Google   www kalachuvadu.com

விவாதம்
அற்றைத் திங்களும் விடியா இரவுகளும்

[காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ந. முருகேசபாண்டியனின் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . . (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள்வரை)’ தொகுப்பும் உரையும் நூலுக்கு தி. இராஜரெத்தினம் எழுதியிருந்த விமர்சன உரையை முருகேசபாண்டியனுக்கு அனுப்பினோம். இந்த விமர்சன உரை தொடர்பான தனது கருத்துகளை எழுதியிருந்தார் அவர். இரண்டும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.]

- ஆசிரியர்

உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும் ‘தொகுப்பு நூல்களின்’ பங்களிப்பு இன்றியமையா இடத்தைப் பெறுகின்றது. தமிழின் மிகச் சிறந்த நூல்களான சங்க இலக்கியங்கள் தொகுப்பு நூல்களே. திணை, அடிவரையறை முதலியவற்றை அடிப்படைகளாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சங்க இலக்கியத்தை ஆசிரியர் வரிசையில் ‘பாட்டும் தொகையும்’ என்னும் பெயரில் எஸ். வையாபுரிப்பிள்ளை வெளியிட்டார். அந்நூல் சங்க இலக்கிய ஆராய்ச்சியில் புதிய கோணங்களை அடையாளங் காட்டியது. பழைய தொகுப்புகளை மறுபடியும் வேறு நோக்கில் தொகுக்கும்போது புதிய வாசிப்பிற்கும் புதிய ஆராய்ச்சிக்கும் பயன்பட வாய்ப்புண்டு.

பெண்ணியமும் தலித்தியமும் இன்று இலக்கிய ஆராய்ச்சியில் பேசு பொருட்களாகிவிட்டன. பழைய இலக்கியங்களை இத்தகு நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் போக்கு பெருகிவருகிறது.


சங்கப் பெண்பால் புலவர் பற்றிய கட்டுரை ஒன்றிற்காகத் தயார் செய்துகொண்டிருந்தபோது, பேராசிரியர் பெருமாள்முருகன் ‘சங்கப் பெண் கவிகளின் கவிதைகள்’ (2005) என்னும் ந. முருகேசபாண்டியன் நூல் பற்றிக் கூறி, அலைபேசி எண்ணையும் தந்தார். அவரிடம் தொடர்பு கொண்டபோது பிரதிகள் தீர்ந்துவிட்டதாகக் கூறி படி எடுத்துத் தரலாம் என்றார்.

காலச்சுவடு ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் . . . (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)’ (2009) என்னும் தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டது பற்றிப் பின்னர் அறிய வந்தேன். அந்நூலின் அட்டையில் தொகுப்பும் உரையும் ந. முருகேசபாண்டியன் என அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி சங்கப் பெண் புலவர் பாடல்கள், இரண்டாம் பகுதி காரைக்கால் அம்மையார் பாடல்கள், மூன்றாம் பகுதி ஆண்டாள் பாடல்கள். இரண்டாம் மூன்றாம் பகுதிகள் இந்நூலில் புதியவை. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் இப்புதிய நூலின் முதல்பகுதியில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதைப் பற்றிப் புதிய நூலில் எந்தக் குறிப்பும் இல்லை.

வையாபுரிப்பிள்ளை ‘பாட்டும் தொகையும்’ என்னும் தொகுப்பை வெளியிட்டது, சங்க இலக்கியத்திற்கு மாற்றாகவோ அதனுடைய பிரதியாகவோ அல்ல. புதிய ஆய்வுக் களங்களை நோக்கி அது எழுந்தது. ஆனால் முருகேசபாண்டியனின் நூல் ஒரு ‘திரும்பச் செய்த’ நூலாகவேபடுகிறது.

அவருக்கு முன்பு ஔவை நடராசன் (2003), தாயம்மாள் அறவாணன் (2004) முதலியோர் இத்தகைய பெண் கவிஞர்களின் தொகுப்புப் பணியைச் செய்துள்ளனர். இவர்களுக்கு வையாபுரிப்பிள்ளையின் நூலும் ந. சஞ்சீவியின் ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை’ நூலும் சிறந்த கருவி நூல்களாக உதவியிருக்கக்கூடும். ஔவை நடராசன் தனது முனைவர் பட்டத்திற்காக ஆங்கிலத்தில் எழுதி, பின் தமிழில் மொழிபெயர்த்த நூலைப் ‘புலமைச் செல்வியர்’ (2003) என்னும் பெயரில் ‘பார்க்கர்’ வெளியிட்டுள்ளது. அந்நூலில் பின்னிணைப்பாகச் சங்கப் பெண் கவிஞர் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்கு உரையும் எழுதியுள்ளார். தாயம்மாள் அறவாணன் உரையெழுதவில்லை. ஆராய்ச்சிக் குறிப்புகள் நிறையத் தந்துள்ளார்.

