|
கடந்த மே 30ஆம்தேதி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கீழ ஆம்பூர்
கிராமத்தில் சுடலை (45), முத்துக்குமார் (27), கணேசன்(18) ஆகிய தலித்துகள் ஆதிக்கச்
சாதியினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் 13ஆம்தேதி ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரமகல்யாணி சிவசைவநாதர் கோயில்
திருவிழா நடந்தது. திருவிழாவிற்குச் சென்ற தலித் இளைஞர்களில் சிலர் தங்கள்
குழுவிலிருந்த இளைஞர் ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்தனர். அதே பெயரைக் கொண்ட சாதி
இந்து இளைஞர் ஒருவர் அவர்கள் தன்னையே அவ்வாறு பெயர்சொல்லி அழைப்பதாகக் கருதி
ஆத்திரமடைந்து தன் சாதியைச் சேர்ந்தவர்களைத் திரட்டிக்கொண்டு போய் தலித்
இளைஞர்களோடு மோதலில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக ஆயுதங்களோடு தலித்
குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதலில் இறங்கினர். தலித் இளைஞர்களும்
எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாகச் சாதி இந்து தரப்பினரில் ஒன்பது
பேரையும் தலித் தரப்பினரில் ஆறு பேரையும் கைது செய்தது காவல் துறை. கீழ அம்பூர்
தலித் நாட்டாமையான சுடலை என்பவர் தலித்துகளுக்குச் சட்டரீதியான உதவிகளைச் செய்தார்.
பிறகு இரண்டு தரப்பினரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
30.05.2009 அன்று மாலை தன் நிலத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சுடலை.
அவரோடு கணேசன் என்பவரும் இருந்தார். பத்துப் பேர் கொண்ட ஆதிக்கச் சாதியினர்
சுடலையை மறித்து “நீதான் கீழ்ச்சாதி நாய்களின் தலைவனா? நீ கொடுக்கிற
தைரியத்தில்தான் வழக்கு நடந்துவருகிறதா?” எனக் கேட்டுக் கொடூரமான முறையில்
கத்தியால் குத்தி அவரைக் கொன்றனர். சுடலையைத் தவிர அவருடனிருந்த கணேசன், பின்னால்
டிராக்டரில் வந்துகொண்டிருந்த முத்துக்குமார் ஆகிய மற்ற இரு தலித்துகளுங்கூடக்
கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டனர். கீழ ஆம்பூரில் இதற்கு முன்பும்
தலித்துகள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003 செப்டம்பரிலும் 2009
பிப்ரவரியிலும் தலித்துகள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. தலித்துகளின் மீதான
தாக்குதல் வழக்குகளைக் கையாள்வதில் காவல் துறை தொடர்ந்து அலட்சியமாக இருந்து
வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கண்ட தாக்குதல் வழக்குகளையும்
சாதாரண பிரிவுகளின்கீழ் பதிவுசெய்தது காவல் துறை. ஷிநீ/ஷிt வன்கொடுமைத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இது
போன்ற படுகொலைகளைத் துணிச்சலாக மேற்கொண்டு வருகின்றனர் ஆதிக்கச் சாதியினர்.
கீழஆம்பூர் படுகொலைகள் கோயில் திருவிழாவை ஒட்டி நடந்துள்ளன என்பது இங்கே
கவனத்திற்குரியது. திருவிழாக்களில் தலித்துகள் வழிபாட்டு உரிமை கோருவதே
இத்தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம். காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் பண்பாட்டு
வெளியில் தலித்துகள் தமக்கான உரிமைகளைக் கோரும்பொழுது அவர்கள் மீது ஆதிக்கச்
சாதியினர் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுப்பது என்பது அண்மைக்காலத்தில்
அதிகரித்து வரும் நிகழ்வுகளாயிருக்கின்றன. தமிழகத்தில் தைமாதம் தொடங்கி வைகாசி
மாதம் வரையிலும் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. திருவிழாக்களையும்
வழிபாட்டு உரிமைகளையும் தீர்மானிப்பதில் சாதிய மேலாதிக்கமே முதன்மையான
பங்குவகிக்கிறது. சாதிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும் தக்கவைத்துக் கொள்ளவும்
ஏற்ற வகையிலேயே சடங்குகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றைக்
கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் தருணங்களில் திருவிழாக்கள் ‘அமைதியாக’
நடந்து முடிகின்றன. கேள்விக்குட்படுத்தி எதிர்க்கும்பொழுதும் தலித்துகள் தமக்கான
பண்பாட்டு உரிமைகளைக் கோரும்பொழுதும் சாதிய மோதல்கள் வெடிக்கின்றன.
