|
இலக்கியம் வாழ்க்கையை வளப்படுத்தும். உறுதியான நம்பிக்கையும் தொடர்ந்த ஈடுபாடும்
அதனோடிருந்தால் உரிய அங்கீகாரத்தைத் தவறாது வழங்கும் என்பதற்கு, நவீனத்
தமிழிலக்கியத்தில் முத்திரை பதிக்கும் குமரி மாவட்ட படைப்புகளின் உந்து சக்தியாகவும்
கிரியா ஊக்கியாகவும் இருந்து வரும் எம்.எஸ். அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவுப்
பாராட்டுவிழா சான்றாக இருந்தது.
15.05.2009 அன்று மாலை, சுந்தர விலாஸ் மாடியில் காலச்சுவடும் நெய்தல் கிருஷ்ணனும்
ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு முதுபெரும் படைப்பாளி நீல. பத்மனாபன் தலைமை
தாங்கி தமது படைப்புக்குரிய நேர்மையான விமர்சனத்தை எம்.எஸ்.சிடமிருந்து பெற்றதை
நினைவுகூர்ந்தார். சார்பு நிலையற்றவர்; படைப்புகளை ஆழமாகவும் கவனமாகவும் பார்ப்பார்;
பொருள் பிழைகளை மனம் நோகா வண்ணம் சுட்டிக்காட்டுவார்; சாகித்திய அகாதமி விருது
பெற்ற படைப்புகள் உட்பட பல நூல்களைச் செம்மைப்படுத்திய எடிட்டர்; தம்மை ஒருபோதும்
விளம்பரப்படுத்தாதவர்; மனநிறைவுடன் இலக்கியப் பணியாற்றுபவர்; ஆயிரம் பிறைகள் கண்டவர்;
முழுநிலவு நாட்களில் குமரி கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்;
இலக்கியத்தையும் இயற்கையையும் ரசிப்பவர்; யோகி போல் வாழும் அவர் இன்னும் ஆயிரம்
பிறை காண வேண்டும் என வாழ்த்தினார்.
அரசு அலுவலகத்தில் அழுக்குப் படியாமல் பணியற்றியவர் எம்.எஸ். எனப் பொன்னீலன்
உரையைத் தொடங்கினார். வனமாலிகையின் ‘சதங்கை’ சிற்றிதழ் இலக்கியத் தரம் பெற உதவியவர்;
மிகப் பெரிய படிப்பாளி; நல்ல இலக்கியப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர்;
அவர் கைப்பட்ட கதையும் கவிதையும் அழகுடன் ஒளிரும்; தமது புத்தகங்கள் நேர்த்தியாக
வெளிவரப் படிதிருத்தித் தந்துள்ளார்; அன்றும் இன்றும் ஒரே உருவில் உள்ளார்;
வாழ்க்கையை இலக்கியத்தின் துணையுடன் நன்கு புரிந்தவர்; ஆரவாரமும் அலட்டலும் இல்லாமல்
வாழ்ந்து வரும் அவர் பல்லாண்டு வாழ்ந்து இலக்கிய ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டுமென
வாழ்த்தினார் பொன்னீலன்.
களியக்காவிளையில் நடைபெறும் நாடகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக்
கூறி எம்.எஸ்.ஸுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் திரைப்பட நடிகரும் நாடகக்
கலைஞருமான சண்முக ராஜா. அறுபதிலிருந்து எண்பதாண்டு விழா எடுக்கும் நிலைக்கு
‘நெய்தல்’ வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
‘நவசக்தி’ படிக்க நாகர்கோவில் வரும்போது எம்.எஸ்ஸின் அறிமுகம் கிடைத்தது எனக்
கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டன் தமது உரையைப் படிக்கத் தொடங்கினார்.
இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எம்.எஸ். உதவியுள்ளார். ‘சதங்கை’
பத்திரிகையின் அனைத்துப் பணிகளையும் அவர் செய்துள்ளார். காகங்கள் கூட்டத்திலும்
அவருடைய பங்களிப்பு இருந்தது. தற்போது ‘காலச்சுவடு’ பதிப்பு நூல்களைச்
செம்மையாக்கம் செய்து வரும் எம்.எஸ். தமது கருத்துகளை மேன்மையாக வெளிப்படுத்துவார்.
எம்.எஸ். யாரிடமும் தமது கருத்துகளைத் திணிப்பதில்லை. பலதரப்பட்ட நூல்களை வாசிப்பார்.
