Google   www kalachuvadu.com

அஞ்சலி
மழைக்காலத்தில் சந்தித்த மார்த்தாண்டன்
அ.கா. பெருமாள்

ஜூன் ஆறாம் தேதி (2009) காலை 9.30 மணி இருக்கும்; ராஜமார்த்தாண்டன் அலைபேசியில் கூப்பிட்டார். ‘காலச்சுவடு’ அலுவலகத்திற்கு 11 மணிக்கு வரச்சொன்னார். ‘அகிலத்திரட்டு’ப் பதிப்பின் நூறு பக்கம் மெய்ப்புத் திருத்த வேண்டும்; நேரில் பேசலாம் என்றார். நான் சாவகாசமாய் 11 மணிக்கு மேல் போகலாம் என்றிருந்தேன். ஆனி மாதம் என்றாலும் சாரல் மழை நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. மழைவெறித்தபின் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கண்ணன் அழைத்தான். ராஜமார்த்தாண்டனின் விபத்துப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னான். அப்போது மணி 11.

நான் பத்து நிமிடங்களில் நாகர்கோவில் கோட்டார் பார்வதிபுரம் சாலையில் உள்ள ஜவஹர் ஆஸ்பத்திரிக்குப் போனேன். கண்ணனும் மைதிலியும் நின்றுகொண்டிருந்தார்கள். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரி வரவேற்பறையில் நோயாளிகளைக் கொண்டு செல்வதற்குரிய தள்ளுவண்டியில் மார்த்தாண்டன் கிடந்தார். லேசான நீல நிறத்துணியை அவரின் கால் முதல் தலைவரை போர்த்தியிருந்தார்கள். 11 மணிக்கு என்னை வரச்சொன்னவர் பிணமாகக் கிடந்தார்.

இது போன்ற ஆனி மாதத்தில் (ஜூன்) மழைக்காலத்தில்தான் மார்த்தாண்டனை முதலில் நான் சந்தித்தேன். அது 1972ஆம் ஆண்டு. பாலக்காடு சித்தூர் கல்லூரி மாணவர் விடுதியின் வெளியே போர்ட்டிக்கோவில் நான் நின்றுகொண்டிருந்தபோது மார்த்தாண்டன் ஒரு பையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு மழையில் நனைந்துகொண்டே வந்தார். விடுதியின் எதிரே பெருக்கெடுத்து ஓடிய சோகநாசினி ஆற்றின் வெள்ளம் விடுதியின் முன்பகுதியில் வர ஆரம்பித்தது.

மார்த்தாண்டன் என்னிடம் விடுதிக் காப்பாளர் அறை எது என்று தமிழில் கேட்டார். மலையாளமொழி பேசிய மாநிலத்தில் என்னிடம் நேரடியாகத் தமிழில் பேசியதுமே அவர் கேரளத்துக்காரர் அல்ல என்று தெரிந்துகொண்டேன். அவரை விடுதிக் காப்பாளர், பேராசிரியர் ராமச்சந்திரன் நாயரின் அறைக்கு அழைத்துச் சென்றேன். நாயர் ஹிந்தி பேராசிரியர்; திருவனந்தபுரத்துக்காரர். தமிழ் பேசுவார். மார்த்தாண்டனிடம் அரைகுறைத் தமிழில் பேசினார். விடுதியில் தனி அறையில்லை உங்கள் அறையிலேயே அவர் இருக்கட்டும் என்றார். நான் அப்போது முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அவர் முதலாண்டில் சேர்ந்திருந்தார்.

மார்த்தாண்டன் என் அறையில் கிடந்த மரக் கட்டிலில் அமர்ந்துகொண்டு இளைப்பாறிய பிறகு தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னார். கன்னியாகுமரி மாவட்டம்; அகஸ்தீஸ்வரம் அருகே இடையன்விளை கிராமம்; கும்பகோணத்தில் இளம் அறிவியல் கணிதம் படித்தேன்; தமிழகத்தில் முதுகலைத் தமிழோ கணிதமோ படிக்க முடியாததால் இங்கே வந்தேன்; ஜேசுதாசன் சாருடன் ஒன்றாகப் படித்த பேராசிரியர் இ.வி. மணி சார் எனக்குச் சிபாரிசு செய்தார் என்று சொன்னார்.

இப்படியாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். மூன்று மாதங்களில் அவருக்கு விடுதியில் தனி அறை கிடைத்தது. அதுவும் என் அறை பக்கம்தான்.

