|
“வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை இல்லை” என்ற பாரதியின்
வரிக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றுப் பாலியல் (ஒருபாலீர்ப்பு, இருபாலீர்ப்பு
கொண்ட ஆண்களும் பெண்களும், எதிர் பால்நிலை விழையும் மக்கள் - அரவானிகள், ஆண்
பாலடையாளம் ஏற்கும் பெண்கள்) கொண்டவர்களின் குரல்கள்
ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சென்னையிலும் மாற்றுப் பாலியலாளர்களின் குரல்கள்
வலுவாக ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. உலகெங்கிலும் ஜூன் மாதம் மாற்றுப்
பாலியல் கொண்டவர்களின் சுயமதிப்பைக் குறிக்கும் மாதமாகவும் தம் பால்விழைவைப்
பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளும் காலமாகவும் குறிக்கப்படுகிறது. 1969ஆம்
ஆண்டு நியூயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில் தம் பாலியல் வேறுபாடு
காரணமாகக் காவல் துறையினரின் வன்முறைக்கு உள்ளானவர்கள் தொடங்கிய புரட்சி
ஒருபால் உறவாளர் இயக்கமாக விரிவடைந்தது. ஆண்-பெண் இடையிலான பாலியல் உறவு மட்டுமே
சரியானது என்ற கண்ணோட்டத்தை இவ்வியக்கம்
கேள்விக்குள்ளாக்கியதுடன் பால் விழைவு, அதற்கான சுதந்திரம், உடல் அரசியல், உடலின்பம்
குறித்த விவாதங்களுக்கும் வலுசேர்த்துள்ளது.
தமிழகத்தில் பாலியல் குறித்த சிந்தனைகள் பெருமளவுக்கு வன்முறை என்னும் தளத்திலேயே
இயங்கி வருகின்றன. பல காலமாகத் தமிழ்த் திரைப்படங்களின்வழி
நம்மைத் தாக்கிவரும் பாலியல் வன்முறை இப்போது ஒரு எழுதப்படாத விதி போலவே
செயல்பட்டு வருகின்றது. அத்தகைய வன்முறையைக் கொண்டிராத
திரைப்படங்களை அவற்றில் வேறெந்தக் கலையம்சமும் இல்லாதபொழுதும் பாலியல் வன்முறை
குறைவு என்ற ஒரு காரணத்திற்காகவே கொண்டாடும் ஈன நிலையில்
நம் ரசனை மதிப்பீடுகள் இருக்கின்றன. திரையிலும் புத்தகங்களிலும் பெண்களை ஆசை
ததும்பப் பலவாறு பார்த்து ரசிக்கும் தமிழர்கள் குஷ்பு மீது தம் காலணிகளை
எறிய ஒருகணமும் தயங்குவதில்லை. இத்தகைய சூழலில் ஆண்களை விரும்பும் ஆண்கள், பெண்களை
விரும்பும் பெண்கள், இரு பாலினத்தவரையும் விரும்பும் நபர்கள்
ஆகியோரது நிலை குறித்த விவாதங்கள் நிகழ்வதற்கான வன்முறையற்ற, அடக்குமுறையற்ற தளத்தை
அளிக்கும் முதிர்வு தமிழ்ச் சூழலுக்கு உண்டா என்பது ஒரு
முக்கியக் கேள்வி.
தமிழக அரசு திருநங்கைகளுக்கு இன்று ஏற்படுத்தித் தந்துள்ள பல முன்னேற்றங்கள் -
திருநங்கை அடையாளத்தை அங்கீகரிக்கும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள
அட்டை, அரவானிகள் நல வாரியம், கல்லூரிப் படிப்புக்கான ஒதுக்கீடுகள், அரசு செலவில்
பால் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை - பாராட்டப்பட வேண்டியவை.
எனினும் திருநங்கைகள் மாற்றுப் பாலியல் கொண்ட பன்முக மனித சமூகத்தின் ஒரு பிரிவினரே.
தம் பெண் பாலடையாளத்திலிருந்து ஆண் பாலடையாளம் விழையும்
மக்களும் உண்டு. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்குண்டான பாலியல் சுதந்திரத்தை (அதாவது
அதன் இல்லாமையை) முன்வைத்து யோசிக்கும்போது தம் பாலின
அடையாளத்தை வெறுக்கும் பெண்களின் நிலை திருநங்கைகளின் நிலையைக் காட்டிலும் எவ்வளவு
கடினமானது என்பது விளங்கும். ஆண்களாக விழையும் பெண்கள்
ஆணாதிக்கச் சமூகத்தின் எளிதில் உடையக்கூடிய கற்பிதங்களை வெகுவாகச்
சீண்டிவிடுகிறார்கள்.
