Google   www kalachuvadu.com

கடிதங்கள்

தலையங்கம், இப்போது உலகெங்கும் கவனத்துக்குள்ளாகிவரும் மாற்றுப் பாலியல் பற்றி அக்கறையுடனும் சமூகக் கரிசனத்துடனும் விரிந்த பார்வையில் அணுகுவதாக இருக்கிறது.

‘கிராமக் கோயில்கள்’ இன்னமும் நிலவுடைமை ஆதிக்கத்தின் அதிகார பீடங்களாகவே கோலோச்சி வருகின்றன. சாதியும் வர்க்கமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து வருவதால் தனித்த சாதி ஒழிப்போ தனித்த வர்க்கப் போராட்டமோ பயன்தராது. சாதி ஒழிப்போடு வர்க்கப் போராட்டத்தை இணைக்கும் பார்வை அறிவுஜீவிகள், சாதி மறுப்பாளர்கள் அனைவருக்கும் வர வேண்டும். கட்டுரை யதார்த்தத்துடன் ஆதாரங்களுடன் அமைந்திருக்கிறது.

இலங்கையில் இனவெறியாட்டத்தை அரச பயங்கரவாதமே நிகழ்த்தியிருக்கிறது. இதில் காந்தி, நேரு பிறந்த இந்தியாவின் பங்களிப்பு நம்மைத் தலைகுனிய வைக்கிறது. ‘காலச்சுவடு’ காலத்தே அதைப் பதிவு செய்திருக்கிறது. கவிதாவின் ‘வேறு வழியில்லை அக்கா’ கட்டுரை கலங்கடித்தது. இனியும் சிங்களரோடு சேர்ந்து வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வரவைக்கிறது.

எளிய அமைதி தவழும் இனிய சுபாவத்துடன் கூடிய ராஜமார்த்தாண்டனை ஒருமுறை மதுரையில் அருகிருந்து அளவளாவிய தருணம் இன்னும் மனக்கண்ணில் அப்படியே இருக்கிறது. தனது பார்வையை, கோட்பாட்டை யார் மீதும் வலியத் திணிக்காத மென்மையான அணுகு முறை அவருடையது. அதேசமயம் யாருக்காகவும் தனது கருத்தை விட்டுக்கொடுக்காத பாங்கும் அருமையானது. நல்ல கவிதையை இழந்துவிட்ட சோகம் எல்லோர் மனத்திலும் கவிந்திருப்பதைப் பக்கத்துக்குப் பக்கம் பார்க்க முடிகிறது.

‘நடந்தாய் வாழி காவேரி’ நூலை வாங்குவதற்காக தணிகாசலம் தெருவில் உள்ள ‘வாசகர் வட்டம்’ அலுவலகம் சென்றேன். அதுவே வீடும்கூட. கிருஷ்ணமூர்த்தி தேடித் தேடிப் பார்த்தும் புத்தகம் கிடைக்கவில்லை. முன்னட்டை- பின்னட்டை கிழிந்த சில பக்கங்கள் மூலை சுருண்டும் கிடந்த ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தால் நான் விரும்பிய, ‘நடந்தாய் வாழி காவேரி’. இதை நான் எடுத்துக்கொள்கிறேன். இதற்குரிய விலையைத் தருகிறேன் என்று பணத்தைக் கொடுக்க முயலும்போது, இல்லை புத்தகம் பழுதடைந்திருக்கிறது இதை எப்படி விற்பது? அது சரியல்ல; மறுஅச்சில் இருக்கிறது, வந்ததும் தருகிறேன் உங்கள் முகவரி கொடுத்துவிட்டுப் போங்கள் என்றார். எனக்கோ கிடைத்த புதையலை விட மனசில்லை. ‘பரவாயில்லை; எனக்கு இதுவே போதும்’; ‘அட்டைதானே இல்லை’ அதனாலென்ன என்றேன். அவருக்கு நல்ல பொருளையே தர வேண்டும் என்ற நேரான சிந்தனை. இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தலையிட்டு, முழுத் தொகை வேண்டாம் பாதித் தொகைக்குக் கொடுத்துவிடுங்கள் என்றார். அப்படியும் சிதைந்த புத்தகத்தைத் தர அவருக்கு விருப்பமில்லை. லட்சுமி அம்மாவே பணத்தைப் பெற்றுக்கொண்டு புத்தகத்தைக் கொடுத்து அடிக்கடி வாங்கோ என்றார். சாதாரண செயல்பாடுகளிலும் எவ்வளவு நேர்மை! பெருமாள்முருகனின் கட்டுரை நடப்பியல் சார்ந்த சமூகப் பார்வையை முன்வைத்தது.

