|
திருவனந்தபுரம் செனட் ஹாலின் தாழ்வாரம் வழியாக ஒரு மலைப்பாம்புபோல உடல்
பெருத்து வெளியே நீளும் மக்கள் வரிசைக்குப் பின்னால் நிற்கும்போது நான் யோசித்தேன்
- மாதவிக்குட்டி எனக்கு யார்? இந்த இரவில் இத்தனை பொறுமையுடன் எதற்காக நான் இங்கே
காத்து நிற்கிறேன்? கூட்டம் மெல்ல நகர்ந்தது. அரைமணி நேரத்துக்குப் பின்பு நானும்
மாதவிக்குட்டியின் உடலருகில் வந்து சேர்ந்தேன். யாரோ கொடுத்த பூக்களை இரும்பு
பீடத்தில் வைத்த கண்ணாடிப் பேழைமேல் தூவி வணங்கினேன். அந்தக் கண்ணாடிக்குக் கீழே
உறங்கும் முகத்தைத் தேடிப் போவதிலிருந்து என் கண்களை மனப்பூர்வமாகத் தடைசெய்தேன்.
என் மனதுக்குள் பதினாறாவது வயதில் நான் பார்த்த தேஜோமயமான அந்த அழகு மட்டும்
போதும் என்று தீர்மானம் செய்திருந்ததனாலேயே அந்த முகத்தைக் கடைசியாகப்
பார்ப்பதிலிருந்து என் கண்களைப் பின்வாங்கச் செய்தேன். மறுநாள் பாளையம் ஜும்மா
மசூதியில் நடந்த கபரடக்கத்தைப் பார்க்கப் போகவில்லை. இரங்கல் கூட்டங்களாலும்
அஞ்சலிக் கட்டுரைகளாலும் கேரளம் மாதவிக்குட்டியின் மரணத்தைக் கொண்டாடியது.
வாழ்ந்தபோது புரிந்துகொள்ளப்படாமல் போன ஒருவர் இறந்த பிறகும் புரிந்து
கொள்ளப்படாமல் போனதன் சடங்குக் காட்சிகளாக இருந்தன அவை.
கல்கத்தா, பம்பாய் போன்ற பெரு நகரங்களிலிருந்து கேரளத்துக்கு நீட்டப்பட்ட ஒரு
பாலத்தின் வழியாக இடையிடையே நடந்து வந்தும் கொஞ்ச காலம் இங்கேயே தங்கவும் செய்த
சஞ்சாரியாக இருந்தார் மாதவிக்குட்டி. புன்னையூர்க் களத்தின் பசுமையில் வாழ்க்கையைத்
தொடங்கி முற்றிலும் நகரமயமான அமைப்புகளால் தனக்குள்ளே இன்னொரு உலகை
உருவாக்கிக்கொண்டவர் அவர். மலையாளியின் குறுகலான சிந்தனைகள் ஒருபோதும் அவரைத்
தீண்டியதில்லை. இளம்பருவத்திலேயே மாதவிக் குட்டியின் வாழ்க்கை புன்னையூர்க்
களத்திலிருந்து கல்கத்தாவுக்கும் பம்பாய்க்கும் சஞ்சாரம் செய்தது. கிராமப்புறத்தின்
பசுமையிலிருந்து நகரத்தின் வெயிலுக்கும் திறந்துவைத்த ஆகாயங்களுக்கும் அந்தப் பயணம்
வளர்ந்தது. மாதவிக்குட்டி என்று மலையாளத்திலும் கமலாதாஸ் என்று ஆங்கிலத்திலும்
பெயர்களை வைத்துக்கொண்டார்.
1976இல் நெருக்கடிநிலைக் காலத்தில் கேரள அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப மாதவிக்குட்டி
கேரளம் முழுவதும் சஞ்சரித்தார். சுற்றுலாவுக்கு வாய்ப்புள்ள இடங்களைக் கண்டுபிடித்து
அரசுக்கு அறிவிப்பதுதான் பயணத்தின் நோக்கம். அரசுக்குச் சமர்ப்பித்த பயணக்
குறிப்புகள் இவ்வாறு முடிகின்றன:
‘மீண்டும் பம்பாய்க்குத் திரும்பியதும் நான் களைத்துப்போயிருந்தேன். சோர்வும்
முதுமையும் சட்டென்று என்னைப் பீடித்தாற் போலிருந்தது. நினைத்துப் பார்க்கும்போது
கேரளத்தில் எனக்குக் கிடைக்காமற்போனது சுதந்திரமான இடையீடுகளும் உரையாடலும்தான்.
