|
பின்-நவீனவாதிகளின் குணாதிசயங்களில் ஒன்று இருந்தாற்போல் திடீர்த் திடீரென்று
மரண அறிக்கைகளை வெளியிடுவது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்றார்கள். பிறகு பிரதி
செத்துவிட்டது என்று சொன்னார்கள். வரலாறு மரணித்துவிட்டது என்று பறை அடித்தார்கள்.
இதே வரிசையில் சிறுகதை என்ற இலக்கிய வகைமைக்கு முடிவுகாலம் வந்துவிட்டது என்று
இரங்கல் கூட்டங்கள் நடத்தினார்கள். பின்-நவீனவாதிகளின் ஆருடங்கள் கிளி
ஜோசியத்திற்கு மதிப்பையும் மரியாதையையும் தருவதாகும். சிறுகதை என்னும் இலக்கிய மரபு
இன்னும் உயிருடன் இருக்கிறது. அச்சு உலகை முற்றிலுமாகத் திசை திருப்பாவிட்டாலும்
சமீபத்தில் வெளிவந்த ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்புகள் இலக்கியப் போக்குகளைச் சற்று
நகர்த்தியிருக்கின்றன. அவற்றில் சில திரட்டுகளை இங்கே அறிமுகம் செய்கிறேன். இலக்கிய
விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பவர்கள் என்னுடைய பட்டியலில் மூன்று முக்கியத்
திரட்டுகள் விடுபட்டிருப்பதைக் கவனிக்கக் கூடும்: Jhumpa Lahiriயின் Unaccustomed
Earth; Chimamanda Ngozi Adiciயின் The Thing Around Your Neck; Daniyal
Mueenuddinயின் In other Rooms, Other Wonders. லாகிறி, அடிச்சியுடைய ஆக்கங்கள்
பலருக்கும் பரிச்சயமானவை. இவர்களுடைய ஆளுமைகள் பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றன.
ஆகையால் தான் இங்கே இடம்பெறவில்லை. மூன்னுடின் பாகிஸ்தானிய எழுத்தாளர். அவர் இங்கே
கவனிக்கப்படாததிற்குக் காரணம் நான் இன்னும் அவருடைய தொகுப்பை வாசிக்கவில்லை.
குளறுபடியான நவ சீனர்கள்
முதலில் Yiyun Li எழுதிய A Thousand Years of Good Prayers. லீயின் பின்புலம்
பற்றிச் சில வார்த்தைகள். லீ சீனாவில் பிறந்தவர். அவருக்கு 28 வயதாக இருக்கும் போது
1996இல் அமெரிக்காவின் அயோவாவிற்குத் தடுப்பாற்றியல் (immunology) முனைவர் பட்டப்
படிப்புக்காக வந்தார். வரும்போது ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை.
அன்னிய நாட்டு வாழ்வு தந்த தனிமையைப் போக்க அயோவா பல்கலைக்கழகம் நடத்தும்
எழுத்தாளர் பயிற்சியில் சேர்ந்துகொண்டார். அந்தத் தருணத்தில் லீ எழுதிய
Immortality என்ற கதையை அவருக்கு வகுப்பெடுத்த Alan McPherson படிக்க நேர்ந்தது.
அதன் முதல் வரியே அவரை ஆச்சரியப்படுத்தியது. தனிமனித இருத்தியல் சார்பான கதைகளைப்
படித்துக் களைத்துப் போயிருந்த McPhersonக்குப் பன்மைத் தொனியில் ஒரு சமூகமே
கூட்டாகப் பேசுவது, செயல்படுவது வித்தியாசமாக இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்
லீக்கு நடந்தவை விவரணையாளர்கள் கூறுவது போல் வரலாறாயிற்று. McPhersonனைத்
திகைப்பூட்டிய அந்தக் கதையின் தொடக்க வரிகள்: His story, as the story of everyone
of us, started long before we were born.
