Google   www kalachuvadu.com

இலங்கை: நலன்புரி முகாம்கள்
‘புல்மோட்டைப் பகுதியில் அதிகளவில்
வெள்ளைக் காகங்கள் பறக்கின்றன’
ரமேஷ் குலநாயகத்துடன் ஒரு நேர்காணல்
உறவைத் தேடி - கடிதங்கள்
தொகுப்பு: அநாமதேயன்

‘ரமேஷ் குலநாயகம்’ இளந்தலைமுறையைச் சேர்ந்த சமகால அரசியல் பகுப்பாய்வாளர். யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தன் உயர்கல்வியை முடித்தவர். அண்மைக் காலம்வரை ஓர் அரசுச் சார்பற்ற அமைப்பில் பணியாற்றிவந்ததுடன் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கும் சென்று நிலைமைகளை அவதானித்து வெளியுலகுக்குத் தெரியப்படுத்திவந்தார். இதனால் தற்போது அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவருகிறார். இந்நேர்காணல் ‘ரமேஷ் குலநாயகம்’ தேடப்படுவதற்குச் சில நாள்கள் முன்பாகத் தொலைபேசி வழியாகப் பதிவுசெய்யப்பட்டது. இப்போது ‘ரமேஷ் குலநாயகம்’ எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

புல்மோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி முகாமொன்றிலுள்ள பெண்களைப் படையினர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திவருவதாக ‘The Australian’ இதழில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

நான் ‘வெரித்தாஸ்’ வானொலிச் செய்தியின் வாயிலாகவே இதை அறிந்தேன். இச்செய்தி குறித்த இருபக்க அரசியல் பகுப்பாய்வு அவசியம் என்றுணர்கிறேன். பொதுவாக ‘வெரித்தாஸ்’ வானொலி புலிகளுக்குச் சார்பானது. இந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இலங்கையரசுடனான வலுவான கருத்துமோதலுக்கான முன்னேற்பாடாகவும் நோக்கப்படலாம். இச்செய்தியை ‘The Australian’ இதழுக்கு வழங்கியவர் புல்மோட்டைப் பகுதி நலன்புரிமுகாமில் பணியாற்றும் உதவிப் பணியாளரெனத் தெரியவந்துள்ளது. குறித்த நலன்புரிமுகாமிலுள்ள பெண்கள் பல வந்தமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதை, குறித்த உதவிப் பணியாளர் தான் அரசாங்கத்தின் சிரேட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்ததாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இது குறித்து அரசின் வெளிவிவகாரங் களுக்கான செயலாளர் பாலிதகோஹன கருத்துத் தெரிவிக்கும்போது ‘இது ஒரு குப்பைக் கதையாகும். எனினும் இது குறித்து விசாரணை நடாத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. விரைவில் விசாரணை நடத்துவோம். என்றாலும் ஒரு விடயத்தை மீளவும் வலியுறுத்த விரும்புகிறேன். நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்தவர்கள். நாங்கள் விரும்பியிருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் வல்லுறவுக்குட்படுத்தியிருக்க முடியும். ஆனால் நாங்கள் எந்தவொரு பெண்ணையும் வல்லுறவுக்குட்படுத்தவில்லை. தனிப்பட்டவர்கள் ஏதோ ஒருவழியில் துரிதமாகச் சம்பாதிக்க விரும்பக்கூடும். ஆனால் கூடாரங்கள் மிகவும் நெருக்கமாக அருகருகேயுள்ளன. அயலிலுள்ளவர்களுக்குத் தெரியாமல் எதனையும் செய்ய முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இத்தகைய நடவடிக்கை இடம்பெற்றால் சகலருக்கும் இது குறித்துத் தெரியவரும்’ என 01.07.09 அன்று இரவு ‘The Australian’ இதழுக்குக் கூறியுள்ளார்.

வெளிவிவகாரச் செயலாளரின் கருத்து திமிர்த்தன மானதும் மிக மோசமானதும் அநாகரிகமானதுமாகும். மேலும் இலங்கை அரசப் படை எந்தளவுக்கு ஒழுக்கமானதென்பதற்குக் கோணேஸ்வரியை வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் பிறப்புறுப்பினுள் கைக்குண்டைப் புகுத்தி வெடிக்கவைத்துச் சிதறடித்தது போன்ற அநேக வரலாற்று நிகழ்வுகள் சான்றாகவுள்ளன. ஏற்கெனவே இம்முகாம்களிலுள்ள பெண்களுக்குக் கருத்தடை ஊசிகள் ஏற்றப்பட்டுவருவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது போன்று பெண்கள் விபச்சாரத்தில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதற்கான சாத்தியம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவே நம்புகிறேன். எனினும் மகிந்த அரசு கடுமையான செய்தித் தணிக்கையைத் தொடர்ந்தும் தனக்குச் சாதகமாக நடைமுறைப்படுத்தி வருவதால், ‘புல்மோட்டைப் பகுதியில் அதிகளவில் வெள்ளைக் காகங்கள் பறக்கின்றன’ என அரசின் வெளிவிவகாரச் செயலாளர் சொன்னாலும் அதை வாய்மூடிக் கேட்டுத் தலையாட்டிக்கொண்டிருப்பதைத் தவிர மக்களுக்கு இப்போது வேறு வழியேதுமில்லை.

உங்களது அவதானிப்பில் நலன்புரி முகாம்களின் நிலைமை எப்படியுள்ளது?

மிக மோசமாக உள்ளது. வவுனியா நலன்புரி முகாம்களை நேரடியாக அவதானித்தவன் என்னும் வகையில் எனது உடனடியான பதில் இதுதான். பத்துக் கிலோ மீற்றர்கள் நீளத்திற்கு இம்முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றி வர முட்கம்பி வேலிகள் அமைத்துப் படையினர் காவல்காத்து வருகின்றனர். எளிதில் யாரும் உள்நுழையவோ வெளியேறவோ முடியாது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களும் என்னைப் போன்ற தொண்டு நிறுவன ஊழியர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் புளொட், ஈபிடிபி போன்ற ஆயுதக் குழுக்கள் மாத்திரம் சுதந்திரமாக எவ்வேளையிலும் உள்நுழைய முடியும். இவ்வாயுதக் குழுக்கள் (பிள்ளையான் அல்லது சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உட்பட) தமது அமைப்பிற்கு ஆட்சேர்ப்பதற்காக நலன்புரி நிலையங்களிலுள்ள சிறார்களைக் கடத்திச் செல்வதாக ஒரு செய்தி வெளியாகியிருத்ததையும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.

