|
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பெருகி வருவதன் எதிரொலியாகத்
தமிழக அரசு சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும்
குரல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு ஆசிரியர்-மாணவர் அமைப்புகளும் அறிவுத்
துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 2006 செப்டம்பரில் தமிழக அரசு
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில்
ஒன்பது உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. 2007அக்டோபரில் தன் அறிக்கையை அரசிடம்
சமர்ப்பித்த குழு தற்போதைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென
அரசுக்குப் பரிந்துரை செய்தது. அறிவுத் துறையினர், கல்வி ஆர்வலர்கள்,
ஆசிரியர்-மாணவர் அமைப்புகள் எனப் பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்ற, தமிழக அரசின்
இந்த நடவடிக்கை கல்வியில் அடிப்படையான மாற்றங்களுக்கு வித்திடும் என
எதிர்பார்க்கப்பட்டது. கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறைகொண்ட பல்வேறு அமைப்புகள்
முத்துக்குமரன் குழுவுக்குப் பல ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கின. ஒரு ஜனநாயக,
சமத்துவ, மதச் சார்பற்ற முற்போக்கான மனித சமூகத்தை உருவாக்குவதே கல்விமுறையின்
தலையாய நோக்கமாக இருத்தல் வேண்டுமெனவும் அதற்கேற்ப அரசின் கல்விக் கொள்கையில்
உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தம் யோசனைகளை முன்வைத்த அறிவுத் துறையினர்
தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் அவற்றுக்கான காரணங்களையும்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
நம் அரசியல் சாசனத்தின் 21ஆம் பிரிவு கல்வி கற்கும் உரிமையை அடிப்படை உரிமைகளில்
ஒன்றாக உறுதிப்படுத்தியிருக்கும்போதிலும் அனைவருக்கும் தரமான, இலவசக் கல்வி
வழங்குவது என்பது நிறை வேற்றப்பட முடியாத கனவாகவே இன்றுவரையிலும் நீடித்து வருகிறது.
ஆரம்பக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை மலிந்து காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும்
வேறுபாடுகளும் சமூக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்துவருவதைப் பலரும்
சுட்டிக்காட்டியுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில்
மாநிலக் கல்விக் கழகப் பாடத்திட்டம், மத்தியக் கல்விக் கழகப் பாடத்திட்டம்,
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், அவற்றுக்கானத் தனித் தனி
இயக்ககங்கள் எனப் பல்வகைக் கல்வி அமைப்புகளும் வாரியங்களும் செயல்பட்டு வருவதே
கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் அது வணிகமயமாக்கப்பட்டதற்கும் அடிப்படைக்
காரணம். இதனால் அதிகமும் பாதிப்புக்குள்ளாவது கல்வியை விலைகொடுத்து வாங்க முடியாத
நலிந்த பிரிவினரே.
தரமான கட்டமைப்பு வசதிகளோ உரிய தகுதிபெற்ற ஆசிரியர்களோ இல்லாத போதிலுங்கூடப்
பெற்றோர் தம் குழந்தைகள் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்பதையே விரும்புகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவற்றில் கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருப்பதும் ஆங்கிலம் வேலை
வாய்ப்புக்கும் உயர் கல்விக்கும் இன்றியமையாத ஒன்று என்னும் பெற்றோரின்
நம்பிக்கையுமே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை யதார்த்தமாக இருப்பது மற்றொரு
காரணம். சமச்சீர் கல்விமுறை பற்றிய விவாதங்களில் இந்த யதார்த்தம்
கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டால் தான் நமது கல்விமுறையில் தீவிரமான மாற்றங்கள்
சாத்தியமாகும். முதலாவதாக ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்விவரை தரமான
தாய்மொழிக் கல்வி அளிப்பதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அது அனைவருக்கும்
இலவசமாகக் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தாய்மொழிக் கல்வியின் தரத்தை
உயர்த்தாமல் ஆங்கில வழிக் கல்விக்குள்ள சந்தை மதிப்பைக் குறைக்க முடியாது.
பெற்றோரின் ஆதரவு காரணமாகவே ஆங்கிலப் பள்ளிகளால் தாய்மொழிக் கல்விக்கெதிரான ஒரு
வெளியை உருவாக்க முடிகிறது. பலவகையான கல்விமுறைகளும் பாடத்திட்டங்களும்
ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் சீரான ஒரே பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதே
கல்வியாளர்களின் கோரிக்கை.
முத்துக்குமரன் தலைமையிலான குழு பொதுவான ஒரு நிர்வாக அமைப்பைப்
பரிந்துரைத்திருக்கிறது; பொதுவான பாடத்திட்டத்தையோ பொதுப் பள்ளியையோ
பரிந்துரைக்கவில்லை. அரசும் அந்தத் திசையில் சிந்திக்காமல் மாணவர் சேர்க்கையில்
நன்கொடை வசூலிப்பதற்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதே போதுமானது என்பது போல்
நடந்துகொள்கிறது. மழலையர் கல்வியை அரசு தன் முழுக் கட்டுப்பாட்டில்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்தும் என்பதற்கான
எந்தவொரு தடயமும் தென்படவில்லை. மழலையர் கல்வி நூறு சதவீதமும் தனியார் கல்வி
நிறுவனங்களின்-இவர்களில் கணிசமானவர்களைக் கல்விக் கொள்ளையர்கள் என்றே விவரிக்க
முடியும்-கைகளில் இருக்கிறது.
