|
அலுவல்முறையில் அல்லாத மடல்கள் எழுதுவதும் பதிலிடுவதும் அருகிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை அமைப்பில் ஏறத்தாழ மூன்று திங்களாக பதிலுக்காக ஓர் அஞ்சலட்டை என் மேசைமீது
காத்துக்கொண்டே இருந்தது. விடை எழுத வேண்டும் என்ற உணர்வும் அவ்வப்போது
எழுந்துகொண்டே இருந்தது. அந்தக் கடிதத்திற்கு இனி நான் விடை எழுதினாலும் அதைப் பெற
வேண்டியவர் இனி இல்லை. இச்செய்தி இரு கிழமைகளுக்கு முன் அதிர்ச்சி அளித்தபடியே என்
செவியில் சேர்ந்தது. நான் பதிப்பித்திருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதிய
‘கட்டளைக் கலித்துறை’ நூலின் பத்துப்படிகள் வேண்டும் எனவும், கிடைக்குமிடம் கேட்டும்
தமிழ் மண்ணின் முதுபெரும் இலக்கண அறிஞர்களுள் ஒருவரான புதுச்சேரி இரா. திருமுருகன்
எழுதிய கடிதம் மட்டும்தான் இப்போது இருக்கின்றது.
வாழையடி வாழையென வந்த பழைய தலைமுறையின் எச்சமாக விளங்கிய அறிஞர் பெருமக்கள்,
பழந்தமிழ் இலக்கண, இலக்கியப் புலமை மரபின் குறியீடாக நம் கண்காணாக் காட்சி
தந்துகொண்டிருந்த மூத்த தமிழறிஞர் பாரம்பரியத்தினர் ஒவ்வொருவராக
விடைபெற்றுக்கொள்ளும் அவலம் அண்மைக்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தி.வே.
கோபாலையர், பாலசுந்தரனாரை அடுத்து இப்போது இரா. திருமுருகன் (1929-2009)
நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டிருக்கின்றார்.
ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் முதுகலை பயின்றுகொண்டிருந்த காலம்.
சருவோதயத் தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணியம் மீண்டும் நடத்திய ‘ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி
கவிதா மண்டலம்’ இதழில் நான் பகுதி நேரமாக இதழ்ப் பணியை ஆற்றிக்கொண்டிருந்தேன். அதன்
இதழாசிரியர் குழுவில் ஒருவராக இரா. திருமுருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது.
எஸ்.ஆர்.எஸ். அவர்களோடு புதுவை சென்றிருந்தபோது அவர் இரா. திருமுருகனை
அறிமுகப்படுத்தி அவரது பெரும்புலமையைக் குறிப்பிட்டுக்கூறினார். அன்று கம்பன் கழகக்
கவியரங்கம் என்று கருதுகின்றேன். அந்த நிகழ்வில் இரா. திருமுருகன் வழங்கிய மரபுக்
கவிதையின் வீச்சு என்னை வியக்கவைத்தது. ஓரீராண்டுகளுக்குப் பின்னர்ப் புதுவையில்
நிகழ்ந்த ஓர் இலக்கணக் கருத்தரங்கத்திற்கு என் பேராசிரியர் பொற்கோ
பங்கேற்றதையொட்டி ஆய்வு மாணவர்கள் சிலர் சென்றிருந்தோம். அப்போது இரா.
திருமுருகனின் உரையைக் கேட்டதாக நினைவு. இவ்விரு நிகழ்வுகளின் பின் என் நெஞ்சில்
வீறார்ந்த, தமிழ்ப் புலமையின் குறியீடான அறிஞர் பெருமக்களின் தோற்றச்
சித்திரங்களுள் ஒன்றாகத் திருமுருகனின் உரு பதிந்துவிட்டது. பின்னர்த் தேடித்தேடி
அவருடைய நூல்களைப் பயின்று வந்திருக்கிறேன். என்னுடைய புலமை வளர்ச்சியில் அவருடைய
நூல்களுக்கும் ஓரிடம் உண்டு என நன்றியோடு இத்தருணத்தில் நினைக்கின்றேன்.