நலன்புரி முகாம்கள் என்றும் பெயரில் இங்கே ஒடுக்கமான கூடாரங்களை அமைத்து ஒரு கூடாரத்தினுள் ஆகக் குறைந்தது முப்பதுபேர்வரை அடைக்கப்பட்டுள்ளனர். அநேகமானோர் வாந்திபேதி, மலேரியா, கொப்புளிப்பான் (அம்மைநோய்) போன்ற தொற்று வியாதிகளுக்குள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. குடிநீர் வசதியோ மலசலக்கூட வசதியோ போதுமானதாக இல்லை. இங்கே காணப்படும் மலசலக்கூடங்களோ பாவனைக்கு உகந்தவையாகவும் இல்லை. மலங்கழிக்காம லிருப்பதற்காகவே பட்டினியிருப்போரையும் காணக் கூடியதாக இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் இம்முகாம்களைச் சேர்ந்த 34 பேர் பரிதாபகரமாக இறந்துள்ளனர். இவர்களில் 17 பேர்வரை இளஞ்சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியோரும் அதிகளவில் மரணமடைந்து வருகின்றனர். இங்கே இன்னொரு பரிதாபகரமான நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். இம்முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் திணிக்கப்பட்ட ஆரம்ப நாள்களில் அவர்களுக்குக் குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. அவர்கள் உவர் நீரைக் குடித்தே தாகந் தீர்த்து வந்திருந்த நிலையில் ஒரு நாள் முகாம்களுக்குக் குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அளவுக்கதிகமாகக் குடிநீர் அருந்தி 16 பேர் அந்த இடத்திலேயே விழுந்து இறந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இம்முகாம்களில் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கேள்விப்பத்திர அடிப்படையில் (டென்டர்) பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திப் பிரேதங்களை அடக்கம் செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு கூடாரத்தினுள் 30 பேர்வரை அடைக்கப்பட்டுள்ளதாக நான் கூறியதிலிருந்து குடும்பங்குடும்பமாக ஒவ்வொரு கூடாரத்தினுள்ளும் அடைக்கப்பட்டிருப்பதாகச் சிலவேளை நீங்கள் கருதலாம். உண்மையில் நிலைமை எதிர்மாறானது, ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள் என நான்கு பேர் இருந்தால் தாய் ஒரு கூடாரத்திலும் தந்தை இன்னொரு கூடாரத்திலும் மகனும் மகளும் வெவ்வேறு கூடாரங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் நிலைதான் இங்குள்ளது. அத்தோடு ஒரு குடும்ப அங்கத்தவருக்கு மற்றவர் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியாது. இது தவிரப் புலி உறுப்பினர்களெனச் சந்தேகிக்கப்படும் ஆண், பெண் இரு பாலாரும் இம்முகாம்களிலிருந்து உரிய முறையில் ஆவணப்படுத்தப்படாமல் கைதுசெய்யப்பட்டு அகற்றப்படுவதுடன் கைது குறித்த எந்தவொரு அறிவித்தலும் பெற்றோருக்கோ பாதுகாவலருக்கோ வழங்கப்படுவதுமில்லை.

உண்மையில் இந்த நலன்புரி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கூடங்களுக்கு ஒப்பானவை. இங்கே வெளியுலகு அறியாத வகையில் மெதுமெதுவாக ஓர் இனப்படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னைநாள் புலி உறுப்பினர்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களில் சில பெண் பிள்ளைகளை அண்மையில் பிபிசி தமிழோசைச் செய்தியாளர் பேட்டி கண்டபோது அப்பிள்ளைகள் இப்போது தாங்கள் எல்லா விதத்திலும் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதுடன் புனர்வாழ்வு முகாமின் பொறுப்பதிகாரிகள் தங்களைக் கௌரவமான முறையில் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனரே?

இந்தப் பெண்பிள்ளைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இப்போது உள்ளனர் என்பதை நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இராணுவத்தினரின் முழுக்கட்டுப் பாட்டுக்குள் எப்போதும் பாலியல்ரீதியான அச்சுறுத்தலுக்குள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் இப்பெண் பிள்ளைகள் ஊடகங்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமென்பதைச் சித்திரவதைப்படுத்தலுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு நன்கு பயிற்றுவித்த பின்பே இவர்கள் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். இதுதான் மோசமான ஆக்கிரமிப்பு அரசியலின் சூத்திரம். நாங்கள் சமகால அரசியலைப் பகுப்பாய்வு செய்யும்போது ஊடகங்களுக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் பதிலளிப்பவர்களின் குரலுக்கு எதிர்மறையான அர்த்தத்தை வழங்குவது தொடர்ந்தும் பல விடயங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்வதற்கு வசதியளிக்கும்.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவில் பணியாற்றிய சண்முகராஜா உள்ளிட்ட நான்கு மருத்துவர்களும் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தபோது அரசால் கைதுசெய்யப்பட்டு அண்மையில் ஊடகவியலாளர் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க அழைத்துவரப்பட்டு நிகழ்த்தப்பட்ட நேர்காணலுக்கும் இந்தப் பதில் பொருந்தும் எனக் கருதலாமா?

நிச்சயமாக. இந்தவகையிலான நேர்காணல் ஒவ்வொன்றுக்கும் எனது முன்னைய பதில் பொருந்தும். இந்த மருத்துவர்களின் நேர்காணல் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு. ஊடகவியலாளர் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கவென இம்மருத்துவர்கள் அழைத்து வரப்படுவதற்கு முன்பாக ‘ஹிந்து’ இதழில் வெளியாகியிருந்த சனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் செவ்வியை நீங்கள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும். அவர் அந்நேர்காணலில் ஓரிடத்தில் கூறியிருந்தார். ‘யுத்தவலயத்தில் பணியாற்றிய மருத்துவர்களை மக்கள் முன்னிலையில் விளக்கமளிக்க வைத்துவிட்டால், அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாகிவிடும்’ அவரது இக்கூற்றை வைத்தே ஒரு சில தினங்களில் இம்மருத்துவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவார்களென எதிர்பார்த்தேன். அது நடந்துவிட்டது. இத்தருணத்தில் மருத்துவர் சண்முகராஜா தெரிவித்த கருத்துகளையும் இங்கே பதிவுசெய்வது முக்கியமானதெனக் கருதுகிறேன்.

