|
கவிஞர் ராஜமார்த்தாண்டனின் இறுதி யாத்திரை அவரது ஊரில் நடந்த அன்று (07.06.2009)
‘காலச்சுவடு’ம் நெய்தல் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம்
நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் மாலை 4.30க்கு நடந்தது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கவிஞர் கலாப்ரியா, “ராஜமார்த்தாண்டனைக் கடந்த
முப்பத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரியும். என் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாக
இருந்தால் அவருக்குச் சில பக்கங்கள் ஒதுக்குவேன். அவர் நடத்திய ‘கோகயம்’,
‘கொல்லிப்பாவை’ இரண்டு இதழ்களுக்கும் பெயர் வைத்தவர் பிரமிள். ராஜமார்த்தாண்டன்
கவிஞர், விமர்சகர் என்பதைவிடக் கவிதை வாசகர், கவிதைக்குத் தன்னை அர்ப்பணித்தவர்
என்று சொல்வது பொருத்தமானது. இலக்கிய வடிவங்களில் கவிதைதான் அவருக்குப்
பிடித்தமானது. அவர் சிறந்த கவிதைத் தேர்வாளர். அவரது ‘கொங்குதேர் வாழ்க்கை’
முக்கியமான தொகுப்பு” என்று கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலரும் பத்திரிகை ஆசிரியருமான கொடிக்கால் ஷேக்
அப்துல்லா கலாப்ரியாவை அடுத்துப் பேசினார். “1971இல் ‘சதங்கை’ பத்திரிகை ஆசிரியர்
வனமாலிகை எனக்கு ராஜமார்த்தாண்டனை அறிமுகப்படுத்தினார். அப்போது நான்
‘புதுமைத்தாய்’ என்ற பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகையில்
அவரை எழுத வைத்தேன். இதிலிருந்து எனக்கும் அவருக்கும் நட்பு தொடர்ந்தது. அண்மையில்
என்னைப் பற்றி வந்த தொகுப்பு ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையை நேற்று இரவுகூடப்
படித்தேன். அவரின் கடந்த ஆறு வருட வாழ்க்கை அமைதியாகச் சென்றதற்கு கண்ணன் ஒரு காரணம்”
என்றார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளரும் விமர்சகருமான ந. முருகேசபாண்டியன் “மார்த்தாண்டனை
எனக்கு இருபத்தைந்து ஆண்டு காலமாகத் தெரியும். தமிழில் சிறுபத்திரிகை ஜாம்பவான்கள்
என்று சொல்லுகின்ற ஆரம்பகால ஆட்களில் மார்த்தாண்டன் முக்கியமானவர். அவர் சிறு
பத்திரிகையை இயல்பாக நடத்தியவர். அண்ணாச்சி அழுத்தமான கருத்துகளை, வாழ்க்கை பற்றிய
பார்வைகளை மென்மையாகக் கூறும் குணம் படைத்தவர். அவரது இறுதிக் காலத்தில்
‘காலச்சுவடு’ அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது. இன்னும் அவர் நிறைய எழுதுவார் என்று
நினைத்தேன். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் அவரது இறப்பின் சோகத்தை இங்கு
பகிர்ந்துகொள்ளுகிறேன்” என்றார்.
கவிஞர் தேவேந்திரபூபதி பேசும்போது, “தமிழில் இன்று ராஜமார்த்தாண்டனின் இடம்
முக்கியமானது. அவரது அன்பு குழந்தைத்தனமானது. பிறருடைய மனம் புண்படக் கூடாது
என்பதில் கவனமாக இருப்பார். கோயம்புத்தூரில் ‘சுந்தர ராமசாமி எழுபத்தைந்து’ விழா
நடந்தபோது நான் பேசியதை அவர் மறுத்துப் பேசினார். அப்போது என் மனம் புண்படக்
கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இருபது நாட்களுக்கு முன்பு அவரை நான் மதுரையில்
சந்தித்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்றார்.
