|
கேட்டுக் களைத்துப்போன வரி ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்: ‘நாட்டுப்பற்று
கயவனின் கடைசிப் புகலிடம்’. இது புழக்கத்திலிருக்கும் பழைய வாசகம். சமகாலத்திற்குப்
பொருத்தமான வசனம்: ‘பிரதிகள் அடிப்படைவாதிகளின் இறுதி அடைக்கலம்’. இன்றைய
அடிப்படைவாதியின் ஆவேசமான குறும் புலப்பதிவுகளுக்குப் பின்னால் ஒரு புனிதப் பிரதி
இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் முஸ்லிம்களுக்கு திருக்குரான். பொது
உடைமைவாதிகளுக்கு மார்க்ஸின் ‘பொது உடைமையின் திட்டச் சாதனை’. இப்படியே
சொல்லிக்கொண்டு போகலாம். சிங்களவர்களும் தங்களுக்கென ஒரு பிரதியை
மீள்கண்டுபிடித்திருக்கிறார்கள். அது பௌத்தரின் போதனைகள் கொண்ட ‘தம்மபாதா’ அல்ல.
சில உண்மைகளையும் கட்டுக் கதைகளையும் உள்ளடக்கியுள்ள மஹாவம்சம் (பெரும் வரலாற்றுப்
பதியல்).
மஹாவம்சம்: மிகச் சுருக்கமான பொருளடக்கம்
இந்த நூல் புனிதப் பேரிலக்கியத் திரட்டல்ல (religious canon). பௌத்தத்தின்
சித்தாந்தங்கள், போதனைகள் நிறைந்த சமயக் கையேடும் அல்ல. இலங்கைத் தீவின் வரலாற்றைப்
புத்தத் துறவிகளின் பார்வையில் தேரவாத பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி, பௌத்தர்களை
ஊக்குவிக்க எழுதப்பட்ட பிரதி. இந்த நூல் புத்த பிக்குகளின் மதப் பரப்புரைக்குச்
சான்றிதழ் தருகிறது. இந்த பௌத்த மதப் பரப்பாளர்களின் சமய போதனைகளைக் கேட்டு
‘மக்கள் ஆனந்தக் கடலில் மூழ்கினர், ஆயிரக்கணக்கானோர் ஆன்மிக மார்க்கத்தின் முதல்
படியில் ஏறினர்’ என்ற வரிகள் நிறைய உண்டு. முப்பத்தேழு அத்தியாயங்களைக் கொண்ட
இந்நூலில் ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் ‘இப்படியாகப் புனிதரின் பக்தி
மார்க்கத்தில் இணைந்த புத்த பக்தர்களின் மனத்தில் பேரானந்தம் பொங்கிட’ இந்த
அத்தியாயம் வழிவகுக்கும் என்ற வாக்கியங்கள் இந்த நூல் யார் நலனுக்காக எழுதப்பட்டது
என்பதைப் புலப்படுத்துகிறது.
மஹாவம்சம் சித்தார்த்த கௌதமர் ஸ்தாபித்த பௌத்த மதம் எவ்வாறு ஒவ்வொரு
காலகட்டத்திலும் இலங்கைத் தீவில் வளர்ச்சி அடைந்தது என்ற செய்திகளை அடக்கிய நூல்.
இதில் வர்ணிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்து பல நூறாண்டுகளுக்குப் பின்
பதியப்பட்டவை. நவீனத்தின் பொற்கனியான விஞ்ஞானச் சிந்தனைகளால்
வயப்பட்டிருப்பவர்களுக்கு வானத்திலிருக்கும் தேவர்களின் தலைவரான இந்திரனிடம் மக்கள்
பேசுவதும் மனிதர்கள் தங்களுடைய விஷேச சக்தியை உபயோகித்து ஆகாயத்தில் பறப்பதும்
தாமிரபரணி (இலங்கைத் தீவின் கிரேக்கப் பெயர்) முழுவதும் கேட்கும்படி பேசக்கூடிய
அதீதக் குரல் உள்ள பிக்குகள் பற்றிய தகவல்களும் அலுப்பையும் கவலையையும் தரக்கூடும்.
