|
டிசம்பர் 8இல் லெவி ஸ்ட்றோஸ் குறித்த கட்டுரையை முன்வைத்து, ஜூன் ‘09 இதழில்
எழுதப்பட்டிருந்த ‘சமூக அறிவியலும் சமுதாயமும்’
கட்டுரை வழங்கியுள்ள யோசனைக்கும் எழுப்பியுள்ள லெவி ஸ்ட்றோஸ் தொடர்பான
கேள்விகளுக்கும் பதில்:
லெவி ஸ்ட்றோஸின் மற்றும் இதர ஐரோப்பியர்களின் வரலாற்றுப் பின் புலத்தை
நன்கறிந்து எழுதப்பட்ட அக்கட்டுரை இரண்டு பகுதிகளாக
உள்ளது: முற்பகுதி லெவி ஸ்ட்றோஸ், மானுடவியல், பழங்குடியினர் - தொடர்பு என்ன?
என்ற கேள்வியை முன்வைத்தும், பிற்பகுதி சமுதாய
அறிவியலும் சமுதாயமும் என்று அக்கட்டுரைத் தலைப்பிற்கெனவும் எழுதப்பட்டிருந்தன.
இரண்டிலும் பொதுவான கருத்தியல் ஒன்றே
ஒன்றுதான் மேற்கத்தியர்கள் சிந்தனை என்பது அவர்களை மையமாகக்கொண்டது, அதாவது தம்மை
மையமாகவைத்துப் பிறரை
வரையறுத்தல், எனவே அவர்களைக் கொண்டாடுவதென்பது நவீன பார்ப்பனியத்தை வளர்ப்பதாகும்.
இப்படி எழுதிய கட்டுரையாளர்தான்
மருத்துக்குக்கூட மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஒரு பெயரை மானுடவியலிலோ சமூகவியலிலோ
உதாரணம் காட்ட முடியவில்லை.
இதற்கெல்லாம் மேற்கத்தியர்கள்தான் காரணமென்று 2050இலும் அநேகமாக நாம் எழுதுவோம்.
புலம்பெயர்ந்தவன் என்ற வகையில்
மேற்கத்தியர்களின் இன துவேஷத்தை, ஆதிக்க உணர்வை நன்கு அறிவேன், அனுபவித்தும்
இருக்கிறேன். அதைக் கட்டுரைகளிலும் எனது
படைப்புகளிலும் வாய்ப்புக் கிடைக்கிறபோது சொல்லவும் செய்திருக்கிறேன், அதற்காக
மேற்கத்திய சிந்தனைகள் அனைத்தையும் போகிற
போக்கிலே உதாசீனம் செய்வது நல்லதல்ல. சார்பற்ற சிந்தனையாளர்கள் ஐரோப்பியரிலும்
நிறைய இருக்கிறார்கள், தவிர அவர்களது துறை
சார்ந்த உழைப்புகளைக் குறைத்தும் மதிப்பிட முடியாது.
“லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரை அவரது நூற்றாண்டைக் குறிப்பதாகவும் நயமானதாகவும்
இருந்தது. என்றாலும் சிந்தனையாளர்களைத்
தனிப்பட்ட ஒரு மேதாவியைப் போலச் சித்தரிக்காமல் அவரது காலதேச வரலாற்று செய்திகளுடன்
விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதுவது
ஆரோக்கியமானதாக இருக்கும்” என்று சமூக அறிவியலும் சமுதாயமும் கட்டுரையாளர்
குறிப்பிடுகிறார். ஏற்கக்கூடியதுதான். ஆனால் அதுவே
விதியாக இருக்க வேண்டுமென்ற அவசியமல்ல. லெவி ஸ்ட்றோஸ் குறித்த எனது கட்டுரை
பல்கலைக் கழகத்திற்கான ஆய்வுக் கட்டுரை
அல்ல, காலச்சுவடு வாசக நண்பர்களுள் குறைந்த விழுக்காட்டினர் லெவி ஸ்ட்றோஸை
அறிந்துமிருக்கலாம், அவர்களை மனதிற்கொண்டு
எழுதப்பட்டதுமல்ல.
