|
மைக்கேல் ஜாக்ஸன் மறைந்த அன்றுதான் அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பது
எனக்குத் தெரிந்தது. ஐம்பது ஆண்டுகளா? திரும்பத் திரும்ப இணையத்தைத் துருவிப்
பார்த்தேன். ஐம்பதுதான் என்பது உறைக்கப் பல மணிநேரங்கள் பிடித்தன. மறைந்தது இன்றுவரை
உறைத்ததாகத் தெரியவில்லை. மாரடைப்பாம். மின்னலுக்கும் மாரடைப்பு வருமா என்ன? இல்லை
என்று சத்தியம் செய்பவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். அவரது ஆவி இங்குதான்
சுற்றுகிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் அதிகம்.
அவரைப் பற்றிய அவதூறுகளைப் படிப்பதைவிடப் பல வருடங்களாகிவிட்டன. லண்டனில் அவரது
நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன, அனுமதிச் சீட்டுகளுக்காக இரண்டு லட்சம் பேர்களுக்கு
மேல் வரிசையில் நின்றார்கள், சீட்டுகள் முதல் சில மணிநேரங்களிலேயே விற்றுத்
தீர்ந்துவிட்டன போன்ற செய்தித் துணுக்குகளைச் சமீபத்தில் படிக்க மகிழ்ச்சியாக
இருந்தது. உலகமெங்கும் என்னைப் போல மகிழ்ச்சியடைந்தவர்கள் பலர் இருந்திருப்பார்கள்.
மைக்கேல் ஜாக்ஸனின் பெயர் எனக்கு முதலில் தெரிய வந்தது தில்லியில் வைத்து. எனக்கு
ஒரு நண்பர் இருந்தார். எங்கும் செல்லாதவர். அறையிலிருந்து அலுவலகம்.
அலுவலகத்திலிருந்து அறை. உணவு அறைக்கு வந்துவிடும், அறையைத் துடைப்பது, உணவுப்
பாத்திரங்களைக் கழுவுவது போன்றவை அவருக்குத் தெரியாதவை. வீட்டில் வேலை செய்பவர்
உள்ளே நுழைய முடியாதபடி நாற்றம் வரும்வரை இந்தக் காரியங்களைச் செய்யத் தயங்குபவர்.
நான் அவர் வீட்டிற்குள் துணிச்சலாக நுழைகின்ற மிகச் சிலரில் ஒருவன். காரணம் நண்பர்
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் புத்தகங்கள், ஒலி நாடாக்கள்
வாங்கிவருவார். மேற்கத்திய இசையின் மீது அவருக்கு மாளாக் காதல். ஒரு நாள் எனக்கு
போன் செய்தார்.
‘கிருஷ்ணன், உடனே வா. உடனே, உடனே.’
அவரது வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு பெண் குரல் பாடுவது எனக்குக் கேட்டது. நண்பர்
சைகையால் உட்காரச் சொன்னார். பாட்டு வேகமாக இருந்தது. பெண் குரலா? குரலால்
மத்தாப்புகளை உதிரவைக்க முடியுமா? பாட்டு முடிந்ததும் திரும்பப் போடச் சொன்னேன்.
மெதுவான முணுமுணுப்பில் ஆரம்பித்த பாடல் ஒரு மகிழ்ச்சிக் கூச்சலில் தொடங்கியது.
உடனே மேலே மேலே சுழன்று வானத்தைத் தொட முயலும் ஒரு சிறிய string coda. பாடத்
தொடங்கிய உடனே இது பெண் குரல் அல்ல என்று தெரிந்துவிட்டது. பெண் குரலுக்கு இந்த
வளமை, வீச்சு கிடையாது. பொய்க் குரலுக்கு இடையில் உண்மைக் குரலின் துண்டுகள்.
இதுவரை கேட்டிராத சங்கீதம். எல்லைகள் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லும் சங்கீதம்.