அவரது நூல் ஆர்வம் இன்றும் குறையவில்லை. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களைப்
படித்துக் கருத்துகளைத் தெரிவிக்கும் முதல் வாசகராக இருந்திருக்கிறார். மலையாளம்,
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆளுமையுள்ளவர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
அவர் ஒரு கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது. ‘கணையாழி’, ‘சதங்கை’ பத்திரிகைகளில்
அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன எனக் கூறியதோடு எம்.எஸ்.ஸின் ஒரு கவிதையையும்
படித்தார். அவருக்கு முதுமையில்லை எனக் கூறி தமது உரையை முடித்தார்.
பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருக்குக் குறிப்பறிந்து உதவி செய்ய ஒரு
செட்டியார் நண்பர் எப்போதும் உடனிருப்பார் என்று வ.ரா. தமது நூலில்
குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே சு.ரா.விற்கு நண்பராக எம்.எஸ். இருந்தார் என
வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாள் கூறினார். சு.ரா. வீட்டில் நிகழும் இலக்கிய
விவாதங்களில் எம்.எஸ். இருப்பார். ஆண்டுகள் குறித்தோ ஆசிரியர் பெயர் குறித்தோ
சந்தேகம் வரும்போது எம்.எஸ். பக்கம் சு.ரா. திரும்புவார். அதற்குரிய பதிலை மட்டும்
ஒரு சில சொற்களில் அவர் கூறுவார். அளவாகவே பேசுவார். உணவிலும் கட்டுப்பாடு உண்டு.
தமது அடையாளம் சு.ரா.வின் நண்பர் என்றிருக்க வேண்டும் எனக் கருதுவார். காகங்கள்
முதல் கூட்டத்தின் முடிவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நாஞ்சில் நாடன் நாவல்
குறித்த தமது விமரிசனக் கட்டுரையைப் படித்தார். ‘காலச்சுவடு’ முதல் இதழின்
உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘ஒரு மாதிரி இதழ்’ தயாரித்து
அளித்தார். செயல் திறன் மிக்கவர் என்று அ.கா. பெருமாள் தமது பாராட்டுரையை
நிறைவுசெய்தார்.
எம்.எஸ். சிறந்த மொழிபெயர்ப்பாளர். வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களைத் தருவதில் அவருக்கு நிகராக யாருமில்லை எனத் தெரிசனங்கோப்பு ஆயுர்வேத
மருத்து வரும் சுமார் 14 ஆயுர்வேத நூல்களைத் தமிழில் பதிப்பித்தவருமான டாக்டர்
மகாதேவன் கூறினார். தமது நூல்கள் தமிழக அரசால் பாராட்டப்பட்டவை உண்மையில்
அப்பாராட்டுக்கு உரியவர் எம்.எஸ். என்றார். ‘ஆறு தரிசனங்கள்’ என்ற நூலுக்கும் ஏனைய
நூல்களுக்கும் அவரது உதவியால் தாம் பாராட்டுப் பெற்றுள்ளதாகக் கூறினார். அவர்
எங்கும் நடந்தே செல்வார். நாஞ்சில் நாடன் அவரைக் குறிப்பிடும்போது ‘நோய்களை
அண்டவிடாதவர்’ என்பார். எம்.எஸ். மென்மையாகப் பேசுபவர். அவரது தேவைகள் குறைவு.
அவற்றையும் சுலபத்தில் நம்மிடம் கூறமாட்டார். புதை பொருள் ஆய்வு மேற்கொள்ள வேண்டி
வரும். வேதத்தில் போகி, ரோகி, யோகி என வகைப்படுத்தியுள்ளனர். அவர் போகியுமல்ல
ரோகியும் அல்ல. தலைமையுரையில் நீல. பத்மநாபன் குறிப்பிட்டதுபோல் அவர் ஒரு யோகியே
என்று கூறி அவர் பல்லாண்டு வாழ வேண்டுமென மருத்துவர் மகாதேவன் வாழ்த்தினார்.
நட்பையும் உறவையும் ஏற்படுத்துவது எளிது. தொடர்ந்து பேணுவது கடினம். 1994இல்
‘காலச்சுவடு’ மீண்டும் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து எம்.எஸ். தமது உறவைப்
பேணி வருகிறார் என்று கூறி ‘காலச்சுவடு’ கண்ணன் தமது உரையைத் துவங்கினார்.
‘காலச்சுவடு’ இதழ் வளர்ச்சியில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளது. செம்மையாக்கம்,
மெய்ப்புத் திருத்துவது என்பதில் தொடங்கி பணியாளர்களுக்குப் பயிற்சியளித்து
அவர்களைத் திறமைசாலிகளாக்கும் பணிகளை அவர் செய்து வருகிறார். அவரது கருத்துகளை
ஏற்றுக் கொள்ளாத நிலையில்கூடக் கோபமோ வருத்தமோ அவரிடம் இருக்காது. பெரிய
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ‘காலச்சுவடு’ இதழ் பணிகளைச் செய்து வருகிறார்.
