Google   www kalachuvadu.com

மதிப்புரை
கவி, என்ன பாடினாலும் ...
க. மோகனரங்கன்

தனிமையின் வழி

சுகுமாரன்
பக்.: 144, விலை: ரூ. 85
முதல் பதிப்பு: ஆகஸ்டு 2007

காரண, காரிய விளக்கங்களைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் என்னை வசீகரித்த ஒரு சில கவிஞர்களில் சுகுமாரனும் ஒருவர். அவருடைய பல கவிதைகளுக்கு நான் வாசகன் என்பதைவிடவும் சற்றுக் கூடுதலாக ஒரு ரசிகன் எனக் கூறிக்கொள்ளவே விரும்புவேன். ஒரு கவிஞராக மட்டுமின்றி, மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் அவருடைய தேர்வுகளையும் மதிப்பீடுகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். இவை அனைத்திலுமே வெளிப்படும் அவரது நோக்கு, ரசனை என்பது எப்போதுமே எனது மனச்சாய்வுக்கு அணுக்கமாக இருந்திருக்கிறது.

‘தனிமையின் வழி’, ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’ ‘வெளிச்சம் தனிமையானது’ இம்மூன்றும் சமீபத்தில் வெளி வந்திருக்கும் சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்புகள். தனக்கு நெருக்கமான ஒருவரிடம் தன் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது எதிரில் இருப்பவரை முன்னிட்டுத் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல அமைந்துள்ள இக்கட்டுரைத் தொகுதிகள் அவற்றின் இந்தச் சன்னமான தொனி காரணமாகவே நமக்கு அந்தரங்கமான தொரு வாசிப்பனுபவத்தை வழங்குகின்றன. தன் பிம்பத்தைப் பெரிதுபடுத்திக் காட்டும் தன்முனைப்பு கட்டுரைகளில் எங்குமே காணப்படவில்லை. அவ்வாறு தன்னைக் குறித்துச் சொல்ல வேண்டிவரும் சில சந்தர்ப்பங்களிலும்கூட மிகுந்த அடக்கத்துடனேயே எழுதியிருப்பதைக் காண முடியும். இந்த அடக்கம் (அ) தயக்கம் என்பது அவருடைய தன்னம்பிக்கைக் குறைவு காரணமாக வருவதல்ல. மாறாக மனத்தின் நுண்ணுணர்வு காரணமாக உருவாகிவரும் இயல்பான கூச்சம் அது. இலக்கிய ஆக்கம் என்பது உற்பத்தியாகவும் வெளியீடு என்பது தொழிலாகவும் வாசகன் என்பவன் நுகர்வோனாகவும் மாறிவருகின்ற இன்றைய சூழலில், எழுத்தாளர்களிடையே அருகிவரும் பண்பாக இருப்பது இந்தக் கூச்சமும் நுண்ணுணர்வும்தான். ஆனால் சுகுமாரனின் இக்கட்டுரைத் தொகுப்புகளில் வாசகனிடத்தே எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்புணர்வும் எவ்விடத்திலும் குறைவுபடாமலிருப்பதைக் காண முடிகிறது. இதைத் தவிர ஒரு கவிஞனாக அவர் எழுதிய வரிகளை மேலதிகமாகப் புரிந்துகொள்ள அவருடைய இக்கட்டுரைகள் ஏதோ ஒரு வகையில் உதவுமா என்பதும் எனது அக்கறையாக இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு ஞானக்கூத்தன் ‘சுபமங்களா’ இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘கவியின் ஒரு வரிக்கு, வாசகன் தன் முழு மனதையுமே புரட்டிக் காட்டுகிறான்’ எனக் கூறியிருந்தார். நான் அதையே தலைகீழாக்கிப் பார்க்க விரும்புகிறேன். கவிஞன் தனது ஒரு வரிக்காகத் தனக்குள் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அவனது முழு மனம் எத்தன்மையதாக இருக்கும்? அதைக் குறிப்பாகவாவது உணர முடியுமா என்பதை அறியும் ஆவலிலேயே இத்தொகுப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். கடந்த ஆறேழு ஆண்டுகளில் சுகுமாரன் எழுதிப் பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் பிரசுரமான கட்டுரைகள், முன்னுரைகள், விமர்சனங்கள், நினைவுக் குறிப்புகள், அஞ்சலிகள் ஆகியவை தொகுக்கப்பட்டு இம்மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றை விஷய அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பகுத்துவிட முடியும்.

1. தமிழ் மற்றும் பிற இந்திய, அயல் மொழி இலக்கியவாதிகள், நூல் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்.

2. இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் பற்றிய தகவல்களும் மதிப்பீடுகளும் அடங்கிய கட்டுரைகள்.

3. சமகால சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகளாகப் பதிவுபெற்றிருக்கும் கட்டுரைகள்.

4. தன்னுடைய பிரத்யேக வாழ்வனுபவங்களை நினைவுகூரும் விதமாக எழுதப்பட்ட கட்டுரைகள்.

இழந்த பின்னும்
இருக்கும் உலகம்

பக்.: 176, விலை: ரூ. 100
முதல் பதிப்பு: டிசம்பர் 2008

இந்நான்கு வகைக் கட்டுரைகளிலுமே, நுட்பமான பார்வையும் சுய மதிப்பீடுகளும் ஆழமான ரசனையும் கொண்ட ஒரு பிரக்ஞை இழையோடியிருப்பதை உணர முடிகிறது. கட்டுரையாசிரியரே தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இலக்கிய அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் வடிவத்தைத் தொட்டுணர முயலும் ஆசை என்றும் இப்பிரக்ஞையைக் கூறலாம். இதன் காரணமாகவே இக் கட்டுரைகள் வெறும் உரைநடை என்பதற்கும் மேலான இலக்கியத் தகுதியைப் பெறுகின்றன.

இஎம்எஸ் என்னும் அரசியல் தலைவராகட்டும் மதுரை சோமு போன்ற இசைக் கலைஞராகட்டும் தாத்ரிக்குட்டி என்னும் வரலாற்றுக் கதாபாத்திரமாகட்டும் தாமினே மிலானி என்னும் திரைப்பட இயக்குநராகட்டும் யாரைப் பற்றி எழுதினாலும் குறைந்த சொற்களிலேயே அவர்களைப் பற்றிய உயிரோட்டமுள்ள ஒரு சித்திரத்தையும் அவர்களுடைய ஆளுமையைத் தொட்டு ஓரிரு வரிகளில் துல்லியமாகக் காட்டிவிடும் வித்தையும் கைவரப் பெற்றிருக்கிறார் சுகுமாரன்.

உதாரணமாக எம். டி. ராமநாதனைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் குரல் இனிமையில்லாதது. அந்த இனிமையின்மைதான் அவரது சங்கீதத்துக்கு ஒப்புநோக்க முடியாத வசீகரத்தைக் கொடுத்தது. அந்தக் குரலில் பண்படாத புராதன மனிதனின் விசும்பல் தேங்கியிருந்தது என்கிறார். ‘வி.டி.தலைமைக் குணம் நிரம்பியவர். ஆனால் அதிகாரி அல்ல. அவர் எழுதாமலிருந்தால் மலையாள இலக்கியத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிராது. ஆனால் சுதந்திரமான மனிதன் என்ற கனவு இல்லாமல் போயிருக்கும்’ இது வி.டி.பட்டத்திரிபாடு என்னும் மலையாளச் சமூகச் சீர்திருத்தவாதி குறித்த சித்திரம். அதேபோல் பஷீரின் எழுத்துக்களைப் பற்றி மதிப்பிட அவருடைய கதையிலிருந்தே ஒரு வரியை உருவியெடுக்கிறார் சுகுமாரன் ‘நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. வெடித்துச் சிரிக்கலாம். ஆனால் அழவும் தோன்றுகிறது’. இந்த வாசகத்தின் விரிவும் ஆழமும்தான் பஷீரின் எழுத்துக்கள் என்கிறார்.