லெவி ஸ்ட்றோஸை அறிந்திராத பெரும்பான்மையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட ஓர்
அறிமுகக் கட்டுரை அது. ஒருவரை
அறிமுகப்படுத்துகிறபோது விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதுவது நாகரிகமல்ல. தவிர அவரை
விமர்சனப்படுத்துவதற்கு முன்பு அவரை
முழுதுமாக நான் உள் வாங்கிக்கொண்டிருக்க வேண்டும், அவரது ஆய்வை ஏற்பவர் அல்லது
மறுப்பவர் கருத்துகளையும் எதிர்வினைகளையும்
சார்பற்று நான் வாசித்திருக்க வேண்டும். லெவி ஸ்ட்றோஸைச் சிந்தனைவாதி, மேதை எனக் (மேதாவி
வேண்டாம் அது எள்ளல்போல
உள்ளது) கருதுவதற்கு, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய டெனிஸ் பெர்த்லோ கூறுவதுபோல்
“மானுடவியல் உலகிற்கு அப்பாற்பட்டது
அவர் புகழ்”, என்ற காரணத்திற்காக. எனது டிசம்பர் மாதக் காலச்சுவடு கட்டுரையில்
மானுடவியலன்றி இலக்கியம், தத்துவம், இயற்கை மீதான
ஆர்வமென்று பிற துறைகளிலும் அவருக்கிருந்த ஞானத்தையும் ஈடுபாட்டையும்
எழுதியிருந்தேன். லெவி ஸ்ட்றோஸுக்குப் பின்வந்தவர்களில்
பலர் அவரது சீடர்களாக மாறிப்போனதும் அவரது களப்பணி முடிவுகளில் வசீகரிக்கப்பட்டதும்
பலரும் அறிந்த செய்தி. அவரை எதிர்த்தவர்கள்
என்று சொன்னால் வெளிப்படைச் சான்றாகப் (Positivism) பிரியர்களைக் குறிப்பிடலாம்.
லெவி ஸ்ட்றோஸ் வழியில் ஆழ்மனதை அறிவதற்கு
ஒரு பொது முறை இல்லை, எனவே ஆய்வில் தவறுகள் நேரக்கூடும் என்பது இவர்களது வாதம்.
எனினும் இன்றளவும் மானுடவியல்
வரலாற்றில் லெவியின் அமைப்பியல் சிந்தனைக்குக் கணிசமான பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அவரது கருத்தியல் இன்றளவும் விவாதப்
பொருளாக உள்ளதென்பதேகூட ஒருவகையில் புகழஞ்சலிதான்.
கட்டுரையின் முதல் பகுதி லெவி ஸ்ட்றோஸ், மானுடவியல் பழங்குடியினர் தொடர்பு
என்ன? என்ற கேள்வியுடன் தொடர்கிறது.