பத்துச் சிறுகதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பு பின்-மாவோ, பின்-தியன்மன்
சதுக்கச் சீனச் சூழ்நிலையையும் அமெரிக்காவில் குடியேறிய சீனர்களின் வாழ்வையும்
சித்தரிக்கிறது. எனவே இரண்டு நாடுகளும் இவ்வாக்கங்களுக்குப் பின்புலனாகின்றன. மனித
எண்ணங்களும் பார்வைகளும் இறுக்கமானவை அல்ல என்பதற்கு Son என்ற கதை தெளிவான
எடுத்துக்காட்டு. சமீபத்தில் பிரசாவுரிமை பெற்ற 33 வயதான பிணீஸீ புதிய அமெரிக்கக்
கடவுச்சீட்டுடனும் சீனருக்குரிய பரம்பரைக் கவலையுடனும் பத்து வருடங்களுக்குப் பிறகு
தாய்நாடு திரும்புகிறான். அவனை உறுத்திக்கொண்டிருந்த காரியம் கீழைத்தேய தாய்மார்
செய்யும் மரபால் அங்கீகாரம் பெற்ற செயலான. மகனுக்குப் பெண் பார்ப்பது. புராதனக்
கொள்கைகளில் மூழ்கிப் போயிருக்கும் தன் தாயின் மனதை நோகடிக்காமல் அவர்
பார்த்துவைத்திருக்கும் பெண்களை எப்படி வேண்டாமெனச் சொல்வது என்பது அவன் பிரச்சினை.
சிக்கல் என்னவென்றால் அவன் ஓரின ஈர்ப்புடையவன். ஆனால் அவனுக்கு ஓர் அதிசயம்
காத்திருக்கிறது. நவசீனா போல் அந்தத் தாயும் மாறிப்போயிருக்கிறார். அவருக்கு
ஏற்பட்ட புதிய அக வளர்ச்சியால் மகனது பாலியல் உறவை அவரால் அங்கீகரிக்க முடிகிறது.
இன்னொரு கதையில் ஒரு பாட்டி இருமுறை இரையாகிறார். முதலில் பழைய மார்க்சிய நிர்வாகக்
கட்டுப்பாடுகளுக்கு, பிறகு செம் முதலாளித்துவத்திற்கு. பாலின உறவுகள்கூட நேரானவை
அல்ல. Boshen என்ற ஆணும் Sasha என்ற பெண்ணும் Yang என்ற வாலிப நடிகனைக்
காதலிக்கிறார்கள். இப்போது இடம்பெயர்ந்து சிகாக்கோ நகரில் இருந்துகொண்டு சீனாவில்
தம் காதலைப் பகிர்ந்துகொண்ட அந்த நடிகனிடம் அவர்கள் இருவரும் அனுபவித்த அந்த
மென்மையான உணர்வுகளை, மிகச் சிக்கலான அந்த நாட்களை வாஞ்சையுடன் நினைவுகூருகிறார்கள்.

‘சீனா நரகம்’, ‘அமெரிக்கா சொர்க்கம்’ என்ற ஈரிணைப் பார்வை இந்தக் கதைகளில் இல்லை.
எல்லா நாடுகளுமே ஒரு விதத்தில் நல்லவை தாம். நாம் பிறந்த காலந்தான் தவறானது என்ற
தொனி இந்தத் தொகுப்பின் கூறுமுறையில் காணப்படுகிறது. விட்டுவந்த நாட்டைப் பற்றிய
ஏக்கமோ வந்தேறிய நாடு தந்த வாய்ப்புகளுக்காக அதீத விசுவாசம் காட்ட வேண்டுமென்ற
எண்ணமோ இந்தக் கதாமாந்தர்களிடத்தில் இல்லை. லீயின் கதா பாத்திரம் Boshen சொன்னது
போல் அவர்கள் அமெரிக்காவில் கற்றுக் கொண்ட சொற்றொடர் moving on அவர்களின்
வாழ்க்கையின் குறிக் கோள் மட்டுமல்ல, குவியமுமாகிறது.
