Google   www kalachuvadu.com

பத்தி வேறுவேறு
விடைத்தாள் மதிப்பீடும் தொழில் நியதிகளும்
பெருமாள்முருகன்

இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில முதல் மதிப்பெண் பெற்று ஊடக முக்கியத்துவம் கிடைத்திருக்க வேண்டிய மாணவர் ஒருவருக்கு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர் செய்த தவறால் அந்த வாய்ப்பு பறிபோயிற்று. அம்மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துக் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். ‘இது மனிதத் தவறு’ என்று ஒப்புக்கொண்ட பள்ளிக் கல்வி அமைச்சர், மாநில முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்குரிய அரசு சலுகைகள் அனைத்தும் அம்மாணவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மறுமதிப்பீட்டில் சில மாவட்ட (திருவள்ளூர், நாமக்கல்) முதல் மதிப்பெண்களும் மாறியிருக்கின்றன. பொதுவாகப் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் மிகுந்த கவனத்துடன் மதிப்பீடு செய்யப்படுகின்றன. விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் விதிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. மிகமிகக் குறைந்த புள்ளி வேறுபாட்டில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான இடம் பறிபோகும் நிலை இருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு கறாராக நடைபெறுகிறது. பொதுவாகப் பெரிய புகார்கள் வருவதில்லை.

ஆங்கில வழியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு வாய்வழிப் பரவலாக நிலவி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ‘இந்தப் பாரபட்சம் உண்மைதான்’ என்றும் ‘அதற்குரிய காரணம் தெரியவில்லை’ என்றும் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். எனினும் இக்குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. தமிழில் தேர்வெழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் ஆசிரியர்களுக்குத் தெளிவாகப் புரிவதால் குறைந்த மதிப்பெண் போடுகிறார்கள் என்று அதைப் பற்றிக் கிண்டல் பேச்சும் உண்டு. ஆங்கில வழியில் பயிலும் மாணவர் திறன் பற்றி நிலவும் உயர்ந்த எண்ணம் ஆசிரியப் பொதுப் புத்தியிலும் அப்படியே பதிந்திருக்கிறது என்பது உண்மை. ஆகவே கிண்டல் பேச்சும் அர்த்தம் உடையதுதான்.

ஆசிரியர் ஒருவரே மதிப்பீடு செய்த தமிழ் வழி விடைத்தாள்கள், ஆங்கில வழி விடைத்தாள்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து பார்க்கலாம். வகை மாதிரியாக இப்படிப்பட்ட ஒப்பீட்டை நிகழ்த்தி ஆய்வு செய்தால் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மாணவர் வாழ்க்கையைத் தீர்மானிப்பது மதிப்பெண்தான் என்றாகிவிட்ட நிலையில் சிறு புகார்களையும் பெருமளவு பொருட்படுத்த வேண்டியது அவசியம். மற்றபடி, கவனமான மதிப்பீட்டிலேயே இத்தகைய பெருந்தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றால், அசட்டையான மதிப்பீடுகள் நடைபெறும் இடத்தில் மாணவர் நிலை கவலைக்குரியது என்பதில் ஐயமில்லை.

நவம்பர் 2008இல் நடைபெற்ற விடைத்தாள் மதிப்பீட்டில் குறைபாடு இருப்பதாகக் கருதிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலைக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர். அதில் பல மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதிப்பெண் கூடினால் மறுமதிப்பீட்டுக்கென மாணவர் செலுத்தும் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்னும் விதிப்படி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தொகையைப் பல்கலைக்கழகம் திருப்பியளித்துள்ளது. அத்துடன் இந்தக் குளறுபடிக்குக் காரணமானவர்கள் எனக் கண்டறியப்பட்ட நான்கு ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது.

