|
எம்.எஸ். 80
காலச்சுவடை மீண்டும் துவங்கப் போகிறேன் என்பதை 1994இல் உறுதியாக அப்பாவிடம்
தெரிவித்ததும் அவர் சட்டபூர்வமாக அதை என் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். இதழின்
துவக்கப் பணிகள் நடந்த காலகட்டங்களில் அவர் அதிகம் ஆலோசனைகள் வழங்கியதாக நினைவில்
இல்லை. ஆனாலும் அவர் என்னை அழைத்துச் சொன்ன ஒரு முக்கியமான விஷயம், எம்.எஸ். ஐ நான்
அழைத்துப் பேச வேண்டும் என்பது. அதன்படி எம்.எஸ்.ஐச் சந்தித்து காலச்சுவடு
திட்டத்தைச் சொன்னேன். ஆண்டு 1994 மாதம் ஜூலை அல்லது ஆகஸ்டாக இருக்கலாம்.
அன்றிலிருந்து இன்றுவரை எம்.எஸ். காலச்சுவடு அலுவலகத்தில் தடம் பதிக்காத நாட்கள்
குறைவு. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஓர் உறவு, அதிலும் அன்றாடம் சந்திக்கும் உறவு, பிசிறில்லாமல் 15 ஆண்டுகள் தொடர்வது
அரிது. இந்த உறவின் தொடர்ச்சி பலருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
எனக்குத் தெரியும். சிலருக்கு இருக்கவில்லை என்பதும் தெரியும்.
காலச்சுவடின் எழுத்துரு, வடிவ மைப்பு, அழகியல், மொழி, நடை, எடிட்டிங், கடிதங்கள்,
விளம்பரம், சந்தாப் பட்டியல், முகவரிப் பட்டியல் எனப் பல தளங்களில் எம்.எஸ்.ன்
பங்களிப்பு அழுத்தமாக உண்டு. யோசனையாகத் தன் கருத்துகளை என்னிடம் முன்வைப்பார். என்
உள்ளுணர்வுக்கு ஏற்பச் சில சமயங்களில் அவற்றை நான் மீறும்போது அவர் மனம்
வருந்தியதில்லை.
ஆனால் எம்.எஸ். காலச்சுவடின் இன்றியமையாத பகுதி. இது காலச்சுவடின் செயல்பாட்டை
அறிந்த வாசகர்களுக்கு உலகளாவிய அளவில் தெரியும். அவர் வருகையை, பங்களிப்பை, நாங்கள்
விரும்புவது இயல்பு.
எம்.எஸ். இந்த உறவை இத்தனை ஆண்டுகள் தொடர்வதற்கு என்ன காரணம் என்று இப்போது
முதல்முறையாக யோசித்துப் பார்க்கிறேன். பொருள் சார்ந்த எதிர்பார்ப்பு அவரிடம்
இல்லை. அங்கீகாரம் நெருங்கிய வட்டத்திற்கு வெளியில் விரிவதை அவர் விரும்புவதில்லை.
கொடுக்கல் வாங்கல் இல்லாத உறவு. இன்று அவர் நண்பர் சு.ரா.வும் இல்லை. என் மனதில்
ஒரே ஒரு காரணம் மட்டுமே தென்படுகிறது. அவர் வாழ்வின் அடிநாதம் சுதந்திரம் என்ற சொல்.
போராடிப் பெறும் சுதந்திரம் அல்ல. திரைக்குப் பின்னால் பணிசெய்ய, இளைப்பாற,
பயணிக்க, இதமான உறவுகளைப் பேண அவசியமான சுதந்திரம். இந்த சுதந்திரம் இயல்பாகக்
காலச்சுவடில் அவருக்கு அமைந்தது. காலச்சுவடின் பார்வை, சார்புகள், விருப்பு
வெறுப்புகள், நட்புகள், முறிவுகள் எதிலும் எம்.எஸ்.ஐ நாங்கள் ஈடுபடுத்தியதில்லை.
காலச்சுவடு அலுவலகத்தில், கணினியில் தமிழின் சுமார் அரை டஜன் பதிப்பகங்களுக்கும்
இதழ்களுக்கும் எம்.எஸ். செய்ய விரும்பும் பங்களிப்புப் பணி நடந்து கொண்டிருக்கும்.
கூச்சமோ தயக்கமோ கண்காணிப்போ இன்றி இவற்றை மேற்கொள்ள காலச்சுவடில் அவருக்கான
இடம் எப்போதும் உண்டு. இந்த சுதந்திரம் பலருக்கு ஏற்படுத்திய குறுகுறுப்பில்
எம்.எஸ். எங்கள் உறவினரா என்ற கேள்வி நாகர்கோவிலிலேயே பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது.
