|
எழுபதுகளின் முற்பகுதியில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அரசினர்
கலைக்கல்லூரியில் சேர்வதற்காகத் தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளிலிருந்து ஒரு
பெரும் படை உள்ளே புகுந்தது. ஏதாவது ஒரு பிரிவில் இடம் கிடைக்கும் என்பதுதான் காரணம்.
இது கோடை முடிந்து கல்லூரிகள் திறக்கிற காலம். சித்தூர் கல்லூரியில் கார்காலக்
குளிர்ச்சி சூழ்ந்திருக்கும். இப்படியொரு காலத்தில்தான் ஒரு கையில் சிகரெட்டோடும்
மறு கையில் ஒரு இலக்கிய இதழோடும் அவரைப் பார்த்த நினைவு இருக்கிறது. இளங்கலைத்
தமிழிலக்கியம் முதலாமாண்டில் நானும் முதுகலை முதலாமாண்டில் ராஜமார்த்தாண்டனும்
சேர்ந்திருந்தோம். நான் பொள்ளாச்சி. அவர் கன்னியாகுமரி.
திருவனந்தபுரத்திலிருந்து மாற்றலாகி வந்திருந்த பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ்
இலக்கிய வகுப்பு என்பதன் தோற்றத்தையே மாற்றியிருந்தார். முதல் மாற்றம்
ஆரவாரப்பேச்சு என்பதே அவரிடம் இல்லை. கற்பனைக்கான இடைவெளிகள் நிறைய இருந்தன. ‘இது
உனது வாழ்க்கை! இதை யாருக்கும் கடனாகத்தராதே! வேறு வாழ்க்கையை யாசகமும் கேட்காதே!’
என்பது மாதிரியான வாழ்க்கைக் கல்வி அவரது வகுப்பிலும் வெளியிலும் எல்லோருக்கும்
கிடைத்தது. செவியுற்றோர் கேட்டார்கள். மதியுற்றோர் பயன் பெற்றார்.
ராஜமார்த்தாண்டன் ஜேசுதாசனுக்கு மாணவ மாற்றாக இருந்தார்.
சி.சு. செல்லப்பா அப்போதுதான் ஒரு சுற்று ஆடி முடித்திருந்தார். ‘எழுத்து’வைப்
பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் தொடர்ந்து கல்லூரி வளாகத்திலும் ராஜமார்த்தாண்டன்
தங்கியிருந்த வீட்டிலும் கேட்டுக்கொண்டிருந்தன. ‘எழுத்து’ மாதிரியான, கிட்டத்தட்ட
சாணிக்கலரில் கோடு கோடாக வரைந்து ஓவியம் போன்ற தோற்றமுள்ள சித்திரங்களும்
எல்லாப் பக்கங்களிலும் எழுத்தாகவுமே இருந்த ஒரு பத்திரிகையும் இருந்தது. அதில்,
‘வாசன் மகனுக்கென்றால் மட்டும் அச்சு யந்திரம் அடிக்குமோ?
முத்துச்சாமி போன்றோர் சொன்னால் மாட்டேனென்று மறுக்குமோ?’
என்றொரு கவிதை இருந்தது. அது ‘கசடதபற’ என்று தெரிந்துகொண்டோம். அதில் பங்கு
கொண்டிருந்த எழுத்தாளர்கள் ‘பண்பாட்டுத் தன்மானம்’ கொண்டவர்கள் என்றும் அறிந்தோம்.
எல்லாவகையான எழுத்துக்களும் பேசப்பட்டன. எழுத்தாளர்கள் வந்து போனார்கள்.
ஜெயகாந்தனும்கூட வந்து கர்ஜனை செய்துவிட்டுப்போனார். ஜெயகாந்தன் வழியாகத்தான்
ராஜண்ணனின் இலக்கியப் பயணம் தொடங்கியது. புதுமைப்பித்தனைத் தேடிப்போனது. இப்போது
போலவே அப்போதும் தமிழிலக்கியப் பட்டதாரிகளுக்கு மரியாதையோ வேலைவாய்ப்போ கிடையாது.
எப்படியோ முயன்று கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு இடம்
வாங்கிவிட்டார். தலைப்பு ‘புதுக்கவிதை வரலாறு’. திருவனந்தபுரம் பாளையம் பகுதியில்
விடுதியில் வாசம். மிக ஆச்சரியப்படத்தக்க விதத்தில் எனக்கும் பேராசிரியர் ஜேசுதாசன்
வழிகாட்டலில், பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆய்வு செய்ய வாய்ப்புக் கிடைத்தது.