இரவீந்திரபாரதி
அரூர்

கிராமக் கோயில் திருவிழாக் காலங்களில் சாதியின் பேரால் ஏற்படும் வன்முறையின் விரிந்த பரப்புகளை மிகத் தெளிவாக ஸ்டாலின் ராஜாங்கம் பதிவு செய்துள்ளார். பெரியார் சிந்தனைகள் மிகவும் தேவை என்பதையே இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. தேர்தல் காலங்களில் மட்டும் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தூக்கிப்பிடிக்கும் தலித் இயக்கங்கள் பிறகு சாதாரண காலங்களில் மறந்துவிடுவது வருத்தத்துக்குரியது. தொடர் போராட்டங்கள் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகள் ஒருவர் பின் ஒருவராக மறைவது நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்துகிறது.

கல்வி நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் சாதாரண மாணவர்களின் வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் தடைகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் ‘கருணை வெளிப்படும் தருண’த்தில் பெருமாள்முருகன் விளக்கமாகப் பதிவுசெய்துள்ளார்.

ராஜமார்த்தாண்டன், மாதவிக் குட்டி ஆகியோரது கவிதைகள் சிறப்பாக இருந்தன.

சா. ரு. மணிவில்லன்
சென்னை

காதலும் காமமும்: உடைபடும் கற்பிதங்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் தேவைதான் என்றாலும், இதயத்தின் ஒரு மூலையில் இது அழிவுப்பாதைக்கு வழிவகுத்து மனித இனப் பண்பாட்டைச் சீர்குலைத்துவிடுமோ என்ற அச்சத்தையும் துளிர்விடச் செய்கிறது. வன்னிக் குறிப்பேடு கட்டுரை ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு. பிரபாகரனின் உயர் எண்ணத்தைச் சந்தேகிப்பதில் ஒருவித நியாயமுமில்லை. சிந்தனைக்கு இடம் தராமல் தம் மொழி, இனம், மக்கள் என்ற சிந்தனையிலேயே ஊறித் திளைத்த இன உணர்வுப் போராளி அவர். காலமும் சூழ்நிலையும் சரியாக அமைந்திருந்தால், துரோகத்தனமும் பதவிப் பித்தும் நிலைகுலைந்து போயிருந்தால் அவரது எண்ணம் ஈடேறி இருக்கும். சுமார் 30 ஆண்டுகள் போராட்டக் களத்தில் வீறுநடை போட்ட ஒரு மாவீரனை துரோகம்தான் துளைத்ததே தவிர, வீர நிகழ்வு அல்ல என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது. கொழும்புவாழ் மக்கள் சாதுர்யமாகச் செயல்படுவது ஒருபோதும் கோழைத்தனமானது அல்ல; ராஜதந்திரம் என்பதை வரலாறு பதிவுசெய்யும். அவ்வழியில் கட்டுரையாளரின் அறிவுரையில் நியாயமிருக்கிறது. சோதிடக் கூற்றையே சகித்துக்கொள்ள முடியாத இராஜபக்சேவுக்குப் படை வீரனின் உணர்வுகள் புரியக்கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.