சீறும் சுந்தர தெலுங்கர்கள்
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முன்னையப் புதினங்கள் பரந்த இந்தியனை
(pan-Indian) அறிமுகப்படுத்தின. இந்த விசாலப் பார்வை சற்றுத் தளர்ந்து போய்க்
குறிப்பிட்ட இனம் சார்ந்த இந்தியச் சமூகத்தைக் குவிமையாக வைத்து இலக்கியங்கள் வரத்
தொடங்கியிருக்கின்றன. Jhumpa Lahiri அமெரிக்காவில் குடியேறிய மத்தியதர வங்காளிகளின்
புதிய நாட்டுக் கலாச்சார கலைந்துபோதல் வெளிப்படுத்திய அனர்த்தனங்கள், உள்வாங்கல்கள்
ஏற்படுத்திய உள்வாரி (internal) மனோதத்துவக் குழப்பங்கள் பற்றி நுட்பமாக
எழுதியிருக்கிறார். இப்போது அமெரிக்காவில் குடியேறியுள்ள Rishi Reddi என்ற
தெலுங்கர் தன்னுடய Karma and other Stories என்னும் தொகுப்பில் தெலுங்கு இந்துக்கள்
பற்றிச் சித்தரித்திருக்கிறார். இந்தப் புனைவுகள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர்
பற்றியவை, இச்சிறுகதைகளின் காலம் சென்ற நூற்றாண்டின் 80கள். அமெரிக்காவில் இந்தியா
பற்றிய ஹிப்பிகளின் பார்வை மங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் இந்தியா தன்னையும் ஒரு
வல்லரசு நாடாக அறிவித்திராத காலம். இந்தத் தொகுப்பு நாவல், சிறுகதை என்ற இருமையான
இலக்கியப் பொது ஒழுங்குகளைச் சற்றுத் தளர்த்துகிறது. ஒருகதையில் பின்னுக்குத்
தள்ளப்பட்ட கதா பாத்திரம் இன்னொன்றில் முன்னிறுத்தப்படுகிறது. ஆகையால் ஒரு தளத்தில்
இந்தத் திரட்டை ஒரு நாவல் போலும் எடுத்துக்கொள்ளலாம்.

இச்சிறுகதைகள் வழமையான பாரம்பரியத்திற்கும் (இந்தியா) நவீனத்திற்கும் (அமெரிக்கா)
இடையே ஏற்படும் கலாச்சாரச் சிக்கல்களையும் மோதல்களையும் சித்தரித்தாலும் அதை
எடுத்துரைத்த விதம் சற்று வித்தியாசமானது. இந்தியாவில் அந்தஸ்துடைய ஆங்கிலம்
சரளமாகப் பேசிய ஜஸ்டிஸ் சிவராமமூர்த்தி, புகுந்த நாட்டில் சாதாரணமானவராகக்
கணிக்கப்பட்டதுமல்லாமல் அவரது ஆங்கில உச்சரிப்பும் அமெரிக்கர்களுக்குப் புரியாதது
குழப்பத்தில் முடிந்துவிடுகிறது. அவர் சுத்த தாவர போசனி. ஒரு மெக்சிகன் உணவகத்தில்
இவர் கேட்டுக்கொண்ட bean and cheeseக்குப் பதிலாக beef and cheese பரிமாறப்படுகிறது.
இது இந்து தர்மத்திற்கு விளைந்த பாதகம் எனக் கருதுகிறார். வழக்காடலை தேசிய
விளையாட்டாகக் கருதும் அமெரிக்காவில் இந்து மதத்திற்கு ஈடேற்றம் செய்ய நீதிமன்றம்வரை
போக சிவராமமூர்த்தி தயாராகிறார். வேறு ஒரு கதையில் இந்துக் கடவுளான கிருஷ்ணாவை ஒரு
அமெரிக்கச் சரித்திர ஆசிரியர் இழிவுபடுத்தியதை மகன் மூலம் கேட்ட ரமேஷ் சந்தர், தன்
பணவசதியைப் பயன்படுத்திப் பள்ளி தலைமைப் பீடத்தை மிரட்டுகிறார். இத்தொகுப்பு
இந்துத்துவக் கருதுகோளைத் தூக்கிக்காட்டுகிறது என்று எண்ணிவிட வேண்டாம். நாளாந்த
வாழ்வில் எதிர்நோக்கும் வெள்ளை இன துவேஷத்தையும் கிறிஸ்தவ அடிப்படைவாதத்தின்
தாக்குதலையும் சமாளிக்க அமெரிக்கச் சமூகத்தின் ஓரங்களில் வாழும் இந்தியக்
கதாபாத்திரங்கள் இந்து மதத்தில் அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் தெம்பையும்
பெறுகிறார்கள். அவ்வளவுதான். இந்து சமயப் பிரசாரம் இக்கதைகளின் முதன்மையல்ல.
