Google   www kalachuvadu.com

தலையங்கம்
இனிப்பான மருந்து, ஆனால் கசப்பான உண்மை!

சுமார் ஒருகோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறத் தக்க வகையில் சென்ற மாதம் முதல் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் சிகிச்சைக்கான ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ இந்தியாவிற்கே முன்னோடியான, திமுக அரசின் உச்ச சாதனை என ஆளும் தரப்பினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அத்திட்டத்தின் மீதான விமர்சனங்களும் கூர்மையடைந்து வருகின்றன. 20.08.2009 அன்றைய ‘தீக்கதிர்’ நாளிதழில் இத்திட்டத்தை விமர்சித்து ஆர். சிங்காரவேலு எழுதிய ஒரு கட்டுரைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் முதல்வர். திட்டம் குறித்து அக்கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கும் அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வழக்கப்படி புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார். அரசின் திட்டங்களையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் ‘மார்க்சிஸ்ட் கட்சி’ தன் கட்சி இதழில் அக்கட்டுரையை வெளியிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

ஆனால் அந்தக் கேள்விகளுக்குத் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமிடையேயான ‘ஊடலி’ன் எல்லைகளுக்குள் மட்டும் நின்று பதிலளிக்க முடியாது.

முதல்வரின் விளக்கம் இத்திட்டத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பதில் அதை மேலும் கூர்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அவற்றோடு சமூக ஆர்வலர்களாலும் ஜனநாயகவாதிகளாலும் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் வேறுபல கேள்விகளும் முக்கியமானவை. கல்விக்கு அடுத்த நிலையில் வணிக மயமாக்கப்பட்டிருப்பது மருத்துவம்தான். அரசு பொது மருத்துவமனைகள் மூலம் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் கிடைக்கச்செய்ய வேண்டுமென்பது சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகளின் நீண்டநாள் வலியுறுத்தல். மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசு அந்த இலக்கை எட்டும் விதத்திலேயே தன் தற்காலிக, நெடுங்காலத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அரசு பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மருத்துவச் சேவையின் தரத்தையும் உயர்த்தாமல் அத்தகையதொரு இலக்கை எட்ட முடியாது என்பது ஓர் எளிய உண்மை. பெருகிவரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கேற்ப மருத்துவர்களுக்கும் மருத்துவத்துறையின் பிற வகைப் பணியாளர்களுக்கும் உரிய மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை அளித்தல், நோய்த்தடுப்பு முறைகளில் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அதை எட்டுவதற்கான ஆய்வகங்களை உருவாக்குதல், நோய்களைக் கண்டறிவதிலும் சிகிச்சை முறையிலும் நவீன அணுகு முறைகளைப் புகுத்துதல், பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத மருந்துப் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்குதல் என்பன போன்ற ஒருங்கிணைந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பாலான அரசு பொது மருத்துவமனைகள் நோயாளிகளை அலட்சியமாக நடத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றன. அதன் காரணமாக நேர்ந்துள்ள உயிரிழப்புகளும் அதிகம். புற நோயாளிகள் பகுதிகளில் சிகிச்சை பெற வருபவர்கள் அனுபவிக்க நேரும் வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. பதிவுச் சீட்டு வாங்குவதில் தொடங்கி சிகிச்சையின் பல்வேறு கட்டங்களிலும் நோயாளிகள் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மருத்துவத்துறையின் எல்லா மட்டங்களிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல்களால் பொது மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளின் தரம் மிகக் கேவலமான மட்டத்திற்குச் சரிந்துபோயுள்ளது. பல மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளே இல்லை; போதிய படுக்கை வசதிகளும் இல்லை.