கவிதாவின் கட்டுரையில் உள்ளக் குமுறலின் பிரளயம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. புத்தன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பது உண்மையே. அஞ்சலிக்கு உரித்தான ஆளுமை மிக்க அனைத்து ஆன்மாக்களுக்கும் காலச்சுவடு வழியில் அஞ்சலி செலுத்துகிறோம். கமலாதாஸின் கவிதை வரியில் ஒருபோதும் திரும்பிவர முடியாத தனிமையின் தன்மையை உணர முடிகிறது. ‘பெயரிடப்படாத சம்பவ’த்தில் இனமறியாத உணர்வு இழையோடியது. கல்வி காலப்போக்கில் பணங்கொழிக்கும் கற்பக விருட்ச மரம் என்பதைக் ‘கருணை வெளிப்படும் தருணம்’ சுட்டிக்காட்டியது. சு.ரா.வின் நேர்காணலில் உள்ளத்தின் பக்கங்கள் ஒளிவுமறைவின்றி ஒளிர்ந்தன.

கா. இர. குப்புதாசு
செஞ்சி

ஏறக்குறைய தமிழ்ச் சிற்றிதழ்கள் எல்லாம் ராஜமார்த்தாண்டனின் மறைவு குறித்த அஞ்சலிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றன. உடன் அவர் எழுதியிருந்த கவிதைகளையும்.

ஒரு கலைஞன் என்பதால் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்ட ஒரு மனிதனின் மரணச் செய்தி, தங்களை அறியாமல், தத்தமது உணர்வுகளை வெளிக் காட்டும் விதமாக அவ்வஞ்சலிக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.

வாழும் காலத்தில் சிலரது ஆவல்களை-நண்பர்களால் அவதானிக்க இயலாமல் போகிறது. அதைத்தான் கண்ணனின் கட்டுரை உணர்த்துகிறது. தமிழ் இலக்கியங்கள்மீது ஆழ்ந்த ஞானமும், கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழ் இலக்கியச் சூழலில் பாசாங்கற்ற, குழு மனப்பான்மையற்ற விதத்தில் இயங்கிய ஒரு மனிதாபிமானப் படைப்பாளியாக, ராஜமார்த்தாண்டன் விளங்கினார் என்பது நமது மொழிக்கும் இலக்கியத்துக்கும் கிடைத்த பெருமை. தங்களது கட்டுரைகள் மூலம் அவரை நினைவு கூர்ந்த காலச்சுவடு பாராட்டுக்குரியது.

கே. இரவிச்சந்திரன்
ஈரோடு

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “சாதி வன்முறையின் விரிந்த பரப்பு: கிராமக் கோவில்கள்” என்னும் கட்டுரை நன்று.

இந்தியாவுக்குள் வந்து குடியேறி, தனது நாடோடி வாழ்க்கையின் அனுபவ அறிவைப் பயன்படுத்தி, இந்த நாட்டில் இருந்த சாதி அமைப்பு முறையை நான்கு வர்ண அமைப்பு முறையாக மாற்றி, அதை எல்லாப் பிரிவு மக்களையும் ஏற்கவைத்த பிராமணியம் பயன்படுத்திய கருவிதான் கோவில்.

அந்தக் காலத்தில் உழைப்பாளி மக்களை ஒதுக்கிவைக்க அவர்களின் நடமாட்டங்களையே சில பகுதிகளில் தடைசெய்தார்கள். அக்ரகார வீதி, கோவில் நுழைவுக்குத் தடையென்பது அதன் ஒரு பகுதி. இதை எதிர்த்துப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த சுயமரியாதை கொண்டவர்கள் போராடினர். ஒரு கட்டத்தில் தங்களைப் புறக் கணிக்கும் வைதீகக் கோவில்களை இவர்கள் புறக்கணித்துத் தங்கள் குடியிருப்புகளிலேயே கோவில்களை உருவாக்கிக்கொண்டார்கள். இப்படியான போராட்டத்தை எதிர்பாராத சிறுபான்மை வைதீகம் சமரச நடவடிக்கையாகப் பிற்படுத்தப்பட்டவர்கள்மீதான புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தளர்த்திக்கொள்ளும் நிலையேற்பட்டது.

