Google   www kalachuvadu.com

அஞ்சலி:
திராவிடம் போற்றிய வ.அய். சுப்பிரமணியம்
(18.02.1926 - 29.06.2009)
பக்தவத்சல பாரதி

வ. அய். சுப்பிரமணியம் நம் காலத்தின் தலைசிறந்த மொழியியல் அறிஞர். திராவிடவியலுக்கு, குறிப்பாகத் திராவிட மொழியியலுக்குச் சிறந்த பங்காற்றியவர். ஆய்வாளர், ஆசிரியர், ஆய்வறிஞர், நிறுவனங்களைத் தோற்றுவித்த நிறுவனர், நிர்வாகி ஆகிய பன்முகங்களுடன் நேர்மை, நேரந்தவறாமை, கொள்கைப் பிடிப்பு போன்ற பண்புகளால் புலமை உலகில் உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர். திருவனந்தபுரத்தில் பன்னாட்டுத் திராவிட மொழிகள் பள்ளியின் மதிப்புறு இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும், குப்பத்தில் திராவிடப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தராகவும், செம்மொழி மையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட ஆய்வுக் கழகங்களை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.

இளமையும் படிப்பும்

வ. அய். சு. நாகர்கோவிலிலுள்ள வடசேரியில் 18.2.1926இல் பிறந்தார். பெற்றோர்: அய்யம்பெருமாள்- சிவகாமியம்மாள். வடசேரி அய்யம் பெருமாள் சுப்பிரமணியம் என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். பல்லாண்டுகள் அயராது பணியாற்றிய இவர், மேலும் தொடர்ந்து பல்வேறு பணிகளை முடிக்க வேண்டுமென்ற பேராசையுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது காலமானார்.

தான் பிறந்த வடசேரியில் எஸ். எம். ஆர். வி.யில் பள்ளிப் படிப்பையும் (1941), நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புதுமுகப் படிப்பையும் (1943), அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படிப்பையும் (1946) முடித்தார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புதுதில்லியில் சில காலம் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார் (1946-57). கேரளப் பல்கலைக் கழகத்திற்கு வந்த பின்னரே வ.அய்.சு.வின் தொடர்ச்சியான கல்விப்பணியும் ஆய்வுப்பணியும் தொடங்கின. இதன் பின்னர் உயராய்வில் ஆர்வம் கொண்டு அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் (1957) பெற்றார். 1967 முதல் கேரளப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பதவியமர்ந்தார்.

தம் ஆய்வுத்திறத்தால் பெரிதும் கவனம் பெற்ற அவர் 1981இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே நியமிக்கப்பட்டார். இரண்டாம்முறை துணைவேந்தர் நியமனத்தை ஏற்றுக்கொண்டவர் 1986இல் பதவியைத் துறந்துவிட்டுத் திருவனந்தபுரம் சென்றுவிட்டார். திருவனந்தபுரத்தில் தான் நிறுவிய பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளியில் இறுதி மூச்சுவரை தொடர்ந்து பணியாற்றினார்.

திருவனந்தபுரப் பணிகள்

அண்ணாமலையில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ்மொழி, திராவிட மொழிகள்மீதான ஆய்வு நாட்டம் வ.அய்.சுவிடம் பெருகியது. கேரளப் பல்கலைக்கழகத்திற்கு வந்த பின்னர் அவருடைய வேகம் பன்மடங்கானது. இந்தியானா பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய பின்னர் அவரிடம் திராவிடவியல் சிந்தனை மேலோங்கத் தலைப்பட்டது. கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைத் தலைவராகப் பணியமர்ந்த பின்னர், அவருடைய செயல்பாடுகள் இதை நோக்கி மேலும் தீவிரம் பெற்றன.  

இந்தியானாவில் தாம் கற்ற புளும்ஃபீல்டின் அமைப்பு மொழியியல், சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு, பைக்கின் டாக்மிமிக் கோட்பாடு, ஹெம்சிலேவின் கிளாஸ்மாட்டிக் கோட்பாடு ஆகிய புதிய ஆய்வு முறைகளை 1960களில் அறிமுகப்படுத்திப் பல இளம் ஆய்வாளர்களை இத்துறையில் ஈடுபடுத்தினார். தம் பேராசிரியர்களான தெ.பொ.மீ., வையாபுரிப் பிள்ளை ஆகியோரைப் போன்றே தம் மாணவர்களோடு சேர்ந்து படிப்பதும் உரையாடுவதும் கருத்துரை வழங்குவதும் இவருக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழிலக் கண ஆய்வை மொழியியல் சார்ந்த ஆய்வாக மாற்றுவதற்குப் பெரிதும் களம் அமைத்தவர் இவர். கிளை மொழி ஆய்வுகள், சமூக மொழியியல் ஆய்வுகள், தமிழை நவீனப்படுத்தும் முறை போன்றவற்றிலும் தம் ஆய்வாளர்களை ஈடுபடுத்தினார். புறநானூறு, மலையாளத்தின் கிளைமொழிகள் ஆகியன பற்றிய ஆய்வுகள் வ.அய்.சு.வின் முக்கியமான பங்களிப்புகள் ஆகும்.  