சுதந்திர உணர்வோடு அவர் இங்கே இலக்கியப் பணியாற்றுகிறார். அவர் எங்கள் உறவினரா
எனப் பலர் கேட்டதுண்டு. அவர் வருவதும் போவதும் மர்மமாகவே இருக்கும். எம்.எஸ். ஸின்
இன்னொரு சிறப்பு அவர்மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அவரைத் தங்கள்
நம்பிக்கைக்கு உரியவராகவும் பாது காவலராகவும் பெண்கள் கருதுகின்றனர். “கடந்தகால
நிகழ்வுகளை நான் போற்றுவதில்லை. எனது கல்லூரி நாள் புகைப்படங்களைப் பார்ப்போர்
‘அவரா இவர்’ என உருவ வடிவ மாற்றம் கண்டு வியப்பதுண்டு. எம்.எஸ். என்றும் ஒரே
வடிவில் உள்ளார். அமைதியாக வந்து போகும் அவர் வாழ்வும் அமைதியாகவுள்ளது. அவரது
அமைதிக் கலை என்னை வியக்க வைக்கிறது” என்று கண்ணன் தமது உரையை முடித்தார்.
கண்ணன் குடும்பத்தார் எம்.எஸ்ஸுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். அதைத் தொடர்ந்து
அரங்கிலிருந்த பலர் அவருக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர். நிறைவாக எம்.எஸ்.
ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பேசிய பலர் அவரது இளமைக் காலத்தைப் பற்றிக்
கூறாததால் அதைத் தெரிவித்தார்.
திருப்பதிசாரம் என்னும் சிற்றூரில் இலக்கிய வாசனையுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த
தனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் வாசிப்பில் ஈடுபட்டதாகக் கூறினார். சாதாரணக்
குடும்பத்தில் பிறந்த அவருக்கு மேற் படிப்பு படிக்க வாய்ப்பில்லாததால் தட்டச்சராக
அரசு பணியில் சேர்ந்து திருவனந்தபுரம், சென்னை, நாகர்கோவில் ஆகிய அலுவலகங்களில்
பணியாற்றியதாகக் கூறினார். நிம்மதியான வாழ்வே பெரிது; பணம் முக்கியமல்ல எனக்
கருதியதால் பதவி உயர்வு பற்றிக் கவலைப்படாமல் ஒரே பதவியில் ஒரே ஊரில் ஓய்வுபெறும்
வரை பணியாற்றியதாக தெரிவித்தார். இலக்கிய ஆர்வத்திற்கு அலுவலகப் பணி இடையூறாக
இருக்கும்போது அரசு பணிக்குப் பாதகம் வராதபடி மாற்று ஏற்பாடுகளைச் செய்ததாகக்
கூறினார். ‘சதங்கை’ சிற்றிதழில் வாசகர் பேட்டியில் இலக்கியம், எழுத்து, படைப்பாளி
குறித்துத் தாம் கூறிய கருத்துகளைப் பாராட்டி ஒரு தபால் அட்டை வந்தது. அதை
எழுதியவர் சு.ரா. பின்னர் இருவரும் சந்தித்தோம். இலக்கியம் எங்களை இணைத்தது என்று
சு.ரா.வுடனான அறிமுகத்தைக் கூறினார். அந்தச் சந்திப்பு தமது வாழ்க்கைக்கு ஒரு பெரிய
திருப்புமுனையாக அமைந்தது என்றார். தாம் எழுதாததால் பல எழுத்தாளர்கள் தமக்கு
நண்பராக இருக்கின்றனர் போலும் என்றார். தம்மைப் பாராட்டிப் பேசிய நீல.பத்மநாபன்,
அ.கா. பெருமாள், ராஜமார்த்தாண்டன், கண்ணன் ஆகியோருக்கும் நண்பர்களுக்கும் நன்றி
தெரிவித்தார். விழா அமைப்பாளர் நெய்தல் கிருஷ்ணனுக்கு நன்றி கூறும்போது கிருஷ்ணன்
தம்மோடு இருக்கும்போது தமக்கு யானை பலம் இருப்பதுபோல் உணர்வதாகக் கூறினார்.
இறுதியில் அவர் எழுதிய கவிதையைப் படித்தார். இளமையையும் முதுமையையும் குறித்த
அக்கவிதை விழாவிற்குப் பொருத்தமானதாக இருந்தது. |