முருகேசபாண்டியன் நூலை ஔவை நடராசன் நூலோடு ஒத்துப் பார்க்கலாம் என்று உற்றுப் பார்த்த எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பெண்கவிஞர் எண்ணிக்கை, வரிசை முறை முதலியவற்றை ஔவையிடம் இருந்து எடுத்துக்கொண்ட முருகேசபாண்டியன், ஒவ்வொரு பாடலுக்கான உரையையும் அந்நூலிலிருந்தே எடுத்துக்கொண்டமை தெரிந்தது. இவ்விரு நூல்களுக்கிடையிலான உரை வேறுபாட்டை அறிவதற்குப் பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவைப்படவில்லை. சிறுசிறு வார்த்தைகளை மட்டும் சேர்த்தோ, குறைத்தோ, மாற்றியோ இட்டுவிட்டு ‘தொகுப்பும் உரையும் ந. முருகேசபாண்டியன்’ என்று வெளியிட்டுள்ளது எந்தத் தைரியத்தில் என விளங்கவில்லை.


தொகுப்பு நூல்கள் ஆய்வுக்குரிய கருவி நூல்களாக அமைய வேண்டும். ஆனால் இந்நூல் அவ்வாறும் அமையவில்லை. சொல்லடைவு, பொருளடைவு, பாட்டு முதற்குறிப்பகராதி, பாடல் இடம்பெறும் நூல், ஒவ்வொரு பாடலும் யார் கூற்றில் அமைந்துள்ளது, எந்தத் துறையில் அமைந்துள்ளது என எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. இக்கால வாசகனுக்கு இவை தேவையில்லை என்று நினைத்தாரா அல்லது அவை எங்கும் அகப்படவில்லையா?. கூற்றும் துறையும் அக இலக்கியத்தின் உயிர்நாடிகள் அல்லவா? அவற்றை விலக்கிவிட்டு இவர் எதை அறிமுகப்படுத்துவார்? ஔவை நடராசனும் இவற்றைக் குறிப்பிடவில்லை எனினும், அது ஒரு நூலின் பிற்சேர்க்கை என விட்டுவிடலாம். முருகேசபாண்டியன் நூலை ஔவை நூலின் பின்னிணைப்பாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் எந்நூலின் பின்னிணைப்புகளோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

முருகேசபாண்டியன் நூலை முழுக்க முழுக்க ஔவை நூலின் பிரதி என்று கூறுவதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நற்றிணை 371ஆம் பாடலுக்கான உரை ஔவை நூலில் தவறாக உள்ளது. ஆனால் முருகேசபாண்டியன் நூலில் அப்பாடலுக்கான உரை சரியாக உள்ளது. வேறு சங்க இலக்கிய உரைகளைத் தேடியபோது வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் கண்ணில்பட்டன. அந்நூல்களில் பதிற்றுப் பத்து (6ஆம் பத்து), நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களிலுள்ள பெண்பாற்புலவர் பாடல்களின் உரைகள் ஔவை உரையோடும் முருகேசபாண்டியன் உரையோடும் மிகச் சரியாக ஒத்துள்ளன. இம்மூன்று உரைகளுக்கும் ‘நதிமூலம்’ வேறு எதுவோ?

முனைவர் தி. இராஜரெத்தினம்
நாமக்கல்

எனது அபிப்பிராயங்கள்

இன்றைய தகவல் உலகில், எப்படி வேண்டுமானாலும், விஷயங்களைத் தொகுத்துப் புதியதாக மாற்றியமைக்கலாம். இந்நிலையில் சங்க இலக்கியப் பாடங்களில், பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகளும் அவற்றுக்கான உரைகளும் ஆண்டாள், காரைக்காலம்மையார் பாடல்களும் உரைகளும் பெண்ணிய நோக்கில் என்னால் புத்தகமாக்கப்பட்டுள்ளன. “சங்க காலப் பெண்கள் முதலாக ஆண்டாள் வரையில் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பரவலாக அறிமுகப்படுத்துவதுடன், வாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம். தமிழ் மரபின் வேர்களைத் தேடுகின்றவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் மாணவ மாணவியருக்கும் இந்நூலானது பெரிதும் உதவும்; பெண் படைப்புகள் பற்றிய வாசிப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று தொகுப்புரையில் என் நோக்கத்தைத் தெளிவாகக் கூறியுள்ளேன். தி. இராஜரெத்தினம் போன்ற முனைவர்களை நோக்கி எனது நூல் எழுதப்படவில்லை. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் படைப்புகள் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் வெளிவர வேண்டும். பள்ளிக்கூட மாணவர்கள் வாசிப்பதற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்த பாடல்கள் எளிய நடையில் அழகிய வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட வேண்டும்.