அரசியல் அதிகார மட்டங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள கல்விக் கொள்ளையர்களிடமிருந்து
அதை மீட்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கும் எனத் தோன்றவில்லை. குழந்தைகளின் உடல்,
மன ஆரோக்கியம் குறித்த அக்கறையோ புரிதலோ அற்ற மழலையர் பள்ளிகள் குழந்தைகளின்
இயல்பான ஆளுமை வளர்ச்சியைச் சிதைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கான மாணவர்களை உருவாக்கித்
தரும் பட்டறைகளாகச் சுருங்கிப் போயிருக்கின்றன. அரசு நடத்தும் அங்கன்வாடி, பால்வாடி
பள்ளிகளின் நிலையோ படுமோசம். போதிய பயிற்சியோ கல்வித் தகுதியோ பெற்றிராத
ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில் மழலையர் கல்விக்கான உபகரணங்களோ
உள் கட்டமைப்பு வசதிகளோ குறைந்தபட்சமாகக்கூடச் செய்துகொடுக்கப்படுவதில்லை.
கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டுவரும் சர்வ சிக்ஸ அபியான் (எஸ்எஸ்ஏ)
திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கருத்தாளர் பயிற்சிகளின் தரம்
குறித்து நிறையச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எஸ்எஸ்ஏ திட்டத்தின் மூலம் அரசுப்
பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பது உண்மை என்றாலும் அது
கற்பித்தலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் போதுமானவையாக இல்லை. கற்றல், கற்பித்தல்
குறித்த கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்காமல் இத்தகைய பயிற்சிகளால்
பெரும் பயன் விளையும் எனச் சொல்ல முடியாது. தேர்ச்சி விழுக்காட்டை
அடிப்படையாகக்கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மதிப்பிடப்படும் நிலை
நீடிக்கும்வரை ஆசிரியர்கள் மாணவர்களை அதிக மதிப்பெண் பெறுவதற்குத் தூண்டும் வகையில்
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் செய்வதையே தம் கற்பித்தல் முறையாகக்
கொண்டிருப்பார்கள். மழலையர் வகுப்புகளுக்குத் தேர்வு முறையை அறவே ஒழிப்பது,
தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வை முற்றாக ஒழித்து வாய்மொழித் தேர்வை
நடத்துவது போன்ற பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது தொடர்புடைய
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல்-கற்றல் சார்ந்த பதற்றங்கள் தணிய
வாய்ப்பிருக்கிறது. எனினும் இந்த நடைமுறை காரணமாக உயர் கல்வியை எதிர்கொள்வதில்
மாணவர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளும்
இதனுடன் சேர்த்து ஆராயப்பட வேண்டும்.
சமச்சீர் கல்வி என்னும் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்துவது பொதுப் பள்ளி என்னும்
கருத்தாக்கத்துடன் நேரடியான தொடர்புடையது என்பதால் அந்த நோக்கில் மாற்றங்கள்
முன்னெடுக்கப்படாதவரையில் இது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. 12ஆம்
வகுப்புவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியைப் பொதுப் பள்ளி மூலம்
வழங்குவது தவிர, கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாக வேறு சுருக்கு வழிகள்
இல்லை.
கல்வி, தனியாரின் கொள்ளை முயற்சிகளுக்கான கருவியாய் இருக்கக் கூடாது என்னும் நிலையை
அரசு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து அதற்குள் உருவாக்க வேண்டும். சிறுபான்மையினரால்
நடத்தப்படும் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் அரசு இட
ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் நலிந்த பிரிவினருக்கு அப்பள்ளிகளில் முழுமையான
இலவசக் கல்வி பெறுவதற்கும் அரசு கடுமையான சட்டங்களை இயற்றிக் கண்காணிக்க வேண்டும்.
உரிய கல்வித் தகுதியுள்ள ஆசிரியர்களை முறையான ஊதியத்தில், போதிய எண்ணிக்கையில்
நியமிக்க வேண்டும்.
அரசியல் சட்டம் வலியுறுத்துவது போல் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும் கற்பித்தல்
முறைகளும் கற்பவருக்குச் சுமையாய் இருக்கும் நிலையை மாற்றி, கல்வியை மகிழ்வூட்டும்
ஒன்றாக மாற்றுவதற்கு உரிய சூழலை அரசு உருவாக்க வேண்டும். கல்வி தொண்டு
நிறுவனங்களின் சேவை அல்ல, அது குடி மக்களின் அடிப்படை உரிமை என்பதைக்
கருத்தில்கொண்டு செயல்பட வேண்டியதே இன்றைய தேவை. |