|
நண்பர் யூமா வாசுகி தொலைபேசியில் பதற்றக் குரலில் சேதி சொன்னார். ‘அண்ணாச்சி
ராஜமார்த்தாண்டன் கொஞ்ச நேரத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார்’.
நம்பவில்லை. நெய்தல் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரும் சொன்னார்.
‘ஆமாம், அண்ணாச்சி, நான் அங்கேதான் இ ருக்கிறேன். பிறகு விவரமாகச் சொல்கிறேன்’.
நம்பவிரும்பவில்லை. தகவல் பொய்யானதாக இருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது.
முந்தைய தினம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் சில மணி நேரங்களுக்குள் இல்லாமல்
போய்விட்டார் என்ற அபத்த உண்மையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந் தது. அதிர்ச்சி
கலையாமலேயே இலக்கிய நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அமைதி
கொள்ளாமல் மறுபடியும் கிருஷ்ணனை அழைத்து விசாரித்தேன். ‘போஸ்ட்மார்ட்டம்
அறைமுன்னால் நிற்கிறேன்’ என்றார் கிருஷ்ணன். நம்பாமலிருக்க முடியவில்லை. அண்ணாச்சி
ராஜமார்த்தாண்டன் இனி இ ல்லை. அலுவலகச் சூழ்நிலையை மறந்து சில நிமிடங்கள் வாய்விட்டு
அரற்றினேன். ‘நேத்துத்தான் போனிலே பேசினார்’ என்று கண்ணில்பட்ட சக
ஊழியர்களிடமெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தேன். நேற்றுப் பேசின அண்ணாச்சி இன்றில்லை;
இனியிருக்கமாட்டார் என்ற நிஜம் மனதில் இருளாகக் கவிந் தது.
அண்ணாச்சியை ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே தெரியும். எனினும்
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘தினமணி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று
நாகர்கோவிலில் வசிக்கத் தொடங்கிய பின்னர், குறிப்பாகக் ‘காலச்சுவடு’ அலுவலகத்தில்
பணியாற்றத் தொடங்கிய பிறகு முன்னிலும் நெருக்கமாக உணர முடிந்தது. இலக்கியம்
தொடர்பாக எனக்கு ஏற்படும் பெரும்பாலான சந்தேகங்களுக்கு அவர்தான் நிவாரணியாக
இருந்தார். அடிக்கடியான தொலைபேசி உரையாடல்கள், நேர் சந்திப்புகள் என்று நெருக்கம்
வலுப்பெற்றிருந்தது. திருவனந்தபுரத்துக்கும் நாகர்கோவிலுக்கும் இரண்டுமணி நேரத்
தூரம் என்பது கலந்து றவாடலுக்கு வாய்ப்பாக இருந்தது. கடந்த சில மாதங்களாகச்
சென்னையில் வசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்று அண்ணாச்சியை அடிக்கடித்
தொடர்புகொள்ள முடியாமல் போனதுதான். அதற்கான தீர்வும் அவர் மூலமாகவே வந்தது. மகன்
திருமணத்தையொட்டி ஓர் அலைபேசி கைக்குக் கிடைத்ததும் உற்சாகமாகத் தகவல் தெரிவித்தார்.
‘இனி, இதுலெ எப்பம் வேணும்னாலும் பேசலாமில்ல’ என்றார். பேசியிருக்கிறோம்.
பிரிவுக்கு முன்தினம்கூடப் பேசியி ருக்கிறோம். முதல் சந்திப்பில் பேசியதைப் போலக்
கடைசியாகப் பேசியதும் கவிதை பற்றித்தான்.
‘காலச்சுவடு’ 114 ஆம் இதழில் வெளியான கவிதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு இருந்தது.
அக்கவிதைகளை முதலில் வாசித்தவர் அண்ணாச்சிதான். அவற்றை மட்டுமல்ல அண்மைய நான்கைந்து
ஆண்டுகளில் நான் எழுதிய எல்லா எழுத்துகளையும் முதலில் வாசித்தவரும் அது தொடர்பாக
ஆலோசனைகள் சொன்னவரும் அவர்தான். கவிதைகள் அவருக்குப் பிடித்திருந்தன.