இன்றைய இலக்கிய வகைமைகளில் மஹாவம்சம் ஒரு பக்தி புதினம் என்றுதான் கணிக்கப்படும்.
பௌத்தத் துறவிகளின் கதையாடல் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
மஹாவம்சம் பொது கால வரலாற்றுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டில் மகாதேர மஹாநாமா என்ற
பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டது என்பது பொதுவான கணிப்பு. கீழைத்தேயப்
பிரதிகளில் நிபுணத்துவம் உடையவர்களின் கருத்துப்படி மஹாவம்சத்திற்கு முன்னால் சில
பிரதிகள் இருந்தன என்றும் அவற்றில் ஒன்றான தீபவம்சத்தைப் பயன்படுத்தியே மஹாவம்சம்
எழுதப்பட்டதாக ஒரு ஊகக் கருதுகோள் (hypothesis) உண்டு. கலிங்கத்திலிருந்து வந்த
விஜயன் (483-445 பொது கால வரலாற்றுக்கு முன்) தொடங்கி மகாசேனன் (325-352 பொது
கால வரலாற்றுக்குப் பின்) வரை 61 அரசர்களைப் பற்றிப் பதிவுசெய்கிறது. படையெடுப்புகள்,
அரண்மனை சூழ்ச்சிகள், பௌத்த மதத்தின் மகிமையை வெளிப்படுத்த எழுப்பப்பட்ட விகாரைகள்,
மற்றும் மன்னர்களால் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் பற்றிய ஆவணங்கள் உண்டு.
மீள் கண்டுபிடிப்பும் மஹாவம்ச மனப்போக்கும்
18, 19ஆம் நூற்றாண்டுகளில் கீழைத்தேய வல்லுநர்கள் ஆசியாவில் ஏராளமான புதையல்
பிரதிகளைக் ‘கண்டு’ பிடித்தார்கள். இந்தியாவில் William Jones, H.H.Wilsons,
Monnier- Williams ஆகியோரின் பங்களிப்பை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை.
இதே காலகட்டத்தில்தான் மஹாவம்சமும் ஆங்கில ஆட்சியில் வரிசேகரிப்பவரும்
நிதியாளருமாயிருந்த George Turnour என்பவரின் கவனத்திற்கு 1820களில் வந்ததாகச்
சொல்லப்படுகிறது. இவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஒரு பிக்குதான் இதை
அறிமுகப்படுத்தியதாக ஒரு வழக்கும் உண்டு. பாலியில் எழுதப்பட்ட இந்த நூலின்
மொழிபெயர்ப்பு வரலாறு கொஞ்சம் சிக்கலானது. அதற்குள் இப்போதைக் குப் பிரவேசிக்க
வேண்டாம் என்று நினைக்கிறேன்.
ஆய்வுக்கிடங்குகளில் முடங்கிக்கிடந்த நூலை மறுபடியும் மீள் கண்டுபிடித்துச்
சிங்களவர்களுக்கு ஞாபகப்படுத்தியவர் பௌத்த சீர்திருத்தாளர் அனாகரிக தர்மபாலா.
விகாரைகள் எல்லாம் தேவாலயங்களாக மாறும் இயேசுவின் நற்செய்திக்கு முன்னால் சாக்கிய
முனியின் போதனைகள் ஒரு தூசி என்று இளப்பமாக கிறிஸ்தவ மதப் பரப்பாளர்கள் பேசிய
அந்தக் கால கட்டத்தில் இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்திற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட
பூமி என்ற தர்மபாலாவின் மஹாவம்ச வாசிப்பு காலனியத்திற்கு எதிரான ஒரு திட்டமுனைப்பு
கருவியாயிற்று. மூன்றுமுறை சித்தார்த்தர் இலங்கைக்கு வந்து அசுரர்களுக்கும்
நாகர்களுக்கும் போதனைகள் புகட்டி, பௌத்த மதத்தில் இணைந்தவர்கள் வணங்கும் புனித
பூமியாக லங்க தீபகற்பத்தை மாற்றினார் என்ற செய்தியும் ‘இந்தப் பூமியை நமது சமய
ஆதிக்கத்தின் கீழ் வைக்கவே வந்துள்ளனர்’ போன்ற வார்த்தைகளில் தர்மபாலாவின்
சுத்தமான சிங்கள பௌத்தத் தேடலுக்கான தடயங்கள் கிடைத்தன.
