|
ஒரு மரணம் சூழலில் எல்லோரையுமே பாதிக்கிறது. ஆனால் பாதிப்புகளின் தன்மை
மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ராஜமார்த்தாண்டனின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகள்
பல தளத்திலானவை. என் இரண்டாவது மகன் முகுந்தனுக்கு மார்த்தாண்டன் எப்போதும் அளவற்ற
பிரியத்தை வெளிப்படுத்தும் மாமா. பள்ளியில் தொலைந்துபோகும் பென்சில், ரப்பர்
ஆகியவற்றைச் சத்தமில்லாமல் பதிலீடு செய்துவிடும் ரகசிய உறவும் உண்டு. சாரங்கனுக்குத்
தமிழ் கற்பித்தல், வீட்டுத் தோட்டத்திலிருந்து அவனுக்குப் பிரியமான கொய்யாப்பழம்
கொண்டு வருதல் - இருவர் முகங்களிலும் சு.ரா.வை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.
‘காலச்சுவ’டில் பணியாற்றுவோருக்கு ‘சாரின்’ இழப்பு அளப்பரியது. கோபமேபடாமல்
பலவற்றையும் கற்றுத்தந்து வழிகாட்ட, பாதுகாக்க ஒரு ஆன்மா. அவர் குழந்தைகளுக்கு
எல்லாக் குறைபாடுகளையும் கடந்து மிகுந்த அன்பைப் பொழியும் தந்தை.
ராஜமார்த்தாண்டனுக்கும் மரணத்திற்குமான உறவு மிக நெருக்கமானது. உடல்நலத்தை அவர்
புறக்கணிக்கத் துவங்கி முப்பது ஆண்டுகள் இருக்கும். மரணம் அவரை நெருக்கி இருபது
ஆண்டுகள் கடந்துவிட்டன. இரண்டு முறை மீள்வாரா என்ற நிலையில் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு மீண்டிருக்கிறார். பழக்கவழக்கங்களை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
‘காலச்சுவடு’ பணிக்காகச் சில ஒழுங்குகளைக் கடைபிடித்தார் என்றாலும் பாதிக்கப்பட்ட
உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. எல்லாம் இருந்தும்
ரோட்டோரத்தில் அவர் மரணமடைந்திருக்க வேண்டியதில்லை. அதுவும் ‘காலச்சுவடு’
அலுவலகத்திற்கு மிக அண்மையில். அவர் வேகத்திற்கு 15 நொடிகளில் அவர் முன்வாசலை
எட்டியிருப்பார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை போலீஸ் பயத்தில் உறைந்திருந்த சிறு
கூட்டத்திடையே சகபணியாளர்களும் நானும் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல நேர்ந்தது.
அப்போதே உயிர் அடங்கத் துவங்கியிருந்தது. எனினும் நப்பாசை எங்களுக்கு இருந்தது. ஒரு
நண்பரைக் கையும் காலுமாகத் தூக்கிச் செல்ல நேர்ந்தது கொடூரம். எல்லாமே
மரத்துப்போய்க் கொண்டிருக்கிறது.
தெருவில் ஒரு விபத்தைக் கண்டால் செய்யப்பட வேண்டியது என்ன என்பது பற்றிக்
குடிமக்களுக்கு அறிவுறுத்தல் எதுவும் இங்கு இல்லை. மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லலாமா? மறுக்காமல் ஏற்கும் விதிமுறை மருத்துவமனைக்கு உண்டா? உடனடியாகக் களத்தை
எட்ட ஆம்புலன்சிற்கும் போலீசுக்கும் வேகமும் வழிமுறையும் சட்டவிதிமுறைகளும் உண்டா?
எதிலுமே தெளிவில்லை. இந்தத் தெளிவின்மை பொதுமக்களை ஸ்தம்பிக்க வைக்கிறது. உதவிக்கு
இறங்குவது பற்றிய பீதியை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு ஒன்று தெரியும்:
போலீசிடம் சிக்கக் கூடாது; கோர்ட் வாசலையும் மிதிக்கக் கூடாது.