உன்னிப்பாகப் படிக்க வேண்டிய பல கதைகள் இத்தொகுப்பில் உண்டு. பிறந்த மண்ணைவிட்டுப்
போனாலும் சில குணங்கள் புகுந்த நாட்டிலும் தொடர்கின்றன. அதில் ஒன்று நமக்குக்
கைவந்த கலையான கிசுகிசுப்பு. மணமான லக்சிமி தன்னுடன் நூலகத்தில் வேலைபார்க்கும்
வெள்ளை அமெரிக்கருக்குக் காட்டும் அந்த அப்பாவித்தனமான அன்பு பாஸ்டன் நகர் வாழ்
தெலுங்கர்களின் நாக்கை மேலதிகமாக வேலைசெய்யவைக்கிறது. ஆந்திர சனங்களின்
முணுமுணுப்புகள், மன உளைச்சல்கள், தார்மீகரீதியான பார்வைகள் ஆகியவற்றை இப்புனைவு
பதிவுசெய்கிறது. இன்னொரு கதை மரபுக்கும் நவீனத்திற்கும் நடக்கும் ஓயாத பேரம் பற்றி
விவரணை செய்கிறது. ‘தேவதாசி’ என்னும் கதையில் உமா இந்த இரட்டை நிலைகளில் எதை
எதிர்ப்பது எதனுடன் இணைந்து போவதெனத் தடுமாறியபோது அவளின் நடன ஆசிரியர் கூறிய
அறிவுரை: ‘You must study the history. Then you must believe what your own mind
and heart tell you is correct. Isn’t true of so many things.’
உலகவாசிகள், பல் பண்பாட்டு நிலைகள்
Nam Leயின் திரட்டு The Boat. லீ வியற்னாம் நாட்டுக்காரர். ஆனால் ஆஸ்திரேலியாவில்
வளர்ந்தவர். Yiyun Li போலவே அயோவாவில் படைப்பாளருக்கான பயிற்சி பெற்றவர். எல்லாச்
சிறுகதைகளுமே சுயசரிதங்கள் என்பார்கள். இந்தத் தொகுப்பின் முதல் கதை லீயின்
சொந்தக் கதைபோல் தெரிகிறது. எழுத்தாளனாக வர முயலும் நாம் என்ற வியற்னாம்காரர்
பற்றியது. நாமின் ஆக்கங்களைப் படித்த அவன் நண்பன் கூறுகிறான்: ‘நீ வியற்னாம்
சமாச்சாரத்தையே பயன்படுத்தி இருக்கலாம். அதற்குப் பதிலாக இரத்தத்தை உறிஞ்சிக்
குடிக்கும் பெண்மோகி பேய்கள், கொலம்பிய நாட்டுப் படுகொலையாளிகள், மூல நோய் உடைய
நியூயொர்க் ஓவியர்கள், ஹிரோசிமா அனாதைகள் பற்றி எழுதுகிறாய்.’ நண்பனின் பேச்சைக்
கேட்டுத் தன்னுடைய தந்தைக்கு வியற்னாம் போர் நாட்களில் நடந்த அனுபவத்தை இந்தச்
சிறுகதைக்குள் ஒரு உள்கதையாக எழுதுகிறான். அந்தக் கதையின் சாரம் வாசகர்களுக்குத்
தரப்படுவதில்லை. இரத்தம் குடிக்கும் பெண் தன்பாலினச் சேர்க்கை, பிசாசுகளின் கதை
தவிர நண்பன் சொன்ன சமாச்சாரங்கள் இந்தத் தொகுப்பில் உண்டு. இப்புனைவுகளின்
இலக்கியக் குவிமை முழுக்க அமெரிக்கா-வியற்னாம் கலாச்சாரப் பரிமாற்றம் பற்றியதல்ல.