பிற்காலத்தில் என்னுடைய மாணவர்களை யெல்லாம் திருமுருகனின் நூல்களைப் படிக்கத்
தூண்டியிருக்கின்றேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முதுகலை
வகுப்பில் கடந்த ஏழு ஆண்டுகளாக இரா. திருமுருகனை இருபதாம் நூற்றாண்டின் தனித்தன்மை
வாய்ந்த இலக்கணியாக அறிமுகம் செய்திருக்கின்றேன்.
தமிழ் நலம் நாடும் உள்ளம், தமிழின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் உணர்வு வேகம்,
எளிமை, பக்குவப்பட்ட பண்புநலன், தமிழின் பிற இலக்கண அறிஞர் பெரு மக்களுக்கு
வாய்க்காத இசைத்துறைப் பேரறிவும் வாய்க்கப்பெற்ற தனிப்பெரும் புலமை, குரலிசை,
கருவியிசைத்திறன் வாய்க்கப்பெற்ற வல்லமை, தொடர்ச்சியான புலமைப் பங்களிப்பு,
நுட்பமான இலக்கண நோக்கு - இவற்றிற்கு ஓர் உருவம் கொடுத்து அந்த உருவத்திற்கு ஒரு
பெயர் அளித்தால் அதுதான் திருமுருகன்.
திருமுருகன் படைத்த ‘கம்பன் பாடிய வண்ணங்கள்’, ‘பாவலர் பண்ணை’, ‘சிந்துப்பாடல்களின்
யாப்பிலக் கணம்’, ‘பாவேந்தரின் இசைத்தமிழ்’, ‘சிந்துப்பாவியல்’, ‘பாவேந்தர் வழி
பாரதி வழியா? (யாப்பியல் ஆய்வு), முதலிய நூல்கள் தமிழ் யாப்பியலில் தனித்தன்மை
வாய்ந்த ஆய்வுகள். அவருடைய ‘கம்பன் பாடிய வண்ணங்கள்’ நூலை மதிப்பிடும்போது தி.வே.
கோபாலையர்,
எஃகு செவியும் நுண்ணுணர்வும் உடைய இயலிசைப் புலவர் இரா. திருமுருகனார் பல்லாண்டுகள்
அரிதின் முயன்று கம்பர் பெருமான் பாடிய பலவகை விருத்தப் பாடல்களையும் அவருக்கு
முற்பட்ட தமிழ்ச் சான்றோர் நமக்கு வழங்கிய விருத்தப் பாடல்களுடன் ஒப்பிட்டு ஆய்ந்து,
கம்பர் அருளிய விருத்தப்பாக்களில் பல வகைகளையும் எஞ்சாமல் நமக்கு எடுத்துக்காட்டிக்
கம்பருடைய நூலில் 96 வகை ஒலி வேறுபாடுகளாகிய வண்ணங்கள் அமைந்துள்ள திறத்தை இந்நூலில்
நிறுவியுள்ளார்.
எனவும்,
“சந்தங்களில் பழக்கமில்லாத என்போலியர் பலர் ஆசிரியர் கூறுவனவற்றை முழுமையாக உணர்தல்
இயலவில்லை”
எனவும் குறித்துள்ள பதிவுகள் திருமுருகனின் தனித்திறத்தை உணர்த்தும். தமிழ்கூறு
நல்லுலகத்திலேயே யாப்பியலும் இசையியலும் ஒருசேர அறிந்தவராகவும் இருதுறைகளையும்
ஒன்றுக்கொன்று பயன்படுத்தி ஆராய்ந்தவராகவும் நம் காலத்தில் விளங்கியவர்
இரா.திருமுருகன் ஒருவரே. இந்த மதிப்பீட்டை இந்த இரங்கலுரைக்காக எழுதவில்லை; ஒரு நூல்
வெளியீட்டு விழாவில் என் தலைமையில் இரா. திருமுருகன் சிறப்புரை ஆற்றியபோதும்
அரங்கிலேயே சான்றுகளோடு எடுத் துரைத்திருக்கின்றேன். கடந்த ஆண்டு எங்கள் துறையில்
செம்மொழிக்கான பயிலரங்கில் அவர் உரையாற்ற வந்தபோதும் எடுத்துரைத்திருக்கின்றேன்.