நான் முதலில் பார்த்தபோதே மார்த்தாண்டன் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தார். அப்போது அவருக்கு 23 வயதுதான். விடுதியில் இருந்த மொத்த மாணவர்களிடமிருந்து அவர் வேறுபட்டுதான் இருந்தார்.

அந்தச் சமயத்தில் என்னைப் போன்ற மாணவர்கள் அகிலன், நா. பார்த்தசாரதி போன்றோர்களைத் தீவிரமாய்ப் படித்துக்கொண்டிருந்தோம். பேராசிரியர் சி. ஜேசுதாசன்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஜெயகாந்தன் பக்கம் திரும்பிவிட்டார். என் அறையில் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்துவிட்டு மார்த்தாண்டன் அவரது பெட்டியிலிருந்து ‘தீபம்’ பத்திரிகையையும், ஜெயகாந்தனின் ‘ஒருபிடிசோறு’ தொகுதியையும் எடுத்துப்போட்டார். இப்படிப் படிப்பதற்கெல்லாம் அவர் கும்பகோணத்திலேயே தயாராகிவிட்டார் என்று தெரிந்தது.

மார்த்தாண்டன் முதுகலையில் சேர்ந்த வருஷம்தான் கார்லோஸ் (தமிழவன்) பாலக்காடு கல்லூரிக்கு விரிவுரையாளராக வந்து சேர்ந்தார். அவர் வந்து பத்து நாட்களுக்குள்ளேயே மார்த்தாண்டனைக் கண்டுபிடித்துவிட்டார். அன்று புதுக்கவிதையைப் படித்து உரையாடிய ஒரே மாணவர் மார்த்தாண்டன்தான்.

நாங்கள் இருந்த கல்லூரி மாணவர் விடுதி கட்டுப்பாடில்லாதது. பெரும்பாலும் முன்கதவு திறந்துதான் கிடக்கும். விடுதியின் எதிரே உள்ள சோகநாசினி ஆற்றின் அக்கரையில் ஒரு சாராயக்கடை உண்டு. அதைச் செட்டியார் கடை என்று சொல்வார்கள். ஆற்றைக்கடந்து அக்கரைக்குப் போக, சிறிய பாலம் உண்டு. விடுதி மாணவர்கள் அந்தச் சாராயக்கடைக்கோ அதற்குச் சற்று தொலைவில் இருந்த கள்ளுக் கடைக்கோ போவது தவறாகவோ அதிசயமாகவோ கருதப்படவில்லை.

விடுதியில் இரண்டு நாட்களுக்கு இரவில் சாப்பாடு; மற்ற நாட்கள் டிபன், சாப்பாட்டுக்குச் சரியான தொடுகறிகள் இருக்காது. பெரும்பாலும் மாணவர்கள் வெளியிலிருந்து பொரித்த மீனோ இறைச்சியோ வாங்கி வருவார்கள். மார்த்தாண்டன் அசைவச் சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு நாள் என்னிடம் செட்டியார் கடையில் பொரித்த இறைச்சி சூடாகக் கிடைக்கும் விலை மலிவு என்றார். ஒரு வருஷமாக அந்த விடுதியில் இருந்தாலும் நான் செட்டியார் கடைக்குப் போனதில்லை. மார்த்தாண்டனுடன் போனேன். பொரித்த இறைச்சியை முதல்நாள் வாங்கி வந்தபோது இரவுச் சாப்பாட்டுக்கு அது எவ்வளவு அவசியம் என்று தெரிந்தது. பின் நாங்கள் அடிக்கடி போனோம்.

அந்தச் சாராயக்கடையின் முன் நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைச் செட்டியார் பலமுறை கவனித்திருக்கிறார். ஒரு நாள் எங்களிடம் ஊர் பேரெல்லாம் விசாரித்துவிட்டு ‘நீங்க இரண்டு பேருமே இந்தக் கடையில குடிக்க வர்றதில்லை. இறைச்சி துண்டை வாங்கவந்து வீணே ஏன் கெட்டபேரு நாளைமுதல் இங்கே வரக் கூடாது’ என்று சொல்லிவிட்டு வேறு ஒரு கடைக்கு வழிகாட்டினார்.

அப்போதெல்லாம் மார்த்தாண்டன் நிறைய சினிமா பார்ப்பார். பாலக்காடு சித்தூரைச் சுற்றிய கிராமங்களில் டூரிங் டாக்கீஸ்கள் உண்டு. சிவாஜி படம் எங்கே போடுகிறார்கள் என்பதை எப்படியாவது விசாரித்து விட்டுப் போய்விடுவார்.