எம்.எஸ். பற்றிய மூன்று புதிர்களைப் பகிர்ந்துகொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.
1. இளம் பெண்களைக் கவர்வதில் அவருக்கு இருக்கும் ஆற்றல். அதை இனி நான் அறிந்து பயன்
இல்லை. என் மகன் சாரங்கனுக்கும் இன்னும் சில இளைஞர்களுக்கும் இந்த வித்தையை அவர்
கற்றுத்தர வேண்டும்.
2. காலச்சுவடு அலுவலகத்திற்கு முதலில் வந்தபோது அவர் வயது 65. அன்று அறுபது வயது
நிறைந்த ஆரோக்கியமான உற்சாகமான மனிதராகத் தென்பட்டார். அதில் வியப்பில்லை. 15
ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட என் புகைப் படங்களைப் பார்க்க நான் விரும்புவது
இல்லை. காரணம் கடந்த காலத்தை நினைத்துப் பெருமூச்சுகள்விட எனக்கு விருப்பமில்லை.
ஆனால் என்னுடைய இந்த விருப்பமின்மையைச் சாடையாகக்கூட மைதிலியிடம் நான் சொன்னதில்லை.
இருந்தும் என் கல்லூரிக் காலப் புகைப்படம் ஒன்றை Blow - up செய்து வீட்டின் ஒரு
ஹாலில் அவள் வைத்திருப்பது தாம்பத்திய உறவின் மர்மங்களில் ஒன்று. வீட்டுக்கு வரும்
நண்பர்கள் அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து ‘அது நீங்களா?’ என்று கூவுகிறார்கள்.
எம்.எஸ். அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார்.
3. வீட்டின் முன் வாசல் கண்ணில்படுமாறு மேசையைப் போட்டபடி 15 ஆண்டுகளாகத் தினமும்
காலை முதல் மாலை வரை காலச்சுவடு பணியில் இருக்கிறேன். இன்றுவரை எம்.எஸ்.
அலுவலகத்திற்குள் வருவதை நான் பார்த்ததில்லை. மாலையில் திரும்புவதையும்
பார்த்ததில்லை. எம்.எஸ். இருக்கிறாரா என்று அலுவலகப் பெண்களைக் கேட்டால் இன்றுவரை
‘ஆம்’ என்றோ, ‘இல்லை’யென்றோ ‘அவர் வெளியில் செல்வதைப் பார்த்தேன்’ என்றோ அல்லது
‘இங்கே இருக்கிறார்’ என்றோ உடனடியாகப் பதில் வந்தது இல்லை. தேடுவார்கள்.
எம்.எஸ்.இன் பையையும் செருப்பையும். இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவு இந்தப்
புறச்சான்றுகளின் அடிப்படையிலேயே தினமும் எடுக்கப்படுகிறது. ஆக எம்.எஸ்.
அலுவலகத்திற்கு வருவதுமில்லை போவதுமில்லை. தோன்றுகிறார், மறைகிறார். இந்த
ரகசியத்தையும் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். எனக்குக் கற்றுத்தராவிட்டாலும்
போகட்டும். அமைதியாக வந்துபோகும் கலையை நெய்தல் கிருஷ்ணனுக்கு அவர் அவசியம்
கற்றுத்தர வேண்டும்.
எம்.எஸ். இடமிருந்து டாவின்சியையும் திணறடிக்கும் மர்மப் புன்னகையைத் தவிர எந்த
ரகசியமும் வெளிவரப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
எம்.எஸ்.க்கு 80வயது நிறைவடைந்திருக்கிறது. காலச்சுவடுக்கும் அவருக்குமான உறவு
முடிவில்லாத ஒரு பயணம்.
(‘மீண்டும் காகங்கள்’ 15.05.09 அன்று நடத்திய ‘எம்.எஸ். 80’ நிகழ்ச்சியில் பேசியது.)
நேர்கொண்ட எதிர்வினை
‘வாசகர் வட்டம்’ லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (1925 - 2009) அவர்கள் மரணமடைந்த அன்று (ஜூன்
12) சென்னையிலிருந்தேன். நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தோன்றியது.