அரவானிகளின் வாழ்வியல் குறித்த தெளிவு ஓரளவு தமிழ்ச் சமூகத்தில்
உதயமாகிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் இன்னமும்
தங்களுக்கான வெளிகளை மிகுந்த சிரமத்துடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
மையநீரோட்ட சமூகம் இத்தகையோரைத் தன் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்கிறது.
சில நேரங்களில் இவர்கள் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதாக வெகுஜன
சமூகம் எண்ணிக்கொள்கிறது. மற்ற நேரங்களில் சினிமாக்களிலும் மட்டரக நகைச்சுவைத்
துணுக்குகளிலும் வன்முறைச் செய்திப் பத்திகளிலும் சமூகத்தின் மொத்த
சீரழிவின் பிம்பங்களாய் இவர்களைச் சித்தரிக்கிறது. குழந்தைகளைப் பாலியல்
வன்கொடுமைக்கு உட்படுத்துபவர்களுக்கும் ஒருபாலீர்ப்பு கொண்ட மக்களுக்கும்
இடையிலான வேற்றுமைகளை அறியும் தெளிவுகூடத் தமிழ்ப் பொதுப்புத்திக்கும் தமிழ்
ஊடகங்களுக்கும் இல்லை.
இத்தகைய சூழலில்தான் இன்று ஒரு விரிந்த தளத்தில் பாலியல் உரிமைக்கான குரல்கள்
இங்கு ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சென்னையிலுள்ள சக்தி சென்டர் அமைப்பும்
நியூயார்க் நகரிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பும் இணைந்து கடந்த ஜூன் 20ஆம்
தேதியன்று மாற்றுப் பாலியல் அரசியல் குறித்த நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு
செய்திருந்தன. மனித உரிமைகள் கண்காணிப்பு பதிப்பித்திருக்கும் அறிக்கை ஒன்றின்
வெளியீடும் அது குறித்த விவாதங்களும் கலை நிகழ்ச்சிகளும் பாலியல்
அடையாளங்களின் பன்முகங்களைப் பிரதிபலித்தன. ஓரினச் சேர்க்கையை இயற்கைக்கு
மாறானதாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதும் ஐ.பி.சி 377 தில்லி
உயர் நீதிமன்றத்தில் சர்ச்சைக்குள்ளாகி முடிவை எதிர்பார்த்திருக்கிறது. சம்மதத்துடன்
உடலின்பத்தில் ஈடுபடும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் குற்றவாளிகள் அல்ல
என்பதே ஐ.பி.சி 377க்கு வைக்கப்பட்டுள்ள எதிர்வினை. இச்சட்டத்தை நிலைநிறுத்த
விரும்பும் தொகுதிகளின் முக்கிய மறுப்பு இந்தியப் பண்பாடு சார்ந்த ஒன்றாக
இருக்கிறது. ஓரினச் சேர்க்கை என்பது இந்தியப் பண்பாடு அல்ல என்றும் அது மேலைநாட்டு
இறக்குமதி என்றும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வழக்கறிஞர் அலோக் குப்தா
ஆராய்ந்து எழுதி மனித உரிமைகள் கண்காணிப்பு வெளியிட்டுள்ள “This Alien Legacy: the
history of “sodomy” laws in British Colonialism” என்ற அறிக்கை இத்தகைய
பண்பாடு சார்ந்த மறுப்புகளைத் தகர்க்கிறது. விக்டோரியக் காலத்தின் ஒழுக்க நீதிகளின்
பிரதிபலிப்புகளுள் ஒன்றாக இச்சட்டம் காலனிகளில் எவ்வாறு வந்திறங்கியது
என்பதை இவ்வறிக்கை விவரிக்கிறது. (அறிஞர்கள் ரூத் வனிதா மற்றும் சலீம் கித்வாய்
“Same Sex Love in India - Readings from History and Literature” என்ற
நூலில் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே ஒருபாலீர்ப்பும் பல நிலைகளில் அது குறித்த
புரிதல்களும் இருந்து வந்திருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக
விவரிக்கின்றனர்.)
பொதுத் தளத்தில் மாற்றுப் பாலியல் பற்றிய விவாதங்களும் கருத்துப்
பரிமாற்றங்களும் நம்மிடையே இப்போது ஏற்படத் தொடங்கியிருப்பதையே மாற்றத்தின் ஒரு
கூறாகக் கொள்ளலாம். எனினும் தமிழ் அறிவுஜீவிச் சமூகமும் ஊடகங்களும் இவ்விவாதங்களை
முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்க முன்வர வேண்டும். பாலியல்
விழைவும் காதலும் காமமும் நம் அனைவரது உடல்களுக்குள்ளும் உடல்களுக்கிடையிலும்
தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பாலியல் குறித்த
சிந்தனைகளைப் பரிசீலிக்காமல் இருப்பது நம்மை நாமே நிராகரித்துக்கொள்வது போன்ற
செயலாகும்.
|