மானுடவியல் என்னும் துறை ஐரோப்பாவின் காலனி ஆதிக்கத்தை முழுமைப்படுத்த
எழுந்ததென்றும், காலனி ஆதிக்கத்தின்போது பூர்வீக
மக்களைக் கொன்று நிலத்தை அபகரித்துக்கொண்டு, அம்மக்களின் நிலங்களை அபகரித்தது
காலனியம், அழிவின் வாயிலில் நிற்கும் அவர்கள்
கலைக் குறியீடுகளையும் பதிவுசெய்ய விழைந்ததென்றும் கட்டுரையாளர் சொல்வதில் முதல்
பாதிதான் உண்மை. இரண்டாவது பாதி
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. ஒரு சில ஆய்வு முடிவுகளில் காலனியத் தாக்கம்
இருந்ததென்று சொல்லலாமேயன்றி, கடந்த கால
ஆய்வு முடிவுகள் அனைத்துமே அவ்வழியில் வந்தவை என்பது நியாயமல்ல. உதாரணம் லெவி
ஸ்ட்றோஸ் ஆய்வுகள். மானுடவியல் எனும்
துறை ஐரோப்பியாவின் காலனிய ஆதிக்கத்தை முழுமைப்படுத்த எழுந்ததென்பதை வைத்தும், ஒரு
சில ஐரோப்பியச் சிந்தனையாளர்கள்
ஐரோப்பிய நலனைக் கணக்கிற்கொண்டு இயங்கினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக
ஐரோப்பியச் சிந்தனைகளே கீழை நாடுகளுக்கு
எதிரானவை, மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரானவை எனத் தீர்மானிப்பது முறையாவென்று
யோசிக்க வேண்டும். பழங்குடியினர்
மானுடவியலுக்குக் கருதுபொருளான தேன் என்ற கேள்விக்கு இடமே இல்லை, அவர்களைத் தேடிப்
போகாமலிருந்தால்தான் வியப்பு. அதற்கான
விடை மானுடவியலின் கர்த்தாக்களில் ஒருவரான லூயிஸ் மார்கனிடம் இருக்கிறது.
பழங்குடி மக்களுடைய நனவிலி மனத்தின் உருவாக்கத்தையும் அதன் தர்க்க ஒழுங்கையும்
ஆராய்ந்த லெவி ஸ்ட்றோஸின் முன்னோடி எமிலி
துர்க்கைம்கூட ஆஸ்திரேலிய பழங்குடியைத் தேடிச் சென்றிருக்கிறார். காரணம் அம்மக்கள்
பிற மக்களைக் காட்டிலும் தொன்மையானவர்கள்.
தவிர அவர்களிடம் பண்பாடு என்பது புதை நிலை (Deep stage) கட்டத்தில் இருக்கிறதென
அவர்கள் நம்பினார்கள். தமிழ்நாட்டு
மானுடவியலாளர் நரிக்குறவர்களைத் தேடிச் செல்வதும் அதிலடங்குமென நினைக்கிறேன். லெவி
தென் அமெரிக்கப் பழங்குடிகளைத் தேடிச்
சென்றதற்கு La Pensee Sauvage நூலில் பதில் கிடைக்கும்.
கட்டுரையாளரின் முதல் குற்றச்சாட்டு ஐரோப்பியச் சிந்தனையானது தம்மை
மையமாகவைத்துப் பிறரை வரையறுத்தல் என்பது. லெவி
ஸ்ட்றோஸும் அக்குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை. லெவி ஸ்ட்றோஸின் வரலாற்றுப் பின்
புலத்தைப் பார்த்ததால் வந்த வினை.
‘கையாலாகாத மூன்றாம் நாடுகள் காழ்ப்பில் சிலவற்றை முன் வைக்கிறார்கள்’ என்று
ஐரோப்பியரில் சிலர் குற்றம் சாட்டுவதுண்டு. இரண்டிலும்
உண்மை இருக்கலாம். அப்படியான காழ்ப்பு நம்மிடம் இல்லை என்பது உண்மையெனில் ஸ்ட்றோஸ்
போன்ற வர்களின் ஆய்வின் நோக்கமும்
ஆய்வின் முடிவும் சார்பற்றதென்பதும் உண்மை. அவரது நூல்களைப் படித்தவர்களுக்கு, சக
ஐரோப்பியர்களை அவர் எங்கே நிறுத்தியிருக்கிறார்
என்பது புரியும். ஐரோப்பியர் தங்களை மையமாகவைத்துச் சிந்தனைகளை உருவாக்கினர்
என்றால்கூட அதில் குறை சொல்ல என்ன
இருக்கிறது, நம்மவர்கள் ஆய்வு மேற்கொண்டால் தமிழ்நாடு, இந்தியா என்பதை மையமாகக்
கொண்டே செயல்படுவார்களென நினைக்கிறேன்.