தேவிபாரதியும் செல்லப்பாவும் நானும் சென்றிருந்தோம். தமிழின் முன்னோடிப்
பதிப்பாளர். அற்புதமான பல நூல்களை வெளியிட்ட, பதிப்பாளர் - எழுத்தாளர் உறவுக்கு
இலக்கணமாகத் திகழ்ந்த பதிப்பகம் ‘வாசகர் வட்டம்’. எடிட்டிங், எழுத்தாளருடன்
ஒப்பந்தம், சிறந்த மொழிபெயர்ப்புகள், நல்ல அச்சும் அமைப்பும், ‘அக்கரை இலக்கியம்’
போன்ற உலகத் தமிழ் அடையாளத்திற்கு வித்திட்ட நூல்கள் எனப் பல சிறப்புகள்.
‘வாசகர் வட்டம்’ வெளியிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ நான் பதின்களிலேயே படித்த
புத்தகம். அந்த ஒரு நூலுக்கு மட்டும் காப்புரிமை ‘வாசகர் வட்டம்’ கையிலிருந்தது.
பிற நூல்களுக்குக் காப்புரிமை எழுத்தாளருடையவை எனக் குறிப்பு வெளியிடும் நேர்மையும்
‘வாசகர் வட்ட’த்திற்கு இருந்தது. காவேரி நூலை மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்பது
சில ஆண்டுகள் ஆசை. அதுவரை கேட்டவர்கள் அனைவருக்கும் அவர்கள் அனுமதி
மறுத்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே அடுத்த முறை சு.ரா. சென்னை
செல்லும்போது அழைத்துச் சென்று திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் அனுமதிபெற
வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. பிறகு திட்டமிட்டு திட்டமிட்டுச்
செயல்படுத்தாமல் முடங்கிக் கிடந்ததில் பொறுமை இழந்து இரண்டாண்டுகளுக்கு முன்னர்
எழுத்தாளர் சா. கந்தசாமியுடன் சென்று அவர்களைப் பார்த்தேன். மாலை நாலரைக்கு என்று
நேரம் குறித்திருந்தோம். முன்வராந்தாவில் கணவர் கிருஷ்ண மூர்த்தியுடன்
அமர்ந்திருந்தார் திருமதி லக்ஷ்மி.
அவரைப் பார்க்கும் முன்னரே சில விஷயங்களை ஊகித்திருந்தேன். அவர்களுக்குத் தமிழ்ப்
பதிப்புலகத்தின் சமகாலச் செயல்பாடுகள் பற்றிய கவனம் இருக்க வாய்ப்பில்லை என்பது.
நான் நினைத்தது போலவே ‘காலச்சுவடு’ பெயர் அவர் மனதில் பதிந்திருந்தது ‘தி
இந்து’வில் வந்த நூல் விமர்சனங்களின் வழிதான். இன்னொன்று ‘நடந்தாய் வாழி காவேரி’
நூலை அவர்கள் மறுபிரசுரம் செய்ய அனுமதி மறுத்து வருவதற்குக் காரணம் ‘வாசகர் வட்டம்’
போலக் கவனத்துடன் தரமாகப் பதிப்பிக்க யாரும் இல்லை என்ற அவர்கள் எண்ணம். எனவே
கைவசம் காலச்சுவடு வெளியிட்ட ‘சித்திர பாரதி’ ஒரு பிரதி வைத்திருந்தேன்.
சா.க. நாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார். திருமதி லக்ஷ்மி அவர்தான் முடிவுசெய்ய
வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சுட்டிக்காட்டினார். அவர் மௌனமாக
இருந்தார். நான் ‘சித்திர பாரதி’ நூலை எடுத்து நீட்டினேன். மெதுவாகப் புரட்டிப்
பார்த்த பின்னரும் அவர் மௌனம் கலையவில்லை. சா.க. சில செய்திகளை எடுத்துச்
சொல்லிக்கொண்டிருந்தார். மறுத்துவிடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது.
‘குடுங்கோ! சுந்தர ராமசாமி பையனுக்கு அந்த கௌரவம் கிடைக்கட்டுமே!’ என்று ஓங்கி ஒரு
போடுபோட்டார் லக்ஷ்மி அவர்கள். ‘சரி’ என்றார் திரு. கிருஷ்ணமூர்த்தி மென்மையாக.
‘வாசகர் வட்டம் பற்றிய தகவல்கள் கிடைக்குமா?’ என்று கேட்டேன். எழுந்து ஒரு பறவையைப்
போலத் தத்தித் தத்தி ஆனால் வேகமாக நடக்கத் துவங்கினார். வீட்டிற்குள்ளே என்னை
அழைத்துச் சென்று ‘வாசகர் வட்டம்’ பற்றிய சிறு அறிமுக அறிக்கை ஒன்றைக் கொடுத்தார்.