ஆனால் வைதீகக் கோவில்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நாட்டார் கோவில்களில் அவர்களை வைத்துக் குடமுழுக்குச் செய்வதும் முன்பு வைதீகர்கள் சொன்னதை இன்று பிற்படுத்தப்பட்ட சாதியினர் சொல்கிறார்கள். தலித்துகள் தெருவில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது. கோவிலுக்குள் வரக் கூடாது. தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என்கிறார்கள். இன்று அதை எதிர்த்து முற்போக்காளர்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் வெற்றிபெற்றால் தலித்துகளின் கோவில்களும் இப்படி மாறும் அபாயமும் உள்ளது. (தற்போதுகூட தலித் கோவில்களில் சில இடங்களில் அருந்ததிய மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் அவலம் உள்ளது.) இந்த விஷச் சக்கரத்தை முதலில் உடைக்க வேண்டும். மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக்கொடுக்கும் வழிபாட்டு உரிமை என்ற வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு புதிய திசையில் பயணிக்க வேண்டும். மனிதர்களையே பிளவுபடுத்தி, ஒருபகுதி மனிதனை இழிவுசெய்து கோவிலுக்கு வராதே என்ற காலத்தில் ‘கோவிலுக்குள் விடு’ என்கிற போராட்டம் ஒரு சுயமரியாதைப் பாதைதான். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. கோவில்களை நிர்வகிக்கும் சாதியெதுவாகினும் அது உயர் குடியெனும் கருத்தியலுக்கு உள்ளாகிறபோது இனிமேல் கோவிலே வேண்டாமென முடிவெடுக்க மக்களைத் தூண்டிட வேண்டும். அதற்காகச் செயல்பட வேண்டும். இந்த வழியில் பயணிப்பது சாதிவெறிக் கொலைகளைக் குறைக்கப் பயன்படுமா எனப் பார்க்கலாம்.

நா. கலையரசன், மங்களக்குடி

ஆரவாரமும் பகட்டும் பாசாங்குமற்ற, ஆழமான அழுத்தமான உரையாடல்களைக் காலச்சுவடு ஒவ்வொரு இதழிலும் முன் வைக்கிறது.

ராஜமார்த்தாண்டன் என்ற எழுத்தாளரின் படைப்பு தாண்டிய அவரது முகத்தையும் அகத்தையும் நம் முன்னே திறந்துவைத்தன அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்.

ஈழப் பிரச்சினையில் இந்திய, தமிழக அரசுகள் மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் துரோக நடவடிக்கைகளைத் தோலுரித்துக்காட்டும் கட்டுரைகள் காயமடைந்த மனத்துக்கு ஒத்தடம் தருபவையாக அமைந்தன. சில கட்டுரையாளர்கள் அல்லது எதிர்வினையாளர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பிரபாகரனுக்கெதிரான ரசாயன ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். உலகநாடுகள் மற்றும் ஐ.நா.மன்றத்தின் மயான அமைதிக்கிடையே இந்திய, சீன, பாகிஸ்தானிய அரசுகள் இலங்கை இனவெறி அரசுடன் கைகோத்து நடத்திய தமிழர்களுக்கெதிரான கோரத் தாக்குதலைத் தங்களது பலவீனமான சொற்களை அடுக்கிப் பல்லிளித்து மறைக்க முயல்கின்றனர். பிரபாகரனைத் தெய்வமாகக் காட்டவும் வேண்டாம். இப்படி இழிவுபடுத்திச் சிறுமைப்படுத்தி இரண்டாம் ராஜபக்சேவாக வெளிப்படுத்தவும் வேண்டாம். தவறுகள் எங்குதான் நடைபெறவில்லை? தவறுகளே நடக்காத உலகப் புரட்சி எதையாவது சுட்டிக் காட்ட முடியுமா இவர்களால்?. தவறுகள் நடைபெற்றதாலேயே அவை புரட்சிகளே அல்ல என வரலாற்றால் ஒதுக்கித்தள்ள முடியுமா? எதுவும் எப்போதும் முடிந்துவிடுவதில்லை. இலங்கையில் சொரணையுள்ள தமிழனின் கடைசித் துடிப்பு அடங்கும்வரை விடுதலைக்கான குரல் எழும்பிக் கொண்டுதானிருக்கும்.