இலக்கிய ரசிகரும் மொழிபெயர்ப்பாளருமான எம்.எஸ், “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
ராஜமார்த்தாண்டன் என்னிடம் ‘எழுத்து’ப் பத்திரிகையைக் கேட்டு வந்த நாளிலிருந்து
அவருடன் பழக்கம். அவர் ‘காலச்சுவ’டில் பணியாற்ற வந்த பிறகு எனக்கும் அவருக்கும்
நெருக்கம் கூடியது. அவர் மெய்ப்புத் திருத்துவதில் மிகக் கவனம் எடுத்துக்கொண்டவர்.
மூலப்பனுவலைச் சரிபார்ப்பதிலும்கூடத் திறமையானவர். அவரிடமிருந்து சில விஷயங்களை நான்
கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரது மறைவு இலக்கிய அன்பர்களுக்கு இழப்பு என்று கூறுவேன்”
என்றார்.
அடுத்துப் பேசிய வாசகர் தங்கக்கண், “ராஜமார்த்தாண்டன் ஆய்வு மாணவராக இருக்கும்போது
அறிமுகமானார். மௌனியைப் படிக்கச் சொன்னது அவர்தான். அவரால் தீவிர இலக்கிய
வாசகனானேன்” என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் கணேசன், “மார்த்தாண்டன்
எளிமையானவர், ஆடம்பரமில்லாதவர், நினைவாற்றல் உடையவர். த.மு.எ.ச. சார்பில் என்
வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
திரைப்பட நடிகரும் நாடகக் கலைஞருமான சண்முக ராஜா பேசும்போது, நாகர்கோவில் இந்துக்
கல்லூரியில் நடைபெற்ற நாடகப் பயிலரங்கில் எனக்குப் பெரிய அளவில் அண்ணாச்சி உதவினார்.
‘புதிய பார்வை’ பத்திரிகையிலே என்னைப் பதிவுசெய்தார். சிறுபத்திரிகையாளர், தீவிர
இலக்கியப் படைப்பாளிகள் போன்றோர்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்
அவர்தான். அரசு ஊழியர் போலக் ‘காலச்சுவடு’ பத்திரிகைக்கு காலந்தவறாது வந்து
பணியாற்றினார்” என்று கூறினார்.
நாட்டுப்புற இயல் ஆய்வாளர் அ.கா. பெருமாள், “மார்த்தாண்டன் பாலக்காடு சித்தூர்
கல்லூரியில் எனக்கு ஓராண்டு ஜூனியராகப் படித்தார். என் அறையிலேயே மூன்று மாதம்
தங்கினார் என்றாலும் அவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது சுந்தர ராமசாமியின்
வீட்டிற்கு அவர் வந்த பிறகுதான். எனக்குத் தெரிந்து தருமு சிவராமு வசைபாடாத ஒரே
படைப்பாளி ராஜமார்த்தாண்டன்தான்” என்றார்.
எழுத்தாளர் ஜெயமோகன், “1986 இலிருந்து மார்த்தாண்டனை எனக்குத் தெரியும். சுமார் ஆறு
வருடத்திற்கு முன்பு பிழைக்கமாட்டார் என்ற நிலையில் முப்பது கிலோ எடையில் ஜெயசேகரன்
ஆஸ்பத்திரியில் அவரைச் சேர்த்தபோது நண்பர்கள் வருத்தப்பட்டுப் பேசியதை அறிவேன்.
அவரது சொந்த கிராமமும் மீன் சாப்பாடும் அவரை மறுபடியும் உயிரூட்டி ‘காலச்சுவ’டில்
பணியாற்ற வைத்தது. அவரின் இறுதிக்கால உழைப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் நிறைவான
வாழ்க்கைக்கும் ‘காலச்சுவ’டில் பணியாற்றியது ஒரு காரணம். மரணம் துயரமானது. அவரது
நினைவிற்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.
தொடர்ந்து கோபால கிருஷ்ணன், கிருஷ்ணன் என்னும் இரண்டு வாசகர்கள் தங்கள் அஞ்சலியைத்
தெரிவித்தார்கள்.
இறுதியாகப் பேச ஆரம்பித்த நெய்தல் கிருஷ்ணன் துக்கம் தாளாமல் பேச்சை ஆரம்பத்திலேயே
நிறுத்திவிட்டு, கூட்டம் இத்துடன் முடிந்தது என்று அறிவித்தார்.
|