வாசகர்களுக்கும் பிடித்திருந்தன என்பதை எனக்குக் கிடைத்த மின்னஞ்சல்களும் குறுஞ்
செய்திகளும் தொலைபேசிப் பாராட்டுகளும் தெரிவித்தன. அதை அண்ணாச்சியுடன்
பகிர்ந்துகொண்டேன். கொஞ்சம் பெருமிதத்துடனும் கொஞ்சம் சிணுங்கலு டனும் சொன்னேன்.
‘அண்ணாச்சி, முப்பது வருடங்களாகக் கவிதை எழுதுகிறேன். தொடர்ந்து வெளியாகியும்
வருகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட சந் தர்ப்பங்களில் நாலும் ஐந்தும் கவிதைகள் ஒரே
கொத்தாகப் பிரசுரமானதுமுண்டு. ஆனால் என்னமோ நான் இப்போதுதான் புதுசாக
எழுதவந்திருப்பதுபோலப் பாராட்டுகிறார்கள்’. அண்ணாச்சி கொஞ்சம் சத்தமாகவே
சிரித்துவிட்டார். பிறகு சொன்னார். ‘சந்தோசப்படுங்கய்யா, எழுதறதப் படிக்கவும்
பேசவும் ஆளி ருக்கேன்னு சந்தோசப்படுங்க. ஆனா உண்மையிலேயே கவிதைகள் நல்லா
வந்திருக்கு. அதான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு’ என்றார். ஒரு கணம் மனம் போதையில்
துள்ளியது. அண்ணாச்சி தொடர்ந்து பேசினார். ஒவ்வொரு கவிதையையும் குறிப்பிட்டு
விரிவாகவே பேசிக்கொண்டிருந்தார். ‘ எல்லாம் சரிதான், அந்தத் தற்கொலை பத்தின கவிதை
வேண்டியிருக்கல’ என்று மட்டும் சொன்னார். பிழைப்பு நிமித்தம் நான் படும்
அல்லாட்டங்களைப் பற்றி அவருக்குத் தெரியும். திருவனந்தபுரத்தை விட்டுச் சென்னைக்கு
வர நேர்ந்ததில் எனக்கிருக்கும் தத்தளிப்பை அவரிடம் ஒவ்வொரு உரையாடலிலும்
சொல்லியிருக்கிறேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு அவர் விடுத்த எச்சரிக்கை அது.
‘எல்லாம் சரியாயிரும். தைரியமா இருங்க. பெறவு பேசுவோம். வெச்சிரவா?’ என்றார்.
அண்மையில் திருமணம் முடித்த மகனைக் கொண்டுவிடுவதற்காகத் திருச்செங்கோட்டுக்குப்
போயிருந்தபோது நடந்த உரையாடல் இது. பிறகு ஊர் தி ரும்பியவரிடம் படித்துப்
பார்த்துச் சொல்லும்படி அவர் அனுப்பிவைத்திருந்த ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றிக்
கேட்பதற்காகப் பேசியிருக்கிறேன். அதற்கு அடு த்த நாள் அவரில்லை.
சரியாக ஓராண்டுக்கு முன்புதான் அண்ணாச்சியின் மணிவிழாவைக் கொண்டாடியிருந்தோம்.
நெய்தல் கிருஷ்ணன் முன் நின்று நடத்திய கூட்டம் அது. எம். எஸ்., நாஞ்சில் நாடன்,
சுரேஷ்குமார இந்திரஜித், முருகேசபாண்டியன், ஜெயமோகன் முதலியவர்களுடன் நானும்
கலந்துகொண்டிருந்தேன். நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்களுமாகப் பலர் கலந்துகொண்டதில்
அண்ணாச்சிக்கு நெகிழ்வும் பெருமிதமும் இருந்தது. அவருடைய மனைவியும் பிள்ளைகளும்
எழுத்தின் மூலம் எந்த ஸ்தானத்தையும் அடைய முனைப்புக் காட்டாத அண்ணாச்சிக்கு
இயல்பாகக் கிடைத்திருக்கும் இடத்தைப் பார்த்துப் பூரிப்படைந்திருந்தார்கள். அந் தக்
கூட்டத்தில் பேசுவதற்காக மனக் குறிப்புகளைத் தொகுத்தபோதுதான் ஆச்சரியமான ஓர் உண்மை
புலப்பட்டது. எண்பதுகளின் நடுப்பகுதியில் அண் ணாச்சியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலுமாக இருவரும் உழன்ற போதும் அது தொடர்ந்திருக்கிறது.
