Google   www kalachuvadu.com

அஞ்சலி
சிற்பக் கலைஞர் ஓவியர் மூக்கையா

டிராட்ஸ்கி மருது

Moebius feels that three elements
Must come together for the artist.
beauty, truth and love
If they are present in the
heart, mind and soul of the artist,
it will show in the art,
ant it will be recognized
by the people seeing the art
a connection will be
made from artist to viewer.

உலகப் பிரசித்தி பெற்ற காமிக் புத்தக ஓவியர் மோபியஸ் நினைப்பதாகச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள் எல்லாக் கலாபூர்வமான வெளிப்பாட்டுக்கும் பொதுவானவைதான் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஓவியக் கல்லூரி நாட்களிலிருந்து, திடீரென நம் கண்முன்னே கடந்து போகும் சில ஓவியங்கள் அவற்றின் படைப்பாளிகளையும் அவர்களது அனைத்துப் படைப்புகளையும் எப்போதும் தேட வைக்கும் சக்தி கொண்டவையாக இன்றுவரை நான் உணர்ந்திருக்கிறேன். பாப்புலராகப் பேசப்படுகிற, போற்றப்படுகிற ஐரோப்பிய ஓவியர்களின் பெயர்கள் கொண்ட மேல் பரப்பைத் தாண்டி அறியப்படாத கலைஞர்களை அவர்களின் படைப்பு ஈர்த்ததால் அவர்களையும் அவற்றையும் தேடி ஓடிய காலம் இன்னும் முற்றுப்பெறவில்லைதான். அப்படிப்பட்ட வழியில் நான் கண்ட ஓவியர்கள் அருணால்ட் புக்கீன், ஜிரோம், ரோக்கோ, சீலி பாலி, ரெக்கம், கீகர், டூர், லாங் போன்ற பலரில் மோபியஸும் ஒருவர். மேல் பரப்பில் பேசப்படுகிற கலைஞர்களைத் தாண்டி இவர்களைப் போன்றவர்களின் படைப்பு ஈர்ப்பதற்கு மோபியஸ் கூறும் காரணங்களே சரியானவை. பல்வேறு இசங்களுமாகவும் பாப்புலராகவும் பிரித்துவைத்து அறியப்படுவது இவற்றைச் சுற்றி வாழ்கிறவர்களின் வசதிக்காகத் தான் அன்றி வேறல்ல. அறியப்பட்டவனா அல்லது காலம் தாண்டி அறியப்பட்டவனா என்பனவற்றிற்கும் மோபியஸ் சொல்லுகிற காரணம்தான் முக்கியமானது. எந்த வேலையின் உண்மையும் நேர்மையும் படைப்பில் அறியக் கிடைக்கும்.

சமீபத்தில் மறைந்த எங்கள் ஆசிரியர் ஓவியர் மூக்கைய்யா அவர்களை 70களில் கல்லூரியில் மதுரை இராமநாதபுரத்துக்காரராகவே அறிந்தேன். அவருடைய பேச்சு வழக்கும் அவருடைய சிற்பங்களின் பொருளும் ஒரு காரணம். 70 வயதான அவர் மறையும்வரை அவருடைய தெக்கத்திப் பேச்சு வழக்கு மறையவில்லை என்பதுடன் அவர் எப்போதும் ஒரு கிராமத்துக்காரருடைய எளிமையுடனேயே வாழ்ந்தார். சுடுமண் சிற்பவழியில் தொடர்ந்து செயல்பட்ட அவருடைய செயல்பாட்டோடு பறை அடிப்பவன், பறையோடு ஆடுபவன், மாடு அணைபவன் போன்றவையே அவருடைய கருப்பொருள்களாகவும் இருந்தன. எனக்குத் தெரிந்து முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து இக்கருப்பொருள்களின் ஊடே பயணித்தவர். நவீனச் சிற்ப முறையிலும் சுடுமண் சிற்ப முறையிலும் தொடர்ந்து சோதனை முயற்சியாகப் பல்வேறு தோற்றங்களில் இக்கருப்பொருளை உருவகப்படுத்தி வந்தவர். கிட்டத்தட்ட ஐரோப்பியச் சிற்பி மரினியின் குதிரை வடிவத்தை ஒத்தது போன்ற சிற்பங்களும் அவருடைய சுடுமண் சிற்ப முறையில் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். பறை அடிப்பவரின் உடல் மொழி, ஜல்லிக்கட்டு மாட்டை அணைபவரின் உடல் மொழி மாட்டின் வேகம் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஒரு கட்டத்தில் உறைய வைத்தது போன்ற “போங்சர்கள்” கொண்டவை அவருடைய சிற்பங்கள். தொடர்ந்து அவருடைய பல ஓவியங்களை என் மாணவப் பருவத்தில் கண்டிருக்கிறேன். கூடிய மட்டும் ‘லிணீஸீபீsநீணீஜீமீ’ ஓவியங்கள் இம்ரஸணிஸ்ட் பாணியில் தீட்டப்பட்டவை. என்னுடைய கல்லூரி நாட்களுக்குப் பின் அவர் ஓவியங்கள் எனக்கு அதிகம் காணக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து 30-35 ஆண்டுகள் அவர் செய்த சுடுமண் சிற்பங்கள் எல்லாம் ஒன்றே அல்ல என்பதுடன் ஒன்றையே வலியுறுத்தின. எளிமையான மனிதராகவும் தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொள்ளாதவராகவும் இருந்தார். கிராமத்து வழக்கோடு கூடிய நையாண்டியும் அவரிடம் தொடர்ந்து நான் கண்டது.

ஓவியக் கல்லூரியில் தொடர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்றுத் தொடர்ந்து இயங்கியவர். கல்லூரியில் பலர் உன் விருப்ப ஓவியம், வாழ்வு சார்ந்த வழிகளைத் திறந்துவிட்டது போல் ஒரு சிலர் எப்படி வாழக் கூடாது என்பதையும் காட்டியிருக்கிறார்கள். மூக்கைய்யா சமன்பட்ட தெள்ளத் தெளிவான நீரோடை போல வாழ்ந்துகாட்டியவர், அதுவும் எனக்கு.

கல்லூரிக்குள் அதுவும் ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் தன் வாழ்வு சிறப்பாக இருக்க எண்ணி மாணவர்களைக் கொம்புசீவி மற்றவரிடம் மோதவிடுவதும் மாணவர்களைச் சுரண்டிச் சாப்பிடுவதும் சூழ்ச்சி அரசியலோடு தன்னை ஒரு கட்சித் தலைவர் போல் பாவித்துக்கொண்டும் செயல்பட்டவர்கள் மத்தியில் எந்த சூதும் தெரியாத கலைஞனாகச் சிறிது காய்ந்திருக்கிற தன் சுடுமண் சிற்பத்தோடு நமக்கு முதுகைக் காண்பித்து இயங்கிக்கொண்டிருக்கும் சிற்பி மூக்கைய்யா நம்மைக் கண்டதும், “வாய்யா, எப்படியிருக்க” என்று கேட்கும்படியே நம் நினைவில் வருகிறார்.

வரும் காலங்களில் தமிழ் உலகம் அவருடைய சிற்பங்கள் வழியிலும், அவற்றின் புகைப்படங்கள் வழியிலும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை அறிவர்.

உள்ளடக்கம்