Google   www kalachuvadu.com

பதிவுகள்
கே. வி. சுப்பண்ணாவின் நூல் வெளியீடு
நஞ்சுண்டன்

கே. வி. சுப்பண்ணாவின் (1932-2005) தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னடக் கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 26 ஜூலை 2009 அன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைக் காலை 9:30 மணிக்கு இசை நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.

சுப்பண்ணா கன்னடத்தின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் குவெம்புவின் மாணவராகக் கன்னட இலக்கியம் படித்த சுப்பண்ணா சிவமொக்கா மாவட்டத்தில் தன் சொந்தக் கிராமமான ஹெக்கோடு திரும்பிப் படிப்படியாக அதைக் கர்நாடகத்தின் பண்பாட்டுத் தொட்டிலாக மாற்றியவர். அகிரா குரஷோவா, சத்யஜித் ரே போன்ற பெயர்களை ஹெக்கோடு வீடுகளில் புழங்கும் பெயர்களாக்கியவர். காளிதாஸனின் நாடகங்களையும் ராம் மனோகர் லோகியாவின் Intervals in Politicsஐயும் கன்னடப்படுத்தினார் சுப்பண்ணா. இன்று கிடைக்கும் மிகப் பழமையான கன்னட இலக்கண நூலான கவிராஜ மார்க்கத்தில் விற்பன்னராயிருந்தார் அவர். ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படும் மகஸாஸே விருதை 1991இல் பெற்றவர். தற்போது சுப்பண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மனு சக்ரவர்த்தி தொகுத்து Community and Culture என நூல் வடிவம் பெற்றுள்ளது. நூலை வெளியிட்டுப் பேசிய யு. ஆர். அனந்தமூர்த்தி தனக்கும் சுப்பண்ணாவுக்கும் கல்லூரி நாள்களில் தொடங்கிய நீண்ட நாள் தோழமையையும் அவருக்கிருந்த பல்துறை ஈடுபாடுகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்து நூலுரையாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா, ‘சச்சின் டெண்டுல்கர் செஞ்சுரி எடுத்துவிட்டுச் சென்றிருக்க இன்னொரு செஞ்சுரி அடிக்க ராகுல் திராவிட் தயாராகக் காத்திருக்கும்போது இடையில் களமிறங்கும் இரண்டாந்தர பேட்ஸ்மேன்போல் நான் உணர்கிறேன்’ எனத் தொடங்கி நூலின் சாராம்சத்தைத் தன் பார்வையில் சொன்னார். சுப்பண்ணா எப்போதும் அதிகார மையத்திலிருந்து விலகியேயிருந்தார் என்பதை அவர் அழுத்தமாகச் சொன்னார்.

நூல்வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக The Untamed Language of Dissent என்னும் தலைப்பில் உரையாற்றிய அஷிஷ் நந்தி, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து எழும் எதிர்ப்புக் குரலின் மொழியை நாம் புரிந்துகொள்வதில்லை என்றார். அதனாலேயே எதிர்ப்பை அநீதி என்றும் முட்டாள்தனமானது எனவும் நிராகரிக்கிறோம். பழங்குடிகளின் எதிர்ப்புக் குரல் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார் நந்தி. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் பழங்குடியினரின் எதிர்ப்புக் குரலைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் புரட்சிகர இடதுசாரிகளுக்கு எதிர்ப்பின் மொழி புரியவில்லை என்றும் நந்தி கூறினார்.

ஏறக்குறைய ஓராயிரம் பேர் அமரக்கூடிய ரவீந்திர கலாக்ஷேத்திரா பெரிதும் நிரம்பியிருக்க விழா மிக நேர்த்தியாக நடந்தேறியது.

உள்ளடக்கம்