|
மொத்தச் சூழலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதான உணர்வுடன் சதா தன்னை
முன்னிறுத்திக்கொள்ள விழைகிற ஆளுமைகள் எதார்த்த உலகில் பிறர் பற்றிய அக்கறையின்றி,
தம்முடைய கற்பிதங்களின் வலிமையோடு சூழலின் மீது தாக்குதல் நடத்த எத்தனிக்கும்
முயற்சிகளைக் கண்டு வியப்பும் வருத்தமும் ஒரு சேர ஏற்படுகிறது.
மதுரையில் கடந்த ஜூன் 27,28 ஆகிய இருநாட்களிலும் கவிதை, சிறுகதை தொடர்பான
கருத்தரங்குகளை ‘கடவு’ இலக்கிய அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது (கருத்தரங்கு பற்றிய
பதிவோ மதிப்புரையோ அன்று இது). இரண்டாம் நாள் இறுதி அமர்வாக எழுத்தாளர்கள்
பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், யுவன்
சந்திரசேகர், பா. வெங்கடேசன், உதயஷங்கர், ஈழத்தைச் சேர்ந்த தமிழ்நதி ஆகியோர்
பங்கேற்ற கருத்துப் பகிர்வு நிகழ்ந்தது.
தமிழ்நதி பேசும்போது, “ஈழத்தில் நிகழ்ந்து வரும் தமிழ் இன அழிப்பு -மூன்று
நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு மேலாகக் கொன்றொழித்த ராஜபக்சேயின் கொலைவெறி -
குறித்துத் தமிழ் எழுத்தாளர்களின் மவுனம் வேதனை தருகிறது. இந்த அவையின் கருத்தறிய
விரும்புகிறேன்” என்றார்.
கோணங்கியும் எஸ். ராமகிருஷ்ணனும் மறுமொழியாக, தங்களுக்குள் ஈழத்து நிகழ்வுகள்
பெரும் துயரத்தை விளைவித்திருப்பதாகவும் படைப்புகளின் வழி இத்துயரம் பகிர்ந்து
கொள்ளப்பட்டிருப்பதாகவும், இது குறித்து (ஈழத் தமிழர் நிலை குறித்து)
விழிப்புணர்வுள்ள சிந்தனா வெளியை உருவாக்க முயல்வதாகவும் கூறினர்.
அடுத்து ஆதவன் தீட்சண்யா பேசியதாவது: “திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவரின் வாயில்
மலத்தைத் திணித்தபோது, வெண்மணியில் 42 பேரை எரித்துக் கொன்றபோது, மலையகத்தில்
இந்திய வம்சாவளியினர் உரிமை பறிக்கப்பட்டுத் துயரங்களுக்குள்ளானபோது பிரபாகரன்
குடும்பம் ஒன்றிற்குத் தலா 500 ரூபாய் கொடுத்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியபோது,
யாழ்ப்பாணத் தமிழர்கள் ஏதும் செய்யவில்லை. அதேபோலத்தான் இப்போது ராஜபக்சே அரசின்
இன அழிப்புக் கொடுமையைப் பார்த்துக்கொண்டு தமிழக எழுத்தாளர்களும் தாழ்த்தப்பட்ட
மக்களும் ஏதும் செய்யாமல்தான் இருப்பார்கள்”. இவ்வாறு அவர்
பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்ப்புக் குரல்கள் கேட்டன. சூழ்நிலை குலைந்து
இருக்கைகளிலிருந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கருத்துகளை முறைப்படுத்திக் கேட்கச் செய்கிற முயற்சியாக வீ. அரசு ஒலி பெருக்கியை
வாங்கிப் பேசத் தொடங்கினார்: “புலிகள் இயக்கமோ பிரபாகரனோ தவறு செய்யவில்லை என்று
கருதாத என்னைப் போலவே பலரும் இருக்கிறார்கள். அவர்களின் (புலிகளின் இயக்கத்
தலைமையின்) ஜனநாயக விரோத நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை; ஆயினும் மூன்று
நாட்களில் ஐம்பதாயிரத்திற்கு மேலான தமிழர்களைப் படுகொலை செய்து, உயிர் பிழைக்க
விரும்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள முகாம்களுக்கு வந்தவர்கள் மீதும்
குண்டு வீசிக்கொன்றொழித்த ராஜபக்சே அரசின் செயலைக் குறித்துக் கண்டனம்
செய்யாதிருப்பது நாகரிகமாகாது. தமிழர்களின் பிணங்களின் மேல் நின்றுகொண்டு புலிகள்
இயக்கத்தின் கடந்த காலத் தவறுகளைப் பேச இது தருணமல்ல. . .” அரசுவின் பேச்சு தொடர
இயலாது குரலெழுப்பித்தடுத்தார் ஆதவன் தீட்சண்யா.
