|
தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்று வாசகர் வட்டம். அது புக் கிளப் மாதிரி.
உறுப்பினர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நல்ல தரமான புத்தகங்கள்; தரம் என்றால்
புத்தகத்தின் கருத்து, வளம் என்பது மட்டுமல்ல, புத்தகத் தயாரிப்பிலும் தரமாகக்
கொடுப்பது என்ற தீர்மானத்தோடு 1964-65 ஆண்டுகளில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வாசகர்
வட்டத்தைத் தொடங்கினார். சிறந்த வாசகரான லட்சுமியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி வாசகர்
வட்டத்தின் அமைப்பிலும் நிர்வாகத்திலும் புத்தகங்கள், ஆசிரியர்கள் தேர்விலும் பங்கு
பெற்றிருந்தார்.
ஆண்டிற்கு ஆறு புத்தகங்கள், கட்டுரைகள், பயண நூல்கள், மக்களுக்குப் பயனுள்ள தகவல்
புத்தகங்கள், தொகுப்பு நூல்கள், படைப்பிலக்கியம் எல்லாம் வாசகர் வட்டம்
வெளியீட்டில் இடம்பெற்றன. முதல் புத்தகமாக ராஜாஜியின் சோக்ரதர் 1965 ஜனவரியில்
வெளிவந்தது.
தமிழ்ப் புத்தகப் பதிப்பில் வாசகர் வட்டம் மாறுதலாக அமைந்தது. வடிவமைப்பு, காகிதம்,
அச்சு, பைண்டிங், முகப்போவியம் - எல்லாவற்றிலும் வித்தியாசப்பட்டு இருந்தது.
முகப்போவியம் கலாசாகரத்தின் கோட்டோவியம். அதையே நிறம் மாற்றி ஒவ்வொரு
புத்தகத்திற்கும் வாசகர் வட்டம் பயன்படுத்தியது. அது வாசகர் வட்ட வெளியீடுகளை
அடையாளங் காணும் விதமாகவே அமைந்தது.
வாசகர் வட்டத்தின் பெரும் பங்களிப்பு என்பது அது வெளியிட்ட படைப்பிலக்கியம்.
குறிப்பாக நாவல். அது பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை மறுபிரசுரம் செய்யவில்லை.
தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று நம்பியவர்களை வாசகர்
வட்டத்திற்கு நாவல் எழுதிக் கொடுக்கக் கேட்டுக்கொண்டது. அப்படி எழுதிய நாவல்களை
அது வெளியிட்டது. தொடர்கதைகளே நாவல் என்னும் பெயர் பெற்றிருந்த தமிழ் இலக்கியத்தில்
நாவல் என்பது தனியாக எழுதப்படும்போது எவ்வாறு கட்டமைப்பு பெறுகிறது என்பதை அவை
தெளிவுபடுத்தின. தி. ஜானகிராமன் - அம்மா வந்தாள், ஆர். சண்முகசுந்தரம் - மாயத் தாகம்,
எம்.வி. வெங்கட்ராம் - வேள்வித் தீ, ஆ. மாதவன் - புனலும் மணலும், நீல. பத்மநாபன் -
பள்ளிகொண்டபுரம், லா.ச. ராமாமிர்தம் - அபிதா, சா. கந்தசாமி - சாயாவனம் இவையெல்லாம்
வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பட்டவை. அதாவது முழுவதும் எழுதப்பட்ட பின்னர் நூலாக
வெளிவந்தவை. அதனால் அவை தொடர்கதைகளிலிருந்து வித்தியாசப்பட்டு இருந்தன.
வாசகர் வட்டம் - வெளியீட்டில் முதலில் கவனம் பெற்றது தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள்.