நட்பார்ந்ததும் அறிவுப்பூர்வமானதுமான உரையாடல். நிச்சயமாக மலையாளிகள் அபரிமிதமான
எழுத்தறிவு பெற்றவர்கள்தாம். ஆனால் முற்றிலும் நட்பார்ந்தவர்களல்ல. அவர்களுடைய
கண்களில் எப்போதும் சந்தேகம் துருத்திக்கொண்டு இருக்கிறது’.
மாதவிக்குட்டி கேரளத்தை, மலையாளியை எப்படிப் பார்த்தார் என்பதன் சான்று இது. பல
வருடங்களுக்குப் பிறகு கேரளத்துக்குத் திரும்பியபோதும் இங்கேயே வசிக்கத்
தொடங்கியபோதும் அவர் கேரளத்துக்கு அந்நியமானவராகவே இருந்தார். ஏதோ
வேற்றுக்கிரகத்திலிருந்து வழிதவறி வந்த பைத்தியக்கார ஜீவன் என்று மாதவிக்குட்டியை
மலையாளி தவறாகவே புரிந்துகொண்டான். மாதவிக்குட்டியோ கட்டுப்படுத்த முடியாத
படைப்புப் பித்துடன் இந்தச் சமூகத்துடன் உரையாடல் நடத்த வீணாக
முயன்றுகொண்டிருந்தார். அவருடைய சொற்களைக் கேட்க ஒருபோதும் ஒரு காதும்
விரியவில்லை. நாளுக்கு நாள் இருள் மூடிய இடங்களை நோக்கியே சுருங்கிப்போகும்
மலையாளச் சமூகத்தின் முன்னிலையிலேயே அவர் மதம் மாறினார். திடீரென்று கவிந்த
இருட்டைப் போல பர்தா அவரை மூடியது. கமலாசுரய்யா என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவதூறுகள் தொடர்ந்தன. ‘மலையாளிகளுக்கு என்னை
வேண்டாம்’ என்ற சங்கடத்துடன் கமலாசுரய்யா பூனாவுக்குப் பயணமானார்.
மாதவிக்குட்டியின் ஸ்தாயி பாவம் அன்பாக இருந்தது. அவர் மாதவிக் குட்டியிலிருந்து
கமலாதாஸுக்கும் அதிலிருந்து கமலாசுரய்யாவுக்கும் சஞ்சாரம் செய்தார்.
ஹிந்துவிலிருந்து இஸ்லாமுக்கு சஞ்சரித்தார். மலையாள மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு
சஞ்சரித்தார். கடைசியில், மரணத்துக்குப் பிறகு தன்னை ஒருபோதும் புரிந்துகொள்ளாத
மலையாள மக்களின் முன்னால் மீண்டும் ஒருமுறை வந்தார். அவர்களுக்கும் எதுவும்
புரியவில்லை. கேரளம் மூடிவைத்த ஒரு பெரிய அறை. ஜன்னலுக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்று தெரியாத ஒரு மக்கள் கூட்டம் அங்கே வசிக்கிறது. மலையாளி என்றைக்குத் தன்னுடைய
கிணற்று வாழ்க்கையைக் கடந்து வெளியே இறங்குகிறானோ அன்றைக்குத்தான் சஞ்சாரியைப்
புரிந்துகொள்ள முடியும். அதுவரை மலையாளியின் கண்களை இருட்டின் பர்தா மூடித்தான்
இருக்கும்.
o
உண்ணி ஆர் - மலையாள இலக்கியத்தில் புதிய தலைமுறையைச் சேர்ந்த சிறுகதையாளர்.
ஏஷியாநெட் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். திருவனந்தபுரத்தில்
வசிக்கிறார்.
|