ஏன் படக்கதை வடிவில்கூடச் சங்கப் பாடல்களை வெளியிடலாம். நூற்றுக் கணக்கான வடிவங்களில் சங்கப் பாடல்கள் அச்சு வடிவம் பெறும்போது அவை ‘பண்டிதர்கள்’ கையிலிருந்து மாறி மக்களிடம் செல்லும். அதுதான் இன்றைய காலத்தின் தேவை. சொல்லடைவு, பொருளடைவு. . . பற்றி உ.வே.சா. போன்ற ஜாம்பவான்கள் எழுதிய பிறகு, அதை மீறிச் சொல்ல என்ன உள்ளது? ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை’ என்னும் நூலில், பேராசிரியர் ந. சஞ்சீவி எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்த பிறகு, அவற்றை மீண்டும் எனது நூலில் சேர்ப்பது எதற்காக? தேவையில்லை என்று அறிந்தே அவை நூலில் சேர்க்கப்படவில்லை.

‘கூக்கூ என்றது கோழி’ என்ற அள்ளூர் நன்முல்லையார் பாடலையோ ‘அகவன் மகளே!,’ ‘முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’ போன்ற ஔவையார் பாடல்களையோ வாசிப்பதற்கு நவீன வாசகர்களுக்குக் கூற்று, துறை தேவை இல்லை. சங்கப் பாடலை நேரடியாக உரையின் துணையுடன் வாசித்து, அதில் கிடைக்கும் பொருளின் மூலம், நமக்கான பிரதியை உருவாக்கிக்கொள்ள முடியும். சங்கப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் ஒன்றாகவும் திணை, துறை, கூற்று போன்றன எழுதப்பட்டது வேறொரு காலமாகவும் இருக்கும் நிலையில் நவீன வாசகனுக்குச் சங்கப் பாடல் தரும் அனுபவம்தான் முக்கியம்.

எனது நூலின் தொகுப்புரையில் ஔவை நடராசன் வரையறுப்பதை ஒப்புக்கொண்டு அவருடைய புலமைச் செவ்வியர் நூலுக்கும் தாயம்மாள் அறவாணனின் ‘மகடூஉ முன்னிலை’ நூலுக்கும் நன்றி தெரிவித்துள்ளேன். ஔவை நடராசன் நூலில் இடம்பெற்றுள்ள உரையையும் எனது உரையையும் ஒப்பிட்டுப் பார்த்து வாசித்தால் மூலப் பாடலின் வரிகளுடன் இயைந்து எனது உரை அமைந்துள்ளது என்பது புலப்படும். ‘சிறு சிறு வார்த்தைகளை மட்டும் சேர்த்தோ குறைத்தோ மாற்றியோ’ எனது உரை எழுதப்படவில்லை. பாடலாசிரியர் என்ன நோக்கில் பாடலைப் பாடியிருப்பார் என்ற நோக்கில் நுட்பமான வாசிப்பு முறையில் எனது உரை அமைந்துள்ளது.

எனது தொகுப்புரையில் ‘சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்’ (2005) என்ற எனது முந்தைய நூலைப் பற்றிக் குறிப்பிடாதது விடுபடுதல்தான். வேறு தனிப்பட்ட நோக்கம் எதுவுமில்லை. என்னைப் பற்றிய குறிப்பில் அந்த நூலின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன். ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . .’ என்ற பெயரில் 19ஆம் நூற்றாண்டு வரை பெண்கள் எழுதிய எல்லாப் பாடல்களையும் தொகுப்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆண்டாளுக்குப் பிந்திய காலகட்டத்தில் ‘தனிப்பாடல்’ திரட்டுகளில் இடம்பெற்றுள்ள பெண் கவிஞர்களின் தனிப்பாடல்கள் சாதாரணமாக இருந்தன. சங்கப் பெண் கவிஞர்கள், காரைக்காலம்மையார், ஆண்டாள் என்ற வரிசைக்கு ஏற்புடையதாகத் தனிப்பாடல்கள் இல்லை. எனவே அவை நீக்கப்பட்டுவிட்டன. காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் எழுதியுள்ள பாடல்களும் உரைகளும் 99 பக்கங்கள் புதிதாகப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் புத்தகம், எனது முந்தைய புத்தகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தனிப் புத்தகமாகிறது. மேலும் இந்த நூலில் முன்னோடி உரையாசிரியர்களின் உரைகளுடன் ஒப்பிட்டுப் புதிய உரையை வடிவமைத்துள்ளேன். அந்த வகையிலும் இந்த நூல் மாறுபடுகிறது.

ந. முருகேசபாண்டியன்

உள்ளடக்கம்