மதுரையில் ஓரிரு சந் திப்புகள். பின்னர் நீண்ட நாள் இடைவெளி. சென்னை வந்த பிறகு
இருவரும் பத்திரிகைத் துறையிலேயே பிழைப்பு நடத்துபவர்களாக இருந்ததால்
தொடர்ச்சியாகச் சந்திக்க வாய்த்தது. இந்தச் சந்திப்புகள் அனைத்திலும் எங்களுடைய
பேச்சுக்கான மையம் இலக்கியமாக மட்டுமே இருந்திருக்கிறது என்பதை வியப்புடன்
உணர்ந்திருக்கிறேன். அதை அந்த மேடையிலேயே சொல்லவும் செய்தேன். அண்மைக் காலமாகத்தான்
சொந்தச் சோகங்களை அண்ணாச்சியுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தேன். நம்பகமான
செவிகள் அவருடையவை. ரகசியத்தைக் கசியவிடாத மனம் அவருடையது. அந்த நம்பகத்தன்மை
காரணமாகவே அவருடைய இழப்பு மூலம் ஆத்மார்த்தமான நண்பரை இழந்திருக்கிறேன் என்பதை அநாதை
மனம் புலம்பிக்கொண்டேயிருக்கிறது.
o
இலக்கியத்தைக் கிட்டத்தட்ட ஒரு மதம்போலக் கருதியவர் அண்ணாச்சி என்று எண்ணுகிறேன்.
அவருக்கு உருவாகியிருந்த நட்புகள் அனைத்தும் இலக்கியத் தை முகாந்திரமாகக் கொண்டவையே.
இந்த நட்புகளே அவருடைய சுகங்களையும் துக்கங்களையும் நிர்ணயித்திருக்கின்றன. தமிழில்
சிற்றிதழ் மரபு சார்ந்து உ ருவான இந்த நம்பிக்கையின் தொடர் கண்ணிகளில் அவரும்
ஒருவர். இலக்கியம் பேசுவதிலும் அதற்கான உறவுகளைப் பேணுவதிலும் அக்கறை காட்டிய மரபு
அது. அதற்காகச் சொந்த வாழ்வைப் பணயம் வைக்கவும் தயங்காத மரபு. அண்ணாச்சி அந்த
மரபின் நிகழ் கால உதாரணம். இலக்கியத்தில் நுட்பமான வாசிப்பு, அது பற்றிய
கருத்தாக்கங்களை அடைவதில் தீவிரம், இலக்கியம் பற்றி அடிப்படியாக உருவாக்கிக்கொண்ட
கருத்துக்களின் மீது சமரசமற்ற பிடிமானம் இவற்றை அண்ணாச்சியின் குணங்களாகச்
சொல்லலாம். இந்த ‘மத அபிமானம்’ வாழ்க்கையின் பிற ஈடுபாடுகளிலிருந்து அவரை
அந்நியமாக்கியது என்றும் தோன்றுகிறது. அவரது இலக்கிய வன்மை மூலம்
குடும்பத்தினருக்குப் பிரயோசனம் ஏற்பட்டதில்லை. அவருக்கேகூட உலகியல் ஆதாயத்துக்காக
அதைப் பய ன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை. தெய்வத்தைப் போற்றிப் புகழ்வதே வாழ்வின்
கடமை என்று நினைத்த அடியார்களைப் போல இலக்கியத்தைப் போற்றிக்கொண்டிருந்துவிட்டவர்
அவர். இந்த மனப்பாங்கின் காரணமாகவே அவரால் எல்லாருக்கும் நண்பராக இருக்கவும்
முடிந்திருக்கிறது. இலக்கியம் சார்ந்த அபிப்பிராயங்களில் அழுத்தமாக இருந்த அண்ணாச்சி
அதைத் தாண்டி எந்த இலக்கியவாதியைக் குறித்தும் அவதூறாகவோ தனிப்பட்ட விமர்சனமாகவோ
ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை. தன்னை மறந்த நிலையிலும்கூட அவரிடமிருந்து
அப்படியொரு பேச்சு எழுந்ததில்லை.