ஆரம்பத்தில் அவருடன் தங்கியிருந்தேன். அன்றைய தேதியில் புத்தகமாகவும் இதழ்களிலும்
வெளிவந்த எல்லாப் புதுக்கவிதைகளும் அவரிடம் இருந்தன. தமிழில் அப்போது வெளியான
எல்லாப் படைப்பிலக்கியங்களும் இருக்கும். முதலில் ‘கோகயம்’ என்ற இதழும் பிறகு
‘கொல்லிப்பாவை’யும் ராஜண்ணன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தன. வெங்கட்சாமிநாதனும்
பிரமிளும் ‘வழிகாட்டி’களாக இருந்தார்கள். இது பேரரசன் இராசராசசோழனுக்கு ‘ஆன்மிக’
வழிகாட்டிகளாக இருந்த பிராமணர்கள் மாதிரி இருக்கும். ஓரளவு வசதி கொண்ட ராஜண்ணனின்
இலக்கிய நோக்கும் நிலவுடைமைச் சாயல் கொண்டதுதான். அங்கே ‘தாமரை’, ‘செம்மலர்’,
‘வானம்பாடி’ போன்ற இதழ்களுக்கு இடம் இல்லை. சுயமாகவும் பிறர் போதித்தும்
அறிந்துகொண்ட மேன்மையான ‘பிராமண அழகியல்’ பாதையிலிருந்து ராஜண்ணன் கடைசிவரை
மாறவில்லை. ஒரு புராதனத் தோற்றம்கொண்ட, பெருக்குதல், துடைத்தல் என்பதையே அறியாத
மிகச்சிறிய அவரது அறைக்கு வந்து போனவர்களில் நகுலன், ஷண்முக சுப்பையா, நீல.
பத்மநாபன், காசியபன், பிரமிள், கி. ராஜநாராயணன் போன்றோரும் அடங்குவர். ஒருமுறை
அவருடன் ஊருக்குப்போகிற வழியில் நாகர்கோயிலில் வனமாலிகையைப் பார்த்தோம்.
போர்முனையில் தளபதிகளின் அவசர வியூகத்திட்டமிடல் மாதிரி ‘சதங்கை’யின் அடுத்த இதழ்
பற்றிப் பேசினார்கள். கிட்டத்தட்ட ஒரு நகரப் பத்திரிகையாக இருந்த வனமாலிகையின்
‘சதங்கை’ இதழை ஒரு தரமான இலக்கிய இதழாக மாற்றியதில் ராஜண்ணனுக்குப் பெரும் பங்கு
உண்டு. வனமாலிகையும் இவரைப் போல ஒரு வித்தியாசமான மனிதர்தான். இருவருக்கும் தோற்ற
ஒற்றுமைகூட உண்டு. சுந்தர ராமசாமியுடன் ஒரு பக்தி கலந்த மரியாதை அவருக்கு உண்டு.
நிலவுடைமை என்றால் மதுபானம் இல்லாமலா? விடுதிக்கு அருகில் ஒரு சிறிய, அழகான
மதுச்சாலையில் மாலை நேரங்கள் கழியும். அப்போது மதுவில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு
இல்லாததால் எனக்குக் கப்பையும் மீனும் வாங்கித்தருவார். அப்போதுதான் கப்பா-மீனு
என்கிற சுவையான கலவையை நான் அறிந்தேன். கங்கைகொண்டானின் ‘கூட்டுப்புழுக்களி’ல் நான்
கண்ட காதல் அம்சங்களை அவருக்கு அழகியல் அனுபவ மாற்றம் செய்ய முயன்று
தோற்றுப்போனதும் அப்போதுதான். அப்போது செல்வாக்கிலிருந்த அடூர் கோபாலகிருஷ்ணன்,
அரவிந்தன், பக்கர் போன்றோரது படங்களிலும் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை.
தரமான இலக்கியம் மட்டுமே அவரது அக்கறையாக இருந்தது. ‘தினமணி’ வாழ்க்கை முழுவதிலும்
இந்த அக்கறையையே அவர் வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். கல்விப்புலத்திற்கும்
கலை, பண்பாட்டுப்புலங்களுக்கும் இருக்க வேண்டிய உணர்வுபூர்வமான, அறிவார்த்தமான
தொடர்பின் அவசியத்தை ராஜண்ணன் உணர்ந்திருந்தார். ஒரு கல்லூரியில் பணியாற்றும்
வாய்ப்புக் கிடைத்திருந்தால் மேலும் செய்ய முடிந்திருக்கும்.
பாண்டித்தமிழராக இருந்தாலும் பூஞ்சையான உடம்பும் மென்மையான சுபாவங்களும் கொண்டவர்.
எந்தக் குற்றத்தையும் மன்னித்து மறந்துவிடக்கூடியவர். காசு பணத்தில்
நம்பிக்கையில்லாதவர். வேறுபாடில்லாத நட்புப் பேணுபவர். ஒரு சாலை விபத்து அவரைப்
பலிகொண்டுவிடும் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்? |