நமக்கு மரணம் ஒரு கணத்தில் நிகழ்வதல்ல என்று தோன்றுகிறது. நாம் அறிந்த
ஒவ்வொருவரும் இறக்கும் போதும் அவருடன் பகிர்ந்துகொண்ட உறவின் வழி நமது ஒரு
பகுதியும் மரித்துவிடுகிறது. முதுமையின் வருகை என்பது காலத்தின் பாய்ச்சலாக
மட்டுமல்ல, மரணங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.
ராஜமார்த்தாண்டனின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதில் எனக்குத் தெளிவு இல்லை.
அப்போது மழை பெய்யத் துவங்கியிருந்தது. வேகமாக ஓடிவந்தவர், மோசமாக வழுக்கி
விழுந்திருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். பழக்கவழக்கங்களால் நசிவுற்றுப்
போயிருந்த உடல். விழுந்ததில் தாடை உடைந்திருந்தது. மழையின் குழப்பத்தில் ஏதேனும்
ஒரு வாகனம் தட்டிச் சரிந்திருப்பாரா? பிறருக்கு காயங்களைத் தந்திருக்கக் கூடிய
வீழ்ச்சி அவருக்கு மரணத்தைத் தந்ததா? வீழ்ந்து கிடந்தவர் கண்டுகொள்ளப்பட்டாரே தவிர
வீழ்ந்தது யாராலும் பார்க்கப்படவில்லை.
செட்டிகுளத்தில் பஸ் இறங்கி ‘காலச்சுவடு’ அலுவலகத்தை அரை கிலோமீட்டர் நடந்து
பதினொன்றரை வாக்கில் எட்டும் மார்த்தாண்டனுக்கு அந்த வழியாக நடைபாதையில் நடக்கும்
பாக்கியம் கிடைத்திருக்காது. நமது ஜொலிக்கும் இந்தியாவின் தாராளமயமான பொருளாதாரச்
சூழலில் நடைபாதைகளும் நடைபயணிகளும் அரதப்பழசு. சைக்கிளுக்கும் இடமில்லை. தெரு
முழுக்கவுமே ரோடு. கால்நடைவாசிகள் சாக்கடையில் பாதுகாப்பாக நடக்கலாம்.
o
ராஜமார்த்தாண்டனின் மரணத்திற்குப் பின்னர் பல இலக்கியவாதிகளின் தொடர் மரணம் பற்றிய
பரிதவிப்பு நண்பர்களிடமிருந்து வெளிப்பட்டது. இவற்றில் பெரும்பாலான மரணங்கள்
மிதமிஞ்சிய குடி மற்றும் புகைப் பழக்கத்தாலேயே ஏற்படுகின்றன என்ற வெளிப்படையான
செய்தி, சருமத்திற்கு அப்பால் சாரத்தைக் கண்டுவிடும் இலக்கியவாதிகளால் தொடர்ந்து
புறக்கணிக்கப்படுகிறது. இதுவரை நாம் கண்டிருப்பது சில பழக்கவழக்கங்களுக்குத் தம்மைப்
பறிகொடுத்தவர்களின் மரணங்களை. பேராசான்கள் விதைத்த, குடியைக் கலகமாகவும் மாற்றுப்
பாதையாகவும் அனார்கிசமாகவும் ஜொலிக்க வைத்த கோட்பாட்டு விதைகளின் அறுவடையை வரும்
ஆண்டுகளில் நாம் காண இருக்கிறோம். சிஷ்யப் பிள்ளைகளின் இடம், பொருள், ஆவி,
குடும்பம் எல்லாம் கலகத்தில் சிதறிக்கிடக்க ஆசான்கள் தமது வாழ்க்கைத் தரத்தையும்
குடும்பத்தையும் உரிய சமரசங்களையும் சரணாகதிகளையும் மேற்கொண்டு பாதுகாத்துக்
கொள்கின்றனர்.
