|
மரணம் தேர்ந்த இசை ஆர்வம் கொண்டதாக இருக்க வேண்டும். ஐந்து நாட்கள் இடைவெளியில்
இரு பெரும் இசைக் கலைஞர்களை அபகரித்துக்கொண்டுவிட்டது. முதலில் டி. கே. பட்டம்மாள்.
அடுத்து கங்குபாய் ஹங்கல் (1913 - 2009). அதன் ரசனை இலட்சணம் நிரம் பியதுபோல.
கர்நாடக இசையிலிருந்து ஒருவரையும் ஹிந்துஸ்தானி இசையிலிருந்து ஒருவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. இரண்டு மரணங்களும் முதுமையின் தவிர்க்க இயலாமைதான். எனினும்
ஆற்றாமையை ஏற்படுத்துகின்றன இந்த இழப்புகள்.
பட்டம்மாளையும் கங்குபாயையும் ஒரு காரணத்துக்காக ஒப்பிடலாம். இரண்டு பேரும்
போராடித்தான் தங்களுடைய மேடைகளைக் கண்டுபிடித்தார்கள். ஆண்கள் ஆக்கிரமித்திருந்த
இசை மேடைகளில் இவர்கள் பாட முடிந்தது அந்த நாளைய பெரும் புரட்சி. பட்டம்மாளுக்குக்
குலப் பிறப்பு என்ற சலுகையிருந்தது. கங்குபாய்க்கு அவருடைய சாதி காரணமாகக் கிடைத்தவை
உதாசீனமும் புறக் கணிப்பும்.
கர்நாடக மாநிலம் தார்வாரில் படகோட்டிக் குடும்பத்தில் பிறந்தார் கங்குபாய்.
படகோட்டிகள் தீண்டப்படாதவர்கள். ஆனால் சங்கீத விற்பன்னர்கள். கங்குபாயின் தாய்
அம்பாபாய், பாட்டி கமலாபாய் இருவரும் இசை வல்லுநர்கள். இந்த இசையில் மயங்கிய
பிராமணர்கள் தாம் அப்பாவும் தாத்தாவும். ஆனாலும் அவர்கள் இருவரும் புகுந்த
வீட்டில்வாழ அனுமதிக்கப்பட்டதில்லை. இருவரும் கலைச் செருக்குடன் எடுத்த முடிவு
இந்தப் பிராமணர்கள் அகத்தில் வசிப்பதில்லை. அவர்கள் பெயரைப் பயன்படுத்துவதில்லை.
ஹங்கல் என்ற கிராமப் பெயரை மட்டுமே உபயோகிப்பது. அந்தக் கிராமப் பெயரை உலகமறியச்
செய்தவர் காந்தாரி என்ற கங்குபாய்.
கர்நாடக இசைக் கலைஞரான தாயார் அம்பாபாய்தான் கங்குபாயின் முதல் குரு. ஆனால் தொடக்க
நாட்களிலேயே கங்குபாய்க்குக் கர்நாடக இசைப் பாணியில் விருப்பமில்லாமற் போனது.
உணர்வுப் பெருக்குக்கு இந்தப் பாணி பொருந்தாது என்று கருதினார். இந்துஸ்தானி
இசைக்கு மாறினார். சவாய் கந்தர்வாவின் மாணவியானார். அவருடன் பயின்றவர் இன்னொரு இசை
மேதையான பண்டிட் பீம்சேன் ஜோஷி.
கங்குபாயின் திருமண வாழ்க்கை தியாகங்கள் நிரம்பியது. உயர் சாதிக்காரரான குருராவ்
காலுகியை மணந்துகொண்டார். ஆனால் அது உலகமறிந்த திருமணமல்ல. கங்குபாயின்
நிர்ப்பந்தத்தால் தன்னுடைய முறைப்பெண்ணை மணந்து அதிகாரபூர்வ மனைவியாக்கினார்
குருராவ். சட்டம் பயின்ற குருராவ் ஒருபோதும் வக்கீல் தொழிலில் ஈடுபட்டதில்லை. பல
வியாபாரங்கள் செய்தார். எல்லாவற்றிலும் தோல்வி. அதை ஈடுகட்டியவர் கங்குபாய்.
கச்சேரி மூலம் ஈட்டிய வருவாயைக் கணவனுக்கும் கணவனின் மனைவிக்கும் அவர்களின்
பிள்ளைகளுக்குமே செலவிட்டார்.
கடின உழைப்பின் மூலம் நட்சத்திரப் பெருமையை அடைந்தவர் கங்குபாய். கௌரவ டாக்டர்
பட்டம் உட்பட எல்லா அங்கீகாரங்களும் அவருக்குக் கிடைத்தன. ‘ஆனால் ஒரு பெண்
கலைஞருக்கான தனி மரியாதையை யாரும் தரத் தயாரில்லை. ஓர் இஸ்லாமியர் இசையில்
தேர்ந்திருந்தால் அவரை உஸ்தாத் என்று பாராட்டுகிறீர்கள். இந்துவாக இருந்தால் பண்டிட்
என்கிறீர்கள். அதுவே பெண்ணாக இருந்தால் வெறும் பாய் மட்டும்தான். அம்பாபாய்,
கங்குபாய் அவ்வளவுதான்’ என்று தன்னுடைய சுயசரிதையில் சொல்லியிருந்தார் கங்குபாய்.
அவருடைய பழைய இசைப் பதிவுகளில் பெண்மை மிளிரும் குரல் இருக்கும். உடல்நலக் குறைவால்
குரலை இழந்த பின்னர் அசுர சாதகம் செய்து மீண்டும் பாடவந்தபோது அவருடைய குரலில்
குழைவுக்குப் பதில் மிடுக்குத் தொனித்தது. ஒரு நாடோடித்தன்மையும் கேவலும் அந்தக்
குரலில் வெளிப்படும். ஆன்மாவில் கருணை சுரக்கிற ஒலி ஹங்கலின் சங்கீதம்போலத்தான்
இருக்கும் என்று யோசிப்பதுண்டு. மரணத்துக்கும் அந்த சங்கீதம்
விருப்பத்துக்குரியதுபோல.
|