‘நானும் என்னுடனிருந்த மூன்று மருத்துவர்களும் மே மாதம் பதினைந்தாம் திகதிக்குப் பின்னர் வன்னியில் பணியாற்ற முடியாத நிலை உருவாகியது. அந்நிலையில் நாங்கள் மாவட்டச் செயலருக்கும் இராணுவத் தரப்பினருக்கும் எம்மை மீட்குமாறு தகவல் அனுப்பினோம். வெள்ளைக் கொடியுடன் இருந்த எம்மை இராணுவத்தினர் பதினைந்தாம் திகதி (மே) பிற்பகல் 2 மணிக்கு மீட்க வந்தனர். எம்முடன் வைத்தியசாலையில் இருந்த காயமடைந் தவர்களையும் மீட்டுக் கொண்டுவந்தனர். அதன் பின்னர்தான் நாங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வெகுவிரைவில் நாங்கள் விசாரணை முடிவடைந்து வெளியே வருவோம். வன்னியில் நாம் பணியாற்றியது தொடர்பில் எமது சேவையை அரசாங்கம் பாராட்டியுள்ளது.’

மருத்துவர் சண்முகராஜாவின் இக்கருத்தை வன்னியில் யுத்தம் உச்சமடைத்த காலத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளோடு பொருத்திப் பார்த்தால் ஒரு தெளிவான முரண்பாட்டை அவதானிக்க முடியும். யுத்தம் உக்கிரமடைந்திருந்த நாள்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மக்களோடு மக்களாக இம்மருத்துவர்களும் வெளியேறிச் சென்றபோது ஓமந்தைப் பகுதியில் வைத்து இவர்களைப் படைத்தரப்பினர் கைதுசெய்திருந்ததாகவே முதலில் செய்தி வெளியானது. ஆனால் இப்போது சண்முகராஜா படைத் தரப்பினர் தங்களை வந்து மீட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் ‘நாங்கள் வன்னியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் எம்மை ஊடகங்களுக்குச் செவ்வியளிக்கும்போது இறந்தவர்கள், காயமுற்றோரது எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகமாகக் கூறுமாறு நிர்ப்பந்தித்தனர். அப்போதிருந்த சூழலில் இறந்தவர்கள், காயமுற்றோரது எண்ணிக்கை தொடர்பாக ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்குவதைத் தவிர வேறுவழியில்லை. அந்த நேரத்தில் நாங்கள் உண்மையைச் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தோம். அங்கிருந்த மக்களுக்குச் சிகிச்சையளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். இதைவிட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் சிகிச்சையளித்தோம். இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. யாரங்கிருந்திருந்தாலும் இதைத் தான் செய்திருப்பார்கள். ஆனால் இப்போதுதான் உண்மையான நிலைப்பாட்டைக் கூறச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நாங்களாகவே இவ்வாறானதொரு சந்திப்பிற்குக் கூட்டு அனுமதியைப் பெற்றோம். இலங்கையரசு இச்சந்திப்பிற்கு ஒருபோதும் எங்களைக் கேட்கவில்லை. கடைசி ஒரு மாத காலத்தில் வன்னியில் 1,000 தொடக்கம் 1,500பேர்வரையில் இறந்துள்ளனர் என்பதும் 350 தொடக்கம் 400 பேர்வரையில் காயமடைந்துள்ளனர் என்பதுமே உண்மையான தகவலாகும்’ எனக் கூறியிருக்கிறார். அவர் என்னதான் கூறியிருந்தாலும் இச்சந்திப்பில் ‘நீங்கள் வன்னிப் பகுதியிலிருந்தபோது விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்ததால் பொய்யான தகவல்களை வழங்கியதாகக் கூறுகிறீர்கள். இப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு இத்தகவல்களைச் சொல்கிறீர்கள். எனவே நீங்கள் இப்பொழுது சொல்வதை மட்டும் உண்மை என எப்படி நம்புவது?’ என ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி முக்கியமானது.

இம்மருத்துவர்கள் தங்களைத் தடுப்புக்காவலில் வைத்துள்ள கொழும்புப் புலனாய்வு அலுவலகத்தில் தமக்குத் தனி அறை, கட்டில்கள் என வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகவும் வெகுவிரைவில் தாங்கள் விசாரணை முடிந்து பணிக்குத் திரும்புவோமென எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனரே?

கொழும்புக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படுகின்ற எந்தவொரு நபரும் அங்குள்ள பொறுப்பதிகாரிகளால் எந்தளவிற்குக் கௌரவமாகவும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவாரென்பதை இந்த மருத்துவர்கள் கூறித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மேலும் இவர்கள்மீதான விசாரணை வெகுவிரைவில் முடிவடைந்து பணிக்குத் திரும்புவது அரசுக்கு உவப்பான செயல்பாடாக இருக்காது. சிலவேளைகளில் இவர்கள் மீதான விசாரணை முடிவுக்குவந்து பணிக்குத் திரும்பும் நிலை வந்தாலும் அரசின் முழுக்கண்காணிப்புடனேயே அது நடைபெறும். தவிரவும் மகிந்த அரசு ஆட்சியிலிருக்கும்வரை இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் முடியாது.

வவுனியா நலன்புரி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள் ளனவே?

சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது உண்மைதான். அவை யாரால் ஒட்டப்பட்டன என்பதுதான் முக்கியமானது. நலன்புரி முகாம்களிலுள்ளவர்களில் எவரும் ஒட்டியிருக்கச் சாத்தியமில்லை. ஏனெனில் இரவு பகலாக ஆயுதமேந்திய படையினர் நலன்புரி முகாம் பகுதியைச் சுற்றிவளைத்து நின்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வெளியிலிருந்து வந்தவர்கள் யாராவது ஒட்டியிருக்கும் சாத்தியம்தான் மிக அதிகம். மேலும் படையினரின் ஒத்துழைப்போ ஆதரவோ இல்லாமல் இச்சுவரொட்டிகள் ஒட்டப்படும் சாத்தியமும் இல்லை என்ற நிலையில் படைத்தரப்பினரே இச்சுவரொட்டிகளை ஒட்டியிருக்கலாம். ஏனெனில் நலன்புரி முகாம்கள்மீதான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு அமைப்புகளாலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறானதொரு நடவடிக்கையை அரசு திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம். ஏனெனில் நலன்புரி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் உள்ளதென்றும் அதனால் அப்பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதென்றும் வெளியுலகிற்குக் காட்டிக்கொள்வதன் மூலம் இது குறித்து எழும் விமர்சனக் குரல்களை இலகுவில் ஒடுக்கிவிடலாமல்லவா? மாறாக நலன்புரி முகாமிலுள்ளவர்களோ வெளியாரோ படையினருக்குத் தெரியாமல் இச்சுவரொட்டியை ஒட்டியிருந்தால் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த பலவீனத்தையே அது வெளிப்படுத்துவதாக அமையும். ஆனால் நான் நேரடியாக அவதானித்ததிலிருந்து சொல்கிறேன் இம்முகாம்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் வலுவானவை.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டதாக மகிந்த ராஜபக்சே கூறிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?

