|
இலங்கையில் நடந்து முடிந்த பெரும் போர் தமிழர் வாழ்வை மூடியிருந்தது. அங்கு
அமைதியைப் போல ஒன்று தென்பட்டாலும், அது அமைதி இல்லை என்று மிக நிச்சயமாகச் சொல்ல
முடியும். இது இலங்கைக்கு நான் மேற்கொண்ட இந்த இரண்டாம் பயணம். போருக்குப்
பிந்தையது. கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்திருக்கவில்லை. சிங்கள தேசியக் கொடி
பறக்காத வாகனத்தையோ கட்டடத்தையோ பார்ப்பது மிக அரிதாக இருந்தது.
நவம்பரில் நான் சென்றபோது தமிழர்களிடமிருந்த நம்பிக்கையும் தைரியமும் இப்போது
முற்றாக அழிந்துபோயிருந்தன. நண்பர்களாக அறியப்பட்டவர்களில் பலர் பேசவே மறுத்தார்கள்.
பல நண்பர்களைப் பார்க்கவே முடியவில்லை. பலரும் போர் முடியும் தருணத்தில்
புலம்பெயர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
“தமிழர்களுக்கும் ராஜபக்சே அதிபர் என்றால் இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்த்திருக்க
வேண்டும். தமிழர்கள் இதனால் எப்படிக் கூனிக்குறுகிப் போகிறார்கள் என்பதை அவர்
அறியாமலா இருப்பார்?” என்று ஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளர் சொன்னபோது,
தமிழர்களுக்குச் சம உரிமை என்று அதிபர் சொல்வதையும் அதை உலக நாடுகள் நம்புவதையும்
நினைத்துச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “போர் முடிந்துவிட்டதாகச் செய்தி
வந்ததிலிருந்து இன்றுவரை நாங்கள் வெளியே செல்லவில்லை. பேருந்துகளிலோ ரயில்களிலோ
பயணம் செய்யும்போது தமிழர் என்று தெரிந்தால் பகடி செய்கிறார்கள்” என்றார் இன்னொரு
தமிழ்ப் பத்திரிகையாளர்.
நான் சென்ற சமயத்தில்தான் அதிபருடனான பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்பு நடந்து
முடிந்திருந்தது. போரின் தீவிரங்கள் துரத்த, வாழ்வாதாரங்களை விட்டுவிட்டுத் திசைகள்
தெறிக்க ஓடியதில் வவுனியா முகாமுக்குத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்த
சமயம் அது. கையிழந்து, காலிழந்து வந்த அவர்களைத் ‘தலையில் மூட்டை மூட்டையாகப் பணம்
சுமந்து வந்ததாக’ சொல்லி அந்த ஆசிரியர்களின் சந்திப்பில் அதிபர் ஏளனம் செய்ததாகச்
சொல்கிறார் அதில் பங்கேற்ற ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். அவரிடம் ஒட்டியிருந்த
கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளும் அந்தச் சந்திப்போடு உதிர்ந்துபோயின.
மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் (Centre for Policy Alternatives) என்றொரு அமைப்பு.
பல நெருக்கடிகளுக்கு இடையிலும் மிக நேர்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு
அது. போர் முடிந்த காலகட்டத்தில் பிற நிர்வாகங்கள் போலச் சிங்களக் கொடியை அதன்
கட்டடத்தில் ஏற்ற மறுத்துவிட்டது அந்த அமைப்பு. சில நாட்களிலேயே அந்த அமைப்பிற்கு
ஒரு கடிதம் வந்தது. துரோகிகள் என்று அந்த அமைப்பினரைச் சாடிய அந்தக் கடிதம், ஒரு
வாரத்துக்கு அதன் அலுவலகங்களை மூட வேண்டும் என்று அறிவுறுத்தியது. தவிர, சிங்களக்
கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ராணுவ நலனுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடையாக
அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. “உங்களது
செயல்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம், நாசகாரர்களை ஒழிப்போம்.
பயமின்றி முன்னேறுவோம், அன்னை இலங்கையைக் காப்போம்” என்று முடிந்திருந்தது அது.
எனது பயணத்தின்போது நான் அவர்களுடைய அலுவலகத்துக்கும் செல்ல நேர்ந்தது. எந்த
மிரட்டலுக்கும் அடிபணியவில்லை என்று அப்போது அவர்கள் சொன்னார்கள். வாழ்வு
முழுவதையும் போரின் தீவிரங்களிலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான
ஆயத்தங்களிலும் செலவிடும் மக்களின் நீள்துயரங்களை அந்தச் சில நிமிடங்களில்
கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகும் ஊடகங்களுக்கு எதிரான போர்
முடியவில்லை. போர் நடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்பட்ட
பத்திரிகையாளர்களைத் துரோகிகள் என்றழைத்து அவர்களைப் பற்றிய செய்திகளையும்
புகைப்படங்களையும் வெளியிட்டன சிங்களச் சார்பு ஊடகங்கள். இந்தச் செய்தி குறித்து
தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க பத்திரிகையாளர் குழு ஒன்று அதிபரை ஜூன் ஒன்றாம் தேதி
சந்தித்திருக்கிறது. அந்த இரண்டு மணி நேரச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோதே
துரோகி எனப் பட்டம் பெற்றவர்களுள் ஒருவரான பொடல ஜெயந்த என்ற பத்திரிகையாளர்
அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இப்போதும் அவர்
மருத்துவமனையில்தான் இருக்கிறார்.
இப்போதும் என்னால் செரிக்க முடியாத ஒரு காட்சி, ஒரு தமிழ் வீட்டில் பறந்த சிங்களக்
கொடி. நான் கேட்டபோது, அந்த வீட்டிலிருந்த தமிழர்கள் அழுது விட்டார்கள். “வேறு
வழியில்லை அக்கா. இல்லேனா நாங்கள் துரோகிகளாக் குற்றம்சாட்டப்பட்டுக்
கொல்லப்படுவோம். பிரபாகரனை நாங்கள் தெய்வமா மதிச்சோம். அவர் மட்டும் சில
தவறுகளைச் செய்யாம இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என்றார்
அந்த வீட்டிலிருந்தவர். என்ன சொல்லித் தேற்ற?
நான் அங்கிருந்த சமயத்தில் ஒரு நண்பரோடு சேர்ந்து சிங்கள புத்த பிக்கு ஒருவரைச்
சந்திக்க நேர்ந்தது. “உங்கள் மதத்திற்கு எதிரான செயல் இல்லையா போர்?” என்று அவரிடம்
கேட்டேன். “உண்மைதான், இது எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. இளைஞர்கள்
நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு
என்ன வழி? அவர்கள் தவறான பாதையைத் தேர்ந் தெடுத்தார்கள். அதனால் அவர்களைக்
கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்றார்.
இலங்கை மண்ணில் புத்தர் இரண்டாம் முறையாக இறந்திருக்கிறார். இந்தமுறை
கொல்லப்பட்டிருக்கிறார்.
|