Google   www kalachuvadu.com

பதிவுகள்: ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் 14.6.2009 இக்சா மையம், சென்னை
அவருடன் இருந்த தருணங்கள்
பெ. பாலசுப்ரமணியன்

தமிழில் குறிப்பிடத்தகுந்த கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டனை நினைவுகூரும் விதமாக ஜூன் 14, 2009 அன்று சென்னையிலுள்ள இக்சா புத்தக வளாக மையத்தில் மாலை 5.30 மணிக்குக் காலச்சுவடு சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தாளர் சா. கந்தசாமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன், மரணம் மார்த்தாண்டனைத் தன்வசப்படுத்திய கடைசித் தருணத்தை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார்.

வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி பேசும்போது, ராஜமார்த்தாண்டன் ‘சின்னக் கபாலி’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளதைக் கூறினார். தனக்கும் மார்த்தாண்டனுக்குமான உறவு வலுவடைந்தது புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுக்கும்போதுதான் என்றார். புதுமைப்பித்தனின் வெளிவராத படைப்புகளைத் தொகுக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தபொழுது தினமணியின் பழைய கோப்புகளிலிருந்து புதுமைப்பித்தன் தொடர்பான படைப்புகளை சுமார் 60,70 பக்கங்கள் வரை படியெடுத்துக் கொடுத்தவர் ராஜமார்த்தாண்டன் என்பதையும் அவர் புதுமைப்பித்தன் மீதும் அவரது படைப்புகள் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் படைப்புகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டியதுடன் அன்னை இட்ட தீ தொகுப்புக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்த மார்த்தாண்டன், அ. மார்க்ஸ் எழுப்பிய அவதூறுகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்துள்ளார், அகந்தை இல்லாதவர், நிதானத்துடன் செயல்படுபவர், மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிக்காட்டாதவர் எனப் பலவற்றையும் குறிப்பிட்டார் சலபதி. தன்னுடன் மார்த்தாண்டன் உரையாடும் போதெல்லாம் பெரும்பாலும் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றியே அதிகம் பேசியும் விவாதித்தும் இருக்கிறார். அவர் வாழ்ந்தபோதே தான் பதிப்பிக்கும் நூல்களை அவருக்குக் காணிக்கையாக்க விரும்பியதாகவும் அதை நிறைவேற்ற இயலாமையால் அடுத்து வரவிருக்கும் புதுமைப்பித்தன் தொகுதிகளை ராஜமார்த்தாண்டனின் காணிக்கைக்குப் பதிலாக அவரது நினைவாகச் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் சலபதி.

அடுத்ததாகப் பேசிய பத்திரிகையாளர் பாண்டியராஜன், 80களின் தொடக்கத்தில் ராஜமார்த்தாண்டனுடன் பணியாற்றிய அனுபவம் இனிமையானதென்றார். தன்னை ஒருபோதும் மார்த்தாண்டன் முன்னிறுத்திக் கொண்டது கிடையாது என்றார். இளம் பத்திரிகையாளர்களுக்கு மார்த்தாண்டன் தங்கியிருந்த நாகராஜ் மேன்சன்தான் அடைக்கலம் அளித்ததென்றும் நினைவுகூர்ந்த பாண்டியராஜன், கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இலங்கைப் பிரச்சினையில் பெரிதும் பாதிப்படைந்து அதைப் பற்றியே தன்னிடம் அதிகம் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

கவிஞர் கடற்கரய், தன் நினைவுக் குறிப்பில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சினேகா மாடியில் தான் தங்கியிருந்தபோது எதிர்ப்புறம் இருந்த ‘தமிழினி’ அலுவலகத்தில் யூமா. வாசுகியும் ராஜமார்த்தாண்டனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த சம்பவங்களையும் அப்போது மாரிமுத்து வாயிலாக அவரது அறிமுகம் தனக்குக் கிடைத்ததையும் விவரித்தார். மொழியில் அக்கறையும் தமிழ் மரபைப் போற்றியவருமான மார்த்தாண்டன், பாலியல் பிரச்சினை - குடி ஆகியவற்றில் பொது மதிப்பீடு கொண்டிருந்ததாகவே கூற முடியுமெனவும் பெரிய தர்க்கத்துக்கும் விவாதத்துக்கும் அதிகம் வராதவர் எனவும் குறிப்பிட்டார். 2009 புத்தகக் காட்சியின்போது திரைப்படங்கள் குறித்துத் தன்னிடம் அதிகம் பேசியதாகக் குறிப்பிட்ட கடற்கரய், அவர் கடைசியாக எழுதிய சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை நூல் பற்றிய ஒரு மதிப்புரைகூட வராதது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளித்ததாகவும் அது காலச்சுவடில் வெளிவருவது சரியல்ல, ஒரு விமர்சனக் கூட்டத்துக்காவது ஏற்பாடு செய்திருந்திருக்கலாம் என்றும் அவர் ஆதங்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார். சமீப காலமாகத் தன்னிடம் பேசும்போது கவிதைகள் சார்ந்து அதிகம் உரையாடாமல் இருந்தாலும் ‘தீராநதி’, அதில் இடம்பெறும் நேர்காணல்கள் குறித்து அதிகம் விவாதித்துள்ள மார்த்தாண்டன் ‘உதிரியான ஓர் இலக்கியவாதி’யாகவே இருந்துள்ளார் எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எழுத்தாளர் சா. கந்தசாமி பேசும்போது, ‘கொல்லிப்பாவை’ இதழ் மூலம் மார்த்தாண்டனின் அறிமுகம் தனக்குக் கிடைத்ததாகவும் தினமணியில் பணியாற்றிய அவரது அனுபவம் பிரமிக்கவைத்தாகவும் தெரிவித்தார். ஓர் ஆசிரியராகப் பணியாற்ற விரும்பாமல் நவீன இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டு மெய்ப்புப் பணி, செம்மையாக்கம் ஆகியவற்றில் திறமையுடன் செயல் பட்டுவந்த அவரது மறைவு இலக்கிய உலகிற்கும் படைப்பாளிகளுக்கும் மாபெரும் இழப்பாகக் கருதுகிறேன் என்றார் கந்தசாமி. அவரது உரையோடு அஞ்சலிக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தின் இடையில் ஆர்.வி. ரமணி எடுத்த ராஜமார்த்தாண்டன் பற்றிய முப்பது நிமிட ஆவணப்படம் திரையிடப்பட்டது.

உள்ளடக்கம்