“யார் பாடுவது”
“மைக்கேல் ஜாக்ஸன்”
முப்பது வருடங்களுக்குப் பின்னால், இந்தக் கட்டுரை எழுதுவதற்காக இந்தப் பாடலைத்
திரும்பக் கேட்டேன். திரும்பத் திரும்பக் கேட்டேன். Don’t Stop ‘til You Get Enough
என்ற இந்தப் பாடல் மைக்கேல் தனது இருபதாவது வயதில் பாடியது. இருபது வயதாகவே அவர்
என்றும் இருந்திருக்கக் கூடாதா என்று நம்மை நினைக்க வைக்கும் பாடல். மேதைகளை வயது
துன்புறுத்தக் கூடாது.
2
மேற்கத்திய இசையின் மேதைகளில் ஒருவரான மொசார்டின் வாழ்க்கைக்கும் மைக்கேல் ஜாக்ஸன்
வாழ்க்கைக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அவரைப் போலவே இவரும் மிகச் சிறிய வயதில்
தன்னுடைய இசைத் திறமையைக் காட்டத் தொடங்கி விட்டார். அவரது தாய் மைக்கேல்
கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரது கைகால் அசைப்பில் ஓர் ஒழுங்கு, ஒரு நளினம்
இருந்தது என்கிறார். குடும்பமே இசைக் குடும்பம். ஜாக்ஸன் 5 என்ற அந்த இசைக் குழுவில்
ஐந்து சகோதரர்கள். கடைக்குட்டி மைக்கேல் ஜாக்ஸன். அவர்தான் முதற் பாடகர். I Want
You Back என்ற இந்தக் குழுவின் புகழ்பெற்ற பாடலில் அவரது குரல் சிறுவன் குரல் போலவே
இல்லை. ஆண் குரலின் எல்லாப் பரிமாணங்களையும் கொண்டு அது இன்றும் நம்மை வியக்க
வைக்கிறது. ஆனாலும் அவர் இந்தக் குழுவில் மட்டும் பாடிக் கொண்டிருந்தால் அவரது
மேதைமையின் முழுமை வெளிப்பட்டிருக்காது. அதை வெளியே கொண்டு வந்தவர் க்வின்ஸி
ஜோன்ஸ் என்ற இசை அமைப்பாளர். நமது விஸ்வநாதனைப் போன்ற ஒரு ஜாம்பவான். Frank
Sinatra போன்றவர்களுக்கு இசை அமைத்தவர். ஜாக்ஸன் இவருடன் Wiz என்ற திரைப்படத்தில்
வேலை பார்த்தபோது, இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அறிந்துகொண்டதன்
விளைவு, Off the Wall என்ற ஆல்பம். நான் மேலே குறிப்பிட்ட Don’t Stop ‘til You Get
Enough இந்த ஆல்பத்தில்தான் இருக்கிறது.
இந்த இசைத்தட்டு வெளிவந்தது 1979இல். அடுத்த சில ஆண்டுகளில் ஜாக்ஸன் வாழ்க்கையில்
கடுமையான சில நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவருக்குக் குழந்தைப் பருவமே
கிடையாது என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் பலர் கூறுகிறார்கள். அவரது தந்தை
மிகக் கடுமையாக நடந்துகொண்டார், பெல்ட்டைக் கழற்றி விளாசுவதில் தயங்கியதே இல்லை
என்றும் கூறப்படுகிறது. இது போதாதென்று அவர் தன்னைவிட இருபது வயது சிறியவரான ஒரு
பெண்ணிடம் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார். ஜாக்ஸனை
மிகவும் பாதித்த நிகழ்வு இது.
3
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்க்கையில் 1905 அதிசய ஆண்டு (Annus Mirabilis). இந்த
வருடத்தில் - அவருக்கு அப்போது வயது இருபத்து ஆறு - அவர் மூன்று புகழ்பெற்ற
அறிவியல் கட்டுரைகளை எழுதினார். இந்த வருடத்தைப் போல அவருக்கு எந்த வருடமும்
அமைந்ததில்லை. ஜாக்ஸனின் அதிசய ஆண்டு 1982. Thriller ஆல்பம் வெளிவந்த ஆண்டு.