சாமுவேல் பெக்கற்றின் அபத்த நாடகங்களை விஞ்சிய ஒரு மாபெரும் அபத்த நாடகத்தை மகிந்த ராஜபக்சே தனதருமைச் சகோதரர்கள் கொட்டபாய, பசில் மற்றும் ஹெகலிய ரம்புக் வெல்ல ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றிவருகிறார். சாதாரணமாக ஒரு நாட்டில் போர் முடிவுக்குவந்துவிட்டால் படையினர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு அனுப்பப்படுவர். இயல்பு வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்; பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தடைச் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால் இங்கே என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? மிக மோசமானதும் பயங்கரமானதுமானதொரு நிலைமையை அரசு மீளவும் உருவாக்க எத்தனிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறிக்கொண்டே ஒரு இலட்சம் பேரைப் படையில் சேர்த்துக்கொள்வதற்கான அறிவித்தலை மகிந்த ராஜபக்சே விடுத்துள்ளார். நாட்டில் இயல்பு நிலை ஏற்பட்டுவருவதாக மகிந்த கூறிவந்தாலும் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவருகிறது. இராணுவத்தில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அக்கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிதாக ஆயுதங்களும் கடற்படைக்கான தளவாடங்களும் கொள்வனவு செய்யப்படுகின்றன. நாட்டைத் தொடர்ந்தும் இராணுவப் பொறிமுறைக்குள் வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே அரசின் இத்தகைய நடவடிக்கை அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கடந்த 30 ஆண்டுகாலப் போரில் எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் படைத்துறைக் கட்டமைப்பிலோ பதவி நிலைகளிலோ மேற்கொண்டிராத மாற்றங்களையும் கையளித்திராத அதிகாரத்தையும் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்சே தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதானது அநேகரைக் குழப்பத்திலும் திகைப்பிலும் ஆழ்த்தியுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சே யுத்தகாலங்களில் கடற்படைக்கிருந்த சகல அதிகாரங்களையும் ‘கரையோரக் காவல் திணைக்களம்’ என்ற அமைப்புக்கு இப்போது வழங்கியுள்ளார். இச்செயற்பாட்டால் முன்னைய காலங்களில் கடற்படையால் தடுத்து நிறுத்த முடியாது போயிருந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான வெளிநாட்டுப் பயணம், பயங்கரவாத ஊடுருவல் என்பவற்றை இக்‘கரையோரக் காவல் திணைக் களத்’தால் தடுத்து நிறுத்திவிட முடியுமா?

இது பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டிய தேவை நமக்குள்ளது. சர்வதேசரீதியாகப் பார்க்கும்போது அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தகைய கரையோரக் காவல் பிரிவின் நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுவருவதை அவதானிக்கலாம். குறிப்பாக இந்தியக் கரையோரக் காவல் பிரிவானது 5000 ஊழியர்களையும் 600 அதிகாரிகளையும் கொண்டுள்ளபோதிலும் அங்கே நடைபெற்றுவரும் சட்டவிரோதமான எந்தவொரு நடவடிக்கையையும் - பயங்கரவாத ஊடுருவல், தாக்குதல் உட்பட - எதையும் தடுத்துநிறுத்த முடியவில்லை எனும்போது இலங்கையின் கரையோரக் காவல் திணைக்களத்தால் மட்டும் இங்கே நடைபெற்றுவரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமென எண்ணத் தோன்றவில்லை. தவிரவும் மிக அண்மைக் காலம்வரை இலங்கைக் கடற்பகுதி புலிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே இருந்துவந்துள்ளது. தற்போது இலங்கையின் கடற்பரப்பு அரசாங்கத்தின் பூரணக் கட்டுப்பாட்டில் வந்துள்ளபோதிலும் அக்கடற்பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்துவிடவில்லை. குறிப்பாக, சிலாபம் முதல் நீர்க்கொழும்புவரையான கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல், வெளிநாடுகளுக்கான சட்ட விரோதப் பிரயாணம், வெளிநாடுகளிலிருந்தான சட்ட விரோதப் பொருள்களின் இறக்குமதி முதலான பல்வேறு குற்றச் செயல்களும் அரசின் பாதுகாப்புத் தரப்பினரின் ஆதரவுடனேயே நடைபெற்றுவருகின்றன. இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் நீர்க்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்குப் பெயர்பெற்ற பல்வேறு இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடற்படையின் சகல அதிகாரங்களும் கரையோரக் காவல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை கடற்பரப்பில் நிகழும் சட்டவிரோதமான நடவடிக்கைகளைக் தடுத்து நிறுத்துவதற்காக மட்டும் எனக் கருதிவிட முடியாது.

பாதாள உலகத் தலைவர்களையும் கடத்தல்காரர்களையும் சுதந்திர இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்க உறுதிபூண்டுள்ளதாக மகிந்த ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவதுபோல் கடந்த சில தினங்களுக்குள் குறிப்பாக யூலை ஏழாம் திகதி புறக்கோட்டைப் பழைய சோனகத் தெருப்பகுதியில் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்றை மீட்ட பொலிஸார் அச்சடலம் கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த ஆனுமால் இம்தியாஸ் என்ற மொகமட் ஹசன் (வயது39) என்ற பாதாள உலகத் தலைவருடையது எனவும் இதேபோலத் தலையிலும் நெஞ்சிலும் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இன்னுமொரு சடலத்தைக் கொழும்பு மாளிகாவத்த கெத்தராம விளையாட்டு மைதானத்துக்குப் பின்புறமாகவுள்ள பாலத்துக்கருகில் மீட்ட பொலிஸார் அச்சடலம் திக பைசர் எனும் மொஹமட் நிஸ்தார் (வயது 40) எனும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நபர்கள் அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் நீண்ட காலமாகப் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தம்மால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேட்ட பொலிஸ் அத்தியேட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இத்தகைய பாதாள உலகத்தவரை அழித்தொழிக்கும் நடவடிக்கை தொடர்பாகத் தற்போது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுள்ள சரத் பொன்சேகா ‘விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் மூன்று வருடங்களுக்குள் அழித்தொழித்த எமக்குப் பாதாளக் குழுக்கள் ஒரு பெரிய விடயமல்ல. அவர்களை மிகக் குறுகிய காலத்திற்குள் இல்லாதொழிப்போம்’ எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இப்பாதாளக் குழுக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை வெற்றியளிக்குமென நீங்கள் கருதுகிறீர்களா?

விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் 3 வருடங்களுக்குள் அழித்தொழித்ததென்பது பாதாளக் குழுக்களை அழிப்பதைவிட மிக எளிமையானதொன்று. ஏனெனில் புலிகளுக்கு எந்தவொரு சிங்கள அரசியல்வாதியினதும் ஆதரவு இருந்ததில்லை. தவிரவும் பிரபாகரனோ விடுதலைப்புலிகளோ சிங்கள அரசியல்வாதிகளின் கையாள்களாகச் செயல்பட்டதுமில்லை.

ஆனால் பாதாளக் குழுக்களின் சரித்திரம் என்பது வேறு. இக்குழுக்கள் சிங்கள அரசியல்வாதி எவரோ ஒருவரின் சுய இலாபங்களுக்காகக் கையாள்களாகத் தொழிற்பட்டுவருகின்றன. இக்குழுக்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் பாதுகாப்பும்தான் எப்போதும் பக்கபலமாக உள்ளவை. இதுதவிர மெர்வின் சில்வா போன்றவர்கள் ஆளுங்கட்சியில் அமைச்சுப் பதவி வகிக்கும் அதே நேரம் பாதாளக் குழுக்களின் தலைவர்களாகவும் இயங்கிவந்ததை உலகே அறியும். மேலும் மகிந்த ராஜபக்சே தனது சட்ட விரோதமான நடவடிக்கைகளை நிறைவேற்றவெனச் சில பாதாளக் குழுக்களை வைத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அடையாளந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் குறிப்பிடும் பாதாள உலகைச் சேர்ந்த இருவரும் ஆளுங்கட்சிக்கு உவப்பில்லாத செயல்களைச் செய்ததால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் இவர்களின் மரணத்துக்கு அரசு நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. அடையாளந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. அவ்வாறெனில் அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு குழுவால்தான் இச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு இயங்கும் குழு என்பது அரசின் அமோக ஆதரவுடனும் பாதுகாப்புடனும் இயங்கும் பாதாளக் குழுவாகவே இருக்கும். இந்நிலையில் சரத் பொன்சேகாவின் அபத்தம் மிகுந்த வாய்ச்சவடால் நகைப்பிற்குரியதன்றி வேறல்ல. பாதாளக் குழுக்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டுமெனில் முதற்கட்ட நடவடிக்கையாக மகிந்த ராஜபக்சேவைக் கைதுசெய்து சிறையிட வேண்டும். இது சாத்தியமாகுமா சொல்லுங்கள்?

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு ஜூனியர் விகடன் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வியை வாசித்தீர்களா?

வாசித்தேன். மு. திருநாவுக்கரசு ஒரு தூரநோக்கற்ற பலவீனமான அரசியல் ஆய்வாளர் என்பது இந்தச் செவ்வியிலும் தெளிவாகத் தெரிகின்றது. புலிகளின் தலைவர் இறுதிவரை அமெரிக்காவைத் தமது விவகாரத்தில் தலையிடுமென நம்பியிருந்தார் எனத் திருநாவுக்கரசு கூறுகிறார். அத்தோடு தலைவர் பிரபாகரன் தூரநோக்கும் தீர்க்கதரிசனமும் கொண்ட போராளி என்றும் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசுவின் முன்னுக்குப்பின் முரணான கருத்துகள் சலிப்பைத் தருகின்றன. நீங்களே சொல்லுங்கள் தூரநோக்கும் தீர்க்கதரிசனமும் கொண்ட எந்தவொரு போராளியும் அமெரிக்காவை நம்புவானா? முள்ளிவாய்க்கால் பகுதியில் எண்ணெய் வளம் இல்லாதபோது பிரபாகரன்மீது அமெரிக்காவுக்கு அப்படியென்ன அக்கறை வந்துவிடப்போகிறது? உண்மையில் பிரபாகரன் தூரநோக்கும் தீர்க்கதரிசனமும் கொண்ட தலைவனாக இருந்திருந்தால் கருணா அம்மான் பிரிந்து சென்றபோதாவது அரசியல் நீரோட்டத்தில் கலந்திருப்பார். புலிகள் மீண்டெழ முடியாத ஒரு மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள இந்நிலையிலும் பிரபாகரனின் படிமத்தை உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதிலேயே மு. திருநாவுக்கரசு கவனஞ்செலுத்தியிருப்பது நகைப் பிற்குரியதும் வேதனை தருவதுமாயிருக்கிறது. பெண்களைப் போராட்டத்தில் இணைக்கக் கூடாது என்ற வலுவான கொள்கையைத் தொடக்க காலத்தில் பிரபாகரன் கொண்டிருந்தார். இதனாலேயே உமா மகேஸ்வரனுடன் (முகுந்தன்) அவருக்கு முரண்பாடு வலுத்துப் பிளவு ஏற்பட்டது. பின்னர் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதமிருந்த மருத்துவ பீட மாணவியரைக் கடத்திச்சென்று அவர்களுள் மிக அழகானவராயிருந்த மதிவதனியைக் கண்டு மயங்கிய பிரபாகரன் அப்பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டபோது சுயநலத்திற்காகக் கொள்கையை மாற்றிக்கொண்டார். அப்போதே சுயசிந்தனையுள்ள தமிழர்களின் நோக்கில் பிரபாகரனுக்குரிய ‘தமிழினத் தலைவன்’ என்ற படிமம் நொறுங்கிப்போய்விட்டது.