கொலம்பியா, ஈரான், ஜப்பான், ஆஸ்திரேலியா என்று பல புவிப்பரப்பில் நிகழ்கின்றன.
இந்தத் திரட்டின் கடைசிக் கதை The Boat வியற்னாமிலிருந்து மலேசியாவிற்கு 13 நாள்
தென் சீனக் கடலில் நடை பெற்ற அகதிகளின் பிரயாணத்தை விவரிக்கிறது. இந்த வள்ளப் பயணம்
70களில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. 200க்கும் மேற்பட்ட வியற்னாமியர்கள்
அந்தச் சின்ன வள்ளத்தில் எதிர்நோக்கிய சரீர, மனக்காயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய
அதீத எதிர்பார்ப்புகள், உள்ளுணர்வுப் பயங்கள் மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும்
கூருணர்வுடனும் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு முரண்நகை என்னவென்றால் சுற்றிவர கடல்
நீர்; ஆனால் இந்த அகதிகள் தாகம் தீர்க்கத் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்தத் தொகுப்பில் வியற்னாம் பழமொழிகள், ஜப்பானிய நாட்டுப் பற்று பாடல்கள்,
கொலம்பிய தாதாக்களின் கொச்சை மொழித் தொடர்கள் பிரதியில் பின்னப்பட்டிருக்கின்றன.
புதிய மால்குடி, பழைய சனங்கள்
எனக்கு அரவிந்த அடிகாவின் மாண் புக்கர் பரிசு பெற்ற ‘வெள்ளைப் புலி’ துப்பரவாகப்
பிடிக்கவில்லை. இலக்கிய விருது கிடைத்த நாவலாயிற்றே என்று விழுந்தோடிப் போய்
வாங்கிப் படித்தேன். என்னை அதிசயப்படுத்துவதைவிட எனக்கு அதிக அலுப்பையே இந்த நாவல்
தந்தது. ஆகையால் 28 பக்கங்களுடன் நிறுத்திவிட்டேன். அடித்தட்டு மக்களுக்கு
உலகமயமாதலின் பொருளாதாரப் பாதகங்களை விசாரணை செய்யும் நூல் என்று விமர்சகர்கள்
சொல்லியபோதும் எனக்கு இவரது பிரதியின் கருத்துக்கோணம் ஏதோ கிழக்கத்தியத்தை மீள்
கிழக்கத்தியமாக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றியது. நான் தவிர்க்க
வேண்டிய எழுத்தாளர் பட்டியலில் உச்சி இடத்தில் அடிகாவையும் சேர்த்துக்கொண்டேன்.
பழைய தவறுக்கு ஈடேற்றம் செயவது போல் Between the Assassination என்னும் சிறுகதைத்
தொகுப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறார். ஆர். கே. நாராயணன் மைசூரில் மால்குடி என்ற
கற்பிதச் சிற்றூரை உருவாக்கிய மாதிரி அடிகா கோவாவிற்கும் கலிகட்டுக்குமிடையே
கரையோரக் கிட்டூர் என்னும் கிராமத்தைப் புனைவு செய்திருக்கிறார். கதைகளின் நடப்புக்
காலம் இந்திரா காந்தியின் படுகொலை நடந்து ஆறு வருடங்களுக்குப் பின் ஆரம்பித்து அவர்
மகனான ராஜீவ் காந்தி குண்டுதாரிகளால் படு கொலைசெய்யப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு
முன் நடைபெறுவதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தொகுப்பின் தலைப்பைக்
குறிநீக்கம் செய்யக் கணினி குறும்பரின் (hacker) நிபுணத்துவம் தேவையில்லை.