இவ்வாறான சூழலில் 1971இல் இந்தியத் திராவிட மொழியியல் கழகம் (Dravidian Linguistics Association of India) என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் சார்பாக இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு அறிஞர்களை அழைத்து ஆய்வு மாநாடுகள் நடத்தலானார். இதனையடுத்து 1972இல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்விதழ் (International Journal of Dravidian Linguistics) என்னும் இதழைத் தொடங்கினார். 1972இலிருந்து இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறையாக அண்மையில் வெளிவந்த (ஜனவரி 2009) இதழுடன் சேர்த்து மொத்தம் 75 தனி இதழ்கள் வெளிவந்துள்ளன. திராவிட மொழியியலின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இவ்விதழுக்கு மிகப்பெரும் இடமுண்டு. இதுவரை இவ்விதழில் ஏறக்குறைய 800 முழுநீளக் கட்டுரைகளும், ஒரு நூறு நூல் மதிப்புரைகளும், ஏராளமான கலந்தாய்வுக் குறிப்புரைகளும், குறு ஆய்வுரைகளும் வெளிவந்துள்ளன.  

இந்தியத் திராவிட மொழியியல் கழகத்தின் செயல்பாடுகளே அவரது உயிர்மூச்சாக இருந்தன. அவரது கடுமையான முயற்சியும் இடைவிடாத செயல்பாடுகளும் உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் இக்கழகத்தின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்ளும்பொருட்டு மாதந்தோறும் திராவிட மொழியியல் கழகச் செய்தி (DLA News) என்னும் மாதச் செய்தி மடலை வ.அய்.சு. தொடங்கினார். அது 1976 முதல் இடைவிடாமல் வந்துகொண்டிருக்கிறது.  

இதனைத் தொடர்ந்து வ.அய்.சு. 1977இல் திருவனந்தபுரத்தில் ‘பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி’யைத் (International School of Dravidian Linguistics) தோற்றுவித்தார். திருவனந்தபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள கழக்கூட்டம் என்னும் பகுதியில் தூயசேவியர் கல்லூரியை அடுத்து 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மொழியியல் பள்ளி அமைந்துள்ளது. திராவிடவியலின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும், திராவிட மொழியியலின் வளர்ச்சிக்குமான தலையாய மையமாக இது செயல்பட வேண்டுமென விரும்பினார். இதற்கான திட்டவரைவுகளைத் தயாரித்துக் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்து அவற்றிடமிருந்து தொடர்ந்து நிதியுதவி பெற்றார். இம்முயற்சியில் பல்வேறு இன்னல்களுக்கிடையே 40 ஆண்டுகள் தொடர்ந்து நிதியுதவி பெற்று வந்தார்.  

இம்மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், மொழி கற்பித்தல், ஆவணப்படுத்துதல், கிளைமொழிகளை மதிப்பாய்வு செய்தல், கருத்தரங்குகள், பயிலரங்குகள், உரைக்கோவைகள், மாநாடுகள் நடத்துதல், நூல்களை வெளியிடுதல், நூலகத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற பணிகளை வ.அய்.சு. இடைவிடாமல் செய்து வந்தார். இதன் ஒரு பகுதியாக “திராவிட மொழியியலார் அனைத்திந்திய மாநாடு” (All India Conference of Dravidian Linguists) 1971 முதல் நடந்துவருகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கருத்தரங்கு 37வது மாநாடாகும். முதல் மாநாட்டில் சுனித் குமார் சாட்டர்ஜியைத் தலைமையேற்கச் செய்தார். இவ்வாண்டு நடந்த மாநாட்டில் பி. ராமகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். ஒவ்வோராண்டும் ஒரு தலைசிறந்த அறிஞரை இம்மாநாட்டிற்குத் தலைவராக நியமித்தார். அவர்களுடைய தலைமையுரைகள் அச்சிட்ட ஆய்வுரைகளாகவும் வழங்கப்பட்டன. ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 200 அறிஞர்கள் இம்மாநாடுகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அயல்நாடுகளிலிருந்தும் தவறாமல் பலர் கலந்துகொள்வது இம்மாநாட்டின் முக்கியத்துவத்தைக் காட்டும்.  

