Google   www kalachuvadu.com

பத்தி
அகவிழி திறந்து
கண்ணன்

ஆழ்மனதின் நீரோட்டம்

நமது பகுத்தறிவுக்கு அப்பாலான விஷயங்களை விளங்கிக்கொள்வது எப்படி? பகுத்தறிவுவாதிகளுக்கும் அல்லாதவர்களுக்கும் வாழ்வின் கணிசமான நிகழ்வுகள் பகுத்தறிவால் விளங்கிவிடக் கூடியவை அல்ல. உள்ளுணர்வின் வழிகாட்டுதலை - மனிதர்களை எதிர்கொள்ள, நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள - ஏற்றுக்கொண்டே அன்றாட வாழ்வில் பலரும் எதிர்வினை புரிகிறோம். ஒருவரைப் பார்த்த உடன் எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதும் மற்றொருவரைப் பார்த்ததும் நட்புணர்வு தோன்றுவதும் இயல்பு. ஒரு பொருளை, ஒரு எழுத்தைப் பார்த்ததும் சில வினாடிகளில் அசல், போலி என்ற எண்ணம் ஏற்படுகிறது. புத்தகக் கடைகளில் நூல் நிலையங்களில் நூல்களைப் புரட்டும்போது அவை பற்றிய மதிப்பீடுகளும் அவ்வாறு ஏற்படுவதுண்டு. இவ்வுணர்வுகளை நாம் விளங்கிக்கொள்வதில்லை எனினும் அதன் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்கிறோம். மனித அறிவின் பெரும்பகுதி ஆழ்மனதில் கிடக்கிறது; இந்த ஆழ்மனதின் செயல்பாடே உள்ளுணர்வாகிறது என்பது ஒரு விளக்கம்.

கடந்த ஆண்டு குடும்பத்தினருடன் கேரளத் தென் கோடியில் கடற்கரை அருகே காயல் பகுதியிலிருக்கும் ஓய்வு விடுதியில் இருந்தேன். கடலில் மிதக்கும் குடிலில் என் சகோதரி குடும்பத்தினரும், கரையில் ஒரு குடிலில் நாங்களும். கடைசி நாள் மாலை மிதக்கும் குடிலில் பேசிக்கொண்டிருந்தோம். காயலையும் கடலையும் பார்க்க முடிந்தது. இரண்டும் கலந்து விலகிக்கொண்டிருந்தன. கேரளத்தின் சில பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டிருந்தது அன்றைய செய்தி. மிதக்கும் குடில், அலைகளின் அசைவில் கரையோடு பிணைக்கப்பட்டிருந்த கயிற்றை லேசாக வெட்டி இழுத்துக்கொண்டிருந்தது.

இரவு எங்கள் குடிலுக்குச் சென்றுவிட்டேன். அதிகாலை மூன்றரை மணிக்கு விழித்தேன். மனம் ஏனோ கலங்கிக்கொண்டிருந்தது. சகோதரி குடும்பத்தினர், குறிப்பாகக் குழந்தைகள், பாதுகாப்பாக இல்லை என்று தோன்றியது. சிறிது நேரம் அமர்ந்துகொண்டு, ‘பகுத்தறிவுக்கு’ம் புறம்பான அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். தூங்க முடியவில்லை. புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். அரைமணி நேரத்தில் கதவு தட்டப்பட்டது. சகோதரியும் குடும்பத்தினரும். அதிகாலையில் அலைகள் வேகமடைய கயிறுகள் அறுந்து தெறிக்க, குடில் நீரோட்டத்தில் போய்விடக்கூடிய நிலையில் ஊழியர்கள் படகில் சென்று இவர்களைக் கரைசேர்த்திருக்கிறார்கள்.

மானுடப் புரிதலின், அறிதலின் சாத்தியங்களை மிகப் பரந்த வீச்சோடு நாம் அணுகிப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. புரிதலுக்கு, அறிவியலும் பகுத்தறிவும் பயன்படுவது சிறப்பு. இக்கருவிகளின் வரையறைக்கு ஏற்ப புரிதலை வெட்டிச் சிதைப்பது அபத்தம்.