சுந்தர ராமசாமி போன்று தமக்கு மூத்த தலைமுறையினராகட்டும் யூமா வாசுகி போன்ற தமக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவராகட்டும் இத்தொகுப்புகளில் பேசப்படும் அனைத்து இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் நெகிழ்வும் நட்புணர்வும் தொனிக்கப் பேசினாலும் அவர்களுடைய படைப்பைப் பற்றிய விமர்சனம் என்று வரும்போது தனக்கு மனத்தில்பட்டதைக் கறாராகச் சொல்லும் பிடிவாதத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு, விக்ரமாதித்தியன் மற்றும் ராஜமார்த்தாண்டன் ஆகிய இரு அண்ணாச்சிகளைப் பற்றிய சுகுமாரனின் மதிப்பீட்டைச் சுட்டலாம். தொடக்கத்தில் சுகுமாரனின் ஓரிரண்டு கவிதைகள் அச்சில் வெளிவந்த சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பொருட்படுத்தி இருவரும் எழுதியிருக்கிறார்கள். ‘ஓர் ஆரம்ப எழுத்தாளனாக இவர்கள் தந்த உத்வேகம்தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைத்திருக்கிறது’ என்று நன்றியுடன் நினைவுகூரும் சுகுமாரன், அதைத் தனது செயல்பாட்டின் ஒரு பகுதியாகப் பதிவுசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பிலேயே, விக்ரமாதித்தியனின் ‘சேகர் சைக்கிள் ஷாப்’ என்னும் கவிதைத் தொகுப்பிற்கும் ராஜமார்த் தாண்டனின் ‘சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை’ நூலுக்கும் முன்னுரை எழுதியதாகக் கூறுகிறார். ‘வந்து நிற்கிறான் விக்ரமாதித்தியன்’, ‘நுட்பம் தேடும் கையேடு’ என்னும் அவ்விரு முன்னுரைகளும் காய்தல் உவத்தல் இன்றி அவ்விருவரின் பங்களிப்பைத் துல்லியமாக மதிப்பிடுகின்றன.

“இதைவிடவும் எளிய வழியில் இவர்களுக்கு நன்றி பாராட்டலாம் ‘பாரதிக்குப் பின் நிகழ்ந்த கவிதை அற்புதம் விக்ரமாதித்தியன்’ என்றோ ‘க.நா.சுவுக்குப் பிறகு ராஜமார்த்தாண்டனை விட்டால் நாதியில்லை’ என்றோ எழுதி ஒப்பேற்றுவது எளிது. அதற்கு விரல்களில் நகம் வளர்ப்பது அவசியம். ஆரோக்கியக் காரணங்களை முன்னிட்டு நகம் வளர்ப்பதில்லை. எனவே, அந்த எளிய வாய்ப்பு எனக்கு இல்லாமல் போய்விட்டது” என்று எழுதுகிறார் சுகுமாரன். அவர் எழுத்துக்களில் பட்டுக் கூர்மையுடன் தெறிக்கும் எள்ளலுக்கு இக்கூற்று சிறிய உதாரணம்.

வாழ்க்கையில் நாம் கடந்துவந்த அவலமான, துயரம் தோய்ந்த, குற்றவுணர்வும் அவமானமும் கொண்ட தருணங்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள விரும்புவதில்லை. அத்தருணங்கள் தொலைவில் எங்கோ இறந்த காலத்தைச் சேர்ந்தவையாயினும் அவை நிகழ் காலத்திலும் தம் வலியைத் தக்கவைத்துக்கொள்பவையாக இருப்பதைக் காண்கிறோம். ஆயினும் ஒரு சுய அறிக்கையிடலாகவோ மனவெதும்பலாகவோ ஆற்றாமையாகவோ அத்தருணங்களை எழுத்தில் இறக்கிவைத்துவிடுவோமாயின் தமது அந்தரங்கத்தை இழந்துவிடுவதாலோ என்னவோ? அவை வாதைக்குப் பதிலாக ஒருவகை ஆறுதலைத் தருவதாகிவிடுகிறது. நகுலனின் கவிதை வரி ஒன்றுண்டு. ‘திரும்பிப் பார்க்கும்போது காலம் இடமாகக் காட்சி தருகிறது’. காலம் வெந்தடங்கும்போது அதன் உணர்வுரீதியான பிணைப்புகள் அறுந்து வெறும் இடமாகக் காட்சிதரக் கூடும். அப்போது அவற்றை மீளப் பார்ப்பது எளிதாக இருக்கும்.

பால்யத்தின் வறுமை, தந்தையுடனான நெருக்கமின்மை, உதர நிமித்தம்பட்ட அலைச்சல்கள் எனப் பல உவக்காத நினைவுகளை இவ்விதமாக எழுத்தில் கடக்கும் சுகுமாரன் அவற்றில் கசப்புக்குப் பதிலாக ஒருவகை சுய எள்ளலையும் வெறுப்பிற்கு மாற்றாகப் பரிவுணர்வையும் முன்வைத்துப் போகிறார். இளமையிலேயே அவரைப் பீடித்துவிட்ட இசை மோகமும் இலக்கியக் கிறுக்கும் அவருக்கு அந்தப் பார்வையையும் முதிர்ச்சியையும் தந்திருக்கலாம். அந்த வகையில் அது ஒரு வரம்தான். இதையே வேறு வகையாகவும் நோக்கலாம். இந்த மோகமும் கிறுக்கும் ஒரு சாபமாகக் கவியாது போயிருந்தால், இந்த நிம்மதியின்மையும் அலைச்சல்களுமற்றுப் பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்குள் அவர் ஒதுங்கியிருக்கவும் கூடும். யார் தீர்த்துக் கூற முடியும்?

ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த குளறுபடிகளைப் பற்றி, புரையோடிப் போன ஒரு காயத்தைக் கிழித்துப் பார்க்கும் தன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. ‘குற்றமும் விடுதலையும்’ என்னும் கட்டுரை. சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னால் நாமக்கல்லில், நண்பர் செங்கதிரின் அறையில் படிக்க வேண்டி அலமாரியைத் துழாவியபோது கிடைத்த புத்தகம்தான் ‘லெஜன்ட்ஸ் ஆப் கசாக்’ மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அப்போதிருந்த எனது அரைகுறை ஆங்கில அறிவுக்கும் சொற்பமான இலக்கிய வாசிப்புக்குமே இது ஒரு முக்கியமான நூல். மூலமொழி அழகுகளையும் நுட்பங்களையும் ஆங்கிலத்தில் படிக்கும்போது எங்கோ தவற விடுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.

பிறகு பல ஆண்டுகள் கழித்து ‘கசாக்கின் இதிகாசம்’ சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் தொடராக வருகிறது என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டு குமுதம் வாங்கினேன். இரண்டாம் வாரத்துடன் அந்நாவல் தொடர் நின்றுபோனதும் ஏமாற்றமடைந்தேன். என்றாலும் எப்போதாவது அது தமிழில் வந்துவிடும் என்று நம்பியிருந்தேன். அதன் உள் விவகாரங்களைப் படித்ததும் இனி அது எப்போதுமே வர வாய்ப்பில்லை என அறிந்தபோது எனக்கது தனிப்பட்ட இழப்பாகவே தோன்றியது. இலக்கியம் என்னும் சூதாட்டத்தில், எதை எதையோ இழந்தாலும் இறுதியில் எஞ்சும் என்று ஒரு எழுத்தாளன் நம்புவது தனது பெயர் ஒன்றைத்தான். அந்த ஒன்றையும் இழந்து சுகுமாரன் இவ்விவகாரத்தில் அவப்பெயர் பெற நேர்ந்ததை ‘விதி’ என்ற அந்த அபத்தமான சொல்லால் அன்றி வேறு எப்படிக் குறிக்கவியலும்?

வாழ்வின் நுகத்தடி கழுத்தின் மீது அழுத்தமாக விழாத பதின்பருவத்தில், பகல் கனவுகளில் ஆழ்ந்துபோகும் ஒருவன், கரைந்தழுவதற்கான கண்ணீர்த் துளிகளையும் பறந்துபோவதற்கான சிறகுகளையும் தருவது இசையைத் தவிர வேறில்லை. அப்பருவத்தில் நம் கட்புலன்களில் பதிவாகும் பாடல் வரிகளும் மந்திரக் குரல்களும் நட்சத்திர முகங்களும் சாகாவரம் பெற்றவை. அவ்வரிகளும் குரல்களும் முகங்களும் கட்டியெழுப்பும் உணர்ச்சி மண்டலமானது அழியாத ஜென்ம நட்சத்திரம் போல நமது தலைக்கு நேர் மேலாக எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கும். அத்தகைய அபூர்வமான உணர்வுச் சித்திரங்களில் ஒன்றுதான் ‘கனவு கண்ட காதல்’ என்னும் கட்டுரை. அதுல்லா கான் என்கிற பட்டாணி சேட், மதுபாலா எனும் இந்தி நடிகை, நௌஷாத் என்கிற இசை மேதை, கம்பதாசன் என்கிற தமிழ்க் கவி ஆகிய புள்ளிகளைத் தனது நினைவின் சரடுகளால் பிணைத்துச் சுகுமாரன் உருவாக்கியிருப்பது ஏங்கச் செய்யும் புனைவு.

இருந்த இடத்தைவிட்டு அகலாமலே, தாம் கடந்துவந்த நாடு, நகரங்களைப் பற்றியெல்லாம் தீர்க்கமாக விவரிக்கும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் சுகுமாரன் மிகவும் சாதாரணர். இவர் இவரிலும் சாதாரணரான ஆர்.சிவக்குமார் என்னும் மொழி பெயர்ப்பாளரைப் பற்றிச் சிலாகித்துக் கூறுகிறார். என்ன காரணம் என்று நோக்கினால், அவர் பல வருடங்களுக்குமுன் மொழி பெயர்த்த ஒரு நூலின் முன்னுரையில் ஒரு வார்த்தைக்குத் தவறான பொருள் தந்துவிட்டாராம். அதற்காகப் பல வருடங்கள் கழித்து வெளியான அவருடைய மற்றொரு மொழிபெயர்ப்பு நூலில் வருந்தி, திருத்தம் தெரிவித்திருந்தாராம். எழுத, எழுதக் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பல்லாயிரம் வாசகர்களால் படிக்கப்படும் இன்றைய அவசர உலகத்தில் இத்தகைய தர்மங்களெல்லாம் எழுத்தாளனுக்குக் கட்டுப்படியாகுமா?