நேர்கோட்டுப் போக்குள்ள நாவல் வகைமை போல் இந்த ஆக்கம் இருந்தாலும் இந்தத்
தொகுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், வெளியே வரலாம். கிட்டூர்வாசிகள்
சாதி, சமய, மொழி, இனக் கலாச்சாரம் என்ற சமுதாயக் கட்டமைப்புகளால்
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கதைத் தொகுப்பில் பல கதாமாந்தர்களைச் சந்திக்கலாம். திருட்டு ஒளிநகல்
வடிவெடுத்துப் புத்தகங்களை விற்றதற்காக 21 தடவை கைதுசெய்யப்பட்ட ராமகிருஷ்ணா,
மார்க்சியத்தின் இயங்கியலைச் சரிவர விளங்கிக்கொள்ளாததால் உதவிசெய்யத் தயங்கும்
தோழர் தின்னா, மெய்ம்மையைத் தேடி அலையும் பத்திரிகையாளர் காமத், புதிய
வடிவங்களையும் மாற்றத்தையும் எதிர்பாராத மக்கள் பற்றிக் கதை எழுதும் முரளி, மத்திய
வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் கீழ் சாதி என்ற அவப்பெயர் தாங்க முடியாமல் தன்
பள்ளியிலேயே குண்டு வெடிக்கவைக்கும் சங்கரா எனப் பலர். இவர்கள் சமூகக்
கட்டுப்பாடுகளுக்குள் முடங்கிக் கிடப்பவர்களே தவிர இவர்களின் தனிச் செயலாண்மைக்கு
வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஒரு கிராமவாசிகளின் தார்மீக சுயசரித்திரம் என்பதைவிட
அந்தக் கிராம மக்களின் சன்மார்க்க சரிவு, தடுமாற்றம், முரண்மை பற்றிய சவபரிசோதனை
என்றுதான் இந்தக் கதைகளை எடுக்க வேண்டும்.
முடிவாகச் சில அவதானிப்புகள்
இந்த எழுத்துக்களை இனம் சார்ந்த அடையாள அரசியலின் வெளிப்பாடு என்று ஒதுக்க முடியாது.
இந்தக் கதைகள் பதிவுசெய்யும் தேடல்கள், மனிதநேய முறிவுகள், தார்மீகச் சறுக்கல்கள்,
உன்னத முயற்சிகள் ஒரு குறுகிய இனத்திற்கு மட்டும் உரியவை அல்ல. அவை எல்லாருக்குமே
பொதுவானவை. பிரபஞ்சம் தழுவியவை. ஆனால் இந்தக் கதைசொல்லலின் பலவீனம் கதாமாந்தர்கள்
குடும்பம், இனம் என்ற சட்டகத்துக்குள்ளேயே நின்றுகொண்டு தங்களின் தனிமனித
மனநோவுகள், வியாகூலங்களுக்கு விடைகாண முயல்கிறார்கள். இவர்களை ஒடுக்கும்,
காயப்படுத்தும் அரசியல், பொருளாதாரக் கூட்டிணைவு விளைவுகளுக்கு முன்னால் மௌனமாக
நிற்கிறார்கள். சிவராம மூர்த்திகூடத் தன் புண்பட்ட அகங்காரத்திற்கு நிவாரணம் தேடி
அந்தச் சாப்பாட்டுக்கடையை நீதிமன்றத்திற்கு இழுக்க முயன்றாரே தவிர சுதந்திரச்
சந்தையின் திருவடிவான கூட்டுநிறுவன உணவகங்களின் விரிவாக்கம், அவை விளைவிக்கும்
சூழலமைவு சேதங்கள், அவற்றின் இறுக்கமான தொழில் சங்க நிபந்தனைகள் பற்றி
அம்பலப்படுத்த முனைவதில்லை; கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை
இந்த எழுத்தாக்கங்களின் சிறப்புகளில் ஒன்று ஆங்கில மொழி நடைக்கு ஒரு புதிய
திராணியைக் கொடுத்திருப்பதுதான். இந்தக் கதைசொல்லிகளுக்கு ஆங்கிலம் இரண்டாம்
மூன்றாம் மொழி. ஆகையால் இவர்கள் எழுதும் ஆங்கிலத்தில் இவர்களது தாய்மொழி இலக்கண
வழக்கின் தடயங்கள் அங்கங்கே சிதறலாகத் தென்படுகின்றன. இவர்களது எழுத்தில்
ஆங்கிலத்திற்குப் புதிய உருவமும் அர்த்தமும் கொடுக்கப்படுகிறது. ஒரு காலனிய பாஷை
காலனியப்படுத்தப்பட்டவர்களால் இப்போது மறு காலனியம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆங்கிலம் ஆங்கிலேயரிடமிருந்து எல்லை நிரகாரணம் செய்யப்பட்டுப் பிறத்தியார் கைக்கு
மாறியிருக்கிறது.
