|
புகழ்வாய்ந்த படைப்பாளியான தாங்கள் (தங்கள் படைப்புகளைப் பிற இதழ்கள்
வெளியிடக்காத்துக் கொண்டிருக்கும் சூழலில்) ஓர் இலக்கியச் சிற்றிதழ் நடத்த வேண்டிய
அவசியம் என்ன?
புகழ் வாய்ந்த படைப்பாளி என்று என்னைக் கூற முடியுமா என்பது தெரியவில்லை. நான்
பெற்றிருக்கும் வாசகப் பரப்பை, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றிருக்கும் வாசகப்
பரப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள். என் படைப்புகளைப் பிற இதழ்கள் வெளியிடக்
காத்துக்கொண்டிருக்கும் சூழல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆழமான
கருத்தாக்கங்களுக்குப் புகழ்பெற்ற இதழ்கள் இடம் தருவதில்லை. சிற்றிதழுக்கு வெளியே
இன்றும் பொருட்படுத்தத் தகுந்த கட்டுரைகள் ‘தினமணி’ நாளிதழ் - தலையங்கப்
பக்கங்களில் - மட்டுமே வெளிவருகின்றன. ஆழமான படைப்புகளுக்கு இடம் உருவாக்க வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் ‘காலச்சுவடு’ சிற்றிதழை ஆரம்பித்தேன்.
‘காலச்சுவடு’ இதழ் வாயிலாகத் தாங்கள் சாதிக்க நினைத்தவை என்ன? அவற்றைச்
சாதித்தீர்களா?
‘காலச்சுவடு’ இதழ் வாயிலாகச் சாதிக்க நினைத்தவற்றைப் பற்றிக் ‘காலச்சுவடு’ முதல்
இதழ் தலையங்கத்தில் விரிவாகக் கூறியிருக்கிறேன். அவற்றைச் சாதித்து முடித்தேன் என்று
கூற முடியாது. ஒரு சில பணிகளைச் செய்ய முடிந்தது என்று நினைக்கிறேன். பெரும்
பகுதியைச் செய்ய இயலவில்லை.
ஓர் இலக்கியச் சிற்றிதழ் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக் கிறீர்கள்? உங்கள்
இதழ் எதிர்பார்ப் பினைப் பூர்த்தி செய்ததா? அல்லது நீங்கள் நினைத்ததற்கு மாறான
வடிவம் கொண்டதா?
சமத்துவமான சிந்தனை, அச் சிந்தனை அமலாகும் சமூகச் சூழலை உருவாக்குதல், ஆழமான
சிந்தனைகளும் படைப்புகளும் சமூகத்தில் தோன்றவும் பரவவும் வழிவகை செய்தல் போன்றவை
ஒரு இலக்கியச் சிற்றிதழின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டியவை. என்
எதிர்பார்ப்பை என் இதழ் ஓரளவு பூர்த்தி செய்தது. என் மனதிலிருந்த வடிவத்திற்கு
மாறான வடிவத்தைக் ‘காலச்சுவடு’ கொண்டதாக நான் நினைக்கவில்லை.
‘காலச்சுவடு’ இதழில் படைப்பாளி கள் ஒரு சிலர் மட்டுமே பெரும்பாலும் திரும்பத்
திரும்ப எழுதி இருக்கிறார் கள். இதனால் ‘காலச்சுவடு’ம் சிற்றி தழுக்கே உரிய குழு
மனப்பான்மை யைக் கொண்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. இதுபற்றித் தங்கள் கருத்து
யாது?
சிற்றிதழின் இயக்கத்தில் பங்கு பெற விரும்பும் படைப்பாளிகளின் எண்ணிக்கை மிகக்
குறைவு. எல்லாச் சிற்றிதழ்களிலும் ஒரு சில படைப்பாளிகள்தான் மீண்டும் மீண்டும்
எழுதியிருக்கிறார்கள். ‘காலச்சுவடு’க்கு எழுதும் குழு ஒன்று இருந்தது. குழு
மனப்பான்மை இருந்த உணர்வு எனக்கு இல்லை.
