Google   www kalachuvadu.com

கடிதங்கள்
ஜூன் இதழில் சமகால நிகழ்வுகளைச் சரியான பார்வையோடு வாசகனுக்கு முழுமையான புரிதலை உருவாக்கிடும் வகையில் சிறப்பான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இலங்கையின் தற்போதைய நிலை குறித்த தலையங்கம் மனத்தைப் பிசைவதாய் இருந்தது. அரசியல்ரீதியான பல தவறுகளைப் பிரபாகரன் செய்துள்ளதை நியாயப்படுத்த முடியாதுதான். எனினும் தனது குடிமக்களாக உள்ள ஒரு இனத்தை அந்த நாட்டின் அரசே அழித்தொழிக்க முயலும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு ஆயுதம் தாங்கிய குழு இருந்தபோதே இத்தனை கொடூரமெனில், இனி அம்மக்கள் நிலை என்ன என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எந்தப் பிரச்சி னையை அணுகும்போதும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஊடகங்களுக்கும் கட்டுரையாளர்களுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கு மென்பது இயல்பு. என்றாலும் இலங்கைப் பிரச்சினையை, ஒரு இனத்தின் குடியுரிமைக்கான அவலக் குரல்களை, இவர்கள் கையாண்ட விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியது. அதிலும் வெகுஜன ஊடகங்களில் கட்டுரை எழுதுகிற சோலை, ஏ.எஸ். பன்னீர்செல்வம், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட சிலர், இலங்கை அரசுக்குச் சகல விதத்திலும் உதவிய காங்கிரசைக் கடுமையாக விமர்சிக்கிற போதும், காங்கிரசை ஆதரித்து நின்ற துரோகத்தைச் செய்த திமுக. தலைவர் கருணாநிதியை மட்டும் போற்றிப் புகழ்வதும் அவரது மதிநுட்பத்தை வியப்பதும் ஆய்வுக்குரிய ஆச்சரியம்தான். ஆனால் ஜூன் இதழில் கண்ணன், பா.செயப்பிரகாசம், சங்கரன் சித்தார்த்தன், நாகார்ஜூனன் ஆகியோரது கட்டுரைகள் மூலம் இலங்கை இனப் படுகொலைகள் குறித்து, அதன் அத்தனை விபரங்களையும் நேர்மையாக முன்வைத்து அதில் அரசியல் தலைவர்கள் நடவடிக்கையைத் தைரியமாக விமர்சித்து, ஈழ மண்ணில் தமிழ் இனம் சந்தித்த எழுச்சி, பலம்/ பலகீனம் தியாகம், சோகம், துரோகம் என அதன் ஆதி அந்தங்களை வாசகனுக்குச் சரியான தெளிவை உருவாக்கிடும் வகையில் முன்வைத்திருந்தமை நன்று.
நா. கலையரசன், மங்களக்குடி

விடுதலைப் போராளிகள் ஒருபோதும் புதைக்கப்படுவதுமில்லை, எரிக்கப்படுவதுமில்லை அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். இதைக் காலம் உலகுக்கு உணர்த்தும். ராஜபக்சேவின் முழக்கத்தில் உயர் நோக்கம் தொனித்தாலும் அதில் உண்மை கிடையாது. அதேபோல் விடுதலைப்புலிகளின் தோல்வியில் அழிவுநிலை தெரிந்தாலும் அதன் வீறிட்டு எழும் நிலையை அடக்க முடியாது.
‘ஓட்டுப்பண்ணை - 2009’ கட்டுரை உண்மைநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வரலாறு காணாத பணப் பட்டுவாடா ஒன்றே வெற்றியை நிர்ணயித்தது என்பதை முழுமையாகப் படம்பிடித்துக்காட்டி ஊடக தர்மத்தை நிலைநாட்டியுள்ளீர்கள். தமிழ் உணர்வால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டடம், இன்று ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது. எது பன்றி எது மனிதன் என்ற ஒப்புமை காண முடியாத உதாரணம் நிதர்சனத்தின் வெளிப்பாடு. ஜனநாயகப் படுகொலையில் தலைவர்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அவ்வளவு பங்கு ஊடகங்களுக்கும் உண்டு என்ற பா.செயப்பிரகாசத்தின் கூற்று உண்மையின் பதிவு.