அது ஆங்கிலத்தில் இருந்தது. அவரது உரையாடலும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருந்தது.
“1967இல் காமராஜர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகர்கோவில் வந்தபோது ‘சுந்தர
விலாச’த்திற்கு வந்திருக்கேன். தோசையும் தொட்டுக்க தேனும் கிடைக்குமே! சரிதானா?”
என்றார்.
“என்னுடைய தந்தையார் (காங்கிரஸ் தலைவர் எஸ். சத்திய மூர்த்தி) என்னை ஒரு மகனைப்
போல வளர்த்தார். பயம் என்பதே தெரியாமல். 13 வயதில் குதிரையேற்றம் பயின்றேன்”
என்றார் ஆங்கிலத்தில். பின்னர் “I am out of touch with the outside world, I am
now confined to the limitations of my existence” என்றது சங்கடம் தருவதாக இருந்தது.
அடுத்த ஆண்டும் மீண்டும் சா.க.வுடன் ‘நடந்தாய் வாழி காவேரி’ ‘காலச்சுவடு’ பதிப்பை
எடுத்துச் சென்றேன். அவர்களுக்குப் பூரண நிறைவு. எனக்குள் இருந்த பெரும் பதற்றம்
தணிந்து ஆசுவாசம் அடைந்தேன்.
மூன்றாவது முறையாக அந்த வீட்டிற்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது வாசலிலேயே
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நின்றுகொண்டிருந்தார். 94 வயது. என்னை
அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றேன். ‘தெரியும்’ என்றதும் வெட்கமாக இருந்தது.
ஒவ்வொரு முறை புதிய நண்பர்களை மீண்டும் பார்க்கும்போது பேந்தப் பேந்த முழிப்பது
என் வழக்கம்.
‘வாசகர் வட்டம்’ காங்கிரஸ் மனோபாவம் கொண்ட, அதிகமும் தமிழ்ப்பற்றுக்கொண்ட
பிராமணர்களை உள்ளடக்கிய வட்டமாக இருந்திருக்க வேண்டும். தி.மு.க.வின் எழுச்சிக்கும்
பிராமணர்கள் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் என்று அதனுடன் எழுந்த குற்றச் சாட்டிற்கும்
விழிப்புணர்வுகொண்ட ஒரு சபையின் நேர்கொண்ட எதிர்வினை என ‘வாசகர் வட்ட’த்தைப்
பார்க்கலாம். தமிழ்ப் பண்பாட்டிலுள்ள முரண்பாடுகளும் எதிர்வினைகளும் இதைப் போல
ஆழமான பங்களிப்பை முன்வைப்பவையாக இருக்கும்போது பண்பாடு வளம் பெறுகிறது;
வக்கிரமானவையாக வெளிப்படும்போது சீரழிகிறது.
“முற்றிலும் எதிர்பாராத மரணம்” என்றார் திரு. கிருஷ்ணமூர்த்தி. அவரது
சுயகட்டுப்பாட்டையும் மீறி கண் கலங்கிக்கொண்டேயிருந்தது. 83 வயதுவரை வாழ்ந்த
லக்ஷ்மி அவர்கள் நிறை வாழ்வு வாழ்ந்திருப்பதாக நமக்குத் தோன்றலாம். ஆனால் மரணம்
எப்போதுமே நெருக்கமானவர்களுக்கு எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை போலும்.
கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகாலத் துணைவியை இழப்பது எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்
பார்க்க முடியவில்லை.
பூபதி பிள்ளைத் தமிழ்
மதுரையில் ஜூன் 27, 28 தேதிகளில் நடைபெற்ற இருநாள் கருத்தரங்கில் 1½ நாட்கள் கலந்து
கொண்டுவிட்டுத் திரும்பிய பின்னர் கருத்தரங்கில் கண்ட, கேள்வியுற்ற நிறைகளையும்
அதிகமும் குறைகளையும் பூபதியுடன் பகிர்ந்துகொண்ட நாட்களில் திடீரென்று பூபதி
பிள்ளைத் தமிழ் ஒலிக்கத் துவங்கியது. பூபதி நல்லவர், வல்லவர், புரவலர். . . வாழிய
வாழிய வாழியவே!
எங்கள் இதயத் தொட்டில்கொள்
எழிலே, தாலோ தாலேலோ!
அவர் செயல்பாட்டின் நிறைகளுக்கு அவரே பொறுப்பு; குறைகளுக்குச் சுற்றியுள்ளவர்களின்
சூழ்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் என்கிறது பிள்ளைத் தமிழ். கிட்டத்தட்ட
எம்.ஜி.ஆர்.மாதிரி.