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மொழியியலில் வளர்ந்து வரக்கூடிய நவீன பிரிவுகளான நரம்புசார் மொழியியல், கணினி மொழியியல், மூளையின் அறிதிறன் பாங்கும் செயல்பாடுகளும் பற்றியெல்லாம் இக்கருத்தரங்கில் முக்கியமாக விவாதிக்கப்பெற்றுள்ளன. திராவிட மொழியியல் ஆய்வுகளை நவீன ஆய்வுகளுடன் கொண்டு செல்வதற்குப் பன்னாட்டு மொழியியல் பள்ளியின் இக்கருத்தரங்குகள் பெரிதும் துணைநின்றுள்ளன.  

திராவிட மொழியியல் கழகத்தின் மூலம் ஏறக்குறைய 150 தரமான வெளியீடுகளை வ.அய்.சு. வெளியிட்டுள்ளார். திராவிடக் களஞ்சியம் (Dravidian Encyclopaedia-3 vols), திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் (Encyclopaedia of Dravidian Tribes-3 vols), மேற்கு வங்காளம் - ஒரு கையேடு (A Handbook of West-Bengal-2 vols), தொல்காப்பிய மூல பாட வேறுபாடுகள், தொல்காப்பியச் சொல்லடைவு, தென்னிந்தியாவில் சமணம், தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள், கிரந்த எழுத்துக்கள் போன்ற இன்னும் பல மொழியியல் சார்ந்த நூல்கள் வெளியிடப் பெற்றுள்ளன.  

இந்த மையம் வ.அய்.சு.வின் செயற்களம் எனலாம். தமிழ்மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட அதே நேரத்தில் பிற திராவிட மொழிகள்மீதும் அவருக்குப் பற்று உண்டு. பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளியில் திராவிட மொழிகளுடன் வங்க மொழிக்கும் இடம் உண்டு. இம்மொழிகளைக் கற்றுக்கொள்ள நவீன வசதிகளையுடைய மொழிக்கூடமும் உண்டு. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள் திராவிட உணர்வையும் தேசிய உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தக்கூடியவை. தொல்காப்பியர், ராசராசவர்மா, ஆனந்தரங்கர், கேசிராஜா, தாகூர் போன்றோர் பெயர்கள் இங்குள்ள கட்டடங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பணிகள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதும், அதை ஒரு தலைசிறந்த ஆய்வுப் பல்கலைக்கழகமாக வளர்க்கத் திட்டமிட்டார். தமிழியலுக்குத் தேவையான முக்கியத் துறைகள் அனைத்தையும் படிப்படியாக ஏற்படுத்தினார். பல்கலைக் கழகத்தின் சில மையங்களைக் காரணம் கருதி தொலைதூரங்களிலும் அமைத்தார். சென்னையில் கலைக்களஞ்சிய மையத்தையும், காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்தையும், மண்டபத்தில் நீரகழாய்வு மையத்தையும், உதகையில் மலையின மக்கள் ஆய்வு மையத்தையும் தோற்றுவித்தார். தமிழியல் ஆய்வு பன்முக ஆய்வாகவும் நுண்ணிய ஆய்வாகவும் அமைய வேண்டுமென்பது அவரது தீர்க்கமான ஆர்வமாகும். தமிழியல் ஆய்வுகளுக்குப் பிறமொழி அறிவு அவசியம் என்றுணர்ந்த வ.அய்.சு. பிராகிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, வங்காளம், மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ச்சிபெற பல ஆய்வாளர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பிவைத்தார். மேலும், துறைதோறும் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஆய்வுத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்தினார். வாழ்வியல் அறிவியல் களஞ்சியங்கள், பெருஞ்சொல்லகராதி, சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம், பல துறைசார் கலைச் சொல்லகராதிகள், தமிழில் மருத்துவம், பொறியியல் நூல்கள், இப்படியாக இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.  

ஆய்வுகள் வளர்வதற்கு ஆய்விதழ்கள் அவசியம் என்பதை உணர்ந்த வ.அய்.சு. தமிழ்க்கலை, Tamil Civilization ஆகிய ஆய்விதழ்களைத் தொடங்கினார். பல்கலைக்கழக வெளியீடுகளை முறையாகவும் செம்மையாகவும் கொண்டுவருவதற்கு ஓர் அச்சகத்தைப் பல்கலைக் கழகத்திலேயே நிறுவினார். ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பேற்ற துறைத்தலைவர்கள் ஆய்வில் முன்னோடியாக இருக்க வேண்டும் என விரும்பினார். அவர்கள் பதவியேற்ற பின்னர் வழங்க வேண்டிய கட்டிலேற்றுச் சொற்பொழிவு அச்சிடப்பெற்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.  

தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆய்வுப் பல்கலைக்கழகமாக, உலகளாவிய நிலையில் தமிழியலுக்கு ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக விளங்க, ஆய்வாளர்களிடமும் அறிஞர்களிடமும் ஒழுக்கம், நேர்மை, தீராத அறிவுத் தேடல், கடப்பாடுடைய உழைப்பு ஆகியவற்றை எதிர்பார்த்தார். அத்தகைய பண்புகளைக் கொண்டிராதவர்கள் எனத் தான் கருதியவர்களைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றினார். அவருடைய பார்வையில் நல்ல ஆய்வாளர் என்னும் பெயர் பெறுவது மிகவும் கடினம். நிலைப் பணிக்குப் பதிலாகத் தொகுப்பூதியம் கொடுப்பதால் மட்டுமே ஒழுங்காக வேலைவாங்க முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இறுக்கமாக இருக்கக்கூடியவர். எனினும் மிகச் சிலரிடம் எளிமையாகவும் பழகுவார்.  

வளாகத்தில் மரவினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்க ஆசைப்பட்டார். தான் பணியாற்றிய காலத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் முகவரியிட்டுக் கைவசம் வைத்திருந்தார். தன் செயல்பாடுகள் பிடிக்கவில்லையென எவர் ஒருவர் எண்ணினாலும் அக்கடிதத்தைத் தேதியிட்டு தபால் பெட்டியில் போடலாம் என்பது கருத்து. தன் அலுவலகத்தின் அருகில் வளர்ந்து வந்த புள்ளி மானுக்கும், தன் வீட்டருகில் வளர்ந்து வந்த புள்ளிமான்களுக்கும் அவரே சென்று தீனியிடுவார். தான் வரும்போது அலுவலர்கள் எழுந்து நிற்கக் கூடாது; அவரவர் பணியைக் கவனிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு முன்மாதிரியான நடைமுறைகளைச் செயல்படுத்திய ஆளுமையும் அவருக்குண்டு. தாம் இறந்த பிறகு தன் சாம்பலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அவர் குறிப்பிட்டிருந்த மரத்தின் வேரடி யில் இட வேண்டுமென விரும்பி இருந்தார். பல்கலைக்கழகத்தை விட்டு விலகியபோது தன் ஆசையை வெளிப்படுத்தி ஒரு சுற்றறிக்கையை அனைவருக்கும் அனுப்பி இருந்தார். அவரது ஆசை இன்றைய துணை வேந்தர் வழி நிறைவேற்றப்பட்டு விட்டது. அவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் செல்ல வேண்டிய இலக்குகள் என எவற்றை விரும்பினாரோ, அந்த இலக்குகளை நோக்கி பல்கலைக் கழகம் முழுமையாகச் செல்ல முடியவில்லை. காலச்சூழலால், ஓர் ஆய்வுப் பல்கலைக்கழகம் என்ற தனித்துவமும் மாறத் தொடங்கியது.

பிற பணிகள்

யாழ்ப்பாண நூலகம், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்டபோது பல்கலைக்கழகத்திலிருந்து ஏராளமான நூல்களை அனுப்பி உதவினார். வ.அய்.சு. ஈடுபட்ட பணிகள் ஏராளம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் தனிநாயகம் அடிகளுடன் இணைந்து சில ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்தார். உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற பெரும் பங்காற்றினார். திராவிடப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர் இவரே. மைய அரசிடம் இதுபற்றிப் பேசுவதற்குச் சென்றபோது துறைசார்ந்த அமைச்சர் திராவிடம் என்னும் சொல்லை நீக்குமாறு பரிந்துரைத்தார். இந்திய தேசிய கீதத்தில் உள்ள திராவிடம் என்னும் சொல் நீக்கப்படுமானால் உங்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவ்வமைச்சரைத் திகைப்படையச் செய்தார்.  

மொழிப்பற்று, துணிச்சல், நேர்மை, கொள்கைப் பிடிப்பு இவையாவும் வ.அய்.சு ஆளுமையின் முக்கியக் கூறுகள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், விசுவபாரதிப் பல்கலைக்கழகம், தெக்கணக் கல்லூரி (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆகியவை வ.அய்.சு.விற்கு முதுமுனைவர் (D.Lit) பட்டமளித்துச் சிறப்பு செய்தன. முரசொலி அறக்கட்டளை, ஆதித்தனார் அறக்கட்டளை உள்ளிட்ட இன்னும் பல அமைப்புகளும் இவரைச் சிறப்பித்து விருதுகள் வழங்கியுள்ளன. எத்தனை நிறுவனங்களில் பங்கேற்றுச் செயல்பட்டாலும், அவர் தன் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டார். 150க்கும் குறையாத கட்டுரைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தாம் ஈடுபட்ட அத்தனை நிறுவனங்களிலும், ஆராய்ச்சியும் கல்விப் பணிகளும் உலகத்தார் மெச்சும்படி அமைய வேண்டுமென்பதே அவருடைய தணியாத தாகமாகும். அந்த வழியில் ஈடுபடும் எவரொருவரும் அவரின் அன்புக்கும் நேசத்திற்கும் உரியவராக மாற முடியும்.

உள்ளடக்கம்