Google   www kalachuvadu.com

பதிவுகள்: அற்றைத் திங்கள், 2008 டிசம்பர் 12, சேலம் தமிழ்ச் சங்கம்
இன்றைய தேவை, வளமான மார்க்சியம்
அ. கார்த்திகேயன்

கடந்த டிசம்பர் 12, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மார்க்சிய அறிஞர் கோவை ஞானி கலந்துகொண்டார். முப்பதாண்டுகளுக்கு மேலாக மார்க்சியம், தமிழியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிற அவரை சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

தமிழ் எனக்குத் தந்திருப்பது ஏராளம், பதிலுக்கு தான் தமிழுக்குத் தந்திருப்பதோ வெகு சொற்பம் எனத் தொடங்கிய அவர் அரசியல், பொருளியல் என எந்தத் துறையிலாகட்டும் தற்போது ஒரு பேரழிவு தொடங்கிவிட்டதாகவும் அப்படியொரு பேரழிவு நிகழ்வதற்கு நாமும் ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ காரணமாகிவிட்டோம் என்று கவலையுடன் தன் உரையைத் தொடர்ந்தார்.

தன் வாழ்க்கை அதனளவில் முழு நிறைவானதாக இருக்கிறது என்றும் கல்வியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றதாகவும், எளிய கிராம வாழ்வின் அனுபவம் தனக்கு இருப்பதாகவும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனக்கு வாய்த்த ஆசிரியர்கள் மிகவும் உன்னதமானவர்கள் என்றும் இளமைக் காலத்தில் வகுப்பறையில் இருந்ததைவிட நூலகத்தில் இருந்த காலங்கள்தான் மிக அதிகம் என்றார். தமிழ்ப் பேராசிரியர்கள் மத்தியில் ஒரு மொழி கற்றாலே போதும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி அது கேடு தருகிற விஷயம் என்பதையும் எடுத்துரைத்தார்.

கடந்த இருபதாண்டுகளாகத் தனக்குக் கண்பார்வை இல்லை என்ற போதிலும் உதவியாளர்கள், நண்பர்கள் மூலமாகப் படித்தும் எழுதியும் புத்தகங்கள் வெளியிட்டும் வருவதாகப் பெருமிதத்துடன் கூறினார். இளமைக் காலத்தில் தான் கற்ற கல்வியும், தேடிய அறிவுச் செல்வமும் இன்றைக்கு மிகுந்த உறுதுணையாக விளங்குகின்றன என்றும் மறுவாசிப்பு என்னும் வகையில் எல்லா விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அந்த இளமைக் கால வாசிப்பே கைகொடுத்து வருகிறது என்றும் பெரு மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நல்ல மனிதனாக, மனிதநேயம் நிறைந்தவனாக இன்றைக்குத் தான் இருப்பதற்கு எளிய கிராம வாழ்க்கை சார்ந்த பள்ளி ஒன்றில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தந்த அனுபவமும் நல்ல நண்பர்களுமே காரணம் என்றார். மற்றவர்களைப் போல் பேராசிரியர் பதவி, பல்கலைக் கழகப் பணி என்று சென்றிருந்தால் தனது வாழ்வே நாசமாகியிருக்கும் எனச் சினந்தார். தற்போதைய பேராசிரியப் பெரு மக்கள் அழிவு சக்திகளாகத்தான் தோற்றமளிக்கிறார்கள்; ஆக்க சக்திகளாக விளங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆங்கில அறிவு தனக்கு இருந்த காரணத்தால்தான் மார்க்சியம் குறித்து விரிவாக அறிய முடிந்தது என்றும் விசாலமான பேரறிவு கிட்டியதற்கு ஆங்கிலமே வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமே முடங்கிப் போகாமல் இருப்பதற்கும் அதுவே காரணம் என்றார்.

பிறகு மார்க்சியத்தோடும் மார்க்சிய அறிஞர்களோடும் தனக்கிருக்கும் உறவை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். கோவை நகரில் செயல்பட்ட பத்திரிகைகள், இயக்கங்கள், அமைப்புகளோடு தனக்குள்ள தொடர்பைப் பற்றியும் குறிப்பாக வானம்பாடி இயக்கம் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மார்க்சியத்தில் ஆழமான புரிதல் இல்லாமல் தமிழ் இலக்கிய ஆய்வைப் பேரளவில் மேற்கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார். கட்சி வட்டாரத்தில் இருக்கும் மார்க்சிய உறவு என்பது முடங்கிப்போன ஒன்று என்றும் வளமான மார்க்சிய அறிவு தேவை எனவும் மரபான மார்க்சிய அறிவு போதுமானதல்ல என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

எஸ். என். நாகராசனோடு உள்ள நெருக்கமான நட்பின் காரணமாகத்தான் மார்க்சியம் குறித்த மதிப்பீடுகள் இன்றைக்கும் தனக்கு நம்பிக்கை ஊட்டுவதாகக் குறிப்பிட்டார். ‘நிகழ்’ அனுபவம், ‘தமிழ் நேயம்’ இதழ் தொடங்கியதன் நோக்கம் ஆகியன குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

உலகமயமாதல், கம்யூனிச வளர்ச்சி, அதன் தேக்க நிலை, தற்கால அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியும் தன் கருத்துகளை எடுத்துக் கூறினார்.

நவீனப் படைப்பாளிகள், இலக்கியவாதிகள், சிற்றிதழாளர்கள் ஆகியோர் இனி மேற்கொள்ள வேண்டிய நடை முறைகள் குறித்து மூத்த அறிஞர் என்ற வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இன்றைய சமூகத்தில் நிலவுகிற போலித்தனமான பழக்கவழக்கங்கள், பாசாங்கு நிரம்பிய நடைமுறை வாழ்க்கை, பிழைப்புக்காக எதையும் செய்யத் துணிகிற மோசமான நிகழ்வுகள் குறித்தும் அம்பலப்படுத்தி அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதையும் சித்தாந்த அடிப்படையில் விளக்கினார்.

தற்கால அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னணியில் உள்ள சுயநலப் போக்கைச் சுட்டிக்காட்டினார்.

இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான ஆக்கபூர்வமான கருத்துகளை உள்ளடக்கி மார்க்சிய அறிஞர் என்னும் அடிப்படையில் அவர் ஆற்றிய உரை நம் புரிதலை விரிவுபடுத்துவதாக அமைந்திருந்தது.

குறிப்பு:

டிசம்பர் 2008இல் நடைபெற்ற இக்கூட்டத்திற்கான பதிவு தவிர்க்கவியலாத காரணங்களால் மிகத் தாமதமாக வெளிவந்திருக்கிறது. அதற்காக வருந்துகிறோம்.

பொறுப்பாசிரியர்

உள்ளடக்கம்