|
திருமண வாழ்த்துச் சுவரொட்டிகள் எல்லா ஊர்களிலும் இன்று பரவலாகக்
காணப்படுகின்றன.
நண்பர்களோ உறவினர்களோ தமது பெயரைப் போட்டுச் சுவரொட்டி அச்சிட்டு ஒட்டும்
இவ்வழக்கம் உருவான கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமக்குத் தொடர்ந்து வேலைகள்
வேண்டும் என்பதற்காக அச்சக உரிமையாளர்கள் தாமே செலவுசெய்து முதலில் சில
திருமணங்களுக்கு இப்படிப்பட்ட சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியதாகவும் அது
படிப்படியாக மக்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் சொல்வதுண்டு. இது பெருமளவு
உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.
கண்ணுக்குத் தெரியும்படியான ஒரு விஷயத்தைத் திட்டமிட்டுப் பரப்ப முடிகிறபோது
நுட்பமான கருத்தியல் தளத்தில் எத்தனையோ விஷயங்களைத் தாராளமாகப் பரப்ப முடியும்
என்பதை ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. நாளிதழ்களில் வெளியாகும் கல்வித்
துறை தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து கவனித்தால் பல விஷயங்களுக்கு எவ்வாறு
திட்டமிட்டுச் செய்தி மதிப்பு உண்டாக்கப்படுகிறது என்பது விளங்கும். தனியார் பள்ளி,
கல்லூரிகளில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகள்கூடச் செய்தி மதிப்பைப் பெற்றுவிடுகின்றன.
அதற்குக் காரணம் அவை தரும் விளம்பரங்கள்தாம். இதழியல் அறம் பற்றியெல்லாம்
கவலையில்லை. மேலும் மேலும் லாபம் ஈட்டும் தொழில் என்னும் கண்ணோட்டம் வந்தபின்
அறம் பற்றி என்ன பேச்சு? பத்திரிகைகளை மக்கள் வாங்குவதால் கிடைப்பதைவிட
விளம்பரங்களால்தான் அதிக வருவாய் என்னும்போது அதற்கேற்பத்தானே செய்திகளும் இருக்க
முடியும்?
தனியார் கல்வி நிறுவனச் செய்திகள் பரவலாக இடம்பெறும்போது அரசு கல்வி நிறுவனச்
செய்திகள் ஒன்றிரண்டுகூட வருவதில்லை. அரசு பள்ளி ஒன்றில் ஏதாவது பிரச்சினை
என்றால்தான் அது செய்தியாகும். தனியார் பள்ளியில் ஏதாவது பிரச்சினை என்றால் அது
செய்தியாகாது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பற்றிப் பொதுச் செய்திகள்
ஏராளமாக வந்தபடியிருக்கின்றன. குறிப்பிட்ட தனியார் பள்ளியில் வசூலிக்கப்படும்
கட்டணம் பற்றி எந்தப் பத்திரிகையாவது செய்தி வெளியிட்டிருக்கிறதா? பத்திரிகைகளைப்
பொருத்தவரை அதற்குச் செய்தி மதிப்பு கிடையாது. கட்டிடத் திறப்பு, ஆய்வகத்
தொடக்கம், மன்ற விழா, நாட்டு நலப்பணித் திட்ட முகாம் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகள்
தொடர்ந்து செய்தி ஆகின்றன. ஆனால் ஏராளமானோரைப் பாதிக்கும் கட்டண விஷயம் செய்தி
ஆவதில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் விளம்பரங்கள் தருவதால் அவையே செய்தி மதிப்பைத்
தீர்மானிப்பவை ஆகின்றன.