சிங்களவர்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும்
சிங்கள அரசனான துட்டகைமுணு தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்ததை ஆரிய சிங்கள
பௌத்தத்திற்குக் கிடைத்த வெற்றி என்று தர்மபாலா மறு உருக்கோலம் (reconfiguration)
செய்தார். அசல் இலங்கைவாசி சிங்களவர் என்பதும் உண்மையான சிங்களவர் பௌத்தர் என்ற
தகவல் குழப்பமும் தர்மபாலாவின் மஹாவம்ச அனர்த்தன வாசிப்பால்தான் ஏற்பட்டவை. இதுதான்
பின்னால் ‘மஹாவம்ச மனநிலை’, ‘மஹாவம்ச மன அமைப்பு’ என்று இன அரசியல் கூறுமுறையில்
புகுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் 50களில் Pahumune Sri Smungla தொகுத்த
Revolt in the Temple என்ற நூலில் ஒரு தலைப்பட்ச வாசிப்பில் மஹாவம்சத்தின் செய்தி
மீண்டும் நினைவுபடுத்தப்பட்டது. இலங்கையின் அரசியல் திசைமாற்றத்திற்கு Revolt in
the Templeஇன் பங்கு மிகக் கணிசமானது. இந்த மஹாவம்ச மனநிலையில் சிக்குண்டுகிடக்கும்
சிங்கள ஆட்சியாளர்களிடம் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று பிரபாகரன் தனது 2005
மாவீரர் தின உரையில் கூறியுள்ளார். ஆனால் இதற்கு முன்னமே 1939இல் தமிழ் காங்கிரஸ்
தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் நாவலப்பிட்டிய கூட்டம் ஒன்றில் மஹாவம்ச சிந்தனைகள்
பற்றிப் பேசியது ஒரு இனக் கலவரத்தை விளைவித்தது.
மஹாவம்சத்தில் பொதிந்திருக்கும் எதிர்முரண்கள்
மிகுதி கட்டுரையை எல்லாத் தமிழர் சிங்களவர்களின் மனத்தில் மிக ஆழமாகப்
பதிந்துபோயிருக்கும் துட்டகைமுணு- எல்லாளன் மோதலில் செலவிடலாம் என்று
நினைக்கிறேன். இது பொதுவெளியில் பேசப்படுவதுபோல் சிங்களவர்/தமிழர்,
பௌத்தம்/சைவம் என்ற இருமை எதிர்வு போராட்டமல்ல. கொஞ்சம் குழப்பமானது. சிங்கள
பௌத்த சண்டியர்கள் பௌத்த சிங்கள இனத்தை மீட்க வந்த தெய்வீக அதிகாரம் பெற்ற அவதார
மனிதனாக துட்டகைமுணுவைக் கருத நிறையச் சம்பவங்கள் மஹாவம்சத்தில் இருக்கின்றன.
அவனுடைய பிறப்புக் குறித்து ஜோசியர்கள் சொன்னது: ‘பிறக்கப்போகும் குழந்தை
தமிழர்களை அழித்து ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டு புத்த சமயத்தை வெகுவாக வளர்ப்பான்’
(அத். 22) சிறுவயது முதல் இனத் துவேஷம் கொண்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான்.