பொதுவாகவே இன்றைய சமூகத்தில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களைத் தாழ்வாகக் கருதும் போக்கு உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்விகள் பெரும் சம்பாத்தியம் கொடுப்பவையாக இருப்பதால் அவற்றைப் பயிலும் மாணவர்கள் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் இலட்சக்கணக்கானோர் கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள்தான். அரசு நிர்வாகப் பணிகளில் உள்ள இலட்சக்கணக்கானோரும் ஏராளமான தனியார் நிறுவனப் பணியாளர்களும் கலைக்கல்லூரிகளின் மாணவர்கள்தான். சமூகத்தின் உயிரியக்கத்தில் பங்காற்றுவோராகிய இவர்கள்மீதான மதிப்பு மிகவும் தாழ்வானதாக இருப்பது நம் சமூக முரண்களில் ஒன்று. ஆகவே கலைக்கல்லூரி மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தரம் தாழ்ந்தே நடைபெறுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டைப் பொறுப்பான பணியாக ஆசிரியர்கள் கருதுவதில்லை. விடுமுறைக் காலத்தில் கூடுதல் வருமானம் தரும் எளிய வேலையாகவே இதைக் கருதுகின்றனர். விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் நேரக் கட்டுப்பாடு பெரும்பாலும் பின்பற்றப்படுவதேயில்லை. முற்பகல் மூன்று மணிநேரம், பிற்பகல் மூன்று மணிநேரம் எனக் கால அளவு வகுக்கப்பட்டிருக்கிறது. இருபது, இருபதாக ஒருநாளைக்கு நாற்பது விடைத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. இரண்டு மணிநேரம் விடைத்தாள் மதிப்பீட்டிற்கெனவும் ஒரு மணிநேரம் கூட்டல் சரிபார்த்தல், மதிப்பெண்ணை உரிய படிவத்தில் பதிவுசெய்தல் ஆகியவற்றுக்கெனவும் கொண்டால் மாணவருக்குப் பாதகமின்றி மதிப்பீட்டுப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் வரைக்குமே ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். மாணவர் எழுதியுள்ளதை வாசிக்காமலே வினா எண்களையும் மதிப்பெண் அளவையும் மனத்தில் கொண்டு மதிப்பீட்டு வேலையை மிக எளிதாக முடிக்கின்றனர். மதிப்பெண் வழங்குவதில் பெரும்பாலான ஆசிரியர்கள் பின்பற்றும் ஒருமுறை, சராசரி மதிப்பெண் போடுதல். அதாவது ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் எனச் சராசரியாக எல்லாருக்கும் மதிப்பெண் வழங்கிவிடுவார்கள். எண்பது மதிப்பெண் வாங்கும் அளவு எழுதியுள்ள மாணவனும் தேர்ச்சி பெறவே தகுதியற்ற மாணவனும் இந்தச் சராசரிக்குள் ஒரே அளவு மதிப்பெண் பெற்றிருப்பார்கள்.

குறிப்பிட்ட துறையில் பயின்று பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அத்துறை சார்ந்த அனைத்துப் பாடங்களிலும் புலமை இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சில பாடங்களையே அவர் தொடர்ந்து போதிப்பவராகவும் இருப்பார். ஆனால் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு வரும்போது அவர் எந்தப் பாட விடைத்தாளையும் மதிப்பிடலாம். சுருக்கமான விடைக்குறிப்பை வைத்துக் கொண்டு தனக்குத் தொடர்பில்லாத பாட விடைத்தாளை எந்த அளவுக்கு ஒருவர் மதிப்பிட முடியும்? மாணவர் எழுதியுள்ள பக்க அளவைக் கொண்டு குத்து மதிப்பாக மதிப்பெண் போடுவதும் உண்டு. முதுநிலைப் படிப்புகளுக்கும் கல்வியியல் படிப்புக்கும் மதிப்பெண் விழுக்காட்டைப் பொறுத்தே இடம் வழங்கப்படுகிறது. உயர் கல்வி பணம் உள்ளவர்களுக்கே என்றாகிவிட்ட சூழலில் சாதாரணமானவர்கள் இக்கல்வியைப் பெறுவதற்கு அவர்களின் மதிப்பெண்ணே உதவும். விடைத்தாள் மதிப்பீட்டுக் குளறுபடிகள் பலரது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்னும் உணர்வு ஆசிரியர்களுக்கு இல்லை.