கல்வியாண்டுத் தொடக்கத்தில் எல்லா நாளிதழ்களும் கல்வி மலர்கள் என்று அவ்வப்போது
நான்கு முதல் எட்டுப் பக்கங்கள் வரை வெளியிடுகின்றன. அதிகமான விளம்பரங்கள்
கிடைத்துவிட்டால் கல்வி மலர் உருவாகும். அல்லது கல்வி மலர் தயாரிப்பின் பொருட்டு
விளம்பரங்கள் பெறப்படும். இந்தக் கல்வி மலர்கள் நாளிதழ்கள் தம் வாசகர்களைப் பற்றிக்
கொண்டிருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடு என்று சொல்லலாம். நுட்பமான பார்வை
கொண்டவர்களாக வாசகர்கள் உருவாகிவிடக் கூடாது என்பதும் பத்திரிகையின் நோக்கம். அதை
அவ்வப்போது சோதித்துப் பார்க்கும் நடைமுறைகளில் ஒன்றுதான் கல்வி மலர்.
பெரும்பான்மை விளம்பரங்களுக்கிடையே கல்வி தொடர்பான சில கட்டுரைகளும் இதில்
இடம்பெற்றிருக்கும். அவற்றையும் விளம்பரங்களையும் தொடர்புபடுத்திப் பார்த்தால்
கல்வி மலரின் சூட்சுமம் புரியும். எந்தெந்த நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்துள்ளனவோ
அவற்றைப் பற்றி மட்டுமே செய்திக் கட்டுரைகள் இருக்கும். இரண்டையும்
தொடர்புபடுத்திப் பார்க்கும் பார்வை கொண்டவரல்ல வாசகர் என்பது அவர்களுக்குத்
தெளிவு.
விளம்பர நோக்கத்தின் பொருட்டு செய்தி மதிப்புப் பெற்ற விஷயம்தான் முதல் மதிப்பெண்
என்பது. பன்னிரண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தினத்தில்
தொடங்கி ஒரு வாரம், பத்து நாட்கள் வரை இந்த முதல் மதிப்பெண் செய்திகள் வந்த வண்ணம்
இருக்கின்றன. தேர்வு முடிவு வெளியாகும் தினத்தில் தலைப்புச் செய்தி தொடங்கி இதழ்
முழுக்க அத்தகைய செய்திகளேதான். மாநில முதலிடம் தொடர்பான செய்திகளாக அவை
இருக்கும். மாவட்ட முதலிடம், பாட முதலிடம், பள்ளி முதலிடம், நூறு விழுக்காடு
தேர்ச்சி, பள்ளியில் அதிக மதிப்பெண், பாராட்டுகள், மாணவர் நேர்காணல், பெற்றோர்
நேர்காணல் எனச் செய்திகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த நாளிதழுக்கு
விளம்பரம் வழங்கும் நிறுவனம் தொடர்பான செய்தி ஏதாவது ஒருவகைக்குள் வந்துவிடும்.
ஒவ்வோர் ஆண்டும் இச்செய்திகளில் இடம்பெறும் பெயர்கள் மாறுபடுமே தவிர,
அலுப்பூட்டும் ஒரே மாதிரியான செய்திதான். முதலிட மாணவர்கள் மருத்துவம், பொறியியல்,
ஐஏஎஸ் என்பன தங்கள் இலக்கு என்று பேட்டி கொடுப்பார்கள். பெற்றோர் ‘கேக்’
ஊட்டுவர். பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் பாராட்டுவர். இத்தகைய செய்திகள்
சம்பந்தப்பட்டவர்களைத் தவிரப் பிறருக்கு ஆர்வம் தருபவையாக இருப்பதில்லை. ஆனாலும்
இவை செய்தி மதிப்புப் பெறுவதற்குக் காரணம் விளம்பரம்தான். சரி, ஏதோ விளம்பரம்
தருகிறார்கள், செய்தி வெளியிடுகிறார்கள், போகட்டும் என்று புறந்தள்ளிவிட முடியாது.
சமூகப் பொதுமனத்தில் இவை ஏற்படுத்தும் விளைவுகள் பலதரப்பட்டவை.
ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளின் நிழற்படத்துடன் பத்திரிகைச் செய்தி வெளியாக
வேண்டும் என்று கனவு காண்கின்றனர். கல்வி நிறுவன விளம்பரங்களில் தம் பிள்ளைகளின்
நிழற்படங்கள் இடம்பெறுவதை இலட்சியமாக நினைக்கின்றனர். விளம்பர மோசடிகள்
தொடர்பாகப் பெரும்பாலான வர்க்கு எதுவும் தெரிவதில்லை. எனக்குத் தெரிந்த
பேராசிரியர் ஒருவர் தம் மகனைச் சைனிக் பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதற்கான
நுழைவுத் தேர்வை நடத்தும் மையம் ஒன்றில் பயிற்சிக்குச் சேர்த்தார். அப்பள்ளியில்
சேரும் அளவு மதிப்பெண் பெற அம்மாணவனால் இயலவில்லை. ஆனால் அப்பயிற்சி மையம்
தொடர்ந்து அம்மாணவரின் நிழற்படத்தைத் தம் விளம்பரத்தில் பயன்படுத்தி வந்தது.
அடுத்தடுத்த கல்வியாண்டிலும் தம் முந்தைய ஆண்டு சாதனையாக அம்மாணவர் படம்
விளம்பரப்படுத்தப்பட்டது. விளம்பரங்களையும் அவற்றோடு தொடர்புடைய செய்திகளையும்
ஐயத்தோடு பார்க்கும் பார்வை உருவாகாதவரை இந்நிலை நீடிக்கும். அச்சில் வரும்
எதுவும் உண்மையானதுதான் என்னும் பொதுமனப் பதிவில் இன்னும் சிறு அதிர்வுகூட உருவாக
வில்லை.
செய்திகளில் தம் பிள்ளைகள் இடம்பெற வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு அவர்கள்மீதான
மெல்லிய வன்முறையாகப் பல வடிவங்களில் தொடர்கிறது. இதனால் பெற்றோரை வெறுக்கும்
பிள்ளைகள் மனப் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். இந்தச் செய்திகள் பல மாணவர்களைத்
தாழ்வுணர்ச் சிக்கு ஆளாக்குகிறது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் ஏதாவது ஒரு
முதலிடத்தைத் தவறவிட்ட மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அதைச் சொல்லிச்
சொல்லி அவர் களைத் துன்புறுத்தும் சூழல். விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின்
மனப்பாங்குக்கு ஏற்பச் சில மதிப்பெண் கூடுதல், குறைச்சல் நிகழும். ஆகவே மாணவரின்
அறிவுத் திறனுக்கு மதிப்பெண் முழு அளவீடு அல்ல. நூலில் அல்லது உரை நூலில் உள்ளவற்றை
அப்படியே மனனம் செய்து எழுத்துத் தவறாமல் எழுதிவிடும் மாணவருக்குக் கூடுதல்
மதிப்பெண் கிடைக்கிறது. சுய சிந்தனைக்கு அங்கு இடமில்லை. ஆகவே மதிப்பெண்ணை வைத்து
மாணவர் அறிவைத் தீர்மானிக்க இயலாது.
கடந்த பத்திருபது ஆண்டுகளில் மாநில முதலிடம், மாவட்ட முதலிடம் பெற்ற மாணவர்களின்
பட்டியலை எடுத்து உயர் கல்வியில் அவர்களின் நிலை, சாதனைகள் ஆகியவற்றைப் பற்றிய
புள்ளி விவரங்கள் சேகரித்தால் மதிப் பெண்ணுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு
பற்றித் தெளிவு கிடைக்கலாம். மதிப்பெண் எதிர்பார்ப்பில் மாணவர்கள்மீது பெற்றோரும்
ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் நிகழ்த்தும் வன்செயல்கள் அதன் காரணமாகக் குறையலாம்.
ஆனால் இந்த வேலையை எந்த நாளிதழ்களும் ஊடகங்களும் செய்யா. அவற்றிற்கு வருமானம் வரும்
வழியைத் தம் கைகொண்டே அடைக்க முயல்வார்களா?
இந்த முதல் மதிப்பெண் செய்திகளின் இன்னொரு விளைவு, பரோபகாரிகளாகப் பலர்
வெளிப்படுவது. முதல் மதிப்பெண் மாணவர்களை அரசு பாராட்டி ஊக்கத் தொகை வழங்குகிறது.
