Google   www kalachuvadu.com

அஞ்சலி: ஹபீப் தன்வீர் (1.9.1923 - 8.6.2009)
எனது ஊர் அரங்கம்; என் பெயர் ஹபீப்
சண்முக ராஜா

மார்ச் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய நாடகவிழாவில் எங்கள் குழுவின் குதிரை முட்டை நாடகத்தை நிகழ்த்திவிட்டு தொடர்ந்து அங்கேயே இருந்து பிற நாடகங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மார்ச் 8ஆம் தேதியன்று ‘நயா’ தியேட்டரின் சரண்தாஸ் திருடன் என்னும் நாடகம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஆறாம் முறையாக அந்நாடகத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று ஹபீப் சாப் மேடையில் தோன்றவில்லை. உடல்நலமற்றிருப்பதால் குழுவுடன் பயணிக்க இயலவில்லை என்ற தகவலும் வந்தது, நாடகமும் ஆரம்பித்தது. ஹபீப் தன்வீரின் மகள் நகீன் மற்றும் பல முகம் தெரிந்த சத்தீஸ்கர் நாட்டுப்புற நடிகர்கள் இசைஞர்களின் நிகழ்த்துதலுடன் நாடகம் நகர்ந்துகொண்டிருக்கையில் போலீஸ் வேடமிட்டு ஹபீப் அந்நாடகத்தில் தோன்றும் காட்சிகள் மட்டுமின்றி சரண்தாஸ் திருடன் முழுவதும் ஹபீப்பின் படிமங்கள் வியாபித்திருந்தது. இது என்னுடைய மனப்பதிவு மட்டுமல்ல. ஜூன் 8, 2009இல் அவர் விடைபெற்றுக்கொண்டதற்குப் பின்பு அவருடைய நாடகங்களைப் பார்க்கக்கூடிய ஆர்வலர்கள் இந்த எண்ணவோட்டத்திலிருந்து தப்புவது சிரமம். இந்திய நாடக ஆளுமைகளில் வெகுசிலருக்கு மட்டுமே இது வாய்த்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு நான் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்த புதிதில் ஹபீப் தன்வீரின் பிரதான நாடகங்களின் தொகுப்பு நிகழ்வு (Retro- spective) தில்லியில் நடந்தது. மிட்டி ஹி காடி முத்ர ராக்ஷஸ், சரண்தாஸ் திருடன், கிர்மா ஹி அமர் கஹானி முதலிய நாடகங்களின் மூலம் ஹபீப்பின் ஆளுமையில் நான் லயித்திருக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஹபீப்பின் நாடகங்களில் இசையும் கவிதையும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. ஒவ்வொரு நாடகத்தையும் சத்தீஸ்கர் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து அவர் வடிவமைத்திருந்த விதம் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது. இந்த வேறுபட்ட தனித்துவத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்திருந்தது ஹபீப்பின் அளப்பரிய அனுபவ ஞானம். இந்த அனுபவ ஞானத்தை அவர் பல்வேறு காலகட்டங்களில் போராடி பெற்றிருக்கிறார்.

ராய்பூரில் செப்டம்பர் 1, 1923இல் பிறந்த ஹபீப் தன்வீர் ஆரம்பக் காலகட்டத்தில் மும்பையில் இப்டாவிலும் (Indian People’s Theatre Association) பின்னர் பத்திரிகையாளராகப் பணியாற்றிய காலங்களில் பி.டபில்யூ.ஏவிலும் (Progressive Writers’ Association) தன்னை இணைத்துக்கொண்டார். மும்பை நாடக அனுபவங்களின் உந்துதலில் ஹபீப் இசை, கவிதையில் ஆர்வம் கொண்டு தனது நாடகச் செயல்பாடுகளை முன்னெடுக்க தில்லி செல்கிறார். 1954ஆம் வருடம் தில்லியில் ‘ஆக்ரா பஜார்’ என்னும் புகழ்பெற்ற நாடகத்தை இயக்குகிறார். காலனிய ஈடுபாட்டுடன் ஜரோப்பிய மாதிரிகளை முன்வைத்த ஆங்கில நாடகங்களில் மூழ்கிப்போயிருந்த தில்லி நாடகச் சூழலில் சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தைக் கலாச்சார பின்னணியில் பேசி, ஆக்ரா பஜார் மூலம் ஒரு மாற்றை முன்வைத்தார். ஆக்ரா பஜார் தயாரிப்பிற்குப் பின் ஹபீப் இங்கிலாந்தில் உள்ள ராடாவில் (Royal Academy of Dramatic Arts) நாடகம் பயிலச் செல்கிறார். மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பை நிறைவுசெய்யாமல் இரண்டாண்டுகளில் ராடாவை விட்டு ஹபீப் வெளியேறுகிறார். இங்கிலாந்தில் முன்வைக்கப்பட்ட நாடக அறமும் அணுகுமுறையும் நடிப்பு பற்றிய புரிதல்களும் அவருடைய தேவைகளைப் பூர்த்திசெய்யவில்லை. அது தனது அரங்கு குறித்த கனவுகளுக்கு நேர்மாறான பண்புகளைக் கொண்டுள்ளதாக நம்பினார். தனது தேடலின் விளைவாக ஹபீப் ஜெர்மன் சென்று பெர்ட்டோல்ட் பிரக்டைச் சந்திக்கத் திட்டமிட்டார். அவர் செல்வதற்கு முன்பாகவே பிரெக்ட் இறந்துவிட 8 மாதங்கள் ஜெர்மனியில் தங்கி பிரெக்டின் நாடகங்களுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எட்டு மாத கால ஜெர்மன் வாசத்தில் ஹபீப், பிரெக்டின் காவிய பாணி அரங்கின் சாராம்சத்தை மிகக் கச்சிதமாக உள்வாங்கிக்கொள்கிறார். இது அவரது நாடகப் புலமைக்கு வளம் சேர்க்கிறது. இந்தியாவிற்குத் திரும்பியவுடன் ஹபீப் தனது முதல் தயாரிப்பாக சூத்ரகாவின் மிருச்சகடிகத்தை “மிட்டி ஹி காடி”யாக வடிவமைக்கிறார். மிட்டி ஹி காடியில் அவர் சத்தீஸ்கர் நாட்டார் நடிகர்களை முதன்முறையாக ஈடுபடுத்தினார். 1959இல் தனது மனைவியும் நாடகக்காரருமான மோனிகா மிஸ்ராவுடன் இணைந்து ‘நயா’ என்னும் நாடகக் கம்பெனியை ஆரம்பித்தார். நயாவைத் தொடங்கி நாட்டுப்புற நிகழ்கலைகளான நாச்சா, பந்து வானியை முன்வைத்துச் சில பயிலரங்குகளை நடத்தினார்.

