|
‘சமச்சீர் கல்வி - நிறைவேறாத கனவு’ தலையங்கம் நிறைய விஷயங்களை
மறுபரிசீலனைக்குட்படுத்தியிருந்தது.
அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்பது மேனிலைப் பள்ளிவரை, தமிழ் வழியில்தான்
என்றிருந்தால், சாத்தியப்பாடு, சுருங்கிய காலத்தில் ஏற்படும். ஆங்கில வழிக்
கற்பிக்கும் கல்வி நிலையங்கள் உண்டாக்கும் ‘மாயப் பிரமைகள்’ உடைத்தெறியப்பட வேண்டும்.
புறவயமான உடைகளும் உதட்டோரம் தெறிக்கும் ஆங்கிலச் சொற்களும் பெற்றோர்களைக்
கனவுலகத்தில் தொங்கவிடுகின்றன. ஆங்கிலம் வழிக் கற்பிக்கும் கல்வியகங்கள்
பெரும்பாலானவற்றின் உள்நோக்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் சுரண்டப்படுவது
என்பதையெல்லாம், அரசும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்ட குழுக்களும்
ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துவோர் கல்வி நிலையங்கள்
தொடங்க அனுமதிக்கக் கூடாது. வியாபார நோக்கில் கல்விச் சேவைக்கு முன் வருவோரை
மக்கள் குழுக்கள் நிராகரிக்கத் தயாராக வேண்டும். தமிழ் வழிக் கற்போரைக்
குறைந்தபட்சம் அரசு நிறுவனங்களில், அதிகளவில் பணியமர்த்தி ஊக்கப்படுத்த வேண்டும்.
தாங்கள் கூறியபடி கற்றல், கற்பித்தல் கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை
ஏற்படுத்த வேண்டும். இது கற்கின்ற மாணவர்களிடமிருந்தே ஆலோசனைகள் பெற்றுப்
பரிசீலித்து அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்திசெய்து, இப்படித் தொடர்
நிகழ்வுகளாகத்தான் செயல்பட வேண்டும்.
கல்வி என்பது மகிழ்வூட்டக்கூடிய ஒன்று. இச்சூழல் உருவாகப் பயில்வோர்,
பயில்விப்போர், கல்வியில் ஆர்வம் கொண்டோர், அவற்றை நடைமுறைப்படுத்துவோர் என
அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய களம்.
சிவசு
பாளையங்கோட்டை
இன்று எல்லாருக்கும் தரமான இலவசக் கல்வி என்பது இயலாததாகவே உள்ளது. ஒருமைப்பாட்டைப்
பேணி வளர்க்க வேண்டிய கல்வியே இன்று சமூகத்தில் பிளவுக்குக் காரணமாகி விட்டது.
எந்தக் கல்வி நிறுவனமும் தரமான புதிய சிந்தனை களுக்கு வாய்ப்பளிப்பதில்லை;
படைப்பாற்றலுக்கு முன்னுரிமை தருவதுமில்லை. மாறாகத் தேர்வை மையமாகக் கொண்டு
பணத்தைக் கறக்கும் நிறுவனங்களாகக் கல்விக் கூடங்கள் ஆகிவிட்டன. ஆங்கிலம் இன்று
உலகின் தொடர்பு மொழியாகிவிட்டது; ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலைப்
பாட்டிற்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். கல்வியும் மருத்துவமும் தனியாரிடமிருந்து
உடனடியாகப் ‘பிடுங்கப்’பட வேண்டும்.
பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு நீக்கப்படுவது ஒரு நல்ல அறிகுறியே. தொழிற்கல்வி
பயில பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி தேவை. எனவே மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வைக்
கொண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வை மாவட்ட அளவில் நடத்தி தகுதிச் சான்றிதழ்
கொடுத்துவிடலாம். அகமதிப்பீட்டு முறையைச் சிறப்பாகப் பின்பற்றுவதன் மூலம்
மாணவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து அவர்களைத் தரமான, தகுதி உடையவர்களாக வளர்க்க
முடியும். பாலிடெக்னிக் போன்ற பட்டயப் படிப்புகளில் சேரும்போது அடிப்படை அறிவைச்
சிறுதேர்வு மூலம் கண்டறிந்து சேர்த்துக்கொண்டால் போதும். ஏனெனில் பயிற்சி மட்டுமே
தொழிற் கல்வியின் அடிப்படை. சுயநிதிக் கல்லூரிகள் உரிய தகுதியுள்ள ஆசிரியர்களை
அவ்வளவாக நியமிப்பதில்லை. எல்லாமே ஒரு மேம்போக்கான நிலையையே உருவாக்குவதாகத்தான்
தெரிகிறது. மனிதனை மையமாகக் கொண்ட கல்விக்கான வித்து இன்னும் ஊன்றப்படவில்லை.