போதைக்கும் கலைக்குமான உறவு புதியதல்ல. மேற்கில் அறுபதுகளில் போதைப் பொருட்கள்
கலை உணர்வுகளை மேம்படுத்துவதாகக் கருதிய கலைஞர்களால் சுவீகரிக்கப்பட்ட ஹிப்பி
இயக்கமே இருந்தது. பல துர் நிகழ்வுகளில் அது முடிவுக்கு வந்தது எனினும் அது
ஏற்படுத்திய வரலாற்றுத் தாக்கங்கள் முக்கியமானவை. பனிப்போரில் விளைந்த கொரியா,
வியட்நாம் போன்ற வன்முறைகளை மறுத்து அமைதியையும், இசையையும் அழகையும் காதலையும் அது
முன் வைத்தது. இசையிலும் இலக்கியத்திலும் முக்கியமான படைப்புகளை உருவாக்கியது.
(John Kerouac Þ¡ On the Road இன்றுவரை அமெரிக்கப் புத்தகக் கடைகளின் முன்
அடுக்குகளில் இருக்கிறது.) வன்முறை என்ற சமூக நோய்க்கு மாற்றாக உருவான இயக்கம் அது.
ஜி. நாகராஜன் முதல் ராஜமார்த்தாண்டன் வரையிலான போதையுடன் வாழ்தல் என்பது தனிப்பட்ட
தேர்வு மட்டுமே. அவர்கள் போதையைப் பிரச்சாரம் செய்யவில்லை. கோட்பாட்டு அடிப்படைகளை
உருவாக்கவில்லை. மாற்று வாழ்க்கைமுறை என்ற கோரிக்கைகள் இருக்கவில்லை. இலக்கியத்தின்
தீவிரத் தளத்தை அது சிதைக்கவில்லை. மாறாக இன்றையத் தமிழ் இலக்கிய உலகில் குடி பெரும்
நோயாகப் பரவி வருகிறது. பல சந்தர்ப்பங்களில் இலக்கிய விவாதங்களை அழித்து
ஆபாசங்களையும் வக்கிரங்களையும் அது பதிலீடு செய்கிறது. பல வன்முறைகளுக்கு
வித்திடுகிறது. இவர்கள் உருவாக்கும் வெளிகளில் பெரும்பாலானவை பெண்கள் அண்ட முடியாதவை.
பெண்களின் அருகாமையில் குடித்துக் கண்ணியத்துடன் கொண்டாடும் முதிர்ச்சி
பெரும்பான்மையான தமிழக ஆண்களிடம் இல்லை. ஆக பெண்கள் பெருமளவிற்கு இடம்பெற்றிருக்கும்
தமிழ் இலக்கிய உலகை ஆண்களின் மடமாகத் தக்க வைக்கும் சன்னமான முயற்சி இது. பெண்கள்
மட்டுமல்ல நுண் உணர்வு கொண்ட எந்த ஆணும் இவற்றில் தாண்டவமாடும் வக்கிரம், பெண்
இலக்கியவாதிகளைப் பற்றிய புரளி பேசுதல், கொச்சைப்படுத்தல் ஆகியவற்றைச்
சகித்துக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மது அருந்தப்படும் எல்லாச்
சந்தர்ப்பங்களையும் இழிவுபடுத்துவதோ தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கப் பார்வையை
முன்வைப்பதோ அல்ல நோக்கம். இலக்கியச் சூழலில் உருவாகிவரும் ஒரு ஆதிக்கப் போக்கைச்
சுட்டிக்காட்டுவதுதான். பல இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய விவாதங்களுக்காக
உருவாக்கப்படுகின்றனவா அல்லது ‘இலக்கியம்’ என்பது கூடி மிதமிஞ்சிக் குடித்துச்
சீரழிவதற்கான முகாந்திரம் மட்டும் தானா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இந்தச்
சூழலை எதிர்கொள்ள கவிதைக்கும் குடிக்குமான உறவின் மயக்கங்களை நாம் இழக்க
வேண்டியிருக்கும்.
