|
பாரதியார் இறந்தபோது பட்டம்மாளுக்கு இரண்டு வயது. பாரதியார் விசேஷமான சங்கீதப்
பயிற்சி மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. அவருடைய பல பாடல்களுக்கு
‘இப்பாடலைப் போல’ என்றுதான் குறிப்பிட முடிந்தது. ஆனால் அந்தப் பாடல்களைப் பாடி
அவருக்கும் புகழ் சேர்த்து வாழ்ந்த தொண்ணூறு ஆண்டுகளில் பாமரர், ரசிகர் இரு
பிரிவினரிடமும் மதிப்பும் புகழும் பெற்றது டி.கே. பட்டம்மாள் ஒருவர்தான் என்று கூற
வேண்டும்.
தாமல் கிருஷ்ணஸ்வாமி பட்டம்மாள் கேள்வி ஞானத்தினாலேயே மகத்தான பாடகியானாள். நூறு
ஆண்டுகளுக்கு முன்பு, சிறு பிராயத்தில் ‘பெண் பார்க்க’ வரும்போது என்றால், பாட
இரண்டு மூன்று பாடல்கள் அறிந்திருந்தால் ஒரு பெண்ணுக்குப் போதுமானது. சில
மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்களில் பாட வாய்ப்பு ஏற்படும். திருமணத்தின்போது ஊஞ்சல்
என்று ஒரு சிறு நிகழ்ச்சி உண்டு. காசி செல்லத் தீர்மானித்த பிரம்மசாரியைப் பெண்ணின்
தகப்பனார் வழிமறித்து, ‘காசிக்குப் போகாதே. திருமணம் செய்து கொண்டு நல்ல குடும்பத்
தலைவனாகக் காசிக்குப் போன பயன்பெறுவாயாக’ என்று கூறித் தன் பெண்ணை அவனுக்குக்
கன்னிகாதானம் செய்கிறார். இந்த வழி மறிப்புக்கு அடுத்த கட்டம் ஊஞ்சல். இதில்
மணப்பெண்ணும் மணமகனும் ஊஞ்சலில் ஆட உறவினர் ஊஞ்சல் பாட்டுப் பாடுவர். திருமணத்தில்
சப்தபதிக்கு அடுத்தாற் போல் நலங்கு. இந்த ஊஞ்சல், நலங்கு இரண்டுமே சமூக
நிகழ்ச்சிகள். இரண்டிலும் உறவினர்கள் ஆண், பெண் இரு பிரிவினரும் பாடுவார்கள்.
வைதீகக் குடும்பப் பெண்களுக்கு இந்த இரு தருணங்களில் பாடத் தெரிந்தால் போதுமானது.
நலங்கின்போது ‘ஏச்சு’ என்று ஒன்று உண்டு. பாட்டில் உள்ள நகைச்சுவையைவிடப் பல
சுருதிகளில் அபஸ்வரமாகப் பாடும் அந்த நிகழ்ச்சி வேடிக்கையாக இருக்கும்.
பட்டம்மாள் குடும்பத்திலும் அந்த அளவுக்குப் பாடினால் போதும் என்றுதான் தொடக்கம்
இருக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் சுலோகங்கள் பாடுவார்கள். ஆனால் பெரிய இசை
ஈடுபாட்டுக்கு அவை இட்டுச் செல்லாது. பட்டம்மாளுக்கு இசைக் கலைஞரான நைனா பிள்ளையின்
வாத்திய இசை லயிப்புக்குக் காரணமாகியிருந்திருக்கிறது. ஆண்களானால் குருகுல வாசம்
புரிந்து இசைத் துறையில் பிரவேசிக்கலாம், ஆனால் ஆசாரமான பிராமண குலத்தில் பிறந்த
பெண்ணுக்கு அது சாத்தியமல்ல. அந்தக் காலத்தையும் குடும்ப ஆசாரத்தையும் நினைத்தால்
பட்டம்மாள் ஒரு பாடகியானதே அதிசயம்தான். அவளுடைய வாழ்க்கையில் ‘ஸ்ரீ சுப்ரமண்யாய
நமஸ்தே’ முதல் படியானது. அதை இயற்றிய மகத்தான முத்துசுவாமி தீட்சதரின் பேரனாகிய
அம்பி தீட்சதர் அவராகவே அந்த ஒன்பது வயதுப் பெண்ணுக்கு இசை கற்பிக்க முன்வந்தார்.
மீண்டும் அந்தக் காலத்தைத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. முறையான பயிற்சியில்லாமல்
வெறும் கீர்த்தனங்களை மட்டும் பாடி ஓர் சுயமான இசைக் கலைஞனாக முடியுமா? ஆனால் அவள்
மணம் செய்விக்கப்பட்ட திரு. ஈசுவரன், பட்டம்மாள் பயிற்சிபெற அனுமதித்தார். உண்மையில்
ஓரளவுக்கு மேல் லயிப்புடனும் சிறப்புடனும் ஒரு பிராமண குலப் பெண் பாடினால் அது பரம
அபசாரம். (இந்த மனப்போக்கை நன்கறிந்துதான் அதை ‘சேவா சதனம்’ திரைப்படத்தில்
கே.சுப்பிரமணியம் ஒரு திருப்புமுனையாக மாற்றினார். அதில் கதா நாயகியான சுமதி
கோயிலில் பலர் பாராட்டும்படியாகப் பாடினாள் என்பதற்காகவே அவளுடைய கணவன் வேசி என்று
இகழ்ந்து பேசி அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறான். அவள் காசியில் உண்மையாகவே
வேசியாக வாழ வேண்டி வருகிறது.)