எந்தத் தேடுதலும் தேடுகின்ற நபரின் தேவையைப் பொறுத்தே, அவரை மையமாக வைத்தே
நடக்கிறது. ஆனால் அத்தேடுதலின் இறுதியில்
சொல்லப்படும் முடிவுகள், காணும் உண்மைகள் சார்பற்று இருக்கின்றனவா என்றுதான்
பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு உண்மைக்கும் முடிவுக்கும் பின்னாலும் வரலாற்றுப் புலத்தைத் தேடுவதென்பது
மன உளைச்சலையே தரும். உயிரின உறவுகளைப்
போட்டி, மாற்றம், முரண், சீரொருமை போன்ற வேற்றுமைக் கோவைகளாக மனிதப் பிரயத்தனம்
கண்டதற்கான சாட்சிகள் கற்காலம் தொடங்கி
இன்றைக்குக் கலாச்சாரம், பண்பாடென்று வளர்ந்திருக்கும் மனித இனத்தின் பாதையெங்கும்
விரவிக்கிடக்கிறதெனப் பூர்வீகக் குடிகளை
ஆராய்ந்த பிறகு லெவி ஸ்ட்றோஸ் கூறினார். மனித சமூகம் நட்பு, கூடிவாழ்தல் போன்ற
குணங்களை மட்டும் கொண்டிருக்குமெனில்
மேற்கண்ட முடிவை விளங்கிக்கொள்ள அரிதாக இருந்திருக்கும். மாறாக ஓருணர்வு மற்ற
உணர்வுகளை எதிரியாக நடத்துகிறதென்ற ஹெகெல்
கூற்றை நினைவிற்கொண்டால் ஐரோப்பியத் தரப்பினரின் இயல்பு விளங்கும். இன்றைக்கு
ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்தையுமே
தள்ளிவைக்க நினைக்கும் நமது அவசரமும் அக்குணத்தின்பாற்பட்டதே. பல நூற்றாண்டு
பழமையுள்ள சீன அறிவியலையும் இந்தியத் துணைக்
கண்டத்தில் தோன்றிய மருத்துவத்தையும் ஐரோப்பிய மானுடவியல் எங்கு நிறுத்தும் என்ற
கேள்விக்கு, நானறிந்த வரை சீனக் கலைகளை
Civilised (நாகரிகத்தின்பாற்பட்டது) என்ற பிரிவின்கீழ், ஐரோப்பிய நாகரிகத்தின்
வரிசையில் நிறுத்தியிருக்கிறார்கள், ஆப்பிரிக்க - லத்தீன்
அமெரிக்க பூர்வீகக் கலைகளைப் பழங்குடியினர் சிந்தனையில் நிறுத்தியுள்ளனர். நேற்றைய
பார்வை இன்றில்லை. காலனிய தாக்கம், ஐரோப்பிய
ஆதிக்கம் என்பதிலிருந்து இன்றுள்ள மானுடவியல் தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிற
தென்பதுதான் உண்மை.
2. லெவி ஸ்ட்றோஸின் லிணீ றிமீஸீsமீமீ sணீuஸ்ணீரீமீஐ அதாவது தமிழில் என்னையும்
சேர்த்துப் பலரும் அச்சொல்லை விலங்கு மனம்
என்று மொழிபெயர்த்திருக்கிறோம். ஆனால் அச்சொல்லுக்கான பொருள் தமிழில் சரியாக
விளங்கிக்கொள்ளப்படவில்லையோ என்ற அச்சம்
எனக்குண்டு. அது போலவே ‘பிரிகொலாஜ்’ என்ற சொல்லும். விலங்கு மனமென்பது
விலங்குகளுக்குரிய மனமல்ல, அது இயற்கையான
அல்லது ஒவ்வொருவரிடமுமுள்ள அசலான மனம். லெவியின் கருத்துபடி இந்த Pensee sauvage
அனைவரிடத்திலும் உண்டு.
அதாவது லெவி சொல்லும் விலங்கு மனம் இயல்பான சிந்தனை. நிர்வாண உடலுக்குச் சமமானது.
