|
கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி தில்லியில் நடைபெற்ற மாநில சமூகநலத் துறை
அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் - 1989 பற்றி விரிவாகக்
குறிப்பிட்டிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டப் (இ. த. ச. ) பிரிவுகளின் கீழ்ப்
பதிவுசெய்யப்படுபவற்றில் 42 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள்
தண்டிக்கப்படுகிறார்கள். அதே சமயம் எஸ்ஸி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்
கீழ்ப் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றம் சுமத்தப்படுவோரில் 30 சதவிகிதத்தினரே
தண்டனைக்குள்ளாகிறார்கள் எனக் கவலை தெரிவித்துள்ள பிரதமர் இச்சட்டத்தின் கீழ்ப்
பதிவுசெய்யப்படும் வழக்குகள்மீது முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுக் குற்றவாளிகள்
தண்டிக்கப்படும் வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளைக்
கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அண்மைக் காலமாகக் காங்கிரஸ் கட்சி தலித்துகள் உள்ளிட்ட நலிந்த பிரிவினர்மீது
செலுத்திவரும் கரிசனத்தின் அடையாளமாக வெளிப்பட்டிருக்கும் பிரதமரின் இக்கருத்துகள்
வரவேற்கத்தக்கவை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிகார மட்டங்களில் நிலவிவரும்
அலட்சியப் போக்கின் மீதான விமர்சனம் என்ற வகையிலும் பிரதமரின் கருத்து
முக்கியத்துவமுடையது. எனினும் தன் உரையில் பிரதமர் தந்திருக்கும் அரைகுறையான, தவறான
புள்ளிவிவரங்கள் இச்சட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான விவாதங்களை
முன்னெடுத்துச் செல்வதற்குத் துணைபுரியக்கூடியதல்ல.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் (1989) தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து
நிறுத்தும் நோக்கில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளைப்
பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
மேற்கொள்ளப்படும் 22 வகைப்பட்ட வன்கொடுமைகளை இச்சட்டம் பட்டியலிட்டிருக்கிறது.
சட்டம் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளில் சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்திருப்பதுடன்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாதிக் கலவரங்களும் கொலைகளும் பெருமளவில்
அதிகரித்திருக்கின்றன. தலித்துகளின் உயிருக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பெருத்த
சேதாரங்களை ஏற்படுத்தியுள்ள இக்கலவரங்களை ஒடுக்குவதற்கும் குற்றவாளிகளைத் தண்டித்து
தலித் மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இச்சட்டம்
பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் ஏமாற்றம் தருகிறது
இச்சட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்களால்
குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளில் பெரும் பகுதி இந்தியத் தண்டனைச்
சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை; எஸ்சி / எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ்
அளிக்கப்பட்டவையல்ல. தலித் ஒருவர் சாதி சார்ந்த வன்முறையின் விளைவாகப் படுகொலை
செய்யப்பட்டால் அந்த வழக்கை இ. த. ச. பிரிவு 302 , எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத்
தடுப்புச் சட்டம் (1989) பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்வது நடைமுறை.
ஆனால் தீண்டாமைக் கொடுமை தொடர்பான கொலை வழக்குகளில் பல இ. த. ச. பிரிவுகளின்
கீழ்ப் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. தண்டனைகளும்கூட வழங்கப்படுகின்றன.
கொலையின் பின்னணி தீண்டாமை சார்ந்தது அல்ல என நிறுவுவதன் மூலம் தீண்டாமை என்னும்
கசப்பான சமூக உண்மையை மறைத்து அதற்கெதிரான போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்கே இது
உதவும். மதுரை சென்னகரம்பட்டி, மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சி தலித்துகள் படுகொலை
வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் இதன் அண்மைக் கால உதாரணங்கள்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் துறை (நேஷனல் கிரைம் ரெக்கார்ட் பீரோ) வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி இச்சட்டத்தின் கீழ் தேசிய அளவில் 2007ஆம் ஆண்டுவரை 1,06,619
வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் இ. த. ச. 302, 303 பிரிவுகளின் கீழானவை 2,976.
இவற்றில் 2,418 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். தலித்துகளுக்கு
எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் இ. த. ச . பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு
விசாரிக்கப்படுபவர்களே ஓரளவு தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதோடு ஒப்பிட்டால்
2007ஆம் ஆண்டில் எஸ்ஸி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட
30,031 வழக்குகளில் 1,917 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை
கிடைத்திருக்கிறது. ஆக எஸ்ஸி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்
பதிவுசெய்யப்படுபவற்றில் ஆறு சதவிகிதத்திற்கும் குறைவான வழக்குகளிலேயே குற்றவாளிகள்
தண்டிக்கப்படுகின்றனர்.