நீண்ட தொடர்கள் எழுதுவதில் வல்லவர் எனப் பெயர் பெற்றிருந்த தி. ஜானகிராமன், அம்மா
வந்தாள் வெளி வந்ததும் இலக்கியம் அல்லாததற்காக விமர்சனத்தை எதிர்கொண்டார். முதலில்
அது ஆபாசமான புத்தகம் என்றும் குறிப்பிட்ட ஜாதி மீதே விமர்சனத்தை வைக்கிறது எனவும்
எழுதப்பட்டது. சி. சு. செல்லப்பா எழுத்து இதழில் ‘தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள்’
என்று தலைப்பிட்டு விமர்சனம் எழுதினார். ஓர் அன்பர், காந்தியின் பக்தர்,
‘சுதந்திரப் போராட்ட வீரர்
சத்தியமூர்த்தியின் மகளாகிய நீங்கள் இப்படிப்பட்ட புத்தகத்தை வெளியிடலாமா? என்று
கடிதம் எழுதியிருந்தார்.
வாசகர் வட்டம் கிருஷ்ணமூர்த்தி நூல்களைப் பதிப்பிப்பதோடு தன் இல்லத்தில் இலக்கிய
ஆசிரியர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்திவந்தார். அத்துடன் விருந்தளித்து இலக்கிய
ஆசிரியர்களை உபசரித்தும் வந்தார்.
நான் அவரது இலக்கியக் கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். மணிக்கொடி
சீனிவாசன், பி.எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, சிட்டி, சிவபாதசுந்தரம், சிதம்பர
சுப்பிரமணியம், திரிலோக சீதாராமன், சி.சு. செல்லப்பா, கலாசாகரம் ராஜகோபால்
உள்ளிட்ட தமிழின் முக்கியமான படைப்பாளிகளோடு எனக்கு வாசகர் வட்டத்தின் வழியாகவே
பழக்கம் ஏற்பட்டது.
1965ஆம் ஆண்டில் நான் சாயாவனம் நாவலை எழுதி முடித்து, இரண்டு முறை மறுபடியும்
மறுபடியும் மாற்றி எழுதிக் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்தேன். என் நண்பரும்
எழுத்தாளருமான ம. இராஜாராம் வாசகர் வட்டத்தின் வழியாக வெளியிட நல்ல நாவல்கள்
கேட்கிறார்கள். உங்கள் நாவலைக் கொடுக்கலாம் என்றார். அவரும் என் நாவலைப் படித்தது
இல்லை. ஏனெனில் நான் என் கையெழுத்துப் பிரதியை யாரிடமும் படிக்கக் கொடுக்கவில்லை.
வாசகர் வட்டத்தின் வெளியீடுகள், புத்தகத் தயாரிப்பு மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
எனவே சாயாவனத்தை மூன்றாம் முறையாக எழுதி எடுத்துக்கொண்டு வாசகர் வட்ட
அலுவலகத்திற்குச் சென்றேன். அலுவலகம், வீடு எல்லாம் ஒன்றாகவே இருந்தன. நான்
சென்றபோது மானேஜர் குண்டுகோபால் என்பவர் இருந்தார். நான் நாவலை அவரிடம்
கொடுத்தேன். அவர் அதை வாங்கிக்கொண்டு ‘லட்சுமி அம்மா கொடைக்கானல் போய்
இருக்கிறார்கள். வர ஒரு மாதம் ஆகும். வந்ததும் கொடுத்துவிடுகிறேன் என்றார். ‘சரி’
என்று எழுந்து வந்துவிட்டேன். ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு
இருவரும் சென்றிருந்தோம். எனக்கு அவரைத் தெரியும். ஆனால் என்னை அவருக்குத் தெரியாது.
ஒரு அன்பர், லட்சுமி கூப்பிடுவதாகச் சொன்னார். நான் அவர் பக்கம் சென்றேன். என்னைப்
பார்த்ததும் “ரொம்ப சந்தோஷம். சாயாவனம் படித்தேன்” என்றார். நான் பதிலொன்றும்
சொல்லவில்லை. “அநேகமாக சாயாவனத்தை வெளியிடலாம் என்று இருக்கிறோம். இது இறுதியான
முடிவில்லை, முறைப்படி பிறகு தகவல் தெரிவிக்கிறோம்” என்றார். நான்
விடைபெற்றுக்கொண்டேன்.