ஹெச். ஜி. ரசூலின் புத்தகம் படிக்கக் கிடைக்கவில்லையெனினும் இஸ்லாமிற்குள் வினா எழுப்பி, தன் நேர்மையை நிலைநாட்ட முயல்கிறார் அவர். ஜமாத்தின் சவுக்கடிகளுக்குப் பயந்து தனது சொல்லாடலை ஒருவித எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவரது எழுத்திற்கான நெருக்கடியே.

எந்த மாற்றுக் கருத்தையும் ஏற்றுக்கொள்ளாத இறுகி, கெட்டித் தட்டிப்போன இஸ்லாம் மதம் தற்போது அடிப்படைவாதிகளால் பாசிஸ முகம் பொருத்தி வருகிறது. குர்ஆனையும் நபி மொழிகளையும் விளக்கும்போது நூறு நூறு வேற்றுமைகளை வெளிப்படுத்திச் சுக்கு நூறாக உடையும் இந்த அடிப் படைவாதிகள் மதத்திற்குள்ளான ஜனநாயகக் குரலை நசுக்குவதில் மட்டும் ஆச்சரியமான ஒற்று மையை நிலைநாட்டுகிறார்கள். பெண்களை அடக்குவதிலும் அடிமைப்படுத்துவதிலும் இவர்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது. மதத்திற்குள் உருவாகும் சிக்கல்களுக்கு மதத்திற்கு வெளியேயும் மதத்திற்கு வெளியே உருவாகும் சமூகச் சிக்கல்களுக்கு மதத்திற்குள்ளேயும் தீர்வுகள் தேடித் தோற்றுப் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான் இந்த மத பாசிஸம். ஹிரா குகைக்குள் நெடிய காலம் தவமிருந்து வெளிப்பட்ட நபிகள் நாயகத்தின் ஞானக் குரலை அந்த அலை வரிசைக்குச் சென்றவர்களால்தான் விளங்கிக்கொள்ள முடியும். அப்படிப் புரிந்துகொண்டவர்கள்தாம் சூஃபி ஞானிகள். குர்ஆனின் மறுவாசிப்பையும் இந்த அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ரசூல் சுட்டிக்காட்டுவது மிகச் சரியானதே.

அன்வர் ஷாஜி
போத்தனூர்

தமிழ்ச் சமூக கலை இலக்கியச் சூழலில் முக்கியப் படைப்பாளிகளையும் கலை ஆளுமைகளையும் கலையுலகம் இழந்து வருவது பெரும் துக்ககரமான நிகழ்வு. மேலும் அரசுப் பணியாற்றிவிட்டு பணி நிறைவுக்குப் பின் படைப்பிலக்கியத்தில் பரபரப்புகளோடு எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ராஜமார்த்தாண்டன் தான் பணியாற்றிய பத்திரிகையில் ஓய்வு ஊதியம் பெற முயன்றும் தன் மரணம்வரை பெறவில்லை என்பது பெரிதும் வேதனையான விஷயம். கவிஞர், ஓவியர், நாடகாசிரியர், ஆய்வாளர், பெண்ணியவாதி, பதிப்பாளர் எனப் பல்துறை ஆளுமைகளுக்கு ஒரே இதழில் அஞ்சலிக் கட்டுரைகள் எழுத நேர்ந்துள்ளது தமிழ்ப் படைப்புலகுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டம். தன் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளைப் படைப்பாக மாற்றுவதும் சமூகத்தில் நிலவும் நெருக்கடிகளைத் தன் படைப்புக்குள் கொண்டுவந்து படைப்புகளில், தங்களது வடிவங்களில் மிகக் கச்சிதமாகச் செய்தவர்கள் இவர்கள் அனைவரும். மேலும் ராஜமார்த்தாண்டனின் கவிதைகளும் கமலாதாஸின் கவிதைகளும் செறிவான கவிதைகள். ஆர்ட் டைரக்டர் ராஜசேகரின் ஓவியமும் உமாபதி ஓவியமும் நன்று. பக்கம் எழுபத்திரண்டில் பதிவுகள் பகுதியில் இடம் பெற்றிருக்கும் எனது ஓவியத்தில் ந. செந்தில்வேல் என இருக்க வேண்டும் ஆனால் ந. சக்திவேல் என இருக்கிறது என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

ந. செந்தில்வேல்
சங்கரன்கோவில்

ந. செந்தில்வேல் பெயர் கவனக் குறைவு காரணமாக ந. சக்திவேல் என இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.