பின்னாள்களில் தனது Imageஐக் கட்டி வளர்க்க, அன்ரன் பாலசிங்கம், லோறன்ஸ்திலகர், மு. திருநாவுக்கரசு, காசிஆனந்தன், புதுவை இரத்தினதுரை, நிலாந்தன் போன்றோரைப் பிரபாகரன் பயன்படுத்தி வந்தார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 2002 காலப் பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதிலிருந்து பிரபாகரன் தனது Imageஐ ஒரு High levelஇல் வைத்திருக்க வேண்டியவரானார். இதற்காக மு. திருநாவுக்கரசு போன்றோருக்கு முக்காலமும் உணர்ந்த அரசியல் ஆய்வாளர் என்ற Imageஐக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது. இதுதான் திருநாவுக்கரசு ஓர் அரசியல் ஆய்வாளராகத் தோற்றம் பெற்ற வரலாறு. மற்றபடி இவருக்கு அரசியல் தொடர்பில் எந்தவொரு தூரநோக்கோ பன்முகப் பார்வையோ கிடையாது என்பதை நான் அருகிருந்து தெளிவாக உணர்ந்தவன்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1995 ஒக்ரோபர் காலப் பகுதியில் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி மட்டுவிலில் உள்ள நண்பரொருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். எங்களுடன் மு. திருநாவுக்கரசு, நிலாந்தன், கருணாகரன் போன்றோரும் தங்கியிருந்தனர். ஒரு நாள் மாலை யாழ்நகரை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில் நாங்கள் அதைப் பற்றிக் கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் (பெயர் நினைவிலில்லை) இராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வு சாவகச்சேரி நோக்கியதாக இருக்குமென்றும் அந்நகர்வு நவக்கிரி, புத்தூர் வழியாகத்தான் நிகழுமென்றும் சொன்னார். அப்போது அங்கிருந்த திருநாவுக்கரசு ஒருபோதும் இராணுவம் நவக்கிரி, புத்தூர் வழியாக முன்னேறும் சாத்தியமில்லையென்றும் முன்னேறினால் புலிகளின் உக்கிரமான தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டுமென்றும் அதனால் இராணுவத் தரப்பில் பலத்த இழப்பு நேருமென்றும் அரசாங்கம் அதை ஒருபோதும் விரும்பாதென்றும் சொன்னார்.

ஆனால் கடைசியில் நடந்தது என்ன? எவ்வித இழப்புமின்றிப் படையினர் நவக்கிரி, புத்தூர் வழியாகத் தான் முன்னேறிச் சாவகச்சேரி நகரைக் கைப்பற்றினர். மு. திருநாவுக்கரசுவின் அரசியல் பகுப்பாய்வும் தீர்க்கதரிசனமும் இந்தளவிற்குப் பலவீனமாக இருந்தன. மேலும் விடுதலைப்புலிகள் சர்வதேச மட்டத்திலான ஒரு Imageஐத் தமக்கு ஏற்படுத்திக்கொள்ளத் திருநாவுக்கரசு போன்றோரையே பெரிதும் நம்பிருந்தனர். இதனால் புலிகளின் மிகச் சிறிய இராணுவ வெற்றியையும் ஒரு பலூன்போல ஊதிப் பெருக்கச்செய்து அவ்வியக்கத்தைப் பற்றிய ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தவும் அவ்வியக்கம் சந்தித்த மோசமான பின்னடைவுகள், தோல்விகளைத் ‘தந்திரோபாயப் பின் நகர்வு’ என நியாயப்படுத்தவும் திருநாவுக்கரசு போன்றோர் பலவீனமானதொரு அரசியல் பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். ஆதலால் புலிகள் இயக்கம் தமது நிலைப்பாடுகள் பற்றிய சுய மதிப்பீடொன்றை மேற்கொள்ள எந்தவொரு சந்தர்ப்பமும் கிட்டவில்லை. தற்போதைய மிக மோசமான புலிகள் இயக்கத்தின் பின்னடைவிற்கு மூலகாரணம் இதுதான்.

அண்மையில் நிலாந்தன், கருணாகரன் போன்றோருடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவரை காலமும் தவறான பாதையொன்றில் சென்றுகொண்டிருந்ததாகவும் தூரநோக்கற்ற தலைவனால் ஓர் உரிமைப் போராட்டம் மீண்டெழ முடியாத மோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இது காலங் கடந்த ஞானம்தான் என்றாலும் தம்நிலையுணர்ந்து விட்டார்கள். ஆனால் திருநாவுக்கரசு காலங்கடந்தும் ஞானம் பெறவில்லை. பரபரப்புக்காக ஜூனியர் விகடன் திருநாவுக்கரசுவைப் பேட்டி கண்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்திருந்த விதத்தில் திருநாவுக்கரசு பேட்டியளித்துள்ளார் அவ்வளவுதான்.

o

தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரியின் சகோதர வாரப் பத்திரிகையான மித்திரன் வாரமலர் நடுப்பக்க சினிமா மற்றும் கிசுகிசுக்கள், துப்பறியும் தொடர்கதைகள், மூன்றாந்தரப் பாலியல் தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் எனப் ‘பல்சுவை’ அம்சங்களுடன் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரங்களின் ‘திருவுரு’ வங்களை முகப்பில் தாங்கி கடந்த 50 ஆண்டுளுக்கு மேலாக வெளிவரும் மூன்றாந்தரப் பத்திரிகையாக இருப்பினும் கடந்த சில வாரங்களாக ‘உறவைத் தேடி’ எனும் பகுதி மூலமாக இலங்கையிலிருந்து வெளியாகும் எந்தவொரு தமிழ்ப் பத்திரிகையும் செய்யத் தயங்கும் ஒரு மனிதாபிமானச் செயல்பாட்டை முன்னெடுத்துள்ளது. வன்னிப் பெருநிலப் பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமோர் ஆவணப் பதிவாக அம்மக்களால் எழுதப்படும் கடிதங்களை ‘உறவைத் தேடி’ எனும் பகுதி மூலம் தொடர்ந்து பிரசுரித்துவருகின்றது. உண்மையில் இச்செயல்பாடு பாராட்டுக்குரியதாகும். அப்பகுதியில் இடம்பெற்ற சில கடிதங்களை இங்கே தந்துள்ளேன். (‘உறவைத் தேடி’ பகுதியின் சில ஒளிநகல்களை இத்துடன் இணைத்துள்ளேன்).

o

உறவைத் தேடி

உற்றார், உறவினர், நண்பர்கள் என உறவுகளைப் பிரிந்திருக்கும் உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் களம் இது! உங்கள் மனக் கொந்தளிப்பின் வடிகாலாகவும் உறவுகள் ஒன்றுசேரக் கைகொடுக்கும் களமாகவும் “உறவைத் தேடி” அமையும்.

‘உறவைத் தேடி’ மித்திரன் வாரமலர், தபால் பெட்டி இல: 160, கொழும்பு,

ஜூன் 28, 2009 அன்று வெளியிடப்பட்ட கடிதம்

என் உயிர் எங்கே? அவள் வேண்டும்!