தமிழர்களிடம் சண்டை போடக் கூடாது என்று உறுதி தரும்படி தகப்பனான காக்கைவன்னியன்
கேட்க இளைய மகனான திஸ்ஸா ஒத்துக்கொள்கிறான். ஆனால் துட்டகைமுணுவோ இதற்கு
மறுக்கிறான். கால்களை மடக்கிச் சுருட்டிப் படுத்திருந்தவனைப் பார்த்து கால்களை
நீட்டிக்கொள்வதுதானே எனத் தாய் சொல்ல துட்டகைமுணு கொடுத்த விடை: ‘தமிழர்கள்
கங்கைதாண்டி ஆட்சி செய்துகொண்டிருக்கையில் இங்கே கோதா கடலின் அருகில்வரை மட்டுமே
ஆட்சியில் உள்ள நான் எப்படி கால்களை நீட்டிப்படுக்க முடியும்’ (அத். 22).
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் சிவாஜி கணேசனின் வசனங்களை ஒப்புவிப்பது
போல் இந்த வாசகங்கள் எல்லா இலங்கையருக்கும் மனப்பாடம். எல்லாளனிடம் போருக்குப்
போனபோது துட்டகைமுணுவின் ஈட்டியில் பௌத்த சின்னம் பொருத்தப்பட்டிருந்தது.
இவனுடைய தாயார்கூட ஒரு இனவெறியராகத் தான் சித்தரிக்கப்படுகிறார். துட்டகைமுணுவை
வயிற்றில் சுமந்திருக்கையில் அவனுடைய தாயாருக்குத் தோன்றிய எண்ணங்களில் ஒன்று
எல்லாளனின் முதல் படைவீரனைக் கொல்லப் பயன்படுத்திய வாளை கழுவ உபயோகித்த தண்ணீரைக்
குடிக்க வேண்டும் (அத். 22) என்பது.
துட்டகைமுணுக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவன் முழுமையான தீவிர சிங்கள
பௌத்தன் அல்ல. கூருணர்வு (sensitive) உள்ளவனாக மஹாநாமாவால் சித்தரிக்கப்படுகிறான்.
தமிழருக்கெதிரான வெற்றியின் கொண்டாட்டம் அரண்மனையில் மும்முரமாக நடக்கிறது.
வாசனைத் திரவியங்களின் மணம் மூக்கைத் துளைக்கிறது. நளினமான நடனங்கள்
நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் துட்டகைமுணுவோ பல்லாயிரக்கணக்கானவர்கள்
பலியாகிவிடக் காரணமாகிவிட்டேனே என்று சஞ்சலப்பட்டுப் படுக்கையில் அமைதியாக
அமர்ந்திருந்ததாக மஹாநாமா வர்ணிக்கிறார். சினிமாவில் பார்த்துப் பழகிப்போன ஒரு
பரிமாண வில்லன் போல் எதிரியைத் தோற்கடித்த பின் அட்டகாசமாக துட்டகைமுணு
கர்ஜிக்கவில்லை. பல தூரங்களிலிருந்து மக்களை வரவழைத்து எல்லாளனின் இறுதிச்
சடங்குகளைத் தானே நடத்தி முடிக்கிறான். எல்லாளனைப் புதைத்த இடத்தைப் புனிதப்படுத்தி
மறைந்த மன்னனுக்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவுகிறான். அதுமட்டுமல்ல நினைவுச்
சின்னத்தைக் கடந்து செல்பவர்கள் அதற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று துட்டகைமுணு
கட்டளையிட்டதாக மஹாநாமா பதிவுசெய்கிறார் (அத். 25).
