Google   www kalachuvadu.com

அஞ்சலி
வாழ்வை நிரப்பிய இலக்கியம்
சுரேஷ்குமார இந்திரஜித்

புனைபெயரோ என நினைக்கத் தோன்றும் இயற்பெயரைக் கொண்ட ராஜமார்த்தாண்டனை, கொல்லிப்பாவை ஆசிரியராக நான் அறிந்திருந்தேன். கொல்லிப்பாவை, பிரமிளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகை. இலக்கியக் கூட்டங்களில் நான் எப்போதேனும் காண நேர்ந்தபோது புகைமண்டலங்களுக்கிடையே இருந்தவரான காட்சியே எனக்கு நினைவிற்கு வருகிறது.

மதுரைக்கு, தினமணி உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, நான் குடியிருந்த தெருவிலேயே அவரும் வீடு பார்த்துக் குடிவந்த பின்னால் எனக்கும் அவருக்கும் நெருக்கம் கூடியது. மதுரையில் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. ‘சந்திப்பு’ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட்டம் நடத்துவது என்று பிற நண்பர்களுடன் பேசி முடிவுசெய்தோம். முதற் கூட்டம் 13.04.1986 அன்று நடைபெற்றது; ராஜமார்த்தாண்டன், க.நா.சு கவிதைகள் பற்றிப் பேசினார். திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து’ சிறுகதைகள் பற்றி இரண்டாம் கூட்டத்தில் நான் பேசினேன். மூன்று வருடங்கள், 36 கூட்டங்கள் நடைபெற்றன. சுந்தர ராமசாமியை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். பிரமிளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். மதுரை நண்பர்களுக்கு ‘சந்திப்பு’ ஒரு களமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் உற்சாகமாக இருந்தார்.

ராஜமார்த்தாண்டன் தன்னம்பிக்கை குறைந்தவராகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். அவர் முதல் வரிசையில் அமர நினைக்கும் மனநிலை கொண்டவரல்ல. இறுதி வரிசையில் அல்லது முடிந்தால் பார்வையில் படாத இடம் இருக்குமானால் அந்த இடத்தில் அமரக்கூடியவர். ஓர் இடத்தில் தன் இருப்பைக் காண்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவரல்ல.

படிக்கும் காலத்தில் ராஜமார்த்தாண்டன் கட்டுமஸ்தான உடலைக் கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமி கூறுவதுண்டு. நொய்ந்த உடலும் கூன் விழுந்த முதுகும் ஒடுங்கிய முகமும் கொண்டிருந்தவரை நான் எவ்வாறு அப்படிக் கற்பனை செய்ய இயலும். சாமர்த்தியமும் தன்னம்பிக்கையும் இருந்திருந்தால் தினமணி ஆசிரியராக ராஜமார்த்தாண்டன் உயர்ந்திருப்பார் என்று சுந்தர ராமசாமி கூறியதுண்டு.

பிரமிளிடம் அவர் அதிக வாஞ்சை கொண்டவராக இருந்தார். சுந்தர ராமசாமியிடம் பெரும் மதிப்புக் கொண்டவராக இருந்தார். குற்றாலத்தில் என் அறையில் பிரமிள் தங்கியிருந்தபோது, ராஜமார்த்தாண்டன் வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராஜமார்த்தாண்டன் நிறை போதையிலிருந்தார். பிரமிளின் தலைமுடியை ஒன்றிரண்டு முறை கோதிவிட்டார். பிரமிள்மீது ராஜமார்த்தாண்டன் கொண்ட வாஞ்சையின் காரணங்களை அறிய இயலாது.

சென்னைக்கு மாறுதலான பிறகு அவர் மேன்சனில் தனியாகத் தங்கியிருந்தார். சிறு அறையில், மெத்தையில்லா இரும்புக் கட்டிலில் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டு, தரையிலும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கிடையே படுத்திருப்பார். ஆடைகளைப் பற்றியோ உடலைப் பற்றியோ வசதிகளைப் பற்றியோ அவருக்கு அக்கறையில்லை.