இச்சட்டம் அதன் இலக்கை எட்டும் விதத்தில் மாநில அரசுகளின் நடவடிக்கைகள்
விரிவாக்கப்பட வேண்டும் என்னும் பிரதமரின் கருத்து இதுபோன்ற ஒரு சூழலில்
முக்கியத்துவமுடைய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இச்சட்டத்தின் செயலாக்கம் குறித்து
எழுந்துள்ள விமர்சனங்கள் திறந்த மனதுடன் ஆராயப்பட வேண்டியது அவசியம். இந்தப்
பிரிவின் கீழ்க் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்யப்படுதல்
தவிர்த்தல், கடமையைப் புறக்கணிக்கும் அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ளுதல், மாவட்டக் காவல் துறைக் கண் காணிப்பாளர் அந்தஸ்துக்குக் குறையாத
அந்தஸ்தில் உள்ளவரையே விசாரணை அதிகாரியாக நியமித்தல், மாநில அளவிலான கண்காணிப்புக்
குழுக்கள், சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல், பயிற்சி பெற்ற சிறப்பு வழக்கறிஞர்களை
நியமித்தல், மறுவாழ்வுத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துதல் போன்ற
இச்சட்டத்திலுள்ள அனைத்து அம்சங்களும் தவறாது பின்பற்றப்படுதல் வேண்டும். இச்சட்டம்
சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாததற்கு முக்கியக் காரணம் அரசு எந்திரங்கள்தான்.
புகார் பதிவு தொடங்கி அனைத்து நடைமுறைகளும் பாதிக்கப்பட்டவர்களைச் சோர்வடையச்
செய்பவை. பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவது, அவர்களை ஏமாற்றி வெறும் இ. த. ச .
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்வது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக
வழக்கைத் திரிப்பது எனக் காவல் துறை. பல தடைகளை உருவாக்கி அவர்களின் மன உறுதியைக்
குலைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. எளிய தலித் மக்களால் காவல் துறையினரை மீறிச்
செயல்படவோ தவறான தீர்ப்புகளுக்கெதிராக மேல்முறையீடு செய்யவோ முடியாத பலவீனத்தை
ஆதிக்கச் சாதியினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிரதமரின்
பேச்சு செயலாக்கம் பெறுவதற்கான முதல்படி இச்சிக்கல்களை அடையாளம் காண்பதுதான்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இச்சட்டத்தின்கீழ், 1 சதவிகித வழக்குகள்கூடப்
பதிவுசெய்யப்படுவதில்லை. அவற்றிலும் 95 சதவிகிதம் நீதிமன்றங்களில் தள்ளுபடி
செய்யப்பட்டு விடுகின்றன. எஞ்சியவற்றில் அதிகபட்சமாக 5 முதல் 7 சதவிகிதம்
வழக்குகளில்தான் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கிறது. தமிழகத்தில் சாதி வன்முறை
சார்ந்த எந்தவொரு வழக்கையும் அரசு இச்சட்டத்தின்கீழ்ப் பதிவுசெய்து விசாரிக்க
முன்வந்ததில்லை. மாநிலங்களில் முதலமைச்சர் தலைமையில் கண்காணிப்பு மற்றும்
தடுப்புக்குழு ஒன்று இருக்க வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில்
அப்படியொரு குழு இருப்பதாகவோ செயல்படுவதாகவோ தெரியவில்லை.
சென்ற மாதம் சுங்கத் துறை அதிகாரி ஒருவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதாகப் பாமக
சட்டமன்ற உறுப்பினர், ஓமலூர் தமிழரசுமீது இச்சட்டத்தின்கீழ் வழக்குப்
பதிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்தவுடன் அவரை அவசரமாகக் கைதுசெய்ய
முயன்றது காவல்துறை. ஆளும்கட்சிக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியாது.
சட்டமன்ற உறுப்பினர் சாதியைச் சொல்லித் திட்டினாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை.
சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இவ்வழக்கை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்
அரசின் நோக்கம் தலித் நலன் சார்ந்ததுதானா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. கடந்த
சில மாதங்களுக்கு முன் திமுக அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது இதே போன்ற குற்றச்சாட்டு
சொல்லப்பட்டபோது இவ்வளவு அவசரமாக வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. திமுக
அக்குற்றச்சாட்டை மறுத்தது.
மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கவோ பிற்காலத்தில் பேரம் பேசிப் பணியவைக்கவோ
ஆட்சியாளர்கள் இந்த வழக்கைப் பயன்படுத்தக்கூடும். ஆனால் இச்சட்டம் தவறாகப்
பயன்படுத்தப்படுகிறது என்கிற வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாகப் பிரபலமான சான்றை
ஏற்படுத்தி அரசு தலித்துகளுக்குப் பாதகத்தை இழைத்திருக்கிறது. இச்சட்டத்தைச் சாதாரண
தலித் மக்கள் தவறாகப் பயன்படுத்துவதில்லை; பயன்படுத்தவும் முடியாது. அந்த அளவிற்குக்
கண்காணிப்பும் விசாரணையும் இதில் உள்ளடங்கியுள்ளன. சட்டங்களின் நுட்பங்களை அறிந்த
ஆட்சியாளர்களாலேயே அது முடியும்.
சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்று
குரலெழுப்புவதுதான் சரியானது. ஆனால் ‘முறைகேடுகளை’க் காட்டி சட்டத்தையே
நீக்கச்சொல்வது சமூக நீதிக்கெதிரானது. சட்டம் பாரபட்சமற்ற முறையில்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் பிரதமர் ஆதிக்கச் சாதியினரோடு மத்தியிலும்
மாநிலத்திலும் உள்ள அதிகார மட்டங்களில் மலிந்திருக்கும் ஆதிக்கச் சாதி
மனோபாவத்திற்கெதிராகவும் போராட வேண்டும். இதைத் தவிர்க்க நினைத்தால் மாநில
சமூகநலத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை வெறும் வாயுபசாரமாகவே
முடிந்துபோகும். வாயுபசாரம் தலித்துகளுக்குப் பழகிப்போன ஒன்றுதான். |