துட்டகைமுணு-எல்லாளன் போர் இறுதிப் போர் அல்ல. எல்லாளனையும் முப்பத்தி இரண்டு
தமிழ் சிற்றரசர்களை வென்று இலங்கையை ஒரு குடைகீழ் கொண்டுவந்ததாக மஹாவம்சம்
கூறுகிறது. இந்த வெற்றிக்குப் பின் தொடர்ச்சியாகச் சிங்கள பௌத்த ஆட்சிக்குக் கீழ்
இலங்கை இருந்ததில்லை. துட்டகைமுணு - எல்லாளன் மோதல் 25ஆம் அத்தியாயத்தில்
விவரிக்கப்பட்டிருக்கிறது. அதே மஹாவம்சம் சில அத்தியாயங்கள் கடந்த முப்பது
வருடங்களுக்குப் பின் ஐந்து தமிழர்கள் பதினாலு வருடமும் ஏழு மாதங்களும் ஆட்சி
செய்தனர் என்று பதிவுசெய்கிறது (அத். 33).
இன்றைய சிங்களப் பொது அறிவில் இருப்பது போல் எல்லாளனைப் பறத் தமிழன் என்று
மஹாவம்சம் வர்ணிக்கவில்லை. சிங்கள ஊடகங்கள் உருவாக்கிய தமிழர் பற்றிய இருண்மையான
அட்சிடுகளுக்கு (sterotype) மாறாக மமதையற்ற மன்னனை மஹாநாமாவின் மஹாவம்சத்தில்
சந்திக்கலாம். எல்லாளன் சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்றும் ‘தூய்மையான வாழ்வு
நெறிமுறைகளைக் கடைபிடித்து வந்த மன்னன்’ என்றும் மஹாநாமா விவரிக்கிறார். நற்குணமும்
நேர்மையும் மிகுந்த மன்னர் என்பதற்குப் பல உதாரணங்களைத் தருகிறார். அவற்றில் ஒன்று
சோழ அரசரின் செயலை நினைவூட்டுகிறது. எல்லாளனின் ஆட்சியில் மணி அடித்து மன்னனிடம்
குறை கூறி நியாயம் கேட்கலாம். மன்னனின் மகன் திஸ்ஸாவின் வண்டி ஒரு பசு மாட்டின்
கன்றைக் கொன்றுவிடுகிறது. பசு வந்து மணியடித்து மன்னனிடம் சொல்ல அதே இடத்தில் தன்
மகன்மீது வண்டியை ஏற்றியதாக மஹாநாமா குறிப்பிடுகிறார்
(அத். 21).
எல்லாளன் தொல்வகை (archetype) இந்துசமய வெறியன் அல்ல. பௌத்த மதத்தை மதித்தவனாகவே
மஹாநாமா சித்தரிக்கிறார். ஒருமுறை மன்னரும் பௌத்த பிக்குகளும் சென்ற வாகனம் ஒரு
பௌத்த ஸ்தூபம்மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது. உடனே மன்னன் வாகனத்திலிருந்து
இறங்கி சாலையில் படுத்துக்கொண்டு தன்மீது அந்த வாகனத்தை ஏற்றிக்கொல்லுமாறு
வேண்டிக்கொள்கிறான். எங்களுடைய குருநாதர் பலி வாங்கமாட்டார். ஸ்தூபத்தை மட்டும்
சரிசெய்து கொடுங்கள் என்று பிக்குகள் கூறுகிறார்கள். எல்லாளன் தன்னுடைய தவறுக்கு
மன்னிப்பு கேட்டது மட்டுமன்றி உடைந்துபோன பதினைந்து கற்களுக்குப் பதிலாகப்
பதினைந்தாயிரம் நாணயத்தைக் கொடுத்துச் சிதைந்துபோன பகுதியைச் சீரமைத்தார் என்று
21ஆம் அதிகாரம் பதிவுசெய்கிறது.
ஒன்று மட்டும் நிச்சயம். சிங்களப் பேரின வாசிப்புப்படி மஹாவம்சம் இலங்கையை
ஒருபோதும் ஒற்றைச் சமய, ஒற்றை இன, ஒற்றை மொழி நாடாகப் பார்க்கவில்லை. பல
இனத்தவரும் பல்லினச் சமயத்தவர்களும் வாழ்ந்த பூமியாகத்தான் வர்ணிக்கிறது.