கடந்த மாசி மாதத்தில் மட்டும் மதுரை வட்டாரத்தில் கோயில் வழிபாடு, திருவிழா
போன்றவற்றில் உரிமை கோரியது தொடர்பாக தலித்துகள்மீது ஆறு ஊர்களில் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக ஆங்கிலத் தினசரிகளில் செய்திகள் வெளியாயின. இதன் தொடர்ச்சியாக
நடந்துள்ள வன்முறைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
வன்முறை: 1
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள முத்தாநதி என்னும் கிராமத்தில்
07.12.2008 அன்று வேலுச்சாமி என்கிற தலித் படுகொலை செய்யப்பட்டார்.
வன்முறை: 2
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் 1989 முதலே கோயில் தொடர்பாக
எழுந்த பிரச்சினையை ஒட்டிக் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவருக்கு எதிராக நடத்தப்பட்ட
கிளர்ச்சியின்போது இ. கோட்டைப்பட்டியில் சுரேஷ் என்ற தலித் இளைஞர் 04.11.2008
அன்று காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.
வன்முறை: 3
கோவை அருகே மேட்டுப் பாளையம் - காரமடை ஸ்ரீரங்கநாதர் கோயில் திருவிழாவின்போது
வழங்கப்பட்ட அன்னதானத்தில் ஆதிக்கச் சாதியினரோடு சமமாக அமர்ந்து சாப்பிட்ட ஆறு
தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். தாக்குதலில் படுகாயமடைந்த தண்டபாணி (20) என்னும்
தலித் இளைஞர் 04.03.2007 அன்று மரணமடைந்தார்.
வன்முறை: 4
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பேய்க்கருப்பன் கோட்டை மேளாயி அம்மன் கோயில்
விழாவில் 16.01.2008 அன்று மாடுகளுக்கான ஓட்டப் பந்தயம் நடந்தது. பந்தயத்தில்
முத்துராமன் (21) என்பவரின் மாடு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் எட்டு
தலித்துகள் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை: 5
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தில் 09.04.2009
அன்று நடந்த முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் தலித்துகளுக்குத் தீச்சட்டி
எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டது. கோயில் பணியைக் கவனிக்கும் நான்கு சமூகத்தவருள்
ஒரு சமூகத்தவரான தலித்துகள் அந்த வருடம் முதன் முறையாகத் தீச்சட்டி எடுத்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இதில் நடந்த மோதலில் இருதரப்பினருக்குமே காயம் ஏற்பட்டது
என்றாலும் அதிக அளவில், பத்துக்கும் மேற்பட்ட தலித்துகளுக்குப் பலத்த காயம்
ஏற்பட்டது.
வன்முறை: 6
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள செந்தட்டி கிராமத்திலுள்ள
முப்பிடாதி அம்மன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டதைத் தொடர்ந்து 06.03.2009 அன்று
ஈஸ்வரன் (53), பரமசிவம் (25) என்ற இரு தலித்துகள் கொல்லப்பட்டனர்.
வன்முறை: 7
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொக்கநாதன்பட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன்
கோயில் திருவிழாவின்போது நடக்கிற கல்லெறி நிகழ்வை ஒட்டி நடந்த மோதலில்
09.04.2009 அன்று தலித் குடியிருப்புக்குள் புகுந்த ஆதிக்கச் சாதியினர்
குடியிருப்பைத் தாக்கிக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதோடு தலித்துகள் நான்கு பேரை
வெட்டிப் படுகாயப்படுத்தினர்.
வன்முறை: 8
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள பூதிபுரம் கிராமத்தின் சந்தன மாரியம்மன்
கோயில் திருவிழாக் கலைவிழாவில் தலித்துகளை இழிவுசெய்யும் பாடலை ஒலிபரப்பியதை
எதிர்த்த வாய்க்கால் துரை (19) என்ற தலித் இளைஞரை நிர்வாணப்படுத்திக் கடுமையாகத்
தாக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கினர் ஆதிக்கச் சாதியினர்.
வன்முறை: 9
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள கொட்டக்குடி கிராமத்தில் காளியம்மன் கோயில்
அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியை ஏற்றிய தலித்துகள்மீது 25.05.2009
அன்று ஆதிக்கச் சாதியினரால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் ஒன்பது தலித்துகள்
படுகாயமடைந்தனர். பாண்டி மீனா, மலர் ஆகிய தலித் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
பாதிப்புக்குள்ளானவர்களில் அபிமன்யு என்கிற ஏழு வயது தலித் சிறுவனும் அடக்கம்.
வன்முறை: 10
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள செம்பாளூர் கிராமத்தில் 2009 மே
மாதத்தில் நடந்த கல்யாண சுந்தரியம்மன் கோயில் திழவிழாவில் தேர்வடத்தைத் தொட்ட
‘குற்றத்’துக்காக தலித்துகள் தாக்கப்பட்டனர்.