நேர்காணல் -1

வண்ணதாசன். ‘தீராநதி’ ஜூலை 2008. சந்திப்பு அய்யனார். ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற வண்ணதாசனின் சிறுகதைத் தொகுதிக்கு சு.ரா. எழுதிய முன்னுரை பற்றி வண்ணதாசன் மனம் திறந்து, பக்குவத்துடன் பேசியிருக்கிறார். அந்த முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடியும் பின்னோடியும் இல்லாதது. முன்னுரை என்பதாலேயே பாராட்ட வேண்டும் என்ற தமிழ்மரபு முற்றிலும் மீறப்பட்ட நிகழ்வு அது. அஞ்சலிக் கட்டுரை என்றாலே பாராட்ட வேண்டும் என்ற தமிழ் மரபை -மரபை மீறுவதையே தொழிலாகக்கொண்டிருந்த - மீறிய பெரியாரின் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. இந்த மீறல் சாத்தியப்பட்டதற்கு வண்ணதாசனும் காரணம். தன்னிடம் ஒரு படைப்புக் கேட்டு பெறப்பட்டாலோ அல்லது தான் ஒரு மூத்த எழுத்தாளர் என்பதாலோ அதைப் பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாதவர் சு.ரா. படைப்பைத் தன்னளவில் மதிப்பிட அனுமதி மறுக்கும் தன்னம்பிக்கையற்ற படைப்பாளிகள், அதன்மீது ஏற்றும் அதிகாரங்கள், கோரும் சிறப்புச் சலுகைகள் பற்றிய தன் கண்டனத்தையும் அவர் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே வண்ணதாசனுக்கு முன்னுரையை அனுப்பும் போதும் அதைக் கேட்டுப்பெற்றுவிட்டதாலேயே பிரசுரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றும், பிரசுரிக்காவிட்டால் தனக்கு வருத்தம் ஏதும் ஏற்படாது என்றும், அவரது வழக்கப்படி, வண்ணதாசனுக்குக் கடிதம் எழுதியிருந்ததாக என்னிடம் சு.ரா. கூறியிருக்கிறார். இருந்தும் வண்ணதாசன் அதைப் பிரசுரித்திருக்கிறார். முன்னுரையில் இடம்பெற்ற சில விமர்சன வார்த்தைகள்கூட முன்னுரையாளரின் அனுமதியின்றி நீக்கப்பட்டதற்கும், பாராட்டாகத் திருத்தப்பட்டதற்கும் தமிழில் பல உதாரணங்கள் உண்டு. அத்தகைய அபத்தம் எதுவும் இம்முன்னுரைக்கு நேரவில்லை.

இத்தகைய ஒரு முன்னுரையை அவர் எழுதியதற்கு என்ன காரணம்? புதுமைப்பித்தனைப் பற்றி சு.ரா. எழுதிய வார்த்தைகளில் அதற்குரிய பதில் இருப்பதாகத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரைகளைப் படிக்கும்படி இளம் எழுத்தாளர்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். அவ்வளவு கறார்த்தன்மை மதிப்புரைகளுக்கு வேண்டுமா என்ற கேள்வியின் முன் என் முதுமை என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. லட்சிய வாதம், ஜீவத்துடிப்புடன் இலக்கிய வெளியில் பரவிநின்ற காலம். அப்போதும் அவ்வளவு கண்டிப்புப் புதுமைப்பித்தனுக்கு! முளையில் கிள்ளாத களை, பயிரை அழித்துவிடும் என்ற கவலை அவனுக்கு. இன்றோ திரும்பிய இடமெல்லாம் பொய்ச் சிரிப்பு. பொய்ப் பாராட்டு. இச்சகம். இவற்றை உண்டு ஒரு இளம் படைப்பாளி தன்னை வளர்த்துக் கொள்ள முடியுமா?