- பொறுப்பாசிரியர்

ஓவியக் கலைஞர் அமரர் ஆதிமூலம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி!

அனைவரின் இதயத்திலும் உள் ஒளிர்ந்த மாணிக்கமான ஓவியக் கலைஞர் ஆதிமூலம் அவர்களின் பிரிவால் வாடும் கலை ஆசான் சந்தான ராஜ் ஆகிய நான் இங்கு வந்து சொல்லக்கூடிய காரியங்கள் இரங்கல், அனுதாபம் இவைகளை உங்கள் முன்பு பங்கெடுத்துக்கொள்வதாக மட்டும் அல்ல; நான் ஆசிரியராக ஓவியக்கலை கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் திரு. ஆதிமூலத்தை ஒரு மாணவனாகக் கண்டேன். தன்னைத்தானே அறிந்துகொள்ளாத மாணவர்கள் அருகில் சென்று அவர்களுக்கு ஒத்தாசை செய்வது மட்டுமே என் கடமையாகக் கொண்டவன். அதை நான் உணர்ந்து என்னை விரும்பாத மாணவர்களையும் நான் மிக்க ஊக்குவிக்கும் தன்மையைச் சொல்லால் மட்டும் அல்ல; அதைச் செய்து காண்பிக்கும் தன்மையும் கொண்டவன். சில மாணவர்கள் அப்படியல்ல. அவர்களுக்குள்ளாகவே ஆத்மீக சக்தியுள்ள தன்மை இருப்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். இந்த ஆத்மீக சக்தியுள்ள மாணவர்களில் மிகச் சிறந்தவர்களில் ஆதிமூலம் தன் பெயருக்கு ஏற்றாற்போல் படைப்புவின் அடிப்படைக் களஞ்சியமாக இருப்பதை ஆதிமூலத்திடம் கண்டு மிக்க சந்தோஷப்படும் வாய்ப்பு இருந்தது. சில வேளைகளில் இந்த பூலோகம் அதன் மேல்தளம் தன்னைத்தானே இயங்கிக்கொள்ளும்; அனேகம் நட்சத்திரங்கள் பிரகாசித்துக்கொண்டு வருவதையும் நான் அறிவேன். குறிப்பாக வான சாஸ்திரத்தில் அவ்வப்போது பூமியில் கீழே விழும் நட்சத்திரங்களைப் போல் இருப்பதும் உண்மை. அதை நாம் அனைவரும் அறிவோம். அதையே ஒரு உதாரணமாக எடுத்து திரு. ஆதிமூலம் சிறந்தோங்கி தன்னை இந்தப் பூமியில் அர்ப் பணித்தார் என்பதே என்னுடைய பரிபூர்ண நம்பிக்கை. இதை இந்த இரங்கல் கூட்டத்தில் பங்கெடுத்துத் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்த குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து ஓவியக்கலை நம் பாரத நாட்டிலும் உலகம் முழுவதிலும் கலை உலகம் நிலைத்திருக்கும்வரை திரு. ஆதிமூலம் பெயர் நிலைத்திருக்கும்.

சந்தான ராஜ்
கல்லூரி முதல்வர் (ஓய்வு)
நாள்: 26.1.08 சனிக்கிழமை
கலைதொழில் கல்லூரி
சென்னை - 3

கடந்த 26.01.2008 அன்று சென்னையில் ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்காகக் காலச்சுவடு நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட இக்குறிப்பு ஆதிமூலம், சந்தான ராஜ் ஆகிய இருவரையும் நினைவுகூரும் விதத்தில் இங்கே பிரசுரமாகிறது.

உள்ளடக்கம்