Google   www kalachuvadu.com

பதிவுகள்: 02.08.2009, ஓட்டல் பார்க் பேலஸ், ஈரோடு
பிறகொரு இரவு-நூல் வெளியீட்டு விழா
இர. வெள்ளியங்கிரி

‘பலி’ என்னும் தன் முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலான வாசகக் கவனம் பெற்றவர் தேவிபாரதி. அதற்குப் பிறகு ஏனோ அந்தக் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. விமர்சனக் கட்டுரைகள், சில கவிதைகள், நாடகம் என அவ்வப்போது இலக்கியச் சூழலுக்குள் தன் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தவர் 2000க்குப் பிறகு எழுதிய நான்கு நெடுங்கதைகளின் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாகப் ‘பிறகொரு இரவு’ என்னும் தலைப்பில் கவிஞர் சுகுமாரனின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. 2008இல் காலச்சுவடு இதழில் ‘அறியப்படாத காந்தி’ என்னும் தலைப்பிலான காந்தி பற்றிய சிறப்புப் பகுதியில் இடம்பெற்று வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கதை அது. தவிர காலச்சுவடில் வெளிவந்த வேறு இரண்டு நெடுங்கதைகளும் உன்னதத்தில் வந்த ஒரு நெடுங்கதையுமாகச் சேர்த்து மொத்தம் நான்கு கதைகள். இத்தொகுப்புக்கான வெளியீட்டு விழா காலச்சுவடு பதிப்பகம் சார்பாகக் கடந்த 02.08.2009 அன்று மாலை ஈரோட்டில் உள்ள ‘பார்க் பேலஸ்’ ஓட்டலில் நடைபெற்றது. தேவிபாரதியின் சொந்த ஊர் அமைந்துள்ள மாவட்டம் ஆதலால் அவருடைய நண்பர்கள் பலர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

பிற்பகல் ஐந்து மணிக்குக் கூட்டம் தொடங்கியது. காலச்சுவடு ஆசிரியர் குழுவைச் சோந்த எழுத்தாளர் நஞ்சுண்டன் தலைமையேற்க இர. வெள்ளியங்கிரி வரவேற்றார். நஞ்சுண்டனின் சுருக்கமான அறிமுக உரைக்குப் பின்னர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் முதல் பிரதியை வெளியிட உன்னதம் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் பெற்றுக்கொண்டார். அவரைச் சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார் நஞ்சுண்டன். ‘நான் காலச்சுவடுக்கு எதிரானவன்’ என்னும் ஒரு பிரகடனத்துடன் தன் பேச்சைத் தெடங்கினார் கௌதம சித்தார்த்தன். பல வருடங்களாகக் காலச்சுவடுக்கு எதிராகத் தான் இயங்கிவருவதாகவும் தேவிபாரதி நீண்ட கால நண்பர் என்பதால் நூலைப் பெற்றுக்கொள்ள இசைந்ததாகவும் சொன்ன அவர் காலச்சுவடின் ‘பார்ப்பன’ ஆதரவுப் போக்கை ஒரு பிடி பிடித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் தேவிபாரதியைப் பார்க்க, பாவம் அவர் தர்மசங்கடத்தில் நெளிந்துகொண்டிருந்தார். பிறகு தேவிபாரதியின் கதைகளைப் பற்றி எனப் பேச்சைத் தொடங்கிய சித்தார்த்தனுக்கு நல்ல கதைகள் எனப் பொதுவாக ஒரு வாக்கியத்துக்கு மேல் சொல்ல முடியவில்லை. அவருக்குப் பிறகு பேசிய பெருமாள்முருகன் தொகுப்பில் இடம்பெற்றிருந்த நான்கு நெடுங்கதைகளையும் குறித்து விரிவாகப் பேசினார். காந்தி பற்றிய கதையான ‘பிறகொரு இர’வைக் குறித்துச் சிலாகித்துப் பேசிய பெருமாள்முருகன், தேவிபாரதி காமம்சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அதைவிடுத்து ‘பிறகொரு இரவு’ போன்ற கதைகளையே அவர் எழுத வேண்டுமென்றும் தொகுப்பில் உள்ள ‘சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்’, ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ ஆகிய கதைகளை முன்வைத்துத் தன் கருத்தைப் பதிவுசெய்தார்.