குடியும் சிகரெட்டும் அவர் உடலைப் பாதித்ததில் நோய்வாய்ப்பட்டு, வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நாகர்கோவில் சென்ற அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே நான் நாகர்கோவில் சென்றேன். அதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன் உடல்நிலை பற்றிக் கூறியிருந்தது எனக்குக் கவலையளித்திருந்தது. நோயிலிருந்து மீண்ட களைப்புடன் இருந்த அவரைப் பார்த்தபோது, அவர் குடியையும் சிகரெட்டையும் விட்டிருந்தார். ஆனால் உடல்நிலை தேறிய பின்னர் மீண்டும் பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தை அவதானித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவராக ராஜமார்த்தாண்டன் இருந்தார். எழுத்து காலம் முதல் தற்போது வந்துகொண்டிருக்கும் சிறு பத்திரிகைகள் வரை அவர் அறிந்திருந்தார். புதியதாகக் கவிதை, கதை எழுதுபவர்களைப் பற்றியும் அவர் அறிந்திருந்தார். ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால், அவரிடம் கேட்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். வார்த்தை அமைப்புகளில் பிழை இருந்தால், சொல்லக்கூடியவர். புத்தக மெய்ப்புப் பார்ப்பதில் கெட்டிக்காரர், ‘மாபெரும் சூதாட்டம்’ இரண்டாம் பதிப்பை அவருடன் சேர்ந்து சரிபார்த்தது என் நினைவிற்கு வருகிறது.

கடைசியாக நான் அவரைப் பார்த்தது, அவருடைய மகன் திருமணத்தின்போது. அப்போதும் அவர் ஏதோ ஓர் ஓரத்தில்தான் நின்றுகொண்டிருந்தார். குழந்தைகளின் மீது பாசம் கொண்டவராக இருந்தார். அவருடைய ‘என் கவிதை’ கவிதைத் தொகுப்பை ‘வாழ்க்கையில் மேலான நிலையில் என்னைப் பார்க்க விரும்பிய என் பெற்றோர் செ. அரிகிருஷ்ணப் பெருமாள் நாடார், ஈஸ்வர வடிவு- நினைவாக, எனச் சமர்ப்பித்திருந்தார். வாழ்க்கையில் மேலான நிலையை அவர் அடைந்ததாக நினைத்தாரா அல்லது கையறு நிலையில் இருப்பதாக நினைத்தாரா என்று தெரியவில்லை.

இலக்கியமே அவரது மனதையும் வாழ்வையும் நிரப்பியிருந்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை ஏதாவதொரு பத்திரிகையுடன் இணைந்து இலக்கியத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது 60ஆம் வயது மணிவிழா தொடர்பாக ஏற்பாடுசெய்யப் பட்டிருந்த கூட்டத்தில் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தபோது அவர் தொடர்பான நினைவுகளும் சில அவதானிப்புகளும் என் மனத்தில் சேர்ந்தன. அப்போது இவற்றைத் தான் நான் அஞ்சலிக் கூட்டத்திலும் பேச நேருமோ என மனத்தில் பயம் ஏற்பட்டு, திடுக்கிட்டேன்.

அவர் இறந்த தினத்திற்கு அடுத்த தினம் வெளியான தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அவருடைய படத்துடன் சிறு செய்தியும் உள்ளே அவர் நண்பர் சோமசுந்தரம் எழுதிய கட்டுரையும் பிரசுரமாகியிருந்தது. ஆனந்த விகடனில் ஒருபக்கத்திற்கு அவருடைய படத்துடன் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. தினமணி கதிரிலும் அவ்வாறே பார்த்தேன். அவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது. மூத்தவர்கள் ஒவ்வொருவராகக் கழிந்து கொண்டிருப்பது மனத்திற்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. மனம் அலைக்கழிகிறது.

எனினும், கட்டுமஸ்தான உடலுடன், சாமர்த்திய ஏணியில் ஏறி தினமணி ஆசிரியராக அவர் பணி புரிந்துகொண்டிருக்கும் மாயக் காட்சியை அவ்வப்போது நான் உருவகித்துக்கொள்வதுண்டு.

உள்ளடக்கம்