சின்ன வயதிலிருந்த தெரியும் என் ம. ரயிதாவை அவளைக் காணாது மனம் துடிக்கின்றது. எப்போது அவளைக் காண்பேனென்று பதைபதைக்கிறேன். அவள் அம்மாவும் தம்பியும் காயப்பட்டுக் கப்பலில் வந்து முகாமில் இருக்கின்றார்கள். ஆனால் அவளையும் அப்பாவையும் அவரின் அம்மா தேடுகிறார்கள். அவளை என் விழிகள் ஒவ்வொரு முகமாய்த் தேடுகிறது. அவள் இன்னும் என் கண்ணில் படவில்லை. மகேஸ்வரன், ரயிதாவைக் கண்டவர்கள் அறியத்தரவும். மித்திரனைப் பார்ப்பவர்கள் அவளைத் தெரிந்தால் சொல்லவும், கடிதம் போடவும். என் ரயிதாவிடம் பேசணும்போல இருக்கு! கடைசியாக அவளைச் சுகத்திரபுரத்தில் கண்டேன். இந்த இடப் பெயர்வு காரணமாக என் அன்பு தேவதையைக் காண முடியவில்லை. என் உயிருக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. எப்படியெப்படி எல்லாமோ கனவுகண்டுகொண்டு இருந்தோம். இப்படி ஆகிவிட்டது. அவளை என் மனம் தேடுகின்றது. பள்ளி வாழ்க்கையை மறக்க முடியுமா? நானும் அவளும் பழகிய நாட்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளின் பேச்சைக் கேட்கணும் போல இருக்கு. அவள் எங்கு இருந்தாலும் மித்திரன் வாரமலருக்குக் கடிதம் போடவும். என் நண்பியை மறக்க முடியவில்லை. நான் நலம் நீ நலமா? வரவை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். என் உயிரே அவளின் தொடர்புக்காகக் காத்திருக்கிறது.

எனது பிரண்ட் ஆருந்திரனையும் என் விழி தேடுகின்றது.

டா. அஜந்தன்
அருணாச்சலம் 111 முகாம்
மெனிக் முகாம், வவுனியா.

ஜூலை 26, 2009 அன்று வெளியிடப்பட்ட கடிதங்கள்

மெல்லிய உடல், பிட்டி நெற்றி, ஒற்றைச் சுழி கொண்ட ஒன்றரை வயது மகனைக் கண்டீர்களா?

20.04.2009 அன்று புதுமாத்தளன் வைத்திய சாலையின் அருகில் செல்லில் படுகாயம் அடைந்த ஞா. செல்வமணி ஆகிய நான், படுகாயத்தின் வேதனையில் இருந்த வேளை, வீதியால் வந்துகொண்டிருந்த பொதுமக்கள் என்னையும் எனது ஒன்றரை வயது மகன் ஞா. தஜீவனையும் காப்பாற்றி, காயத்திற்குத் துணியினால் கட்டுப்போட்டு, வீல்செயாரில் ஏற்றிக்கொண்டுபோய், புதுமாத்தளன் கடற்பரப்பில் விட்டுவிட்டு, துவாயினால் சுற்றிவைத்திருந்த மகன் ஞா. தஜீவனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு சென்று விட்டனர்.

என் பிள்ளையைக் காப்பாற்றியவர் பெயர், விவரம் எனக்குத் தெரியாது. நான் மரணத்தின் வாசலில் இருந்தமையால் என் பிள்ளையைக் கொண்டு சென்றிருந்தனர். என்னால் என் பிள்ளையைப் பிரிந்து வாழ முடியவில்லை. எழுந்து நடக்க முடியாத நிலையிலும் என் பிள்ளை எங்கேயாவது கண்ணுக்கு எத்துப்படுகிறானா என எதிர்பார்த்து, ஏலாக்காலுடன் நடந்து அலைகிறேன். என் ஒன்றரை வயது மகன் ஞா. தஜீவனைக் காப்பாற்றி, பராமரிப்பவர்கள் தாயாரிடம் ஒப்படைக்குமாறு மனவேதனை மேல் வேதனையாகக் கேட்கிறேன்.

கை மாறிய என் பிள்ளையின் விபரம்:

மெல்லிய உடல், சிறியவாய், சிறிய கண், காது, மூக்கு, சிறுமுகம்; பிட்டி நெற்றி, ஒற்றைச் சுழி; இவரது வலது அல்லது இடது முழங்காலின் கீழ்ப் பழைய சிறுகாய அடையாளம் சாதுவாக உள்ளது.

எனது பிள்ளை கடைசியாக என்னிடம் இருந்து, துவாயினால் சுற்றியபடி கை மாறியது. எனக்கு, என் அருமை மைந்தனை நினைத்து இரவு, பகல், நித்திரை, சாப்பாடு இன்றி, நிம்மதி இல்லாத வாழ்வு தனிமையில் வாழ்கிறேன். என் பிள்ளையைப் பெற்று தராவிட்டால், நான் தனியாக வாழ்ந்து என்ன பயன்? எனக்கு ஒரு மூலையில் அடித்து, தற்கொலை செய்யத் தோன்றும்.

நான் ஐந்து பேருடன் இருந்து, தற்போது நாட்டின் தனி மரம்போல் ஆகிவிட்டேன். என் பிள்ளையைப் பராமரிக்கும் அந்தப் பொதுசனத்தின் உதவியால் என் பிள்ளையைப் படைத்தவன்தான் மீண்டும் தாய், பிள்ளையுடன் சேர்த்துவைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன். என் பிள்ளையை எங்கேயாவது கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஞா. செல்வமணி ஆகிய என்னுடைய தாயார் நா. சிவக்கொழுந்து செல் விழுந்து காயம் இல்லை; ஆனால் மயக்கத்தில் இருந்து வைத்தியசாலை கொண்டுவந்ததாக அறிந்தேன். எந்த வைத்தியசாலையில் என்றும் தெரியாது. விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும்.

ஞா. செல்வமணி
எஸ். 3/10 நலன்புரி நிலையம்
ஆனந்த குமாரசாமி முகாம், வவுனியா

தங்கையைத் தேடி . . .

எனது சொந்த இடம் இத்தாவில், பளை. தற்காலிக இடம் புளியம் பொக்கணை சந்தி, பெரியகுளம். எனது தங்கை இராஜன் டயனேஸ்வரி. இவர்16.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் காயப்பட்டு, வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தால் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். பின்பு எங்கு நிற்கின்றார் என எதுவும் தெரியவில்லை. இவரைக் கண்டவர்கள் அல்லது எங்களைத் தெரிந்தவர்கள் இந்த விலாசம் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.

