|
(அவர் என்னிடம் சொன்னது)
கலைப் படைப்பு:
ஓர் அனுபவம். ஆழ்கடலில் நேரும் சலனத்தின்
சாட்சியாகக் கடலின் மேல் தளத்தில் நேரும் நீர்க்குமிழ்.
கோடு: இருகோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும் பகுதி முட்டு, காயம், இருள்.
ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாத பகுதி வெளி . . . ஒளி . . .
உருவத் தோற்றம்:
வரையப்படுவது அல்ல. ஜாலியாகச் சட்டையைக் கழற்றித் தரையில் வீசுவது.
வண்ணம்: காய்ந்த இலைச் சருகில் வண்ண பேத ஒளி விளையாட்டு மனத்திற்கு இதமானது.
கலைத் துறையில் வழிகாட்டி:
சூரிய நமஸ்காரம் பண்ணுகிறேன்.
கலைப் படைப்பு - துறையில் கவனிப்பு:
மக்கள் மத்தியில் பாரதியும் கண்ணதாசனும்
எழுதியவை கவிதைகள், கவிஞர்கள். இவற்றுக்கு இடையிலான நுட்ப வேறுபாடுகள் குறித்து நாம்
கவனமாக இருக்க வேண்டும்.
கல்லூரி அனுபவம்:
கல்லூரியில் மாணவனாகச் சேர்வதற்கு முன்பும் சேர்ந்த புதிதிலும் ஒரு
கிறிஸ்தவர் எனக்குப் பாதுகாப்பு அளித்து, எனது ஓவியங்களை விற்றுப் பணம் தந்தார். அது
எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது.
ஒரு நாள் எங்கள் வகுப்பு அறைக்கு வந்த திரு. ராய் சௌத்திரி அவர்கள், நான்
வரைந்துகொண்டிருந்த ஓவியத்தில் பிழை இருப்பதாகச் சொன்னார். அதைத் தன்னோடு
எடுத்துச் சென்று பிழை திருத்தம் செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் என்னைத்
தனது அறைக்கு அழைத்து, அந்த ஓவியத்தைக் காட்டி
“இப்போது எப்படி இருக்கிறது இந்த ஓவியம்?” என்றார்.
“நன்றாக இருக்கிறது” என்றேன்.
“ஏன் நன்றாக இருக்கிறது” என்றார்.
“இது நீங்கள் வரைந்த ஓவியம்” என்றேன். அவர் பார்வை அறைக்கு வெளியே என்னை வழி
அனுப்பியது. அவர் கல்லூரி பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். நான் கல்லூரியில்
ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டேன். கல்லூரிக்குள் வரமாட்டார். எப்போதாவது
கல்லூரிக்கு அருகில் இருந்த மருத்துவ நண்பர் அறைக்கு வந்து செல்வார். ஒரு நாள் அந்த
அறையில் திரு. ராய் சௌத்திரி அவர்களைப் பார்த்தேன். அவர் காலில் விழுந்தேன்.
“அய்யா தாங்கள் மிகப் பெரியவர், நான் மாணவப் பருவத்தில் துடுக்காகப் பேசியதற்குத்
தற்போது வருந்துகிறேன். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்றேன். என்னை
எழுந்திருக்கச் சொல்லி “பருவத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்கிறாய், இதுவே நீ மிகச்
சிறந்த ஓவியனாக வருவதற்கான அடையாளம்” என்றார்.
சக மாணவர்: நான் சந்தித்த விஸ்வகர்மா புத்திரர்களில் சிறந்தவன் அவன்தான். அந்தக்
காலத்தில் மிகத் துல்லியமாக என்னைக் கவனித்தவனும், என் வழித்தடங்களைப்
பின்தொடர்ந்தவனும் அவன் ஒருவனே. ஒரு நாள் என்னைத் தொடர்ந்து கல்லூரிக்கு
அருகிலிருக்கும் டீக்கடைக்கு அவன் வந்தான். அவனை என் அருகில் அழைத்து நான்
வைத்திருந்த சாராயத்தையும் சிகரட்டையும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தேன். அவற்றை
அவன் தனக்கு அன்னியம் என்று சொல்லி ஓடிப் போனான்.
அவன் உன்னையும் நெருக்கமாகக் கவனிப்பவன், உனக்குப் பிரியமானவன். . . அவன் யார் என்று
உனக்குப் புரிந்திருக்கும் என்று சிரித்தார்.
“முனுசாமி ஆசிரியர்” . . .
“ஆம் அவரேதான்” என்றார்.
சக ஆசிரியர்: விசாலமானதும், முற்றுப் பெறாததுமான தன் அரண்மனையில் அதுவரை
திறக்கப்படாத அறை சாவியைத் தொலைத்தவர்களில் ஒருவரும், அப்படித்
தொலைத்துவிட்டவர்களுக்கு நகல் சாவி செய்துகொடுப்பவர்களில் ஒருவரும் . . .
எனது மாணவப் பருவத்திலேயே என்னை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்திய ஆசிரியர்களில் திரு.
கே.சி.எஸ். பணிக்கர் அவர்களும் திரு. எல். தனபால் அவர்களும் குறிப்பிடத்
தகுந்தவர்கள்.