கல்லூரிப் படிப்பில் அறிவியலைத் தேர்ந்தெடுத்திருந்தவர் அண்ணாச்சி. இலக்கியத்தின்
மீது ஈடுபாடு மேலிட்டு முதுகலையில் தமிழிலக்கியம் பயின்றார். சீரிய அக்கறையின்
விரிவாகவே அவர் இலக்கியத்தை வசப்படுத்தியிருந்தார். கல்விப்புலக் கிளிப்பிள்ளைப்
பாடமாக இல்லாமல் அனுபவத்தின் சாரமாகவே இலக்கிய த்தை அணுகினார். அந்த அணுகலையே
தன்னுடைய விமர்சன அடிப்படையாகவும் அமைத்துக் கொண்டார். ஆயத்த நிலையிலுள்ள
கோட்பாடுகளின் உச்சாடனமோ பெயர் உதிர்ப்புகளோ அவருடைய இலக்கிய விமர்சனத்தில்
இடம்பெற்றதில்லை. இந்த விமர்சன முறைக்கு ரசனையும் கடும் உழைப்பும் சுயசிந்தனையும்
சமகால உணர்வும் தேவை. அதை அண்ணாச்சி முன்சொன்ன ‘மத அபிமான’ப் பிடிவாதத்துடன்
தன்னுடையதாக்கியிருந்தார். கூடவே தமிழ் இலக்கியப் பின்னணியும் வரலாற்று அறிவும்
அவருக்கு உதவின. குறிப்பாகக் கவிதை விமர்சனங்களில். ஒரு கவிதையை ரசனை முனையிலிருந்தே
அணுகு கிறார். கவிதையின் பேசுபொருளைச் சார்ந்தே அதை அலசுகிறார். இலக்கியப்
பின்னணியில் வைத்தும் வரலாற்றுப் பின்னணியில் வைத்தும் அதைப் பற்றிய மதிப்பீட்டை
எட்டுகிறார். இதில் குறைகளும் நிறைகளும் விடுபடல்களும் இருக்கலாம். விருப்பு
வெறுப்புக்கான இடங்கள் இருக்கலாம். ஆனால் எந்த முன் முடிவும் இல்லாமல் கவிதையை/இலக்கியத்தை
அணுகுவது என்ற ஆக நிரந்தரமான விமர்சன நெறியை இது நிறுவும். அப்படியான விமர்சன
நெறிக்கு வழிகோலியவர்களில் ஒருவராகவே ராஜமார்த்தாண்டனைக் கருதுகிறேன்.
அண்ணாச்சி கவிதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். எனினும்
அவரது முதன்மையான இலக்கியப் பங்களிப்பு விமர்சனம் சார்ந்ததுதான். குறிப்பாகக்
கவிதையியல் சார்ந்தது. புதுக்கவிதை வரலாறு, கொங்குதேர் வாழ்க்கை - 2 என்ற
பெருந்திரட்டு, சுந்தர ராமசாமியின் கவிதைக்கலை ஆகிய மூன் றும் அசலான பங்களிப்புகள்.