அவருக்குப் பிறகு பேசிய உதயச்சந்திரன், “தேவிபாரதியின் கதைகளைக் காமம் சார்ந்தவையாக மட்டுமே பார்ப்பது தவறான வாசிப்பாக இருக்கும்” என்றார். ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ படைப்பு உத்தி சார்ந்து முக்கியமான கதை என்ற உதயச் சந்திரன் ‘பிறகொரு இரவு’ கதைத் தன்னை அழுத்தமாகப் பாதித்த ஒரு முக்கியமான படைப்பு என்றார். தேவி பாரதியின் முந்தைய நூலான ‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ நூலை வாசித்ததன் மூலமே தேவிபாரதி தனக்கு நண்பரானதாகவும் அது போன்ற சமகால வரலாற்றுப் பதிவுகளைத் தொடர்ந்து அவர் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் வெ. ஜீவானந்தம், வழக்கறிஞர் சிதம்பரன். கி. ஆகிய தேவிபாரதியின் நணபர்கள் அவருடனான நட்பையும் ஈரோட்டில் இருந்த காலங்களில் அவர் செய்த காரியங்களையும் நினைவுகூர்ந்தனர். கவிஞரும் விமர்சகருமான கே. ரவிச்சந்திரன் (பாரதி வண்ணன்) தொகுப்பைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தார். எழுத்தாளர் கே. என். செந்தில் வாசித்த விமர்சனக் கட்டுரையும் வாசகர்களைக் கவர்ந்த ஒன்று. நவீனத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தேவிபாரதியின் எழுத்துகளுக்குள்ள முக்கியத்துவத்தை அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியிருந்தது.

உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் தன் பேச்சில் தேவிபாரதியின் கதைகளில் நிலக்காட்சி இல்லை என்னும் விமர்சனத்தை முன்வைத்தார். அடுத்துப் பேசிய கவிஞர் இரா. சின்னசாமி ‘ஊழி’ கதையை ஆதாரம் காட்டி அவரது விமர்சனத்தை மறுத்தார். தேவிபாரதியின் படைப்புமொழி ஆற்றல் மிகுந்தது என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த சின்னசாமி, ‘ஊழி’ மணிமேகலைக் காப்பியத்தின் மீதான சிறந்த மறுவாசிப்புகளில் ஒன்று என்றார். சுதீர் செந்தில் கௌதம சித்தார்த்தனின் காலச்சுவடுக்கு எதிரானப் பேச்சை விமர்சித்தார். தீவிர இதழ்களுக்கிடையே ஆரோக்கியமான உறவு அவசியம் என்ற சுதீர் செந்தில் தேவிபாரதியின் தொகுப்புக்கு சுகுமாரன் எழுதிய முன்னுரை உயிர்மையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். இறுதியாகப் பேசிய ப்ரேமா ரேவதி தேவிபாரதியின் கதைகளைக் குறித்த ஒரு பெண்ணிய வாசிப்பாகத் தன் உரையை முன் வைத்தார். ‘சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்’ கதை காமத்தைத் தாண்டிய பன்முக வாசிப்புகளுக்கு இடந்தரக்கூடியது என்றும் தொகுப்பில் உள்ள கதைகளில் அதுவே சிறந்தது எனவும் கூறினார். அவரது பேச்சில் கவரப்பட்ட சில வாசகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியதை, தேவிபாரதி பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரது பேச்சினூடாகவும் இறுதியாகவும் பேசிய நஞ்சுண்டன் எடிட்டிங் குறித்துச் சொன்ன கருத்துகள் தேவிபாரதிக்கும் எழுத்தாளர்களுக்கும் பயனளிக்கக்கூடியவை. தலைமைப் பொறுப்பை அவர் மிகச் சரியாக நிறைவேற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

முன்வைக்கப்பட்ட எல்லா விமர் சனங்களையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தன் உரையில் ஏற்றுக்கொண்டார் தேவிபாரதி. அவரது பெரும்பாலான நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டனர். இறுதியாக சி. கதிர்வேல் நன்றி கூறினார். கவிஞர்கள் சுகுமாரன், கடற்கரய், எழுத்தாளர்கள் சிபிச்செல்வன், மோகனரங்கன், வா. மு. கோமு , எஸ். செந்தில்குமார், க. வை. பழனிச்சாமி, குற்றாலம் தர்மராஜன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். பேசியவர்கள் அனைவருமே புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார்கள் என்பதும் சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வந்திருந்த பார்வையாளர்கள் கடைசிவரை இருந்து அவரை வாழ்த்திவிட்டுப் போனார்கள் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

புகைப்படம்: பாரதி நிலவன்
ஸ்டுடியோ 5
வெள்ளக்கோவில்.

உள்ளடக்கம்