சு.ரா.வின் முன்னுரையை மறுபதிப்பில் நீக்கிய ஒரே எழுத்தாளர் அல்ல வண்ணதாசன். தோப்பில் மீரானின் ‘கூனன் தோப்பு’ நாவலுக்கு சு.ரா. எழுதிய முன்னுரையை ‘அடையாளம்’ பதிப்பில் காணவில்லை. எழுத்தாளர் முடிவா? அல்லது பதிப்பாளர் முடிவா?

அருட் சங்கமம்

உனது கசந்த, திருகலான பொய்களால்

வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம்,

என்னைப் புழுதியில் தள்ளி மிதித்துவிடலாம்

ஆனால் இருந்தும், புழுதியைப் போல், நான் எழுவேன்.*

நக்கீரன் 06.06.09 இதழில் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் சென்னை சங்கமம் எதிர்கொண்ட விமர்சனங்களைப் பற்றிப் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அதில் ‘காலச்சுவடு’ பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது:

“பயணங்களின்போது நான் தேடிப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை ‘காலச்சுவடு’. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும் பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது.”

‘காலச்சுவடு’க்கு என்றைக்குமே ‘முற்போக்கு முலாம்’ இருந்ததில்லை அருட் தந்தையரே. அதைப் பற்றிக் கவலைப்படாமல் இயங்கும் இதழ் ‘காலச்சுவடு’. எந்த ஒரு நிகழ்விலும் பற்பல பரிணாமங்களை வெளிப்படுத்துவதும் விமர்சிப்பதும் இலக்கியப் பின்புலத்திலிருந்து உருவாகிவந்த இந்த இதழின் அடிப்படைப் பண்பு. அருட் தந்தை தேடித் தேடிப் படித்த ‘காலச்சுவ’டின் இந்த ஆதாரமான அம்சம் அவருக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம். பாராட்டு அல்லது எதிர்ப்பு, கறுப்பு அல்லது வெள்ளை, எதிரியா அல்லது நண்பனா, கடவுளா அல்லது சாத்தானா, புனிதனா அல்லது பாவியா என்ற அணுகு முறை குருமார்களுடையது. புனிதர்களில் சாத்தானின் சாயலையும் சாத்தானில் விவேகத்தின் இருப்பையும் முகிழ்ந்தெடுக்கும் பார்வை இலக்கியத்தின் அடிப்படை.

சென்னை சங்கமம் பற்றி ‘காலச்சுவடு’க்கு அவஸ்தை எதுவும் இருக்கவில்லை. சென்னை சங்கமத்தைத் திறந்த மனதோடு வரவேற்று, பாராட்ட வேண்டியவற்றைப் பாராட்டி, விமர்சிக்க வேண்டியவற்றை விமர்சித்ததோடு மட்டுமன்றி சென்னை சங்கமம் சந்தித்த மூடத்தனமான எதிர்ப்பையும் கருத்தியல் அடிப்படையில் எதிர்கொண்டது ‘காலச்சுவடு’. ஆனால் ‘காலச்சுவ’டின் விமர்சனங்களைப் பரிசீலிக்கும் முதிர்ச்சி அருட் தந்தையிடம் இல்லை. அவற்றைப் புறக்கணிக்கவும் அவரால் முடியவில்லை. சென்னை சங்கமத்திற்கு எதிர்நிலையில் ‘காலச்சுவடு’ நிற்பதாக ஒதுக்கவும் முடியவில்லை. இதுதான் உண்மையான அவஸ்தை. ஆண்டுதோறும் சென்னை சங்கமத்தை ஒட்டி வெடிக்கும் சர்ச்சைகளிலிருந்து ‘காலச்சுவடு’ விலகி நிற்பது அருட் தந்தைக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அவற்றில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் ‘எதிரி’ என்ற அடைமொழியில் எங்களை அடக்கிவிட்டு நிம்மதியாக இருந்திருக்க அவரால் முடியும். இப்போது முடியவில்லை என்பது தெளிவு.

‘காலச்சுவடு’ சென்னை சங்கமத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்பதைப் பார்ப்போம்.

