|
கவிஞர் ராஜமார்த்தாண்டன் 6.6.2009 அன்று காலமானார்.
ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி மாவட்டம், சந்தையடி கிராமத்தில் பிறந்தவர்
(1948). இளம் அறிவியல் கணிதப் படிப்பைக் கும்பகோணத்திலும், முதுகலைத்
தமிழ்ப் படிப்பைக் கேரளப் பல்கலைக்கழகத்திலும் முடித்த பின்பு புதுக்கவிதை
பற்றி, கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக சேர்ந்தார். அப்போது
கோகயம் என்னும் காலாண்டிதழை நடத்தினார். ஆய்வு முடித்த பின் 1976-83 வரை
கொல்லிப்பாவை (12 இதழ்கள்) காலாண்டிதழை நடத்தினார்.
தினமணியின் மதுரைப் பதிப்பிலும் சென்னைப் பதிப்பிலும் இருபதாண்டுகள்
ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
தமிழகத்தில் பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை விமர்சனங்கள் எழுதியுள்ள
ராஜமார்த்தாண்டன், தன் புதுக்கவிதை தொகுதிக்காகத் தமிழக அரசு விருது
பெற்றுள்ளார் (2003). இவரது முக்கியமான நூல்கள் புதுமைப்பித்தனும்
கயிற்றரவும் (2000), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (2002), புதுக்கவிதை வரலாறு
(2003), சுந்தர ராமசாமியின் கவிதைக்கலை (2007) ஆகியன.
தமிழ்ப் புதுக்கவிதைகளில் சிறந்தவற்றைத் தெரிந்தெடுத்து கொங்குதேர்
வாழ்க்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். இவர் தினமணியிலிருந்து ஓய்வு
பெற்றபின்பு காலச்சுவடு மாத இதழில் பணியாற்றினார். இவர் மனைவி ரெங்கம்மாள்.
குழந்தைகள் அஜிதா, கிருஷ்ண பிரதீப். |