நாகார்ஜுனனுடன் இணைந்து நானும் வெட்கித் தலைகுனிகிறேன். தொப்புள் கொடி உறவு பூண்டோடு ஒழிக்கப்படும் நேரத்திலும், சூடு சொரணையற்ற நிலையில் நானும் தமிழன் என்ற வேட்டி கட்டிக்கொண்டு வெட்கமில்லாமல் வலம் வருகிறேன்.

நாமக்கல் மாவட்டத்தின் கல்வி வியாபாரம் கல்வித் துறையின் வீழ்ச்சி என்பது மட்டுமல்ல களங்கம் என்பதே உண்மை. பணம் பிடுங்கிப் பலதேவன்களிடம் கல்வி சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கிறது. அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் குறிப்பிடத்தக்க அளவு ஆசிரியர் பணிகளில் இருப்போரின் குடும்பத்தினரே உள்ளனர் என்பது வெட்கக்கேடான ஒன்று. போராட்டம் ஒன்றே முற்போக்குக்கு வழி காட்டும் என்னும் வரலாற்று உண்மையை ஒபாமா குறித்த கட்டுரையில் க. திருநாவுக்கரசு சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் பசுமைப் புரட்சியை உணவுத் துறையில் சாதிக்க முடியும் என்ற கூற்று முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கா. இர. குப்புதாசு
செஞ்சி

ஈழச் சகோதரர்களை நினைத்து நீங்கள் மட்டும் தலைகுனிய வேண்டாம். எங்களின் இயலாமை குறித்து எங்களைப் போன்றோரும் முடிவெடுக்க சக்தியில்லாத தமிழக ஆட்சியில் உள்ளோரும் முதலில் தலைகுனிய வேண்டியவர்கள். தமிழனின் தன்மானமும் வீரமும் தொலைந்துவிட்டதாகவே கருதலாம். ஆட்சிக்காகத் தமிழனை ஏமாற்றிய திமுக அரசு நிச்சயமாக எதிர் காலத்தில் இதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

வெளிநாட்டில் கொல்லப்பட்ட ஒருசில சீக்கிய மதகுருக்களுக்காக இந்தியாவில் அரசு பொருட்களும் பேருந்துகளும் ரயில்களும் கண நேரத்தில் அழிக்கப்பட்டதைச் சில வாரங்களுக்கு முன்பு கண்கூடாகப் பார்த்தோம். அவர்கள் அளவிற்கு நாம் இனவெறி பிடித்தவர்கள் அல்ல என்றாலும் கடைசிக் கட்டப் போரை நிறுத்தி, கிட்டத்தட்ட 15 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
வீரத்திற்காக மூச்சை விட்ட தமிழ்நாட்டில் இன்று பேச்சுக்குக்கூட வீரம் இல்லை. தமிழின உணர்வை காங்கிரசிடம் அடகுவைத்த கருணா நிதிக்குக் கிடைத்த பரிசு ஏழு அமைச்சர் பதவி. இலங்கைத் தமிழனின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்ததில் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் சம பங்குள்ளதை மிகுந்த மனவருத்தத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இன உணர்வு அற்றவனுக்கு மீதமிருக்கும் ஈழத் தமிழனின் எச்சரிக்கை அநேகமாக இதுவாகத் தான் இருக்க முடியும்.

ஆ. கா. விஸ்வநாதன்
தூத்துக்குடி

ஜூன் இதழின் அட்டைப் படம் பார்ப்பவர்களின் மனத்தை உலுக்கிவிட்டது. ‘இந்தியாவைச் சார்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்’ கட்டுரை சிறப்பு. தமிழன் மனிதாபமானமுள்ளவன் என்றால் நடை பெற்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக வெற்றிபெற்றிருக்க முடியாது. தலையங்கம், தேர்தல் சம்பந்தமான கட்டுரை ஆகியவை எதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டிய¬வை. இலங்கைப் பிரச்சினையில் காலச்சுவடின் பங்கு பாராட்டுக்குரியது. காலச்சுவடு இதழ் தொடர்ந்து போராடி நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இரா. சண்முகவேல்
கீழக்கலங்கல்

ஜூன் 09 இதழில் ஈழப் பிரச்சினை குறித்து ஐந்து கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. இவ்விதம் ஈழப் பிரச்சினை தூக்கலாக எழுந்ததற்குக் காரணம், ஒன்று நடந்து முடிந்த தேர்தல் மற்றது, முடிவுக்கு வந்த போர்.