வயது, தட்ப வெப்ப நிலை, பாலினம், குழு அல்லது இனத்தின் பண்பாடு, கல்வி அறிவு
என்கிற பல காரணிகள் அவ்வுடலுக்கான ஆடைகளைத்
தீர்மானிக்கின்றன, எனினும் அடிப்படையில் நிர்வாண உடலென்பது நிரந்தரம். அடுத்து லெவி
Pensee Sauvaage தொடர்பாக உபயோகிக்கும்
வேறு இரண்டு சொற்கள் ‘Bricoleur, Bricolage’ இவ்விரண்டு சொற்களுக்கும்
ஆங்கிலத்தில் நேரான பொருள் தருகிற ஒற்றைச் சொல்
இல்லை. Bricoleur என்பவன் எல்லாவற்றிலும் ஓரளவு ஞானம் பெற்றிருப்பான். உடைந்துபோன
நாற்காலியைச் சீர்செய்வான் அல்லது புதிதாக
ஒரு மேசை செய்வான், சுவற்றுக்கு வெள்ளை அடித்தாக வேண்டுமென்றால் அடிப்பான், காருக்கு
டயர் மாற்ற வேண்டுமா மாற்றுவான். ஆனால்
அவன் ஒரு தொழில் முறை வினைஞன் அல்ல. அவனுக்குக் கிடைக்கிற ஆயுதங்களையும்
பொருட்களையும் கொண்டு அதாவது
இருப்பதைக்கொண்டு ஒப்பேற்றுகிறான் (Bricolage), தட்டி தட்டிச் சரிசெய்கிறான். லெவி
ஸ்ட்றோஸ் காட்டும் விலங்குமனம் பண்படாத மனம்.
அறிவியல், சூழல் போன்ற காரணங்களால் பண்படும் வரை காலம், இடம், இனம் என்ற
வேறுபாடின்றி விலங்குமனத்துடனேயே அனைவரும்
இருக்கிறோம். இவ்விலங்கு மனம் ஒர் Bricoleur போன்றே வாய்த்த காட்சி, நேர்ந்த
புரிதல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு புதிய
ஒன்றை ஏற்கின்ற வகையில் உருவாக்குகிறது. லெவி ஸ்ட்றோஸுடைய விலங்கான நிலைக்கும்
(Savagery) நாகரிக நிலைக்கும் (Civilised)
வேறுபாடுகள் இல்லை என்பதை விளக்க பெருமுயற்சிகளை லெவி ஸ்ட்றோஸ் La Pensee Sauvageல்
மேற்கொண்டிருப்பார். மனிதர்கள்
எங்கே வாழ்ந்தாலும், எக்காலத்தவராயினும், நாகரிக விழுக்காடு எத்தன்மையதாயினும்
அவர்களது சிந்தனை குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல
என்பது லெவியின் விலங்குமனம் முன்வைக்கும் கருத்து. அவரது முடிவின்படி பழங்குடிகள்
ஞானத்தில் குறைந்தவர்களல்ல, அவர்களுக்குத்
தேவையான ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தனர்.
3. ‘பழங்குடிகளை அறிந்துகொள்வதால் நம்மைச் சிறப்பாக அறிய முடிகிறது’ எனக்
கட்டுரையாளர் கற்பிதம் செய்துகொண்டதை லெவி
ஸ்ட்றோஸ் கருத்தாக வைக்கிறார். வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் இயற்கைக்கு
மாத்திரமல்ல மனித குலத்திற்கும் மேற்கத்தியர்கள்
இழைத்த அநீதிகள் அதிகமென்று குற்றஞ்சாட்டியவரென எனது கட்டுரையிலும்
தெரிவித்திருந்தேன் அவர் ஐரோப்பியத்தை மையமாக வைத்து
உழைத்திருக்கலாம், அதில் தவறேதுமில்லை, ஆனால் ஒருபோதும் அவர் ஐரோப்பியரை
உயர்த்திப்பிடிப்பதற்காக மானுடவியலில் லெவி
ஸ்ட்றோஸ் ஆர்வம் காட்டியவரல்ல.
|