என்றாலும் இருதுறைகளை இணைத்து ஆராய்ந்த அவர்தம் ஆய்வுக் கருத்துகளுள் எனக்குச் சில
கருத்து மாறுபாடுகளும் உண்டு. இதனை என்னுடைய ‘தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி’யில்
பதிவுசெய்திருக்கின்றேன். ஆனாலும் அவருடைய கருத்துகளை, முடிவுகளை முழுமையாக
மதிப்பீடு செய்ய என்னால் முடியாது. இயலும் இசையும் தெரிந்த இன்னொருவர் பிறந்து
வந்தால்தான் உண்டு.
புதுவையிலிருந்து அவர் நடத்திய ‘தெளிதமிழ்’ என்னும் திங்கள் இதழ் தமிழ்ப் புலமை
தொய்ந்துபோய் இருக்கும் சமகாலத்தில் புதிய எழுச்சியை ஊட்டும் வண்ணம் மரபிலக்கணப்
பரப்பில் அரும்பணிகளை ஆற்றிவந்தது.
இலக்கணம், யாப்பியல், இசைத்தமிழ் என நுட்பமான புலமைத்தளங்களில் அரும்பணி புரிந்த இரா.
திருமுருகன் ஏறத்தாழ ஐம்பது நூல்கள் எழுதியிருக்கிறார். புதுவை அரசின் தமிழ்
வளர்ச்சிச் சிறகம் உள்ளிட்ட அரசு அமைப்புப் பொறுப்புகளிலும் இலக்கிய அமைப்புப்
பொறுப்புகளிலும் அவர் இருந்திருக்கின்றார். புதிய இலக்கணம் வரையக் குழு ஒன்றைத்
தமிழக அரசு அமைத்தபோது அவர் அதிலும் இடம்பெற்றதாக நினைவு. தமிழ்ப் பாடநூலாக்கம்,
பாடபேத ஆய்வு உள்ளிட்ட துறைகளிலும் அவர் ஈடுபட்டிருந்திருக்கிறார். நடுவணரசின்
நல்லாசிரியர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார். மரபுக் கவிதைப் படைப்பில்
இளந்தலைமுறைக்கு ஈடுபாடு வரும்வகையில் செயல் திட்டங்களை அறிவித்து, பயிற்றி, தூண்டி
வளர்க்கும் பணியிலும் முனைப்போடு அவர் ஈடுபட்டிருந்தார்.
திருமுருகன் தமது உடலை ஜிப்மர் ஆய்வு மாணவர்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்தும்
வகையில் நல்கும் படி எழுதிவைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர் அறிஞர் மட்டுமல்லர்;
மனிதரும்கூட.
சென்ற ஆண்டு எங்கள் துறை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தபோது நெடுநேரம் என்
அறையில் அமர்ந்திருந்தார். யாப்பியல் ஆய்வில் தலைப்பட்டுள்ள என் ஆய்வு மாணவர்கள்
அவரைச் சந்தித்து மகிழ்ந்தனர். வில்லிபாரத யாப்பமைதி குறித்துத் தான் முனைவர்
பட்ட ஆய்வை மேற்கொண்டிருப்பதை என் ஆய்வு மாணவி ஒருவர் தெரிவித்தார். அதற்கு அவர்
தான் வில்லிபாரத யாப்பமைதியை ஆராயத் திட்டமிட்டிருந்ததைக் கூறி இனித் தான் அதனைச்
செய்யத் தேவை இல்லை என்று சுட்டி மாணவியை வாழ்த்தினார். மூத்த இயல் இசை அறிஞர் இரா.
திருமுருகன் இறக்கவில்லை; தமிழ் யாப்பியலை ஆராயும் ஒவ்வொரு மாணவரின் ஆய்விலும்
கல்வியிலும் அவர் வாழ்கின்றார். |