தொலைநிலைக் கல்வி பரவலாகிவிட்ட நிலையில் கலைக்கல்லூரி ஆசிரியர்களுக்கு அதன்வழியாகவும் கூடுதல் வருமானம் வருகிறது. தொலைநிலைக் கல்வி வகுப்பெடுத்தல், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி, விடைத்தாள் உருவாக்குதல் எனப் பல வழிகளில் வருமானம் ஈட்ட இன்று வாய்ப்பிருக்கிறது. இது ஆசிரியர்களின் பேராசையைத் தூண்டுகிறது. முற்பகல் ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரை ஒரு பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வகுப்பெடுத்து விட்டுப் பன்னிரண்டு மணிவாக்கில் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்து முற்பகல் பிற்பகல் இரண்டுக்கும் உரிய நாற்பது தாள்களை இரண்டு மணிக்குள் மதிப்பிட்டு அங்கிருந்து ஐம்பது தொலைவில் உள்ள இன்னொரு நகரத்திற்கு தனது இருசக்கர வண்டியில் சென்று சேர்ந்து வேறொரு பல்கலைக்கழகத் தொலைநிலை வகுப்பை மாலை நான்கிலிருந்து ஆறு மணி வரை எடுத்து முடித்த திறன் பெற்ற ஆசிரியரை நானறிவேன். ஒரே நாளில் மூன்று இடத்தில் நாட்படி, பயணப்படி பெறும் தகுதி உள்ளவர் அவர். ஐம்பது கல் தொலைவில் உள்ள நகரத்திற்குச் சென்று வகுப்பெடுக்க அவருக்கு முதல் வகுப்புத் தொடர் வண்டிக் கட்டணம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் வல்லமை தமக்கு இல்லையே என்று பலர் ஆதங்கப் பட்டனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியோடு தொலைநிலைக் கல்வி வகுப்பு ஒன்று என்பது பலருக்கும் சாத்தியமானதுதான். ஆனால் தொலைவில் உள்ள நகரத்திற்குச் சென்று இன்னொரு வகுப்பெடுக்கும் அவரது சாதனை அசாத்தியமானது.

அந்த ஆசிரியர் மதிப்பீடு செய்த விடைத்தாள்களுக்கு உரிய மாணவர் நிலை பரிதாபத்திற்குரியது. அவரது அவசர, அலட்சிய மதிப்பீட்டால் நிச்சயம் மாணவர்களுக்குப் பாதிப்பு நேரும். தேர்ச்சி பெறமாட்டோம் எனக் கருதி விரக்தியுற்றிருக்கும் மாணவர் எண்பது மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று குதூகலிப்பதும் எண்பது மதிப்பெண் பெறுவோம் என்று எதிர்பார்த்திருந்த மாணவர் விரக்தியடைவதும் இத்தகைய அலட்சிய மதிப்பீட்டால் நேர்வதுதான். கடைசிப் பருவத்தில் ஒருதாளில் தோல்வியடைந்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதன் முடிவு வரும்முன் எல்லா இடங்களிலும் உயர் கல்விச் சேர்க்கை முடிவடைந்ததால் வீணாக ஓராண்டை இழந்த மாணவர்கள் பலர். ஆசிரியரின் பணம் ஈட்டும் பேராசையின் விளைவு பல மாணவர்களின் கால இழப்பு. கௌரவமாக வாழ்க்கையை நடத்தப் போதுமான ஊதியம் வழங்கப்படும்போது இந்தப் பேராசை அற்பத்தனங்கள் எதன் பொருட்டு?