சென்னை சங்கமம் அறிவிக்கப்பட்ட மார்ச் 2007 இல் ‘மக்களை நாடும் கலை’ என்ற தலையங்கம் ஒன்றைக் ‘காலச்சுவடு’ எழுதியது. அத்தகைய தலையங்கம் எழுதிய ஒரே தமிழ் இதழ் ‘காலச்சுவடு’. இது எங்கள் அஜீரணத்தின் முதல் வெளிப்பாடு. அதைப் படித்துப் பாருங்கள். எங்களுடைய ‘அவஸ்தை’ உங்களுக்குப் பிடிபட்டுவிடும்.

சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ் மையம் அமைப்பினால் பிப்ரவரி 20 முதல் 26வரை பற்பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மையம், பொது நூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை நடத்துகின்றன.

தமிழரின் நாட்டுப்புறக் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, வள்ளி திருமணம், பவளக் கொடி ஆகிய தமிழின் அந்தக் கால மேடை நாடகங்கள், சஞ்சய் சுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், கூத்துப் பட்டறை, மேஜிக் லேன்டர்ன் போன்ற நவீன நாடகக் குழுக்களின் நிகழ்ச்சிகள், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதனோடு தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்குபெறும் கவிதை நிகழ்வுகளும் கதை சொல்லும் நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் சென்னை சங்கமம் ஒரு மாபெரும் பண்பாட்டுத் திருவிழா.

இந்த நிகழ்வுகள் சில உள்ளரங்குகளில் நடத்தப்படுவதோடு சென்னையிலுள்ள கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை ஆகியவற்றிலும் தெருக்களிலும் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சம். இது ஒரு முக்கியமான பண்பாட்டுச் செயல்பாடு. ‘இரண்டாயிரம் வருடத் தமிழ் மரபின் செழுமையாய் விளைந்த நம் மரபுக் கலைகளையும் கவிதைச் செல்வத்தையும் மீட்டெடுத்து அதனை மறுபடியும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்’ நோக்குடன் நடத்தப்படும் இந்த நிகழ்வைத் தமிழ் மையம், ‘திருவிழா நம்ம தெருவிழா’ என்று மிகப் பொருத்தமாகவே குறிப்பிடுகிறது. இந்நிகழ்வு இனி ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. சென்னையிலுள்ள கலை - பண்பாட்டு நிகழ்வுகளில் டிசம்பர் இசைத் திருவிழாக்கள், ஜனவரி புத்தகச் சந்தை ஆகியவற்றோடு இந்தக் கலை நிகழ்வும் இணைகிறது. நகர்ப்புறத் தமிழருக்கு அவர்கள் மறந்து கைவிட்ட அவர்களுடைய கலைகளை மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கொண்டு சேர்ப்பதில் ‘சென்னை சங்கம’த்தின் ஆதார முக்கியத்துவம் அமைந்துள்ளது.

இந்தச் சென்னை சங்கமம் நிகழ்வுக்கு மூலகாரணமாக இருந்து நடத்துகிற கவிஞர் கனிமொழி, அருட் தந்தை ஜகத் கஸ்பர் மற்றும் பங்களிக்கும் அனைவருக்கும் ‘காலச்சுவடு’ தனது மனமார்ந்த ஆதரவையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

பின்னர் 2007 ஏப்ரல் இதழில் ‘கவர் ஸ்டோரி’ சென்னை சங்கமம். சுமார் 20 பக்கங்களுக்கு உள்ளே பதிவுகள். பற்பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய எங்களிடம் போதுமான ஆட்பலம் இல்லாத நிலையில் நண்பர்களையும் பல நிகழ்ச்சிகளுக்கு அனுப்பியிருந்தோம். இது அஜீரணத்தின் இரண்டாவது வெளிப்பாடு.