தலையங்கத்தில் குறிப்பிட்டபடி பன்னிரண்டாம் வகுப்புவரை அனைத்துக் குழந்தைகளுக்கும்
கட்டாய இலவசக் கல்வியைப் பொதுப் பள்ளி மூலம் வழங்குவதுதான் இதற்குத் தீர்வு.
முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை
சமச்சீர் கல்வி குறித்த தலையங்கம், கல்வித் திட்டத்தில் மாறுதல் செய்வது காலத்தேவை
என்பதையும், ஆட்சியாளர்கள் இதைக் கண்டு கொள்வதையே கவனமாய்த் தவிர்த்து வருவதையும்
உணர்த்தியது.
நா. கலையரசன்
மங்களக்குடி
சமச்சீர் கல்வி குறித்த தலையங்கம், கல்வி வணிகமயமாகிப் போனதற்கு ஆட்சியாளர்கள்
தனியார் கல்வி நிறுவனங்களின் பங்காளிகளாகிப் போனதே காரணம் என்பதைத்
தெளிவுபடுத்தியது. ஒரு சமூகத்தை அறிவுடைமைச் சமூகமாக மாற்றிட ஆட்சி அதிகாரத்தைப்
பரிபாலிப்பவர்களால் முடியும். ஆனால் கடந்த, தற்கால ஆட்சியாளர்கள் இவர்களின்
கருத்தியல் அடிமைகளாகவே தமிழர்களை உருவாக்க நினைக்கிறார்கள். கல்வியை ஏழைகளுக்கு
எட்டாத உயரத்தில் வைத்திட விரும்புகிறார்கள். அதனால்தான் தனியார் மற்றும்
அரசியல்வாதிகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நன்கொடை வழிப்பறிகளை எத்தனை
எதிர்ப்பு, போராட்டம் என எது நடந்தாலும் அவற்றைக் கண்டன அறிக்கைகளால்
சமாளித்துவிடுகிறார்கள். இறுதியில் நன்கொடை தர முடிந்தவர்களே கல்வி நிலையத்தில்
நுழைய முடிகிறது. இப்படி ஒரு நவீன மனுதர்மம் அமலாகி வருகிறது. மனுவாதிகள்,
“சூத்திரர்கள் கல்வி (வேதம்) கற்றால் நாக்கை அறுத்தெறி, கல்வி கற்பதைக் கேட்டால்
காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்றார்கள். இவை அநீதியென ஆவேசமாய்ப் பேசிப்
பேசிப் போராடி ஆட்சிக்கு வந்தவர்கள் காசிருப்பவன் படித்தால் போதும் என்கிற புதிய
சமூக நீதியை அமலாக்கி வருகிறார்கள்.
காசில்லாதவர் சிலநேரம் கூடுதல் மதிப்பெண் என்கிற தகுதிபெற்று வந்துவிட்டால்
அவனுக்கென ஒரு கல்வி வேண்டுமே எனப் பாடத் திட்டங்களையே பல வடிவில் அமலாக்குகிற
அவலத்தையும் செய்கிறார்கள். இவற்றை ஒரு விரிவான கருத்துப் பிரச்சார இயக்கமாக்குதல்
வரலாற்றுத் தேவை என்பதைத் தலையங்கம் உணரவைக்கிறது.
முகவை புனிதன்
இராமநாதபுரம்
சமச்சீர் கல்வி என்பது பலராலும் விரும்பப்படுகிற ஒன்றாக இருந்தாலும், கல்வியானது
கல்வி வணிகர்களின் கைகளில் சிக்குண்டு கூண்டுக் கிளியாக இருப்பதால் அது நிறை வேறாத
கனவாக மட்டுமல்ல பிரகாசிக்கும் கானல் நீராகத்தான் பரிணமித்துக்கொண்டிருக்கிறது.