புதுமைப்பித்தன் மீதான அவரது பெருங்காதலின் விளைவு ‘புதுமைப்பித்தனும்
கயிற்றரவும்’. இவை எல்லாமும் ஒரு மொழியின் இலக்கியச் சூழலில் நிகழும்
விவாதங்களையும் அதில் நிகழ்ந்துள்ள சாதனைகளையும் முன்னிறுத்தியே விமர்சனக்
கருத்துகளை உருவாக்கிய ‘ராஜமார்த்தாண் டனிய’ இயல்புக்கு எடுத்துக்காட்டாக
அமைந்திருப்பவை. இவற்றுக்காகப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததாலோ என்னவோ அவரது
மனத்தில் இருந்த கவிஞனை அவ்வளவாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டார். அவருடைய கவிதைகள்
அதிக ஆரவாரமில்லாத தொனியில் எழுதப்பட்டவை. அவருடையதென்று சொல் லக்கூடிய
கவிமொழியை அவற்றில் காணவியலாது. ஆனால் தமிழ்ப் புதுக்கவிதை அரை நூற்றாண்டுக்கும்
மேலாகப் பயன்படுத்திவரும் பொதுவான கவிமொழியை அவற்றில் நிச்சயம் காணலாம்.
இலக்கியம் சார்ந்தே அவருடைய நட்புகள் அமைந்திருந்தன என்பதனாலேயே எல்லாக்
கவிஞர்களுக்கும் அவருடைய அபிப்பிராயம் முக்கியமானதாக இருந்தது. அண்ணாச்சியும் அதில்
வெளிப்படையாகவே இருந்தார். பெரியவர் என்ற வியத்தலும் புதியவர் என்ற இளப்பமும்
அவருடைய பழக்கத்தில் இல்லை. அதற்கான அடையாளத்தை அவர் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை
- புதுக்கவிதைத் திரட்டில் பார்க்கலாம். கவிதை என்று அவர் உறுதியாக நம்பியவற்றை
எழுதிய யாரையும் அதில் தவிர்க்கவில்லை. தவிர்க்கப்பட்டவர்களின் கவிதை பற்றி
அவருக்கு உயர்வான அபிப்பிராயம் இல்லை. இந்த இலக்கிய நேர்மைக்காக அவர் தொடர்ந்து
நினைக்கப்பட வேண்டும்.
o
அண்ணாச்சியை முன்னிறுத்திச் சொன்னதுபோலவே இலக்கியம் சார்ந்துதான் என்னுடைய
தோழமைகளும் உருவாகியிருக்கின்றன. அதே காரணங்களுக்காகவே அவை முறிந்தும்
போயிருக்கின்றன. கடும் விமர்சனங்களை வைத்தபோதும் முறிவடையாத நட்புகளில் ஒன்று
அண்ணாச்சியுடனானது. ‘அது உங்களுக்க அபிப்பிராயம்’ என்று எளிதில் அந்த
தர்மசங்கடங்களை அவரால் கடந்துபோக முடிந்திருக்கிறது என்று இப்போது உணர்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். ‘எப்ப
ஊருக்கு வர்றீங்க?’ என்று விசாரித்தார். ஏதோ பதில் சொன்னேன். ‘திருவனந் தபுரம்
வாரப்போ நாகர்கோவிலுக்கும் வாங்க’ என்றார். ‘ஏன் கொட்டாரத்துக்கு வரக் கூடாதா?’
‘வாங்க, நல்லா வாங்க. மீன் கொழம்போட சோறு போடலாம்’ என்றார். ‘இத்தனை காலம்
நடக்காதது இனிதான் நடக்கப் போகுதாக்கும். போங்க அண்ணாச்சி’ என்றேன். சிரித்தார்.
அண்ணாச்சி வீட்டுக்குப் போக வேண்டி வந்தது. அவர் சொன்ன மரத்தடியையும்
பரவிக்கிடக்கிற நிழலையும் பார்க்க முடிந்தது. அவர் மனைவியையும் மகளையும் மகனையும்
பேரக் குழந்தையையும் சந் திக்க முடிந்தது. அண்ணாச்சி படிக்கவும் எழுதவும்
செய்துகொண்டிருந்த அறையைப் பார்க்க முடிந்தது. அறையின் நடுவில் வைத்திருந்த
புகைப்படத்தையும் பார்க்க முடிந்தது. அந்த விழிகளின் கூர்ப் பார்வையை எதிர்கொள்ள
முடிந்தது. அண்ணாச்சியைப் பார்க்க முடியவில்லை. ‘இனி எப்பம் பாக்க? அண்ணாச்சி?’
|