ஐந்தாண்டுகளாக அறிந்திருந்தும் இந்த மாணிக்கத்தின் பரிணாமங்களை அறியாமல் போனோமே!
வாயில் கையை வைத்தாலும் கடிக்கத் தெரியாத பிள்ளை உள்ளம் என் புண்களுக்குத்
தெரியவில்லையே! என்றெல்லாம் இப்போது அரற்றிக்கொண்டிருக்கிறேன்.
தமிழ் நவீன இலக்கிய உலகில் செயல்படும் உயர் அதிகாரிகள் கையில் ஒரு குச்சியும்
டெட்டாலில் முக்கிய டவலும் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. யாராவது நீவிவிடத்
துவங்கும்போது கைமுட்டியில் குச்சியில் சுளீரென்று ஒன்று போட வேண்டும். ரூ. 500
கொடுத்தால் நல்ல மசாஜ் தொழில்ரீதியாகச் செய்யப்படுகிறதே; அதுபோதும். முகத்தில்
நக்கும்போது துடைத்துக்கொள்ள டெட்டால் டவல். அந்தரங்கமான உறுப்புகளையும்
சீழ்வடியும் புண்களையும் நக்கிக்கொண்டே பிறர் முகத்தையும் நக்குவது கெடுதியானது.
மேலும் ஆடு, மாடு, கோழி, பன்றிக் காய்ச்சல் எல்லாம் மனுஷனிடம்
தொற்றிக்கொண்டுவிட்ட கலியுகம் இது. விழுந்து நக்குபவர்களால் இறுதியில்
கடிக்காமலும் இருக்க முடியாது. அரச அதிகாரம் முன்பு விழுந்து கிடப்பதும் குழைவதும்
இளிப்பதும் சொறிந்துவிடுவதும் பிரமை. ஓய்வுபெறும் தினத்தன்று கலையும் பிரமை.
உணர்ச்சிப் பெருக்கு
ஒருவரின் வெளிப்பாட்டில் ஈரமும் உணர்ச்சியும் வெளிப்பட்டவுடனேயே மூளையில்
சந்தேகத்தின் மின்னல் வெட்டத் துவங்கிவிடுகிறது. இவ்வாறு ஆகியிருக்கக் கூடாது. சக
மனிதனிடம் இருந்து வெளிப்படும் ஈரமும் உணர்ச்சியுமே வாழ்வுக்கு நம்பிக்கை அளிக்கும்
ஆதாரமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போனதற்குத் தமிழில் கடந்த நூற்றாண்டில்
உருவான மேடைக் கலாச் சாரமும் வெகுஜன எழுத்தும் சினிமாவுமே காரணம் என்று நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் உணர்ச்சிப் பெருகத் துவங்கியதுமே எங்கே துளை போட்டு ஆன்மாவை ஜேப்படி
அடிக்கப் போகிறார்களோ என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்குகிறது. எழுத்தில் ஈரம்
பசையைப் போல ஒழுகி பக்கங்களைத் தொடவே பிசுக்கென்றிருக்கும்போதும், வாழ்வில்
எழுத்தாளரின் அகம் சுயநலத்தில் வறண்ட பாலையைப் போல இருக்கிறது.
தமிழ் உணர்ச்சிப் பெருக் கெடுப்பில் எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகள், கவிதைகள்போல்
என் நெஞ்சைக் கல்லாக்குபவை எவையும் இல்லை. ‘செத்தாரைச் சாவார் சுமந்து’ என்று
உரித்து வைத்த மரபா இது? ஆனால் அச்சில் வந்த அஞ்சலிக் கட்டுரைகளில்
ராஜமார்த்தாண்டனுக்கு அமைந்தவை சிறப்பானவை. போலித்தனத்தின் சாயைகூடப் படியாதவை.
தினமணி கதிரில் (14.06.09) யூமா. வாசுகி எழுதிய ‘மேன்மை பளிச்சிடாத எளிமை’ ஒரு
பக்கக் கட்டுரையைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். உணர்ச்சிக் கொந்தளிப்பில்
நத்தையின் தடம்போல ஈரத்தை இழையவிட்டு எழுதப்பட்ட கட்டுரை. எந்த மின்னல்வெட்டும்
இல்லாமல் படிக்க முடிந்தது. மார்த்தாண்டனின் இன்னொரு முகத்தைப் பலருக்குக்
காட்டியது. அம்முகத்தை இனி அறிய முடியாத ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.
|