அவருக்கு அப்போது வயது இருபத்து ஐந்து. எல்லா வல்லுநர்களும் இந்த ஆல்பம் ஜாக்ஸனின்
மேதைமையின் உச்சத்தைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள். ஜாக்ஸனுக்கும் இந்த வருடத்தைப்
போல எந்த வருடமும் அமைந்தது இல்லை.
நான் இந்த ஆல்பத்தின் எல்லாப் பாடல்களையும் பல தடவை கேட்டிருக்கிறேன். ஆல்பத்திலேயே
மென்மையானது ஜாக்ஸனும் பீட்டில்ஸ் குழுவில் ஒருவரான பால் மெக்கார்டினியும் சேர்ந்து
பாடிய The Girl Is Mine என்ற பாடல். அதி மேதாவிகளுக்குப் பிடிக்காத பாடல். எனக்குப்
பிடித்தது. பால் மெக்கார்டினியும் மைக்கேல் ஜாக்ஸனும் தங்களது மேல்கட்டைகளை எட்ட
முயல்வது மிகவும் ரசிக்கத்தக்கது. மற்றும் இந்த ஆல்பத்தில் இருக்கும் மற்ற
பாடல்களிலிருந்து வித்தியாசமானது. இந்த ஆல்பத்தின் மற்றைய பாடல்கள் பாப்
சங்கீதத்திற்குப் புதிய இலக்கணத்தை அமைத்தவை.
மைக்கேல் ஜாக்ஸனின் தனது ஆட்டத்தால் உலகம் முழுவதையும் உலுக்க வைத்தது இந்த
ஆல்பத்தில் இருக்கும் ஒரு பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தின் விடியோ பதிவு. Billie
Jean என்ற பாடலுக்கு அவர் ஆடிய ‘மதிநடை’ (moonwalk) இன்றுவரை பலரால் நகல்
செய்யப்படுகிறது. ஆனால் யாராலும் - நமது பிரபுதேவா உட்பட - ஜாக்ஸனின் அருகில்கூட
நெருங்க முடியவில்லை. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, அவரைக் கண்ணுக்குத்
தெரியாத யாரோ பின்னாலிருந்து பிடித்து இழுப்பதாகத் தோன்றுகிறது. இழுப்பிலிருந்து
நளினமாக விடுபட்டு காற்றைப் போல அவரால் இயங்க முடிகிறது.
Germaine Greer என்ற பெண்ணியத்தின் முன்னோடி ஜாக்ஸன் மறைவு பற்றி எழுதிய
கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
நிஜின்ஸ்கியும் நுரெயெவும் (மேற்கத்திய நடனத்தின் மிகப் புகழ் பெற்ற இரு மேதைகள்)
இளமையில் இறந்து போனார்கள். அவர்களும் நடனத்தின் எல்லையைக் கடக்க முயன்ற
இளைஞர்கள்தான். ஆனால் அவர்கள் இருவரும் மற்றவர்களிடம் கற்றுக்கொண்ட நடனக் கலைக்கு
விளக்கம் கொடுத்தவர்கள்.
மாறாக மைக்கேல் ஜாக்ஸனின் கலை முற்றிலும் புதியது; வியக்கத்தக்கது. அவனை மாதிரி
யாராலும் ஆட முடியவில்லை-அவன் எப்படி ஆட வேண்டும் என்று காட்டும்வரை. ஆனாலும் அப்படி
ஆடியவர்கள் அவனடைந்த உச்சத்தை அடைய முடியவில்லை. அவனது நடனத்தின் கரு முற்றிலும்
இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்தது -பளீரிடும் பல பரிமாணங்களைக் கொண்டது, மத்திய
வர்க்கத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பது.
‘இது என்னையா குஞ்சில கை வைத்துக்கொண்டு ஆடுபவனை மேதை என்று சொல்கிறானே’ என்று
நினைப்பவர்கள் ஜாக்ஸனின் Billie Jean ஆட்டத்தை இணையத்தில் பார்க்க வேண்டுகிறேன்.
4
1982க்குப் பிறகு ஜாக்ஸனுக்கு இறங்குமுகம்.