எம். ஏ., முடித்த பின்பு நான் மார்த்தாண்டனைச் சந்தித்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான். அவரது உடல் தோற்றத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். சு.ரா. கிராமத்து ஆளு. நல்ல உடம்பு. மெஷின் நல்லா ஓடுது. நாசமாக்கணும்னுன்னு திட்டம்போட்டா என்ன செய்ய முடியும் என்பார்.

மார்த்தாண்டன் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் புதுக்கவிதை பற்றி ஆய்வு செய்தபோதும் ஆய்வுக் காலம் முடிந்து அவரது கிராமத்தில் இருந்துகொண்டு ‘கொல்லிப்பாவை’ நடத்தியபோதும் சு.ரா.வைக் காண அடிக்கடி வருவார். சு.ரா.வைச் சந்திக்க வருபவர்களில், எனக்குத் தெரிந்து அதிகம் பேசாதவர்கள் மார்த்தாண்டன், எம்.எஸ். இரண்டு பேரும்தான்.

மார்த்தாண்டனுக்கு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும், வேலை கிடைத்துவிடும் என்றும், கல்லூரியில் சேருவதற்குரிய நாள்கூடக் குறிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.ரா.விடம் ஒரு நாள் சந்தோஷமாகச் சொன்னார். இது 1974 - 75ஆம் ஆண்டுகளில் இருக்கலாம். அந்தக் காலத்தில் மார்த்தாண்டன் கேரளப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆய்வு மாணவராக இருந்தார். ஆனால் அவருக்கு விரிவுரையாளர் வேலை கிடைக்கவில்லை. அதையும் சு.ரா.விடம் சொல்ல வந்தார். மார்த்தாண்டனைவிடச் செல்வாக்குடைய காமராஜ் என்பவருக்கு (இவர் இந்து முன்னணித் தலைவர் தாணுலிங்க நாடாரின் மைத்துனர்) வேலை கொடுக்கப்பட்டுவிட்டது என்று சங்கடத்தோடு சொன்னார்.

இந்தக் காலங்களில் தருமு சிவராமு நாகர்கோவிலில் இருந்தார். சு.ரா.வின் வீட்டிலும் ஆரல்வாய்மொழியில் பேரா. பத்மநாபனின் ஆதரவிலும் அவர் இருந்தார். இது கொஞ்ச நாள்கள். ஆரல்வாய்மொழியில் பொதுப் பணித்துறை கட்டடத்தில் தங்கி, ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி உணவுவிடுதியில் சாப்பிட்டுவிட்டு, கல்லூரி நூல்நிலையத்தில் படித்துவிட்டு இருந்த தருமுவுக்கும் பத்மநாபனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பின்பு திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டனின் அறையில் கொஞ்ச நாள் இருந்தார். பின்பு மார்த்தாண்டன் ஏற்பாட்டில் இடையன்விளையில் இருந்தார். தருமு தங்கியிருந்த சிறிய குடிசைக்கு நான் சிலசமயம் போவேன். நான் பிஎச்.டி ஆய்வுக்காக அகஸ்தீஸ்வரம் பகுதியில் களஆய்வு சென்றபோது ராஜமார்த்தாண்டனும் கூடவே வந்தார். அப்போது தருமுவுடன் பேசிக்கொண்டிருப்போம்.

தருமுவுக்கு, இடையன்விளை கிராமமும் ஒத்துப்போகவில்லை. அந்த ஊரில் சிறுவர்கள் தருமுவுக்கு “ஒத்து” என்று பட்டப்பெயர் வைத்திருந்தார்கள். தருமு இருந்த குடிசையில் நாதஸ்சுரத்திற்கு சுருதி சேர்ப்பதற்குரிய ஒத்து குழல் என்னும் கருவி இருந்தது. அது வேறு யாருக்கோ சொந்தமானது. சிறுவர்கள் அதைத் தருமுவோடு சேர்த்து பரிகாசம் செய்தார்கள். ஒரு நாள் ஏழுவயது சிறுவனைத் தருமு அடித்துவிட்டார். அவன் அவரது பட்டப்பெயரை அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டானாம். அந்தத் தகராறு வலுத்து மார்த்தாண்டனின் அப்பா தருமுவைக் கட்டாயமாக வெளியேற்றும்படி செய்துவிட்டார்.

அந்தக் காலங்களில் ‘காகங்கள்’ கூட்டம் நடந்தது. தருமுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் நட்பு முழுவதுமாக முறிந்துவிட்ட சமயம். மார்த்தாண்டன் அப்போதும் தருமுவுக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். சு.ரா.விடம் பழகுவதற்கும் மார்த்தாண்டனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்குத் தெரிந்து தருமு நாகர்கோவிலில் இருந்தபோது வசைபாடாத ஒரே நபர் மார்த்தாண்டன் தான்.