இக்காலகட்டத்தில் சென்னை சங்கமம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த விமர்சனங்கள் எதுவும் ‘காலச்சுவ’டில் இடம்பெறவில்லை. மேலும் இத்தாக்குதல்கள் எனக்குக் ‘காலச்சுவடு’ நடத்திய ‘தமிழ் இனி 2000’ நிகழ்வு எதிர்கொண்ட புறக்கணிப்புகளையும் தாக்குதல்களையும் நினைவுபடுத்தியது. இந்த நினைவுகளோடு மே 2007 இதழில் ‘சாதனையும் எதிர்வினையும்’ என்ற குறிப்பைக் ‘காலச்சுவ’டில் என் பத்தியில் எழுதினேன். எல்லா சாதனைகளையும் கீழறுக்கும் மனோபாவம் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பது அப்பதிவின் அடிப்படையாக இருந்தது.

மேற்படி பதிவுகளைச் செய்தோம் என்பது மட்டுமல்ல, சென்னை சங்கமத்தை நடத்திய அமைப்பாளர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக இதைச் செய்தோம். அதிகாரத்தின் இருப்பில் தொடங்கி அதிகாரத்தின் முடிவோடு மரித்துப் போகும் செயல்பாடுகளுக்கும் ‘காலச்சுவடு’க்கும் எட்டாத் தொலைவு. இத்தகையதொரு எதிர்பார்ப்புகளும் உள்ளுறைகளும் இல்லாத செயல்பாட்டை அதிகாரத்திற்கு உடுக்கடிக்கும் புனிதர்களால் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

இன்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அருட் தந்தை பீறிட்டிருப்பதன் காரணம் புதிரானது அல்ல, ஆனால் முக்கியமானது. ‘காலச்சுவடு’ பதிவுகளில் சென்னை சங்கம நிகழ்வுகள் பற்றி வெளிப்பட்ட பண்பாட்டு அடிப்படையிலான விமர்சனங்கள் பற்றிய அருட் தந்தையின் சகிப்பின்மை. அருட் தந்தை அதிகாரத்துடன் இணையும்போது உருவாகும் செயல்பாடுகளைப் பரிசீலிக்கக்கூடாது, மாறாக ‘ஸ்தோத்திரம்’ மட்டுமே சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அன்றே எங்களது பதிவுகளுக்கான அவரது எதிர்வினையைப் பெற அருட் தந்தையை அணுகிய போது அவர் தவிர்த்துவிட்டார். அவரிடம் பதில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டோம். அந்த இயலாமை இன்று வெடித்திருக்கிறது. இனி காயம் ஆறிவிடும். ஆமென்.

சமூக எதிர்வினைகளைச் சாதாரண மானிடர்களைப் போலவே கசப்பும் வெறுப்புமாக எதிர்கொள்ளும்போது ‘அருட் தந்தை’ போன்ற பட்டங்களைத் துறந்துவிட்டு எழுதலாம். செம்மறி ஆட்டுக்குட்டியைக் கட்டிப்பிடித்து நிற்கவல்ல அந்த யூதத் தச்சனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியம்.

மூன்று அங்கீகாரங்கள்

ராஜமார்த்தாண்டன் பற்றிய எனது அஞ்சலிக் கட்டுரையில் சேர்க்க வேண்டுமென நினைத்த ஒரு செய்தி விடுபட்டுவிட்டது. எந்தச் சபையிலும் அங்கீகாரத்தைக் கோராத ஆளுமையை இயல்பாகக் கொண்ட ராஜமார்த்தாண்டனுக்குக் கிடைத்த மூன்று அங்கீகாரங்கள் அவருக்கும் அவர்பால் அன்பு கொண்டவர்களுக்கும் மனநிறைவைத் தந்திருக்கும். ஒன்று அவரது படைப்புகள் பலவற்றைத் ‘தமிழினி’ப் பதிப்பகம் விரும்பி வெளியிட்டமை. இரண்டு ‘உயிரெழுத்து’ இதழ் அவருக்கு வெளியிட்ட சிறப்பிதழ். மூன்று ‘நெய்தல்’ நடத்திய ‘ராஜமார்த்தாண்டன் 60’ நிகழ்ச்சி. ராஜமார்த்தாண்டனுக்கு வாழுங்காலத்தில் கிடைத்த இந்த அங்கீகாரங்கள் முக்கியமானவை.

உள்ளடக்கம்