1969ஆம் ஆண்டில் சாயாவனம் வாசகர் வட்ட வெளியீடாக வந்தது. வாசகர் வட்டம் வெளியிட்ட
நாவல்களிலேயே அதுதான் ஓர் எழுத்தாளனின் முதல் நாவல். அதை வெளியிட்டதில்
அவர்களுக்கும் பெருமை. எனக்கும் பெருமை. வாசகர் வட்டம் - சமூகம், கலை, பண்பாடு
சார்ந்து செயல்பட்டது. தமிழர்களின் வாழ்வாதாரமாக இருந்த காவிரி ஆற்றின் கதையைப்
புத்தகமாக எழுதி வெளியிட வேண்டுமெனக் கிருஷ்ணமூர்த்தி தீர்மானித்தார். அதற்கென
எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், சிட்டி என்று முடிவுசெய்து அவர்களோடு ஓவியர்
கலாசாகரம் ராஜகோபாலையும் ஒரு நீண்ட பயணத்திற்கு அனுப்பிவைத்தார். அதன் வழியாக
உருவானதுதான் நடந்தாய்; வாழி, காவேரி!. அது கிருஷ்ணமூர்த்தியின் கனவு நூல். 1971ஆம்
ஆண்டில் வெளிவந்தது. வாசகர் வட்டம், தான் வெளியிடும் நூல்களின் முதல் பதிப்பு
உரிமையை மட்டுந்தான் வைத்துக்கொண்டது. பிற உரிமை எல்லாம் அதன் ஆசிரியர்கள்
வசமிருந்தது. ஆனால் நடந்தாய்; வாழி, காவேரி! உரிமை கிருஷ்ணமூர்த்தியிடம்
இருந்தது.
2006ஆம் ஆண்டில் ஒரு நாள் காலச்சுவடு கண்ணன் தொலைபேசியில் அழைத்து, வாசகர் வட்டம்
வெளியிட்ட நடந்தாய்; வாழி, காவேரி!யை வெளியிட உரிமை கொடுப்பார்களா? என்று கேட்டார்.
“வாருங்கள் கேட்கலாம்” என்றேன். நான் எப்போதும் உரிமையுடன் செல்லும் இடம் லட்சுமி
கிருஷ்ணமூர்த்தி இல்லம். நானும் கண்ணனும் சென்றோம். சிறிது நேரம் பொதுவாக
இலக்கியம் பற்றிப் பேசினோம். பிறகு, கண்ணன் நடந்தாய்; வாழி, காவேரி!யை வெளியிட
ஆசைப்படுகிறார்” என்றேன். “உரிமை அவரிடம்தான் இருக்கிறது” என்று லட்சுமி தன் கணவரைக்
காட்டினார். நாங்கள் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். “நான்
நடந்தாய்; வாழி, காவேரி!யை வெளியிட யாருக்கும் உரிமை கொடுப்பதாக இல்லை. ஆனால்
நீங்கள் கேட்பதால் சரி, நன்றாக வெளியிட வேண்டும்” என்றார். “ஒரு பதிப்புதான்.
சிறப்பு வெளியீடாகவே கொண்டு வருகிறேன்” என்றார் கண்ணன். நாங்கள்
விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
ஆறு மாதம் சென்ற பின்னர் கண்ணன் அழைத்தார். சென்னை வந்திருக்கிறேன்நடந்தாய்; வாழி,
காவேரி! வந்து இருக்கிறது. நீங்களும் வாருங்கள். இரண்டு பேரும் சென்று
கொடுத்துவிட்டு வருவோம் என்றார். நாங்கள் இருவரும் சென்றோம். லட்சுமி,
கிருஷ்ணமூர்த்தியிடம் ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிப்
புரட்டிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
வாசகர் வட்டம், தமிழ்ப் புத்தகங்களில் தரம் என்பதிலும் தயாரிப்பில் முதன்மை
என்பதிலும் கவனம் செலுத்தியது. அதை உருவாக்கிய லட்சுமி கிருஷ்ணமூர்த்தி ஜீவிதமாக
இருக்கிறார்.
|