“இந்தச் சூழ்நிலையில் நான் பேச வந்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று அரசு
அவையினரைப் பார்த்துக் கூறினார். உடனே ஆதவன் தீட்சண்யா “அரசு என்னைப் பற்றித் தவறான
கருத்தைக் கூறினார், அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டார், நான் அவருக்கு
மன்னிப்பளிக்கிறேன்” என்றார்.
“போய்யா உங்கிட்ட மன்னிப்புக் கேட்கனுமின்னு எனக்கு அவசியமில்லை. . .” என்று அரசு
கூற, “இவுரு பெரிய தமிழ்ப் பேராசிரியராம். . . மரியாதையாப் பேசனும், எனக்கும்
போய்யா வாய்யான்னு பேசத் தெரியும்” இது ஆதவன் தீட்சண்யா. உணர்ச்சிகள் கரைமீறிய
சூழ்நிலையில் வந்தவர்களுக்கு நன்றி கூறி, கூட்டத்தை முடித்துவிட்டார் தேவேந்திர
பூபதி.
இதுவரையானவை நிகழ்வுகள். இங்கு என் கருத்தைக் கீழ்க்கண்டவாறு பதிவுசெய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்படுகிறது:
1. ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர்களில் நானும் ஒருவன் (ஒரு பல்லியின்
வால் நீளக் கட்டுரையோ கொசுவின் சிறு றெக்கை அளவுக்குக் கவிதையோ எழுதினாலும்
எழுத்தாளன்தானே). தமிழ் எழுத்தாளர்கள் அவரைப் போன்றே இருக்க வேண்டுமென்று
எதிர்பார்க்கவோ அவ்வாறு இருப்பதாக அறிவிக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அவரது இந்த
அத்துமீறல் (பிறருக்கும் சேர்த்து, தானே கருத்துரைப்பது) கண்டனத்துக்குரியது.
2. ராஜபக்சேயின் இனப்படுகொலையை இங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற பொருளில் அனைத்து தலித் மக்களுக்கும் சேர்த்து
இவர் கருத்துரைப்பது உண்மைக்கு மாறானது. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்,
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிக் கண்டனப் பேரணி, பொதுக்கூட்டம், உண்ணா
நிலைப் போர் எனப் பல வழிகளில் ராஜபக்சேவின் இன அழித்தொழிப்பைக் கண்டித்திருக்கிறது.
அருந்ததியர் இயக்கங்கள் ராஜபக்சே அரசின் கொடுமையைக் கண்டித்தும் அவரைப் பன்னாட்டு
நீதியமைப்பின் முன்னிறுத்தி விசாரிக்க வேண்டுமென்றும் துண்டறிக்கைகள்
வெளியிட்டிருக்கின்றன. அருந்தமிழர் விடுதலை இயக்கம் கண்டனக் கூட்டம்
நிகழ்த்தியிருக்கிறது. புரட்சிப் புலிகள் என்ற அமைப்பு ராஜபக்சேவைத் தூக்கிலிட
வேண்டுமென்று சுவரொட்டி துண்டறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தியாகி இமானுவேல் சேகரன் பேரவை தமிழின அழிப்பு அநீதியைக் கண்டித்துப் பொதுக்
கூட்டம் நடத்தியிருக்கிறது. துண்டறிக்கை வெளியிட்டிருக்கிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழத் தமிழர்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று தன் சொந்தக்
கருத்தை ஆதவன் தீட்சண்யா மற்றவர்களின் மீது ஏற்றிவைப்பது அவர் தெரிந்தே செய்யும்
காரியம். அவருடைய மொழியில் சொன்னால் பண்பாட்டுத் தளத்தில் தலித் மக்களின் மீது
ஆதவன் தீட்சண்யா நிகழ்த்தும் கருத்தியல் வன்முறை என்றே நான் கருதுகிறேன்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவரும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரே
இயக்கம் ஆதவன் தீட்சண்யாவின் தமுஎசவும் சிபிஎம். மும்தான். அதை நியாயப்படுத்தவே
இத்தகைய வாதங்களை அவர் முன்வைக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.
வன்முறையின் எந்த வடிவத்தையும் ஒரு சாதாரண மனிதன் என்ற நிலையிலிருந்து நான்
எதிர்க்கிறேன்.
|