அவருடைய படைப்புத் தீயின் உக்கிரம் மெதுவாக, ஆனால் நிச்சயமாகக் குறைந்துகொண்டே
வந்தது. 1987இல் வெளியான Bad, 1991இல் வெளியான Dangerous, 1996இல் வெளியான History
மற்றும் 2001இல் வெளியான Invincible ஆல்பங்களில் பல நல்ல பாடல்கள் இருந்தன. சில
மறக்க முடியாதவை. இது கம்பனின் சடகோபர் அந்தாதியிலும் நல்ல பாடல்கள் இருக்கின்றன
என்று சொல்வது போலத்தான். ஜாக்ஸனின் சொந்த வாழ்க்கையிலும் பல திருப்பங்கள்.
திருமணம். விவாகரத்து. குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றதாக வழக்கு. வழக்கில்
விடுதலை அடைந்தாலும் அவரிடம் குழந்தைகளைத் தனியாகவிட பெற்றோர்கள் தயங்கினார்கள்.
சிம்பன்ஸி ஒன்றை வளர்த்ததிலிருந்து தன்னுடைய நிறத்தைப் பழுப்பிலிருந்து பால்
வெள்ளைக்கு மாற்றிக் கொண்டதுவரை அவர் செய்தவை அனைத்தும் பிறழ்வு உள்ள ஒருவர்
செய்தவை போல இருந்தன. ஜாக்ஸனைப் பற்றி எந்தக் கெட்ட செய்தி வந்தாலும் அதைப்
படிக்கக் கூடாது என்ற உறுதிமொழியை எனக்குள்ளே எடுக்க வைத்தவை. அவரது இறப்புதான்
என்னை அந்த உறுதிமொழியை மீறச் செய்தது.
5
ஜாக்ஸனுக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும்
அவருடைய புதிய பால் வெள்ளை வடிவம் பிடித்ததாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் பழைய
பழுப்பு நிறம்தான் பிடித்திருந்தது. ஆனாலும் தான் எப்படி இருக்க வேண்டும் என்று
தீர்மானித்துக்கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது என அவர்கள் நம்பினார்கள்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அவரை எவ்வாறு பார்த்தார்கள்?
கறுப்பு அமெரிக்காவின் மிகப் பெரிய சின்னங்களில் அவர் ஒருவர் என்பதில் அவர்களில்
யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் நிறம் மாற்றிக்கொண்டதைப் பற்றி அவர்களில் பலர்
கவலைப்படவில்லை. கேள்வி கேட்டவர்களிடம் அவர்கள் சொன்ன ஒரே பதில் ‘Leave Michael
alone’. ஒரு சிலரை இந்த மாற்றம் உறுத்தியது. அவர்களின் இசையமைப்பாளர் க்வின்ஸி
ஜோன்ஸும் ஒருவர். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் ஜாக்ஸன்
கறுப்பினத்தவர் என்ற அடையாளத்தை விரும்பவில்லை என்று கூறினார். அவர் கூறியது இது.
கேள்வி: மைக்கேலின் முகம் எப்படி பால் வெள்ளையாக மாறிவிட்டது என்பதைக் கவனித்தீர்களா?
உங்களை அது பாதிக்கவில்லையா?
பதில்: வேடிக்கையாக இருக்கிறது. முகம் முழுவதும் இரசாயனப் பூச்சு. புரியவேயில்லை.
ஆனால் அவர் கறுப்பர் என்ற அடையாளத்தை விரும்பவில்லை என்பது தெளிவு.
கேள்வி: அப்படியா?
பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய குழந்தைகளைப் பார்த்தீர்களா?
ஜோன்ஸ் சொன்னதில் உண்மை ஓரளவாவது இருக்கிறது. ஜாக்ஸனின் குழந்தைகளில் ஒன்றுகூடக்
கறுப்பு இல்லை. கறுப்போ வெள்ளையோ ஜாக்ஸன் ஒரு யுக நிகழ்வு என்பதில் எனக்கு ஐயம்
இல்லை. Germaine Greer இவ்வாறு கூறுகிறார்: “அதிசயம் அவரை நாம் இழந்துவிட்டோம்
என்பது இல்லை, அதிசயம் அவர் நம்மிடையே இருந்தார் என்பதுதான்.”
|