கல்வி குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதைப் பொதுமக்கள் முழுமையாக உணர்ந்தால்
நல்லது நிகழ்ந்திட வாய்ப்புண்டு. இலக்கியவாதியின் வெற்றியை அவர்கள் மட்டும்
கொண்டாடினால் போதாது. பொதுமை விரும்பிகளும் வரவேற்றுக்கொண்டாட வேண்டும்.
‘வேப்பெண் ணெய்க் கலய’த்தில் வேலியை ஒட்டிச் செல்லும் பாட்டியோடு மனமும்
ஒன்றிச்சென்றது.
கா. இர. குப்புதாசு
செஞ்சி
பெருமாள்முருகனின் “வேப்பெண்ணெய்க் கலயம்” சிறு கதையின் தலைப்பே மண்மணம் வீசியது.
மனித உறவுகளின் மகத்துவம் சொல்லும் கதை. நாகரிகம் என்னும் பெயரில் மனிதன் தொலைத்த
விஷயங்களில் பாட்டி-பேரன் உறவும் ஒன்று. இரவில் நிலவொளியில் பாட்டி மடியில்
படுத்துக்கொண்டு நீதிக்கதைகள் கேட்ட அன்றைய சிறுவர்கள் பெற்றோராய் வளர்ந்து இன்று
தம் பிள்ளைகள் வன்முறையைத் தூண்டும் கேலிசித்திர அலைவரிசை பார்ப்பதைத் தானே
ஊக்குவிக்கின்றனர். எத்தனை பெற்றோர் தத்தம் வீடுகளில் உள்ள வயதான பெற்றோர்களிடமும்
உறவுகளிடம் தம் குழந்தைகளை நெருங்கவிடுகின்றனர்? இவ்விஷயத்தில் குழந்தைகளை மட்டும்
குறை கூறினால் மட்டும் பயனில்லை. இதை இன்றைய பெற்றோர்கள் உணர்ந்து ‘தாம் பெற்ற
இன்பம் தம் பிள்ளைகளும் பெற’ வழி செய்ய வேண்டும்.
ரா. ராஜா
கோவை
சுகிர்தராணியின் ‘குடியும் சாதி நிமித்தமும்’ கட்டுரையில் இலக்கிய வட்டத்தில்
ஆதிக்கச் சாதிய மனோநிலையின் வெளிப்பாடு பற்றிக் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியப்பட
ஏதுமில்லை. இந்த மனோநிலை இலக்கிய வட்டத்தில் மட்டுமல்ல. இது சமூகத்தின் அனைத்து
மட்டத்திலும் உண்டு. இதில் தப்பியவர்கள் எவரும் இலர்.
வெட்கட்ராமன்
சென்னை
2009 ஆகஸ்டு இதழில், டி.கே.பட்டம்மாள் குறித்த அஞ்சலிக் கட்டுரையில் முத்துசுவாமி
தீட்சிதர் உலகில் வாழ்ந்தது போதும் என்று நினைத்தபோது வராளி ராகம் பாடி உயிர்
நீத்தார் என்று கூறுவது உண்டு என அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார். முத்துசாமி
தீட்சிதர் 1835 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வழக்கம்போல பூஜைகளைச் செய்தார். பூஜா
வேளையில் தன்னுடைய சீடர்களைப் பாடச் செய்தார். அன்று அவர்கள் பாடியது தீட்சிதர்
இயற்றிய கமகப்ரியா - பூர்வி கல்யாணி - ராகக் கீர்த்தனையான மீனாக்ஷி மே முதம் என்ற
உருப்படியை. சரணத்தில் வரும் ‘மீனலோசனி பாசமோசனி’ என்ற வரியைச் சீடர்கள்
பாடிக்கொண்டிருக்கும்போது ‘சிவ பாஹி’ என்று உச்சரித்தார் தீட்சிதர். இந்த
உலகத்தில் அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் அவைதாம். இது தீட்சிதரின் கடைசிக்
கிருதியுமல்ல. அதன் ராகம் வராளியுமல்ல. அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பது சரியல்ல.
என். வெங்கடேசன்
ஆஸ்திரேலியா |