Google   www kalachuvadu.com

பதிவுகள்
குழந்தைகள் கொண்டாடிய நூல் வெளியீட்டு விழா
யுகன்

ஆகஸ்ட் 14, 2009 அன்று இன்டாச் அமைப்பு மயிலாப் பூரிலுள்ள லேடி சிவசாமி மேல்நிலைப் பள்ளியில் காலச்சுவடு பதிப்பித்த ‘மெட்ராசில் மிருது’ என்னும் புத்தகத்தை வெளியிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தைத் தொடங்கியது. வஸந்தா சூரியாவின் ‘மிருது இன் மெட்ராஸ்’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம்தான் ‘மெட்ராஸில் மிருது’. ஆசிரியர் வஸந்தா சூரியாவுடன் இணைந்து பிரேமா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். இது சிறுவர்களுக்கான கதைப் புத்தகம்.

பள்ளியின் முதல்வரும் ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் திரளாகக் கலந்துகொண்ட இந்த எளிய நிகழ்வில் ஓவியர் மருது இப்புத்தகத்தை வெளியிட்டார். தனக்கும் லேடி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளிக்குமுள்ள நீண்ட கால உறவை நினைவுகூர்ந்த மருது படங்களுடன் கூடிய இது போன்ற புத்தகங்களே தான் ஓவியராகக் காரணம் என்றார். குழந்தைகளுக்கு இயல்பாக உள்ள கதை கேட்கும் ஆர்வம்தான் படைப்பூக்கத்தின் அடிப்படை எனவும் இத்தகு புத்தகங்கள் அதற்கான தூண்டுகோலாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

வஸந்தா சூரியாவும் மொழிபெயர்ப்பாளர் பிரேமா ஸ்ரீசீனிவாசனும் இணைந்து புத்தகத்திலுள்ள சில பகுதிகளை அழகான முறையில் வாசித்தனர். பள்ளியின் முதல்வரும் இன்டாச் அமைப்பின் செயலாளரும் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் அரவிந்தன் குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிக அளவில் வெளியிடப் பதிப்பகங்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தியதோடு குழந்தைகளுக்கான புத்தகங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளப் பெற்றோர்களுக்கும் பெற்றோர்களைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கும் உதவக்கூடியவை என்றார்.

‘தன் பால்ய காலம் மற்றும் நண்பர்களின் பால்ய காலமே இப்புத்தகம்’ என ஏற்புரையில் குறிப்பிட்டார் நூலாசிரியர் வஸந்தா சூரியா. குழந்தைப் பருவத்து நினைவுகளும் அனுபவங்களும் அபூர்வமானவை, அவற்றை நினைத்துப் பார்ப்பது சந்தோஷமானது என்றவர் இந்தப் புத்தகம் அப்படியொரு சந்தோஷத்தை உங்களுக்கு வழங்கும் என நம்புவதாக மாணவிகளைப் பார்த்துச் சொன்னார். அவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதைப் பற்றிய தமது அபிப்பிராயங்களைத் தனக்கு எழுத வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பள்ளி முதல்வர் நன்றி கூறினார். இப்புத்தகத்தை வாசிக்கும்போது நம் பால்ய காலமும் கண்ணில் நிழலாடும். ஒரு நல்ல புத்தகம் வாசிக்கப்பட்டவுடன் அது போன்ற ஒன்றைச் செய்து பார்க்கத் தூண்டும். ‘மெட்ராஸில் மிருது’வும் அதைச் செய்கிறது. குழந்தைகளின் உலகில் சாதாரண விஷயமும் அற்புதத் தன்மை பெற்றுவிடுகிறது எனத் தன் மாணவிகளுக்கு அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார் பள்ளியின் முதல்வர். குழந்தைகளின் முன்னால் அவர்களோடு கூடியிருந்து நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளடக்கம்