இலக்கியத்தின் தீவிரத் தளத்தை மீட்க வேண்டும். அந்த வெளி இலக்கியத்தில் ஆர்வம்
கொண்ட எல்லோருக்குமுரியதாக ஆரோக்கியமான விவாதங்களுக்கானதாக இருக்க வேண்டும்.
o
எல்லாவற்றையும் உள்ளேயே வைத்து அழுத்திக்கொள்ளும் மனம் மார்த்தாண்டனுடையது. அவரது
மரணத்திற்கு முன்பாகவே எண்ணற்ற ஆசைகளின் புதைகுழிகள் அவர் மனதில் அடங்கியிருந்தன.
அவர் மரணத்திற்குப் பின்னர் குடும்பத்தினருடனான மனம் திறந்த உரையாடலில் வெளிப்பட்ட
பற்பல விஷயங்கள் என்னை வெட்கப்படவைத்தன. இவற்றை அறியாமலும் அறிய முயலாமலும் இருந்தது
பெரும்பிழை என்று தோன்றியது.
சென்னையிலிருந்து நாகர்கோவில் திரும்பியபிறகு மார்த்தாண்டனுக்கு ஏற்பட்ட புதிய
நட்பு, ‘நெய்தல்’ கிருஷ்ணன் உடனானது. சதா கேலியும் சிரிப்புமாக இருக்கும் இருவரையும்
இணைந்து பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பலரிடமும் நட்பு பாராட்டும்
மார்த்தாண்டன் யாரையும் தேடி நான் பார்த்ததில்லை. ஆனால் கிருஷ்ணனை இரண்டு நாட்கள்
காணவில்லை என்றால் தேடத் தொடங்கிவிடுவார். இக்காலகட்டத்தில் அதிக நேரத்தை
கிருஷ்ணனுடனேயே செலவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் கிருஷ்ணனிடம்கூட அவர்
மனம் திறந்து பேசிய சந்தர்ப்பங்கள் குறைவு.
சில வாரங்களுக்கு முன்னர் ராஜமார்த்தாண்டனை பல நாட்கள் அலுவலகத்தில் காண முடியவில்லை.
நெடுக குடித்துக்கொண்டிருப்பதாகவும் காரணம் பிரபாகரனின் மரணம் என்றும் அறிந்தபோது
வியப்பாக இருந்தது. இவ்வுணர்வை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும்
ராஜமார்த்தாண்டன் என்னிடம் வெளிப்படுத்தியதில்லை. அலுவலகம் மீண்ட பின்னர்
கேட்டபோதும் ஒரு சில விஷயங்களை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
ஆனால் இந்த உணர்வு மிக ஆழமானது என்பதைக் குடும்பத்தினருடன் உரையாடியதில்
தெரிந்துகொள்ள முடிந்தது. பல நாட்கள் பிள்ளைகளையும் நண்பர்களையும்
நடுச்சாமத்தில்கூட அழைத்து பிரபாகரன் கொல்லப்பட்டது, சார்லஸ் ஆன்றணி கொல்லப்பட்டது,
ஏற்படும் பேரழிவு பற்றியெல்லாம் புலம்பியிருக்கிறார். முன்னர் வீட்டில் புலிகள்,
பிரபாகரன் தொடர்பான பல நூல்களை வைத்திருந்திருக்கிறார். ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டபோது விடுப்பெடுத்து வீட்டிற்கு வந்து அவற்றை அழித்திருக்கிறார்.