துட்டகைமுணுவின் சிங்களவர் படையில் தமிழரான வேலுசா அங்கம் வகித்ததற்கான தகவல்
உண்டு. எல்லாளனுடைய சேனையில் தமிழ் பௌத்தர்களும் இருந்திருக்கலாம் என்ற புனைவும்
உண்டு. தமிழ் மன்னர்கள் சிங்களவர்களிடம் பெண் எடுத்திருக்கிறார்கள். அனுலா என்ற
சிங்கள இராணி வடுகா, நிலியா என்ற இரண்டு தமிழர்களைக் காதலித்திருக்கிறாள். இன, சமய
எல்லைகள் மஹாவம்ச காலத்தில் தெளிவற்றவை. இன்று உரத்துப் பேசப்படும் வரலாற்றுச் சுமை
பொதிந்துள்ள தமிழ், சிங்கள அடையாளங்கள் இன்னும் இறுக்கமடையவில்லை. பிரத்தியேக
தமிழ், சிங்கள அரசியல் கூறுகள் 12ஆம் நூற்றாண்டுக்குப் பின்புதான்
கட்டமைக்கப்பட்டன. சமணத் துறவிகளின் மடம்கூட இருந்ததாகச் சான்றுகள் உண்டு.
கடைசியாக ராஜபக்சேவின் கனிவான கவனிப்புக்கு:
தன்னை இந்நாள் துட்டகைமுணுவாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ராஜபக்சே இந்த இனப்
போர் விளைவித்த மனித அழிவுகள், பொருளாதாரச் சுமைகள், அட்டூழியங்கள், சேதங்கள்
அவருடைய மனத்தைக் கொஞ்சம் உறுத்தியிருந்தால் கீழ்க்கண்ட மஹாவம்ச வாக்கியத்தில்
தன்னை ஒருவேளை தேற்றிக்கொள்ளலாம்.
‘பொதுமக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகத் தீயவர்களை,
கொடுமைக்காரர்களைத் தர்மத்தை மீறாமல் ஒரு மன்னன் அழித்துவிட்டால் அது கொலையாகாது.
தான் செய்தது தவறு என அவன் வருத்தப்படக் கூடாது. தீயவர்களை அழிப்பதால்
பிற்காலத்தில் நடக்க இருக்கும் நன்மையை மட்டுமே மனத்தில் வைத்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட காரியத்தைச் செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள்’. இதே
மஹாவம்சத்தில் இன்னுமொரு செய்தியும் இருக்கிறது. அதுவும் ராஜபக்சேவின் கண்ணில்
படும் என்று நினைக்கிறேன். போரில் வெற்றிபெற்ற மன்னன் தன் படைவீரர்களுக்கு
அவர்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு பரிசு வழங்குகிறார். பரிசை ஏற்க மறுத்த
தேரபுட்டபய்யா என்ற வீரர் ‘இது எதற்காக? இன்னும் யுத்தம் முடியவில்லையே என்கிறார்.
அதற்கு மன்னன் சொல்லுகிறான்: ‘யுத்தமா, அனைத்துப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரு
முழு இராஜ்ஜியமாக்கிவிட்டேனே, இனி எங்கே யுத்தம் தொடர உள்ளது.’ இதைக் கேட்ட
படைவீரர் சொல்லுகிறார்: ‘என் மன எதிரிகளான ஆசை, காமம், குரோதம் ஆகியவற்றுடன்
இன்னும் போராட்டத்தில் இருக்கிறேன்’ அத். 26). சிங்கள சனங்களை இறுதிப்
பேரழிவிலிருந்து காக்க வந்த கடவுளின் கருவியாகத் தன்னைக் கருதும் ராஜபக்சேவுக்கு
இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் மறைவடக்கமான, தினமும்
எல்லோரும் எதிர்நோக்கும் அந்த நிரந்தர, உள்ளார்த்த உருவக (allegorical) ஆன்மிகப்
போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.
|