ஸால் பெல்லோ என்னும் பெயரை அறிந்திருக்கிற தகுதி ஒன்று போதாதா, அவரைப் பற்றித் தகவல் திரட்டி எழுதுவதற்கு? சுகுமாரன் தனது கட்டுரை யில் அவருடைய நான்கு நாவல்களை மட்டுமே வாசித்திருப்பதாகவும் அந்தக் குறுகிய வாசிப்பனுபவத்திலிருந்தே தன் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்றும் தன்னிலை விளக்கம் தருகிறார். அதைப் போலவே முரகாமி பற்றிய கட்டுரையில் அவருடைய மூன்று நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது தனது பார்வை எனக் குறிப்பிடுகிறார். வேறொரு கட்டுரையில், தனது அயல் மொழி வாசிப்பிற்குக் காரணம் தன் நம்பகமான பரிந்துரையாளர் சூசன் சான்டாக் என்று கூறி அவருக்கு நன்றி பாராட்டும் விதமாக ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கிறார்.

வெளிச்சம் தனிமையானது

பக். : 216 விலை: ரூ. 120
முதல் பதிப்பு: டிசம்பர் 2008

மூன்று நூல்களையும் வெளியிட்டோர்
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம் சென்னை-18

ரிஷி மூலம் நதி மூலம் போலவே எழுத்தாளர்களின் மூலமும் அறியத் தகாத ஒன்றாக மாறிவரும் காலத்தில், சுகுமாரன் கடைபிடிக்க முயலும் இந்த நேர்மை மிகவும் அபூர்வமானது. இலக்கியத்தைத் தீவிரமானதொரு செயல்பாடாகக் கருதும் மரபின் தொடர்ச்சியில் தானும் ஒருவன் என்று அவர் நம்புவதனாலேயே இத் தகைய வெளிப்படையான தன்மையை அவரால் கடைபிடிக்க முடிகிறது.

ஊடகத் துறை பற்றிய கண்ணனின் நூலுக்கான முன்னுரையில் சுகுமாரன், பல்வேறு இதழ்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகியவற்றிற் கிடையே வாழ்வியல் உண்மைகள் ‘மொசைக் தரையில் விழுந்த குண்டூசி களாய்’ச் சிதறிக் கிடக்கின்றன என்று எழுதுகிறார். அந்த உவமை ஆத்மா நாமின் கவிதை ஒன்றிலிருந்து பெறப்பட்டது. இதேபோலத் ‘துன்பக் கேணி’, ‘ஓடிய கால்கள்’, ‘சாவதும் ஒரு கலை’, ‘பொன்னகரம்’, ‘பின்னும் உயிர் வாழும் கானல்’, ‘மேகம் விழுங்கிய நட்சத்திரம்’ முதலிய தலைப்பு வரிகளும்கூடப் பல்வேறு இலக்கியப் படைப்புகளினின்றும் எடுத்தாளப்பட்டுள்ளன. இத்தன்மை காரணமாக இக் கட்டுரைகள் பொருள் கோடலின் போது வாசகனுக்கு மேலதிகமான அர்த்தத்தையும் ஆழத்தையும் நல்கின்றன.

பல்வேறு தருணங்களில், பல்வேறு நூல்கள், இதழ்களில் உதிரியாக இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதால் தொகுப்பு என்று மொத்தமாக வைத்துப் பார்க்கும்போது பொதுவான ஒரு மையத்தை அல்லது நோக்கத்தை இவை பிரதிபலிக்கவில்லை.

என்றாலும் இதை ஒரு குறையாகச் சொல்ல முடியுமா எனத் தெரிய வில்லை. ஏனெனில் கவி என்ன பாடினாலும் அதில் கவிதையின் அம்சங்களான உயிர்ப்பும் நெகிழ்ச்சியும் ஈர்ப்பும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். இக்கட்டுரைகளிலும் அவை குறைவின்றி இருக்கின்றன.

உள்ளடக்கம்