இராஜன் ராஜ்குமார்
ஆனந்த குமாரசாமி முகாம்
வீட்டிலக்கம் 77/5, வலயம்09, செட்டிகுளம்.

மகன் சாரங்கன் இறந்தது கணவனுக்கு தெரியாது

என் கணவரின் பெயர் சிவன் விமலரூபன். வயது 24, சொந்த முகவரி மாமூலை, முள்ளியவளை. இவரை முள்ளிவாய்க்காலில் தவறவிட்டுவிட்டோம். இன்று வரைக்கும் ஒரு தகவலும் அறியவில்லை. சிலர் இவரைக் காயமடைந்த நிலையில் கண்டதாகவும் சொன்னார்கள். நான் எல்லா இடங்களிலும் விசாரித்தும் அறிவித்தும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அத்தோடு எங்களது ஒன்றரை வயதுக் குழந்தை வி. சாரங்கனும் மாத்தளன் வைத்தியசாலையில் நோய் காரணமாக இறந்துவிட்டார். பிள்ளை இறந்ததுகூட என் கணவருக்குத் தெரியாது. இதனால் நான் மிகவும் துன்பப்படுகிறேன். எனது நிலையை உணர்ந்து, என் கணவரின் தகவல் தெரிந்தவர்கள் எனது விலாசத்திற்கு அறியத் தருவார்களென நம்புகிறேன்.

விமலரூபன் யூக்கிருஷா
வீட்டு இலக்கம். 936
வலயம் 11, இராமநாதன் நலன்புரி நிலையம்
செட்டிகுளம்.

மகள் தர்சினி முகாமிலா? வைத்தியசாலையிலா?

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவந்தோம். போர் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து, கடைசியாக முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் இருந்தோம். பின்னர் அங்கு இருக்க முடியாத அளவிற்குக் குண்டுகளும் ரவைகளும் அகோரமாக வந்தமையால் 17.05.2009 அன்று அனைவரும் வவுனியாவுக்கு செல்வதற்காக வட்டுவாகலூடாக, இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, எனது மூத்த மகளான திருமதி சிவதர்சினி பரமேஸ்வரனும் அவளுடைய ஒன்றரை வயதுப் பெண் குழந்தையான பரமேஸ்வரன் நிசாந்தி ஆகிய இருவரையும் 17.05.2009 அன்றே பி.ப 2 மணியளவில் சனநெரிசல் காரணமாக மாறவிட்டு விட்டோம்.

அவ்விடத்தில் தேடிப் பார்த்தோம்; காணவில்லை. எப்படியும் வவுனியாவுக்குத்தானே வருவாள் என்ற எண்ணத்தில், நாங்களும் வவுனியாவுக்கு வந்து சேர்ந்தோம். எனது மகளும் பேத்தியும் எந்த முகாமில் உள்ளார்களென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம். தற்சமயம் பேத்தி மட்டும் எமக்கருகில் உள்ள முகாமில் யாரோ ஒரு குடும்பத்தோடு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. குழந்தையை எங்களுடையதுதான் என்று உறுதிப்படுத்துவதற்காக நேரில் சென்று பார்த்தோம். அது எங்ளுடைய குழந்தைதான். அக்குடும்பம் வட்டுவாகலூடாக வரும்போது குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்ததாகவும் தாங்கள் தூக்கிகொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். குழந்தை தற்போது எங்களுடன் இருக்கின்றது. எனது பேத்தி தாயிடம் இருந்து எப்படி பிரிந்தது என்று தெரியாமலுள்ளது. எனது மகளுக்கு என்ன நடந்தது? அல்லது வரும்போது ஏதாவது வருத்தம் காரணமாக எங்கேயனும் வைத்தியசாலையில் இருக்கின்றாளோ? இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.

எனது மகளுடைய கணவன் இங்கில்லை. அவர் இந்தியாவில்தான் இருக்கிறார். எனது மகளும் இந்தியாவில்தான் வசித்து வந்தாள். நாங்கள் கிளிநொச்சியில் இருக்கும்போது எங்களை பார்ப்பதற்காக 02.01.2008ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்தாள். போர்ச் சூழல் காரணமாக இவளால் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல் எங்களுடனேயே இருந்து போரினால் சொல்ல முடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்துவந்தாள்.

இப்பவும் எங்களையும் குழந்தையையும் பிரிந்து எங்கிருந்து தவித்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை. அவள் எங்கிருந்தாலும் எங்களுடன் வந்துசேர்வாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனது மகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது கண்டவர்கள் எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிவபாதம் பார்வதி
இல.எஸ். 4/21
ஆனந்த குமாரசுவாமி நலன்புரி நிலையம்
செட்டிகுளம்

சுதந்திர இலங்கையும் ஊடகத் தணிக்கையும்

முன்னொருபோதுமில்லாத வகையில் இப்போது ‘சுதந்திர இலங்கை’யில் வன்மையான ஊடகத் தணிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் பூ. ஸ்ரீதரசிங், புலிகளின் தலைவர் வே. பிராபகரனின் படத்தை முகப்பில் தாங்கி வெளிவந்த ஆனந்தவிகடன் இதழை விமானமூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தபோது அரசப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாள்களில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின் தமிழகத்திலிருந்து ‘சுதந்திர இலங்கை’க்கு அனுப்பப்படும் எல்லா இதழ்களிலுமே மோசமான தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதிலும் ‘காலச்சுவடு’ இதழ் ஏப்ரல் மாதத்தின் பின்னர் கொழும்பிற்கு வரவேயில்லை. இப்போது யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்காக வந்திருக்கும் சில சிற்றிதழ்களில் அநேகமான பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விற்பனை முகவர்களிடம் கேட்டபோது கொழும்பு சுங்கப் பகுதியில் வைத்தே இப்பக்கங்கள் கிழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். கிழிக்கப்பட்ட பக்கங்களின் விபரம் கீழ்வருமாறு:

உயிர்மை ஜூலை 2009 63-64

உயிர்எழுத்து ஜூலை 2009 21-22

அம்ருதா ஜூலை 2009 01-04

யுகமாயினி ஜூலை 2009 95-104

பிரபாகரனின் சடலத்தை முகப்பில் தாங்கி வெளி வந்த ஜூன் மாத ‘சுகன்’ இதழும் கொழும்பிற்கு வரவில்லை.

உள்ளடக்கம்