இலங்கைத் தீவில் தொடர்ந்து இருந்துகொண்டு போரால் அவதிப்பட்டவர்கள் பாமர மக்கள். மேட்டுக்குடியினரும் வசதி படைத்தவர்களும் வெளியேறி, புலம் பெயர்ந்துவிட்டார்கள். விவசாயிகளும் தொழிலாளர்களும் சிறு வணிகர்களும் மட்டுமே போக வகையின்றி கட்டுண்டு, இலங்கை ராணுவத்தினருக்கும் பிரபாகரனின் எல்டிடிஇக்கும் இடையே அகப்பட்டு அவதியுற்றனர். வசதியாக வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு ஈழம் பற்றி முழங்குபவர்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்கள்தாம்.

ஒரு பிரச்சினை மீது ஒப்பந்தம் ஏற்படாமல், போர் வரை அது சென்றுவிட்டதென்றால், நடுவில் ஒரு கட்டத்தில் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பிரபாகரன் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்தியா ஈழப் பிரச்சினையில் தலையிட்டதே தவிர, இலங்கை அரசு இந்திய அரசை அணுகவில்லை. தமிழர்கள் நலனுக்காகத்தான் ராஜீவ் காந்தி சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரபாகரன் ஒப்பந்தத்தை மீறினார். ஆகவே சமாதானத்தை மேற்கொள்ள வேண்டி இருந்த இந்திய ராணுவம் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நேரிட்டது.

அந்த ஒப்பந்தப்படி ஆயுதங்களைப் போட்டுவிட்டு, கிடைத்த அதிகாரங்களுடன் பிரபாகரன் ஈழப்பகுதியை நிர்வகிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்திருந்தால், பிரச்சினை இன்றைய முடிவுக்கு வந்திருக்காது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். புலம் பெயர்ந்தோரில் பலரும் திரும்பி இருக்கக்கூடும்.

ஈழப் பிரச்சினை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முழுக் காரணமும் பிரபாகரன்தான். தான் சர்வாதிகாரியாக ஆக வேண்டுமென்ற முனைப்புடன் செயல்பட்டவர், சக கட்சித் தலைவர்களைக் கொலைசெய்தவர் இன்று இல்லாமல் போய்விட்டது இயல்பானதாக ஆகிவிட்டது. ஐந்து கட்டுரைகளிலும் பிரபாகரனின் செயல்பாடு குறித்துப் பேசாதது, கட்டுரைகள் ஒருதலைப்பட்சமானவை என்பதைக் காட்டுகின்றன.

இந்தியன் என்ற வகையில் வெட்கித் தலைகுனிவதாக நாகார்ஜுனன் சொல்லிக்கொள்ளலாம். அழுக்கு அடைந்த அறிவையே அவருடைய கட்டுரை வெளிக் காட்டுகிறது. இயன்ற மட்டும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்துக்கு உதவித்தான் உள்ளன. ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தியின் உயிரைப் பறிகொடுத்ததுதான் கண்ட பலன்.

ஒரு கட்டத்தில் இந்தியர்களின், தமிழர்களின் ஈர்ப்பு ஈழத் தமிழர்கள்பால் இருந்தது. மாற்றுக் கட்சியின் தலைவர்கள் கொலை, ராஜீவ் காந்தி கொலை ஆகியவை இந்நாட்டு மக்களின் மனநிலையைத் திசை திருப்பி, பாராமுகமாக இருக்கச் செய்துவிட்டன என்பதுதான் உண்மை. தேர்தல் நேரத்தில் கட்சிகள்தாம் ஈழப் பிரச்சினை குறித்துக் குரல் கொடுத்தனவே தவிர, இந்திய மக்கள், தமிழ் மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏறக் குறைய இருபதாண்டுகளுக்கு முன் ஈழத்துப் பிரச்சினை தமிழ்நாட்டைப் பாதித்தது போல் சமீப காலத்தில் பாதிக்கவில்லை என்பது நிதர்சனம். ஈழப் பிரச்சினை பற்றிய அன்றைய கருத்து இன்று இந்நாட்டு மக்களிடம் இல்லை என்பதை இன்றைய நிகழ்வுகளினூடாக உணர்ந்து கொள்ளலாம்.