மேற்கத்திய மரபைப் பின்பற்றி முன்திட்டமிடல் அடிப்படையில் நாட்டார் நடிகர்களைக் கையாளுதலும் மிகத் தவறான போக்கென ஹபீப் எதிர்த்தார். பயிலரங்கில் புதுவிதமான தளகற்பனை அணுகு முறைகளை உருவாக்கினார். ஹபீப் உருவாக்கிய கருதுகோள்கள் நிகழ்த்துக்கூறுகளை மையப்படுத்தியமைந்தவை. அவரது நாடகங்களில் தொழிற்பட்ட நாட்டார் தன்மைகள் காட்சித் தோரணங்களற்ற இயல்பானவை. சங்கீத நாடக அகடமி திட்டமாக முன்வைத்து இந்தியா முழுவதிலும் தடுப்பூசி போடுவது போல் பின்பற்றப்பட்ட நாடகங்களில் நாட்டார் கலைகளைப் பயன்படுத்தியதற்கும் ஹபீப் நாட்டார் கலைகளை அணுகியதற்கும் மிகுந்த வேறுபாடுகளை நாம் உணர முடியும். இந்த நுண்ணிய வேறுபாட்டிற்குக் காரணம் அடையாளம் - அடையாளத்தைத் தேடுதல் என்னும் செயல்பாட்டை ஹபீப் என்றுமே Literalஆகப் புரிந்துகொண்டவரல்ல. அதனால்தான் ஆக்ரா பஜார், சரண்தாஸ் திருடன், மாடேரம் கா சத்யாகிரஹ், லாலா ஷோக்ரத் ராஜ், ஸக்ரிலி ஹவா, போங்கா பண்டிட் போன்ற முக்கிய நாடகங்களைத் தயாரிக்க முடிந்தது. 85 வயதில் விடைபெறும்வரை நீர்த்துப்போகாமல் My Village is Theatre, My Name is Habib எனக் கூறியபடி பணியாற்றிய அவர், தனக்கு முன்பிருந்த பல்வேறு பாதைகளில் இளமைப் பருவத்திலிருந்து இறுதிவரை மக்களை நோக்கிய பாதைகளையே தெரிவுசெய்தார். எதிர் கலாச்சாரப் பண்புகள் கொண்ட அவரது தெரிவுகள் எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்துபவை.

திருவனந்தபுரம் விழாவில் சரண் தாஸ் திருடன் நாடகம் முடிந்ததும் நாடக விழா இயக்குநர் அபிலாஸ் பிள்ளை ‘நயா’ குழுவினருக்கு நினைவுப் பரிவு வழங்குவதற்கு என்னை அழைத்தார். பரிசு வழங்கி முடித்தவுடன் ஹபீப் அவர்களுடைய மகள் நகீனிடம், “தில்லியில் மேகதூத் திறந்தவெளி அரங்கில் பெரிய அரச மரத்தடியில் பத்து வருடங்களுக்கு முன்பு நான் சரண்தாஸைப் பார்த்தேன். இன்று உள்அரங்கில் கூடச் சிறிய மரக்கன்றுடன்தான் நிகழ்வை முடித்திருக்கிறீர்கள்” என்றேன். அவர், “விருட்சம் தவிர்க்க முடியாதது. அது எங்களை ஆற்றலோடு இயக்குகிறது” என்றார். இன்று நகீனுக்கு மட்டுமல்லாது அரங்கை நேசிக்கும் அனைவருக்கும் ஹபீப் சாப் ஒரு விருட்சமாகியிருக்கிறார்.

உள்ளடக்கம்