அரசு சார்பில் மடிக் கணினிகள் வழங்கப்படுகின்றன. சில பத்திரிகைகள், தனிநபர்கள்,
சங்கங்கள், கிளப்புகள் ஆகியவையும் தம் பரோபகாரச் சிந்தையை வெளிப்படுத்தும்
பொருட்டு ஆயிரம், ஐந்நூறு என்று தொகை வழங்கிக் கௌரவிக்கின்றன. தனியார்
பள்ளிகளில் சில லட்சங்கள் செலவுசெய்து பயின்று மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு
எதற்கு மென்மேலும் பண உதவி? இருக்கும் இடத்திலேயே மேலும் கொட்டுவதுதான் கருணையா?
கருணை வெளிப்பாடு கொள்ளும் தருணம் அருவருப்பாக இருக்கிறது.
விடுமுறை நாட்களில் கூலி வேலை செய்துகொண்டே அரசு பள்ளியில் பயின்று நடுத்தர அல்லது
குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறும் மாணவர்களில் பலர் மேற்கொண்டு உயர்
கல்வி பயிலும் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். அவர்களில் பலர் குறைந்தபட்சக் கட்டணம்
கொண்ட கலைக் கல்லூரிகளில் பயிலும் அளவுக்குக்கூடப் பொருளாதாரப் பின்புலம்
அற்றவர்கள். இத்தகைய மாணவர்களை நோக்கிப் பரோபகாரச் சிந்தைகள் திரும்பினால் என்ன?
ஊடகச் செய்திகள் முதல் மதிப் பெண்களையும் அதிக மதிப்பெண்களையுமே சாதனைகளாக
முன்னிறுத்துகின்றன. அது தனியார் கல்வி நிறுவனத் தொழில் வளர்ச்சிக்கும் விளம்பர
வருவாய்க்கும் பயன்படுகின்றன. அவற்றால் பாதிக்கப்பட்டுச் சாதனையை ஊக்கப்படுத்தும்
நோக்கில் செய்யப்படும் உதவிகள் எங்கு தேவையோ அங்கு போய்ச் சேர்வதில்லை.
மதிப்பெண்ணை அளவுகோல் என்றே வைத்துக்கொண்டாலும்கூட இந்த உதவிகளின் தன்மையை
ஏற்றுக்கொள்ள முடியாது. பலவீனர்கள் தம் திறனை வளர்த்துக்கொள்ளப் பயன்படுவதுதான்
உதவியாக இருக்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றிய கல்லூரியில்
இளங்கலைத் தமிழ் சேர்வதற்காக ஒரு மாணவர் வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து
இரண்டாண்டுகள் இடைவெளி. காரணம் கேட்டபோது ‘பணமில்லை’ என்றார் அம்மாணவரின் தந்தை .
அப்போது கல்லூரிக் கட்டணம் ‘வெறும்’ அறுநூறு ரூபாய்தான். ‘இந்தப் பணம் இல்லயா’
என்று வியப்போடு கேட்டபோது அந்தத் தந்தை ‘சாப்பாட்டுக்கே வழியில்ல சார்’ என்றார்.
என் கன்னத்தில் அறைந்த சொற்கள். இரண்டாண்டுகள் விட்டும் படிக்கும் ஆர்வம்
அம்மாணவரிடமும் படிக்க வைக்கும் ஆர்வம் அத்தந்தையிடமும் இருந்தன. அறுநூறு ரூபாயில்
இரண்டாண்டுகளை இழந்திருந்தான் அம்மாணவன்.
அரசும் சரி, பரோபகாரச் சிந்தை கொண்ட தனிநபர்கள், பிற நிறுவனங்களும் சரி, கல்வி
தொடர்பான தம் உதவிக்கரங்களை மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தாலும் படிப்பார்வம்
கொண்ட இத்தகைய ஏழை மாணவர்களை நோக்கி நீட்டுவதுதான் அறிவுசார் சமுதாயத்தை
வளர்த்தெடுக்க உதவும். அந்நோக்கில் பொதுமனச் சிந்தனை நகராமல் தடுப்பதில் பெரும்
பங்கு நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு இருக்கிறது என்பதுதான் இன்று வருத்தம்
தரும் செய்தி. |