ஏறத்தாழ ஒரே சமயத்தில்தான் பட்டம்மாள், சுப்புலட்சுமி இருவரும் கிராமபோன் தட்டுகள்
பதிவு செய்தார்கள். இதற்குக்கூடப் பட்டம்மாள் குடும்பத்தில் நிறைய எதிர்ப்பு
இருந்தது. இந்தக் கிராமபோன் இசைத் தட்டுகள் எந்த இடங்களில் பயன்படுத்தப்படும்
என்பதைப் பாடகியோ பாடகி குடும்பமோ கட்டுப்படுத்த முடியாது. அந்த நாளில் அச்சிறு
கிராமபோன் பெட்டியில் பாடகரோ பாடகியோ நேரிலேயே பாடுவதாக நிறைய மக்கள்
நினைத்தார்கள். ஓர் இயந்திரம் பாட்டை ஒலிக்க வைக்க முடியும் என்று அந்தக் காலத்தில்
கற்பனை செய்து பார்ப்பதுகூட மிகவும் கடினமாக இருந்தது.
சுமார் இருபது ஆண்டுகள் முன்புவரைகூடப் பட்டம்மாள் அவர்கள் மேடையில்
பாடியிருக்கிறார்கள். அவரே தீட்சதர் வம்சம் என்பதாலோ என்னவோ பின்னர் முத்துசுவாமி
தீட்சதர் இயற்றிய பாடல்கள் பாடுவதில் மிகச் சிறப்பானவர் என்று புகழ்பெற்றார்.
தீட்சதர் கீர்த்தனங்கள் மந்திர சக்தி பெற்றவை என்று நம்புவது உண்டு. தீட்சதரே அவர்
உலகில் வாழ்ந்தது போதும் என்று நினைத்தபோது வராளி ராகம் பாடி உயிர் நீத்தார் என்று
கூறுவது உண்டு. அந்த ராகமே பாடாத தியாகராஜ பாகவதர் ஒரு முறை அந்த ராகத்தில் ஒரு
பாட்டுப் பாடினார். அவருக்குப் புகழ்தந்த பாட்டுகளில் அதுவே கடைசியாயிற்று, அவர்
சிறைக்குச் சென்றவுடன் ஒரு விஞ்ஞானி குரல் மாறிப் பாடுவது போன்ற காட்சியில்
இப்பாட்டு ‘விகடயோகி’ படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பட்டம்மாள் தீட்சதர் பாட்டு என்றில்லை எதைப் பாடி னாலும் மிக ஆழமான லயிப்புடன்
பாடினார். அவர் பாடும்போது மிகவும் பிரயாசை எடுத்துப் பாடுவது போல இருக்கும்.
உண்மையில் அவர் அரங்கம், பக்க வாத்தியம், ரசிகர்கள் ஆகியவற்றையும் மறந்து அந்தப்
பாடலிலே லயித்துக் கண்ணை மூடிப் பாடுவார். முறையான இசைப் பயிற்சி இளவயதில்
கிடைக்காத போதிலும் அவர் சாதகம் மூலம் பரிசுத்தமான கர்நாடகம் இசை பாடுவதற்கு ஓர்
எடுத்துக்காட்டு போலத் திகழ்ந்தார். அவர் பாடிய நாட்களில் அந்த லயிப்பு ஆண்களில்
மதுரை மணி அய்யருக்குச் சாத்தியமாக இருந்தது.
பாரதியார் பாடல்களைப் பாடுவதில் பட்டம்மாள் மகத்தான புகழ்பெற்றார். பரிசுத்தமும்
ஆசாரமும் மிகுந்த அவருக்குத் திரைப்படத்தில் எப்படி இடம் கிடைக்கும் என்று தோன்றும்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்திலேயே ஏ.வி.எம் அவர்கள் ‘ராம்ராஜ்யா’ என்ற இந்திப்
படத்தைத் தமிழில் ‘டப்’ செய்ய உரிமை பெற்றார். அதில் டி.கே.பட்டம்மாள்! அவர்தான்
அதில் ‘டைட்டில்’ பாட்டுப் பாடினார். அருணாசல கவிராயர் பாடிய ராம நாடகப் பாட்டு.
அதன் பின் அவர் ஏ.வி.எம் படங்களில் பாடியவை எல்லாம் பாரதியார் பாடல்களே.
பட்டம்மாளுக்கு அவருடைய வாழ்நாளில் விசேஷமான அங்கீகாரம் கிடைத்தது. பட்டம், விருது
எவற்றாலும் அவர் பாதிக்கப்படாமல் கடைசிவரை இசையை லயித்துப் பாடினார். அவர்
குரலுக்குக் கனமுண்டு. இது இயற்கையில் ஏற்படுவதுதான். சாதகம், பயிற்சி முதலியவற்றால்
சங்கீதப் புலமை பெறலாம். ஆனால் இந்தக் குரல் கனம்? சட்டென்று ஓர் எடுத்துக்காட்டு
கூறுவதானால் கே.எல். சைகல் குரலைத்தான் குறிப்பிட வேண்டும்.
டி. கே. பட்டம்மாளுக்குக் கடைசிவரை பாட்டுப் பாடுவதே வாழ்க்கையாயிற்று. குடும்ப
வாழ்க்கை, மகன்கள், அடுத்த தலைமுறையினர் எதுவுமோ அவர் திட்டமிட்டதோ ஆசைப்பட்டதோ
கிடையாது என்று கூறுமளவுக்குப் பாடுவதில் அவருக்கு அவ்வளவு லயிப்பு இருந்தது. அவரைச்
சார்ந்த குடும்பத்தினர் பலர் அவளுடைய இசைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.
இத்தொடர்ச்சி பட்டம்மாளின் சகப் பெண் இசைக் கலைஞர்களுக்கு, பட்டம்மாள் அளவுக்கு
நிகழவில்லை.
|