நீங்கள் நடத்திய ‘காலச்சுவடு’ இதழ்களில் கவிதைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம்
சிறுகதைகளுக்குத் தரப்படவில்லை என்று கருதுகிறேன். ஏன் அவ்வாறு அமைந்தது?
‘காலச்சுவடு’க்குச் சிறுகதைகள் மிகக் குறைவாகத்தான் வந்தன. அவற்றிலிருந்து
ஒருசிலவற்றைத் தேர்வு செய்து வெளியிட்டேன்.
ஓர் இதழ் தவிரப் பிறவற்றில் வாசகர் கடிதங்கள் வெளியிடப்படவில்லை, காரணம் என்ன?
‘காலச்சுவடு’க்கு வந்த கடிதங்கள் அதிகமும் சம்பிரதாயமாக இருந்தன. அவற்றை
வெளியிடுவதில் பயனில்லை என்று நினைத்தேன். வாசகர் கடிதத்திற்கு மதிப்புத் தரும்
வகையில் அடையாளபூர்வமாக ஒரு இதழில் மட்டும் நிறையக் கடிதங்களை வெளியிட்டு
முடித்துக்கொண்டேன்.
தங்கள் இதழ்களில் வந்துள்ள படைப்புகளை என்ன அடிப்படைகள் கொண்டு
தேர்ந்தெடுத்தீர்கள்?
ஒரு சிந்தனையையோ அல்லது அனுபவத்தையோ எடுத்துக்கொண்ட வடிவம் சார்ந்து ஆழமாகவும்
கலைப்பாங்கு குலையாமலும் உருவாக்கப்பட்ட படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டேன்.
‘காலச்சுவ’டில் மொழி, பிறப்பு, தத்துவம், சமயம், கட்சிகள், குழுக்கள், நிறுவனங்கள்
ஆகியவற்றின் குறுகிய படிகளை முற்றாக விடுவித்துக்கொள்ளும் (இதழ் 1) என்று
கூறியுள்ளீர்கள். இது சாத்தியமாகக் கூடியதா? மேலும் நீங்களே அறிவித்ததற்கு மாறாக
மார்க்சியச் சிந்தனையாளரான எம்.என்.ராயின் படைப்புகள், அவர் பற்றிய கட்டுரைகளை
அதிகம் வெளியிட்டுள்ளீர்கள். இதற்குக் காரணம் என்ன?
சாத்தியமாகக் கூடியதோ இல்லையோ இதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்க
வேண்டுமென்று விரும்புகிறேன். இக்கருத்துகள் சமூக முன்னேற்றத்திற்கு ஜீவாதாரமானவை.
எம்.என். ராயின் படைப்புகளை அதிகம் வெளியிட்டேன் என்பதைவிட அவருக்காக ஒரு இதழை
ஒதுக்கி அந்த இதழில் அவர் எழுத்துக்களை நிறைய வெளியிட்டேன் என்று சொல்லலாம்.
‘காலச்சுவடு’வின் நடை கடுமையானதென்று பலர் கருதுகிறார்கள். இத்தன்மை இதழை ஒரு சிறு
குழுவிற்குள்ளேயே நிறுத்திவிடும் எனத் தாங்கள் கருதவில்லையா?
‘காலச்சுவ’டின் நடை ஒரு சில வாகர்களுக்குக் கடுமையாகப்பட்டிருக்கலாம்.
படைப்பாளிகளுடன் விவாதிக்க நேரும்போது, இயன்றவரையிலும் எளிமையாகவும் தெளிவாகவும்
படைப்புகள் அமைய வேண்டும் என்ற வாசக விருப்பத்தைத் தொடர்ந்து அவர்களிடம்
சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். இதை எனக்கு நானே கூறிக்கொண்டு என்னை
எளிமைப்படுத்திக்கொள்ளவும் முயன்றிருக்கிறேன்.
இதழ் நடத்தும்போது தாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன?
