
இருவர் மட்டுமே தனியாக இருந்தது, அவரைப் பற்றி மற்ற நண்பர்களுடன் பேசிய தருணங்கள்
எல்லாம் நினைவுக்கு வந்தன. எல்லாம் கனவுபோல இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒன்றுமே
புரியவில்லை. சட்டென்று எழுந்துபோய் சுந்தர ராமசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பை
எடுத்து எனக்கு மிகவும் பிடித்தமான எங்கள் டீச்சர், பல்லக்குத் தூக்கிகள் கதைகளைப்
படித்தேன். கொஞ்சம் தெளிவடைந்தேன். அன்று மாலை இரங்கல் கூட்டம் ஒன்று ஏற்பாடு
செய்தேன். (தமிழ்நாட்டில் முதல் இரங்கல் கூட்டம் அவருக்கு நடந்தது விருத்
தாசலத்தில்தான்). கூட்டம் முடிந்து வந்து மீண்டும் அவருடைய சிறுகதைகளை வரிசையாகப்
படிக்க ஆரம்பித்தேன்.
நான் மதித்த எழுத்தாளனின் மறைவிற்குப் பிறகு அவனுடைய எழுத்தைப் படிப்தைவிட, அந்தப்
படைப்பின் திறன் குறித்துப் பேசுவதைத் தவிர, வேறு என்ன மரியாதையும் கௌரவமும்
செய்துவிட முடியும்? அவருடைய எழுத்துக்களைப் புறக்கணித்துவிட்டு, அவரைப்
புனிதராக்கி வழிபடுதலில் பொருள் ஏதுமில்லை. அவர் வாசிப்பிற்குரியவரே தவிர,
வழிபாட்டுக்குரியவர் அல்ல. நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்? சமூக வாழ்வில் மனிதனின் அடிப்படையான குணங்கள் என்ன? அவற்றை
வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்துத்தான் ஓயாமல்
சிந்தித்துக்கொண்டிருந்தார். அவருடைய எழுத்துக்கள் இந்தப் புள்ளியிலிருந்து தான்
தொடங்கின. அவருடைய மொத்த எழுத்துக்களின் சாரமும் இதுதான். அதனால் அவரிடம்
கற்றுக்கொள்ள வேண்டிய, கற்றுக்கொண்டு பேண வேண்டிய பண்புகள் எவை, விசயங்கள் எவை,
திறன் எது, நுண்ணுணர்வு எது என்றுதான் பார்க்க வேண்டும். அதை வளர்த்தெடுக்க
வேண்டும். இதுதான் சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளனுக்கு நாம் செய்யும் மரியாதை.
சுந்தர ராமசாமி என்ற மனிதர் இன்று இல்லை. ஆனால் சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளர்
இருக்கிறார். அதாவது அவருடைய எழுத்துக்கள் நம்மிடம் இருக்கின்றன. 54 ஆண்டுகள்
அவரால் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள், முன்னெடுத்த விசயங்கள்,
தீர்க்கமான நவீனப் பார்வை, மதிப்பீடுகள், உருவாக்கிய சவால்கள் இருக்கின்றன. சிறந்த
எழுத்தாளன் என்றுமே சாவதில்லை. காரணம் “நான் எழுத்தில் வாழ்பவன் அன்றோ”. எழுத்தின்
வழியாகத்தான் எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் உறவு ஏற்பட்டது. அந்த உறவு என்றும்
அறுபடாது.
|