கி. ஜெயராமன்
திருமழபாடி

கண்ணனின் “ஓட்டுப் பண்ணை 2009” கட்டுரை படித்தேன். நடை பெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பலரது எதிர்பார்ப்பை உடைத்து நொறுக்கியிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ‘முடிவுகள் இப்படித்தான் இருக்கும்’ என்பதை முன்கூட்டி யூகித்துவிட்டன. அதன் காரணமாகவே, தேர்தல் முடிந்த பிறகு ‘போதுமான அளவு எம்.பி.க்கள் தன் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே தான் தில்லி செல்வதாக’ - ஜெயலலிதா சொல்ல ஆரம்பித்தார். இது குறித்த திட்ட வட்டத் தகவல்கள் அவருக்குக் கிடைத்திருக்கலாம்.

பத்தாம் தேதிக்குப் பிற்பாடுதான் பணம் பெருமளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல்களில் மட்டுமே இது சாத்தியம், பொதுத் தேர்தல்களில் பணம் கொடுப்பது சாத்தியமல்ல என்ற பழைய தத்துவங்களை அழகிரியும் அவரது ‘அடியார் திருக்கூட்டமும்’ அடித்து நொறுக்கின. கிராமப்புறங்களில் ஒரு ஓட்டுக்கு ரூ. 1000/- வீதம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது.

ஓரளவுக்கு மேல் “பணம் கொடுக் காதே . . . பணம் வாங்காதே”. . . என்று எதிர் பிரச்சாரம் செய்வது தங்களையும் பாதிக்கும் என்பதால் எதிர்க் கட்சிகளும் செய்வதறியாது தடுமாறின. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தேர்தலுக்கு முன்பே அழகிரி தென் மாவட்டங்களில் சுற்றுப் பிரயாணம் செய்தபோதே தொகுதிகளில் இறக்குமதி செய்தாயிற்று. அதிகார வர்க்கத்தினருக்கும் அதிமுக பிடிக்காததால் அவர்களும் தங்கள் பங்கிற்கு ஒத்துழைத்தனர். ஏறத்தாழ தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வாக்கு மையங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்த தன் காரணம் என்ன? ஊர்வலம், சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டுதல் போன்றவற்றில் எல்லாம் கடுமை காட்டும் தேர்தல் கமிஷன், மிக முக்கியமான-தன் துறை சார்ந்த விஷயத்தில் இப்படிக் கோட்டை விட்ட மர்மம் என்ன? உண்மையில் “கோட்டைவிட்டதுதானா...? அல்லது “கோட்டையைப் பிடிக்க” ஆளும் வர்க்கத்திற்குச் செய்த உதவியா? எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டது ஏன்? தேர்தல் கமிஷன் ஒரு சுயேச்சையான அமைப்பு என்பதால், இந்த மர்மங்கள் எல்லாம் எதிர்காலத்தில் ஊற்றி மூடப்படுமா?

மக்களின் தீர்ப்பையே விலைக்கு வாங்க முடியுமானால் எதிர்காலத்தில் இவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்? பணம் வாங்கிக்கொண்டு பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் எம்.பி, பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் வாக்காளர் பணக் கட்டுக்களின் மீது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருப்பது எவ்வளவு கேவலம்!

கருணாநிதியைத் தயவுசெய்து இனி விமர்சிக்காதீர்கள். கௌரவமான விமர்சனத்தின் எல்லைகளுக்கு அப்பால் போய்விட்டவர் அவர். தமிழகத்தைத் தான் சீரழித்தது போதும் என்று தனது வாரிசுகளுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்துச் சீரழிக்க அனுமதியளித்தவர் அவர்.

மக்களின் தீர்ப்பை விலைக்கு வாங்கிய இவர்கள், ஏதோ திறமையான நிர்வாகம் நடத்தப் போவதாக (அழகிரி-ஸ்டாலின் வகையறாக்கள்) இப்போது பாவலா காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஊடகங்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்கின்றன.