இந்த அவல நிலையே அடித்தட்டு மக்களுங்கூடத் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்கான முதன்மைக் காரணம். சில விதிவிலக்குகளைத் தவிர தனியார் மருத்துவமனைகளின் தரமும் மோசமானவைதாம். ஆனால் அவை, மேலான தரத்திலிருப்பதான பாவனைகளைக் கொண்டிருப்பதால் நம்பிக்கைக்குரியனவாகக் கருதப்படுகின்றன.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அந்த பாவனைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறது; உயிராபத்து விளைவிக்கும் 51 நோய்களுக்கான உயர் சிகிச்சையை அளிக்கத் தகுதியானவையென ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 358 தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிணையான தரத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் இனிமேல் கண்டறியப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர். கண்டறிப்படும் மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தாமல் அவற்றுக்கு இத்திட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க முடியாது எனச் சொல்லப்படுவதிலிருந்து பொது மருத்துவமனைகளின் மீது அரசு காட்டிவந்துள்ள அக்கறையின் லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம். பொது மருத்துவமனைகளின் மூலம் பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படைக் கடமையை அரசு கைகழுவுவதன் துவக்கமே அரசின் தற்போதைய திட்டம் என்னும் குற்றச்சாட்டு உண்மையில் மிகப் பயங்கரமானது.

தமிழக அடித்தட்டு மக்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இனி ஸ்டார் காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு. வருடத்திற்கு 517 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்குக் கொடுப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது அல்லவா? மருத்துவக் காப்பீட்டுத்துறையில் பரந்த அனுபவத்தையும் விரிவான உள் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, சுமார் ஒரு கோடிக் குடும்பங்களின் மருத்துவக் காப்பீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளோ ஊழியர்களோ இல்லாத, வெறும் 105 கோடி ரூபாய் முதலீட்டையே கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் ஓர் அன்னிய நிறுவனத்தின் கைகளில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்வதை விடுத்து அதை அரசியலாக்குவதன் ‘மர்மம்’ முதல்வரின் விளக்கத்துக்குப் பின்னும் விலகவில்லை.

ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தின் ஆண்டுக் காப்பீட்டுக் கட்டணம் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டணத்தைவிடக் குறைவாக இருப்பதுதான் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்கிறார் முதல்வர்; இதன் மூலம் அரசு ஆண்டொன்றுக்குச் சுமார் 483 கோடி ரூபாயை ‘மிச்சம்’ பிடித்திருக்கிறது எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறார். லாப நட்டக் கணக்குப் பார்ப்பதற்கு மருத்துவம் வணிகம் அல்ல என்பதை ‘மக்கள் நலனில் அக்கறை கொண்ட’ ஓர் அரசின் தலைவருக்கு வேறு யாராவது சுட்டிக்காட்ட வேண்டியிருப்பது உலகமயச் சூழலின் ஒரு அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக நார்வே, ஸவீடன் போன்ற ஸ்காண்டிநேவியன் நாடுகளில் பொது சுகாதாரத்திற்கு அரசு முழுப் பொறுப்பேற்றுள்ளது. கியூபாவில் வாழும் எல்லோருக்கும் தரமான இலவச மருத்துவம் பொது மருத்துவமனைகளின் மூலம் வழங்கப்படுகிறது. மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளை அணுகுவதில் உலகின் பல்வேறு நாடுகளும் முற்போக்கான பல நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில் தமிழக அரசு அந்தப் பொறுப்பிலிருந்து தந்திரமான முறையில் நழுவிக்கொள்ள முயல்கிறது. உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கான கட்டணத் தொகையாக ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களுக்கும் சேர்த்து நான்காண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் என உச்சவரம்பு நிர்ணயித்திருப்பது மருத்துவ நடைமுறைகள் குறித்த அரசின் புரிதல் யதார்த்தத்தோடு தொடர்பற்றது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. எதிர்காலத்தில் இந்த உச்சவரம்பு ‘தோழமை’க் கட்சிகளின் வேண்டுகோளுக்கேற்ப அதிகரிக்கப்படலாம்; இத்திட்டத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம். அப்போது காப்பீட்டுக் கட்டணமும் உயரும்.

தம் வாழ்வியல் தேவைகளுக்காக இப்போது அரசு அதிகாரத்தின் முன் இறைஞ்சி நிற்கும் அடித்தட்டு மக்கள், உடல்நலப் பிரச்சினைகளுக்காகக் கொள்ளை லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் நிறுவனங்களின் அதிகாரத்தின் முன் மண்டியிட வேண்டிய எதிர்காலத்தை நினைத்துப் பீதி ஏற்படுகிறது.

மருத்துவத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வருபவர்களுக்குக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு கசப்பான பதிலை அளித்திருக்கிறது.

உள்ளடக்கம்