|
கவிஞர் சல்மா எழுதி, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’
தமிழ் இலக்கிய உலகில் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஒருசேர உருவாக்கிக்கொண்ட நாவல்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் செயல்பாடுகளால் உந்தித்தள்ளப்பட்ட படைப்பு மனம் அச்சமூக
நெருக்கடிகளைப் புறந்தள்ள படைப்பில் இறங்கும்போது, அதில் பீறிடும் உண்மையின் வீச்சு
அக்குறிப்பிட்ட சமூகத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கும். அடிவருடும் நகல்களைவிடப்
பிடறி இழுக்கும் அசலான படைப்புகளே சமூகத் தேவை. இத்தேவையைப் புரிந்துகொண்டு அதோடு
ஆழ்மனம் ஒன்றிணைய வெளிப்படும் படைப்புக்கு உதாரணம் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’.
பிரகதி ஃபவுண்டேஷன் சார்பில் 2009, ஆகஸ்டு 8 அன்று சென்னை பெசண்ட் நகர் ஸ்பேஸஸ்
கட்டட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இந்நாவலின் மலையாள, ஆங்கில மொழிபெயர்ப்புகள் (மலையாளம்
மொழிபெயர்ப்பு: ஆற்றூர் ரவிவர்மா வெளியீடு: டி.சி.புக்ஸ் கோட்டயம். ஆங்கில
மொழிபெயர்ப்பு: லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், வெளியீடு: சுபான் புக்ஸ், புதுதில்லி)
வெளியிடப்பட்டன. நூல்களை எஸ். வி. ராஜதுரை வெளியிட ஆங்கில மொழிபெயர்ப்பை அமீரும்,
மலையாளம் மொழிபெயர்ப்பை ஊர்வசி புட்டாலியாவும் பெற்றுக்கொண்டனர். எஸ். வி. ராஜதுரை
பேசுகையில் சல்மா கவிதைகளை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை நினைவுகூர்ந்தார்.
சல்மா குறித்துத் தான் அதிகமாக அறிந்ததில்லையென ‘வெள்ளந்தி’யாகத் தொடங்கி,
சல்மாவின் இரக்க குணத்திற்கும் போராடும் ஆற்றலுக்கும் உதாரணமாக இரண்டு சம்பவங்களைச்
சொல்லித் தன் உரையை முடித்துக்கொண்ட திரைப்பட இயக்குநர் அமீர் சல்மாவின்
இணையதளத்தைத் தொடங்கிவைத்தார் இந்நிகழ்வில். அடுத்து, நாவலின் ஆங்கில மொழி
பெயர்ப்பிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. நீண்ட வாசிப்பு!
கவிஞர் சுகுமாரன் ஆற்றூர் ரவிவர்மாவின் மொழிபெயர்ப்பு பற்றியும் மலையாள, தமிழ்
இலக்கியப் பரிவர்த்தனையில் உள்ள புரிதல்கள் குறித்தும் உரையாற்றினார். அவர் மலையாள
மொழிபெயர்ப்பிலிருந்து ஒரு சிறிய பகுதியை வாசிப்பதாகக் கூறியது அர்த்தம்
மிகுந்ததாய் இருந்தது; வாசித்த பகுதியும் அர்த்தம் மிகுந்ததாய்த்தான் இருந்திருக்க
வேண்டும். அடுத்து, இஸ்லாம் சமூகப் பின்னணியில் இருந்து வந்து இலக்கியத்தில் தனித்
துவத்தோடு இயங்கும் சல்மா, அவரது நாவல் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்
எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது. இறுதியாக சல்மா நன்றி கூற நிகழ்வு நிறைவுற்றது.
|