‘கொல்லிப்பாவை’ வெளியீடாக வந்த தருமுவின் ‘விமர்சன ஊழல்கள்’ (1982) சிறுபத்திரிகை வாசகர்களிடம் அப்போது காரசாரமாய்ப் பேசப்பட்டது. ‘கொல்லிப்பாவை’ வெளியிட்ட முதல் புத்தகமும் கடைசி புத்தகமும் அதுதான். இந்த நூலின் மொத்தச் செலவையும் கட்டைக்காடு ராஜகோபால் ஏற்றுக்கொண்டார். பரந்தாமன் அச்சகத்தில் அச்சிட்டார்கள். நூலின் வெளியீட்டாளர் ராஜமார்த்தாண்டன்தான். மார்த்தாண்டன் இந்த நூலின் பதிப்புரையில் “இந்நூல் தனிநபர் விமர்சனத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. கருத்துலகம் சார்ந்த விமர்சன நூல்” என்று எழுதியிருந்தார். ஆனால் நூலின் 58 பக்கங்களும் வெ.சா.வைப் பற்றிய தனிநபர் விமர்சனமாக இருந்தது.

ஷங்கரலிங்கத்தின் கேள்விக்குத் தருமுவின் பதில் என்னும் உரையாடல் வடிவில் அமைந்திருந்த இந்நூலில் சு.ரா. பற்றியும் தருமு சொல்லியிருந்தார். ‘கொல்லிப் பாவை’யில் வெளியான சு.ரா.வின் ‘உடல்கள்’ நாடகம் பற்றி தருமு சு.ரா.வின் வீட்டு சாப்பாட்டு மேஜையில் தோசையைத் தின்றுகொண்டு சொன்ன முரண்பாடான விமர்சனமும்கூட அதில் இருந்தது.

மார்த்தாண்டன் தருமுவை ஒருதடவை ‘காகங்கள்’ கூட்டத்திற்கு அழைத்தார். தருமுவோ சு.ரா.வை எனக்குப் பிடிக்காது என மறுத்துவிட்டார். அப்போது மார்த்தாண்டன் “உங்களைப் பற்றி சு.ரா. உயர்வாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் வரலாம்” என்றார். இந்தச் செய்தியைக் கூட தருமு ஷங்கரலிங்கத்தின் ஒரு கேள்விக்குப் பதிலாகச் சொல்லியிருந்தார்.

இந்த நூல் வெளிவந்த அடுத்த ஆண்டில் மார்த்தாண்டனின் வேலைக்காக சு.ரா. முயல ஆரம்பித்தார். ஒருமுறை ‘துக்ளக்’ பத்திரிகையில் பணியாற்றிய வண்ணநிலவன் நாகர்கோவிலுக்கு வந்தபோது சு.ரா. ‘துக்ளக்’ பத்திரிகையில் மார்த்தாண்டனுக்காகச் சிபாரிசு செய்தார். வண்ணநிலவன் இதைவிடத் ‘தினமணி’க்கு முயலலாம், சோவுக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் போதும் என்றார். அவர் சொன்னபடி சு.ரா. செய்தார். மார்த்தாண்டனுக்குத் ‘தினமணி’ மதுரைப் பதிப்பில் வேலை கிடைத்தது. இது 1983ஆம் ஆண்டாக இருக்கலாம். இதன் பின்னும் மூன்று ஆண்டுகள் ‘கொல்லிப்பாவை’ வெளிவந்தது. பொறுப்பு ராஜகோபாலுக்கு. ‘கொல்லிப்பாவை’ அச்சான பரந்தாமன் அச்சகத்திலே ‘யாத்திரா’ பத்திரிகை அச்சானது. அதன் பொறுப்பை நான் பார்த்தேன். அப்போதெல்லாம் மார்த்தாண்டன் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அடிக்கடி வருவார். இரண்டு பத்திரிகைகளுக்கும் அவரே மெய்ப்புத் திருத்துவார்.

இந்தக் காலகட்டத்தில் சு.ரா.வைச் சந்திப்பதற்கு மார்த்தாண்டன் தவறாமல் போவார். அவரிடம் கண்ட மாற்றத்தைப் பார்த்து சு.ரா. மெல்ல முணுமுணுத்துக் கொண்டே பேராசிரியர் பத்மநாபனிடம் ‘நல்ல உடம்பு. மெஷின் நல்லா இருக்கு; நாசமாக்கிட்டே வருகிறார்’ என்று சொன்னார்.

உள்ளடக்கம்