பள்ளிக் கல்வி குறித்த பெருமாள் முருகனின் கட்டுரை ஒரு கல்விச் சேவை. நம்மில் பெரும்பாலோர் உயர் கல்வியில் மட்டும்தான் பணப் பேரம்-லஞ்ச ஊழல் என்று பேசிவருகிறோம். கீழ்மட்டப் பள்ளிக் கல்வியிலேயே அது எந்த அளவுக்குப் புரையோடிப் போய் இருக்கிறது என்பதைப் பெருமாள்முருகன் மிகத் திறமையாக வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். அரசியலுக்கு அடுத்த படியாகத் தமிழகத்தைப் பிடித்தாட்டும் பெரும் சீரழிவு, இந்தக் கல்விச் சீரழிவு. இதிலும் அரசியல்வாதிகளின் கைங்கர்யம் இருப்பதை நம்மில் பலர் உணர்வார்கள். இன்றைய தினம் மணல் கொள்ளைக்கு நிகராகப் பேசப்படும் ஒரு பொருள் கல்விக் கொள்ளை. மணலாவது வீடு கட்ட உதவுகிறது. ஆனால் இந்தக் கல்விக் கொள்ளையில் புகுந்து படிக்கும் மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்காவிட்டால், பெற்றோர்களால் உதாசீனம் செய்யப்பட்டுச் சமூகத்திற்கும் பயனின்றி வாழ்கிறார்கள். இது பற்றிப் பெருமாள்முருகன் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

பெற்றோர்களின் பேராசையை எவராலும் நிறைவுசெய்ய முடியாது எனினும் நமக்கென ஒரு சமூகக் கடமை உள்ளது. அதை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம்.

கே. எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

‘குருதி தோய்ந்த ஒரு கொடி’ தலையங்கத்தில் இலங்கையில் சிங்கள இனவாதம் எப்படியெல்லாம் தலை தூக்கியது என்பதைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளீர்கள். ஆனால் தலையங்கத்தின் இறுதியில் தமிழர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் வேண்டுமெனப் பதிவுசெய்துள்ளது முரண்பாடாக உள்ளது. தமிழர்களுக்கு ஆதரவாகச் சிறு முயற்சி மேற்கொண்டாலும் சாலமன் பண்டார நாயகவுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் என்பது ராஜபக்சேவுக்கு நன்றாகத் தெரியும்தானே.

1948இல் தொடங்கி, படிப்படியான சட்டதிருத்தங்கள் மூலமே இலங்கையில் சிங்கள - பௌத்த பேரினவாதம் வலுபெற்று வந்துள்ளது. முதல் முப்பதாண்டுகள் சட்டத்தின் மூலமும் இரண்டாவது முப்பது ஆண்டுகள் இராணுவத்தின் மூலமும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் சம உரிமையுடன் வாழ மறுபடியும் சட்டமும் ராணுவமும் உதவும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும். சர்வதேசச் சமூகங்கள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் தமிழர்கள் மத்தியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சேர்ந்து வாழ்வதும் பிரிந்துபோவதும் தமிழர்களின் உரிமையாக இருக்க வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும், இலங்கை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கும் என்பதைத் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் எப்படிச் சிறுமைப்படுத்துகிறது என்பதிலிருந்தே உணரலாம். இந்திய அயலுறவுக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவது மிகவும் அவசியம்.

தினமும் 50, 100 பேர் எனத் தொடங்கி இறுதியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மைச் செய்தியைக் கண்டுகொள்ளாத வடஇந்திய, ஆங்கில ஊடகங்கள், பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற சர்ச்சைக்குரிய செய்திகளை மட்டும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய ஊடக வன்முறை அரச வன்முறையையும் மிஞ்சியது.

இல்லாத ஆற்றங்கரையோரம் இருந்ததாக நம்பப்படும் சரஸ்வதி கலாச்சாரம் பற்றிய பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது சு.கி. ஜெயகரனின் கட்டுரை. சராசரி மனிதர்களை மட்டுமல்ல ஆராய்ச்சியாளர்களையும் இனவாதமும் மதவாதமும் பிடித்துள்ளன என்பது வருத்தம் தரும் செய்தி.

நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது ‘நிசி அகவல்’ கவிதை நூல் பற்றிய ஞானக்கூத்தனின் மதிப்புரை. இது போன்ற மதிப்புரைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

சா. ரு. மணிவில்லன்
சென்னை

உள்ளடக்கம்