ஆசிரியத் தகுதி பெற்று வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் ஏராளம். அத்தகையோருக்குத் தொலைநிலைக் கல்வி வகுப்பெடுக்கும் வாய்ப்பைப் பல்கலைக்கழகங்கள் வழங்கலாம். வாரம் முழுக்கக் கல்லூரியில் ‘தொடர்ந்து’ வகுப்பெடுத்துக் களைத்திருக்கும் ஆசிரியர்கள் சனி, ஞாயிறுகளில் பூரண ஓய்வெடுத்துத் தமது சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம்; அடுத்த வார வகுப்புகளுக்குத் தயார் செய்யலாம். அவற்றிற்காகத் தானே விடுமுறை. வேலையற்றோருக்கு வாய்ப்பும் கிடைக்கும்; வேலை கிடைக்கும்வரை குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதமும் இருக்கும். பணி அனுபவமும் அவர்களுக்கு உண்டாகும். நல்ல ஊதியம் பெற்றுக்கொண்டிருப்போருக்கே எதற்கு மேலும் கூடுதல் வருமானம்? குறிப்பிட்ட ஓரிடத்திலேயே பணம் குவியும் இன்றைய சமூகக் கோட்பாடு எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. வருமானப் பரவலாக்கம் நிகழ வேண்டுமானால் இத்தகைய சிறுசிறு மாற்றங்களால் கூட முடியும்.

அதேபோல விடைத்தாள் மதிப்பீட்டுக்கென எதற்குத் தனி ஊதியம்? ஓராண்டுக்கு நூற்று எண்பது நாள்தான் கல்லூரி வேலை நாட்கள். மீதமுள்ளவை தேர்வு, விடைத்தாள் மதிப்பீடு, பாட ஆயத்தம் ஆகியவற்றுக்கானவை. பாடம் பயிற்றும் ஆசிரியரே விடைத்தாள்களை மதிப்பிடுவது சரி. ஒரு தாளுக்கு இவ்வளவு எனத் தொகை வழங்க வேண்டியது எதற்கு? விடைத்தாள் மதிப்பீடும் ஆசிரியப் பணியின் ஒரு பகுதி. விடுமுறை நாட்களில் மதிப்பீட்டுப் பணி நடைபெறுகிறது. ஆசிரியர் மாத ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கிறார். விடைத்தாள் மதிப்பீட்டுக்கெனப் பல்கலைக்கழகம் வழங்கும் தொகை மாணவர்களிடம் தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணப்படியும் நாட்படியும் வழங்க வேண்டியது அவசியம். ஒரு தாளுக்கு இவ்வளவு என வழங்குவதால்தான் கூடுதல் வருமானம் இது என்னும் எண்ணம் உருவாகிறது. இல்லையேல் ஆசிரியப் பணியின் பகுதி இது என்று கருதப்படும். அத்தகைய மனநிலை மாற்றம் மாணவர்களுக்குப் பல நிலைகளில் சாதகமாகும்.

குறிப்பாக விடைத்தாள் மதிப்பீட்டில் கவனம் குவியும். மேலும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணச் சுமை குறையும். ஒரு தாளுக்குப் பத்து ரூபாய் வீதம் கட்டணம் குறையுமானால் மொத்தத் தொகை எவ்வளவோ வரும். அரசு கலைக்கல்லூரிகளில் தேர்வுக் கட்டணத் தொகை திரட்ட மாணவர்கள் அலையும் அலைச்சலைக் காண்போருக்கு ஒரு தாளுக்குப் பத்து ரூபாய் என்பது மாணவ நிலையில் எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

விடைத்தாள் மதிப்பீட்டில் அலட்சியம் காட்டிய நான்கு ஆசிரியர்களுக்கு நிரந்தரத் தடை விதித்திருப் பதற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பாராட்டலாம். அதேசமயம், மதிப்பீட்டுப் பணியை அலட்சியமாகக் கருதாத வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுதான் பயன் தருவதாக அமையும். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியைக் கட்டாயமாக்குதல், ஆசிரியப் பணியின் ஒரு பகுதியாக்குதல், மதிப்பீட்டுக் கான கால அளவைச் சரியாகப் பின்பற்றும்படி நிர்ப்பந்தித்தல், அக்காலத்தில் பிற பணிகளில் ஈடுபடாம லிருக்க வலியுறுத்தல் உள்ளிட்டவை மதிப்பீட்டுப் பணி செவ்வனே நடைபெற உதவும். மாணவர் நலனுக்கு இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அவசியம். ஆசிரியப் பணி புனிதமானது என்பதும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எனபதும் பழைய மதிப்பீடு சார்ந்த உளுத்துப் போன வாசகங்கள். இன்று ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில். தொழிலுக்குரிய நியதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

உள்ளடக்கம்