இந்தக் கதைகளில் ஒன்று புலனாகிறது. இந்தக் கதைசொல்லிகளுக்கு அவர்களின் கலாச்சாரம்
ஒரு சுமையாகப்படுவதில்லை. முன்னைய மூன்றாம் மண்டல இலக்கியவாதிகளிடையே இருந்த தேசிய
அடையாளம் இவர்களுக்குப் பாரமானதல்ல. தேசிய உன்னதங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ
புகுந்த கலாச்சாரத்தின் மகிமையைப் பாட வேண்டுமென்றோ அக்கறை இல்லை, இரண்டையுமே
அலசுகிறார்கள். விசாரணை செய்கிறார்கள். ஒரு உதாரணம், ரிஷி ரெட்டியின் கதாபாத்திரம்
ஒன்று இந்தியக் கூட்டுக் குடும்பத்தின் முக்கியச் சின்னமான வயதுபோன பெற்றோரைப்
பிள்ளைகள் கவனித்துக்கொள்ளுதல் என்ற வழமையைத் தார்மீகப் பெருமையுடன் சொன்னதற்குக்
கிடைத்த பதில்: அமெரிக்கர்களும் வயதான தாய்தந்தையர்மீது அக்கறைகாட்டுகிறார்கள்.
ஆனால் they don’t make a show of it.
படைப்பாளிகளுக்குப் பாரம்பரிய வழமைகளும் புராண மரபுகளும் நாட்டாரியல் தொன்மங்களும்
தெரிந்திருக்க வேண்டும். எந்த ஆக்கியோனும் முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்ட
கற்பலகையில் ஆரம்பிப்பதில்லை. மரபைக் கழற்றிப் பிரித்துப் புதுப்பிப்பதிலும்
சீர்செய்வதிலும் தகர்ப்பமைப்பதிலும் மீள்பதிவு செய்வதிலும்தான் கலாச்சாரத்தையும்
விழுமியங்களையும் நடத்தைக் கோலங்களையும் உருநிலைமாற்றவும் மீட்டுருவாக்கம்
செய்யவும் முடியும். இச்சிறுகதைகள் இந்தப் பணியில் தாம் ஈடுபட்டிருக்கின்றன.
நமக்கு ஏற்படும் அனுபவங்களை இலக்கியத்தால் வெளிக்கொண்டுவர முடியும். பிரதிபடுத்த
முடியும். ஆனால் வாழ்வில் எதிர்நோக்கும் பெரிய விபரீதங்களைக் கதைகளால் தடுக்க
முடியாது. சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்தோ லீ பிறக்கு முன்
வியற்னாம் கிராமமான
My Laiயில் நடந்த படுகொலைகளிலிருந்தோ மும்பை
குண்டுதாக்குதலில் இருந்தோ பங்குச் சந்தை சரிவிலிருந்தோ நம்மை இலக்கியம்
பாதுகாக்காது. ஆனால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும்
காரணங்களையும் இவை ஏற்படுத்தும் தொகுநிலை அர்த்தங்களையும் (implications)
துலாம்பரமாக்கக் கதைகளுக்கு ஆற்றல் உண்டு. சிக்கலான, தடுமாற்றங்கள் கொண்ட
வாழ்வுக்கு கதைகளால் பொருள் தர முடியும். தெளிவாக்க முடியும். ஆகையால் கதைகளைப்
பேண, கற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு பக்கக் கதைகளைத் தமிழ் இதழ்கள்
வெளியிடும் இந்நாட்களில் இந்தப் பொறுப்பு மேலும் வலுப்பெறுகிறது.
|