அதேபோல அவர் அறையில் ஒரு சென்ட் பாட்டிலைக் கண்டு வியப்படைந்தேன். எப்போதும்
எளிமையாகவும் அக்கறையின்றியும் காணப்படும் மார்த்தாண்டனுக்கு சிறப்பாக உடையணிந்து
வளமுடன் வாழ்வது பற்றிய ஆசைகள் இருந்திருக்கின்றன. குடி வாழ்வின் மையத்தை
ஆக்கிரமித்த நிலை இவற்றை தூரக் கனவுகளாகவே நிறுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியற்ற
குழந்தைப் பருவமும் இளமைக்காலமும் அவர் ஆளுமையை முழுமையாக விகாசமடையவிடாமல்
தடுத்துவிட்டனவோ என்று தோன்றுகிறது.
o
இலக்கியத் தளத்தில் ராஜமார்த்தாண்டனின் மரணம் சில தளங்களில் நிரப்பமுடியாத இடைவெளியை
ஏற்படுத்தியுள்ளது. நவீன கவிதை இயக்கத்தின் அந்தராத்மாவாக அவர் இருந்தார். வெளிவரும்
எல்லாக் கவிதைத் தொகுதிகளையும் அவரளவிற்குத் தேடிப் பிடித்துப் படித்தவர்கள் இல்லை.
இடதுசாரி, திராவிட இயக்கத்தினர் தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தை மறுத்தும் மறைத்தும்
கொச்சைப்படுத்தியும் வினையாற்றிய போதெல்லாம் எதிர்வினை புரிந்தவர் மார்த்தாண்டன்.
இவ்வியக்கத்தின் வரலாற்றையும் பதிவுசெய்தவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தகவல்
களஞ்சியமாகவும் பக்க சார்பற்ற, மென்மையாக வெளிப்படும் உறுதியான விமர்சனப் பார்வை
கொண்ட விமர்சகராகவும் இருந்தார். கவிதை பற்றிய அவரது அக்கறை உலகத் தமிழின்
விரிவுக்கு ஏற்ப வளர்ச்சியடைந்து வந்தது. ஈழத் தமிழ்க்கவிதை இயக்கம் பற்றிய
வரலாற்றுபூர்வமான பார்வை அவரிடமிருந்தது. அதை சிரத்தையுடன் கவனித்து தொடர்ந்து
தமிழக இதழ்களில் பதிவு செய்து வந்தார். தமிழக ஈழ உறவுக்கு அவரது இழப்பு, இழப்புகளால்
பொங்கிப் பிரவாகமெடுக்கும் இந்த நாட்களில், மேலும் ஒரு பேரிழப்பு. அவரது மேற்படி
வலுக்களும் தேர்ந்த பதிப்புத்திறனும் ‘காலச்சுவ’டை வலுப்படுத்தி வந்தன. அந்த இடம்
இனி நிரந்தரமான இடைவெளியாகவே இருக்கும்.
‘தினமணி’யிலிருந்து ஓய்வுபெற்று ‘காலச்சுவ’டோடு இணைந்த காலத்தில் ‘நெய்தல்’
கிருஷ்ணனும் நானும் அவரை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தோம். அவரது பலவீனமான உடல்
நிலையில் தொடரும் மதுப்பழக்கம் மரணத்தைத் துரிதப்படுத்தும் என்ற பதற்றம் எங்களுக்கு
இருந்தது. சிகிச்சைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினோம். பணம் அவர் கையில்
கிடைக்காமல் வீட்டுக்குச் செல்ல நான் ஒழுங்கு செய்தேன். எதற்கும் அவர் மசியவில்லை.
இடையில் விட்டிருந்த புகைப் பழக்கத்தையும் மீண்டும் தனதாக்கிக்கொண்டார். அவர்
உடல்நலம் மிக மோசமடைந்திருப்பதையும் மரணம் அவரை நெருங்கிக்கொண்டிருப்பதையும் அவரது
குடும்பத்தினர் உணர்ந்து புலம்பி எச்சரித்திருக்கிறார்கள். இந்த வீழ்ச்சியை
எங்களிடமிருந்து சாமர்த்தியமாக மறைத்துவிட்டார் மார்த்தாண்டன். இறுதிக்காலத்தில்
அவரது எடை சுமார் 33 கிலோ. எழுதப்பட்டிருக்க வேண்டிய நூல்களும் தொகுக்கப்பட
வேண்டிய எழுத்துகளும் மேசையில் நிரம்பியிருக்கின்றன. நாற்காலியில் ஓர் இலக்கிய ஆன்மா
இல்லை. |