படைப்புகள் பரிசீலனை செய்யப்படுவதைப் பெரும்பாலன சிற்றிதழ்ப் படைப்பாளிகளே
விரும்புவதில்லை. அவர்களின் பெயர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து அவற்றை
அச்சேற்றிவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். படைப்புக்கு மட்டுமே
முக்கியத்துவம் தந்து அவற்றைப் பரிசீலனை செய்யும்போது ஒரு சிலவற்றை ஏற்க முடியாமல்
போகிறது. ஏற்க இயலாது போகிறவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இதழோடு ஒத்துழைக்க
மறுத்து விரோதபாவம் கொள்கிறார்கள். நான் எதிர்கொண்ட சிரமங்களில் மிக
முக்கியமானது இதுதான்.
‘நடை’, ‘அன்னம் விடு தூது’ போன்ற சிற்றிதழ்கள் பொருளாதாரச் சுமையைவிடத் தரமான
படைப்புகள் கிடைக்காததனால் நின்றுவிட்டன என்று கூறியுள்ளனர். ‘காலச்சுவடு’க்குத்
தரமான படைப்புகள் கிடைப்பதில் சிரமம் இருந்ததா?
‘காலச்சுவடு’க்கு நல்ல படைப்புகள் கிடைப்பதில் சிரமம் இருந்தது என்று சொல்ல
முடியாது. ஆனால் அதிக அளவுக்குச் சிறந்த படைப்புகள் கிடைக்கவுமில்லை.
‘காலச்சுவடு’ புதிய தரமான இலக் கிய வாசகர்களைப் பெற்றுத் தந்ததா? புதிய
படைப்பாளிகளை உருவாக்கியதா?
புதிய தரமான வாசகர்களின் தோற்றத்தை அளவிட என்னிடம் வழிமுறைகள் எதுவும் இல்லை.
புதிய படைப்பாளிகளைச் சிற்றிதழ்களால் உருவாக்க முடியுமா? உருவாகிவரும் படைப்பாளிகள்
சிற்றிதழ்கள் மூலம் ஊக்கம் பெறுகிறார்கள். உறுதிப்படுகிறார்கள். இந்த அனுகூலங்கள்
சில படைப்பாளிகளுக்குக் ‘காலச்சுவடு’ மூலமும் கிடைத்தன.
ஏன் எட்டு இதழ்களோடு உங்கள் வெளியீட்டை நிறுத்திக்கொண்டீர்கள்?
எட்டு இதழும் ஒரு சிறப்பிதழும் (சுமார் 300 பக்கங்கள்) வெளியிட்டேன். குடும்பப்
பிரச்சினை. சில படைப்பாளிகளின் எதிர்கொள்ளலின் மூலம் பெற்ற அலுப்பு. அதிகம்
சாதிக்க முடியாததால் பெற்ற மனக்குறை எல்லாம் சேர்ந்து கொண்டன.
இலக்கியச் சிற்றிதழ் நடத்துவோருக் கும், இனி நடத்த விரும்புவோருக்கும் தாங்கள்
கூற விரும்பும் செய்தி யாது?
தனியாக விடுக்கச் செய்தி ஒன்றுமில்லை. சிற்றிதழ் துறையில் ஒவ்வொருவருமே அவருடைய
பார்வை சார்ந்து விட்டுக்கொடுக்காமல் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று
விரும்புகிறேன்.
20.09.1998
o
எம்.ஃபில். பட்டத்திற்காகப் பேராசிரியர் க. பூரணச்சந்திரனின் நெறியாள்கையின் கீழ்
‘சுந்தர ராமசாமியின் காலச்சுவடு’ இதழ்களை ஆய்வு செய்த இராஜா வரதராஜா, தனது
ஆய்வேட்டின் ஒரு பகுதியாக சுந்தர ராமசாமியுடன் நடத்திய நேர்காணல் இது. தற்போது
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழ் முதுகலை விரிவுரையாளராகப்
பணியாற்றிவரும் இராஜா வரதராஜா இந்த நேர்காணலை அனுப்பி உதவினார்.
|