முற்றுப் பெறாத அரண்மனையில் அதுவரை திறக்கப்படாமல் திரு. பணிக்கர் அவர்கள் தொலைத்த
சாவி என்னிடமிருக்கிறது.
எக்காளச் சிரிப்பொலி. “திரு. தனபால் ஒரு தாயைப் போல் கலைத் துறையின் பேரிலும்
பயிலும் மாணவர்கள் பேரிலும் அதீத அக்கறை கொண்டவர். அவற்றைப் பேணிக் காக்கும் எல்லா
வல்லமையும் அவருக்கு இருந்தது. ஆனாலும் அவரது ஜீவ ஒளியை அறியாத பலரே அவரைச்
சூழ்ந்திருந்தார்கள்” என்றார்.
நான்: பிற கலைஞர் கலைப் படைப்பு குறித்த தங்கள் விமர்சனம்
அவரவருக்கு ஆயிரம் உறவு, ஆயிரம் பகை இருக்கு. இதற்கிடையில் பிறர்-பிறர் படைப்பு
பற்றி மனத்திற்குத் தோன்றிய குறையை சபையில் சொன்னால் முதலில் நம் நிம்மதி குழையும்.
நமது கையில் இருக்கும் சாப்பாடு கீழே தட்டிவிடப்படும் . . .
நான்: தங்களை மாபெரும் கலைஞர் என்றும் பல கலைஞர்களுக்குத் தாங்கள் முன்னோடி என்றும்
பலர் சொல்கிறார்கள் . . .
தன் இருகரம் கூப்பி வணங்கியபடி
அவர்: அப்படி இருப்பின் அது தேவ கிருபை . . . முன்னோடி, பின்னோடி என்பதற்கு
என்னிடம் ஏதுமில்லை. சிரிப்பொலி . . .
பேச்சுவாக்கில் அவர் “மண்ணில் பிறந்தோம், இங்குள்ள எல்லா துன்மார்க்கங்களுக்கும்
தர்ம காரியங்களுக்கும் ஆளானோம் . . . எனது பாவங்களை மன்னித்து இறைவன் என்னை
ஏற்றுக்கொள்வார் . . .” என்றார்.
(அவர் சொன்னதாகப் பிறர் என்னிடம் சொன்னது)
உச்சி வெயில் பொழுது.
திருவண்ணாமலை அருகில் சென்னயன் நாயக்கர் குளம் படிக்கட்டுகளில் செதுக்கப்பட்டிருந்த
புடைப்புச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர் அவற்றில் ஒரு பாலியல் காட்சி.
அதில் உள்ள மங்கை கையில் ஒரு கிளியை வைத்துக்கொண்டு இருக்கிறாள். அதைக் கண்டவர்,
அதன் அருகிலேயே அமர்ந்துகொண்டார்.
அவரை, அய்யா வெயில் அதிகமாக இருக்கிறது, அந்த மரத்தடி நிழலில் போய் அமர்வோம்
வாருங்கள்” என்று அழைத்தோம்.
கசாப்புக் கடையில் பிறந்தேன், அறுபட்ட ஆடுகளின் ரத்த சகதியும், மல நாற்றமும், வந்து
பேரம் பேசி, வியாபாரம் செய்பவர்களின் காலடி தடங்களுக்கு மத்தியில் வளர்ந்தேன்.
இப்போதும் அங்குதானிருக்கிறேன். ஆனால் நான் கசாப்புக் கடைக்காரனுக்குப்
பிறக்கவில்லை.
இப்படி ஒரு மனத் தோற்றத்தை வெளிப்படுத்துவதில் மயக்கமும் தயக்கமுமாக எவ்வளவு காலம்
கழிந்துவிட்டது. எனக்கு . . . என் காலத்திற்கு முன்னாடியே இப்படி ஒன்றைச்
செய்துவிட்டானே அந்தக் கிழவன். . .
அந்தக் கிளிக்கும் மங்கைக்குமான பரிமாற்றங்களில் என்னைவிட்டு விடுங்கள். . . நீங்கள்
போங்க” என்றபடி கண்கலங்க தலையை இரு கைகளிலும் புதைத்துக் கொண்டார் . . .
திரு. சந்தானராஜ் அவர்கள் கல்லூரி வளாக மரங்களில், புல்வெளியில், குவிந்த இலைச்
சருகுகளில், காரைப் பெயர்ந்த செங்கலில், திரைச் சேலையில் எங்கோ பிளிரும் வண்ணத்தில்,
காற்றைத் தள்ளிக் கொண்டு செல்லும் நடையில், அதிரும் சிரிப்பில், சபையில்
கூடியிருப்போரின் எதிர்பார்ப்பில், பிரத்தியேகமாகத் தன்னில் தேடிக்கொண்ட
சிம்மாசனத்தில், ஒளி ஊடுருவும் கண்ணாடியில் புராண அவதாரப் புருசர்களின் சாகசத்தில்,
வயிற்றில் ஓர் முகமுடைய முன்னோர் சிற்பத்தில்... இரங்கல் வயிரக்கல்லை நுணுக்கி
உண்டு மரித்து செல்வச் செருக்காய் உலாவரும் கலைஞர்களுக்கு எனது இரங்கலை
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
|