எண்ணிக்கையின் ‘வசதி’ கருதி பத்தோடு இதை நிறுத்திக்கொள்வோம். மனித உயிர்களின்
மதிப்பு உயிரிழப்புகளின் எண்ணிக்கையாலும் நிவாரணத் தொகையின் அளவுகளாலும்
சுருக்கப்பட்டுவிட்ட நம் காலத்தில் அவற்றுக்கு வெளியே கதியற்று
நிறுத்தப்பட்டுவிட்டன தலித் கொலைகள். வேறுவிதமான வன்முறைகளைத் தவிர்த்துக் கோயில்
வன்முறைகள் மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளன. இவற்றின் மீது எடுக்கப்பட்ட
சட்டரீதியிலான நடவடிக்கைகளைக் கணக்கிட்டால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே. பலவற்றில்
நடவடிக்கையே இருப்பதில்லை. தவிர பெயரளவில் கைது செய்தல், வழக்குகளை உரிய பிரிவுகளில்
பதிவுசெய்யாமல் குற்றவாளிக்குச் சாதகமாகச் சாதாரணப் பிரிவுகளில் பதிவு செய்தல்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மெத்தனம் போன்ற அரசு நிர்வாகம்,
காவல் துறை ஆகியவற்றின் கண்ணுக்குப் புலனாகாத தாக்குதல்கள் தனியாகப் பட்டியலிடப்பட
வேண்டியவை.
கோயில் என்னும் வெளி சார்ந்த தலித்துகளின் போராட்டங்கள் நெடுங்காலத்தவை. தொடர்
போராட்டங்களால் சில வெற்றிகளையும் பல சமயங்களில் தோல்விகளையும் கண்டுள்ளனர்.
பெரும்பாலான சாதி மோதல்கள் கோயில் தொடர்பாகவே இருந்துள்ளன. கோயிலைச் சார்ந்து
ஏற்படும் போராட்டம் பிறஉரிமைகளைக் கோரியும் நீண்டுள்ளன. கண்டதேவி, உத்தபுரம்,
கந்தம்பட்டி, பாப்பாபட்டி போன்றவை நாமறிந்த சமகாலத்திய போராட்டங்கள். பொதுவாகவே
தலித்துகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மதுரை, திருநெல்வேலி,
விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 85 ஊராட்சிகளைச்
சார்ந்துள்ள கோயில்களில் கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ள எவிடன்ஸ் என்னும் அரசு சாரா
நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி
விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள்
நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில்
அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம்
வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33
கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில்
தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது,
தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு
காட்டப்படுகிறது. பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65
என்கிறது அப்புள்ளிவிவரம். அறிவியல் பூர்வமான துல்லியத்தையும் கடந்தது சாதியின்
நுட்பம் என்னும் வகையில் மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டியதாகவே யதார்த்தம்
இருக்கும்.
2
வைதிகப் பண்புகளற்ற சிறுதெய்வக் கோயில்களை மையப்படுத்தி கிராமத்தின் ஆதிக்கச்
சாதியினரால் ஏவப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டு
அரசியல் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இந்த அனுபவம் தலித் இயக்கங்களின் புரிதலில்,
செயல்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைக் கோருகிறதா?
நவீனக் கல்வியும் நகர்ப்புறப் பொருளாதாரமும் தலித்துகளின் வாழ்வில்
ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தலித் சமூகம்
அடைந்துள்ள விழிப்பு நிலையும் தனி அடையாளத்துக்கான அவர்களுடைய தொடர்
போராட்டங்களும் ஆதிக்கச் சாதியினருக்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்தப்
பதற்றமே பெருகிவரும் வன்முறைகளுக்குக் காரணம். கிராமப்புறச் சமூகத்தில் மேலாதிக்கம்
பெற்றுள்ள ஆதிக்கச் சாதியினர் அரசியல்ரீதியில் நிறுவிக் கொண்டுள்ள மேலாதிக்கத்தின்
மூலம் தலித்துகளின் மீதான தொடர் வன்முறைகளைச் சட்டப் பாதுகாப்புடன் மேற்கொண்டு
வருகின்றனர் ஏற்கனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகளைப்
பண்பாட்டுரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் தமது மேலாதிக்கத்தைத்
தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர். தொடர்ந்த வன் முறைகளின் மூலம் தமது பண்பாட்டு
உரிமைக்காகப் போராடும் தலித்துகளை அச்சுறுத்தித் தமது சாதிய மேலாதிக்கத்தை
ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சுயமரியாதை
இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ, வைணவக் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின்
மேல் தம் அரசியல் மேலாண்மையை நிறுவிக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதி அரசியல்சக்திகள்
கிராமப்புற கோயில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும்
தலித்துகளுக்கு எதிரான பிராமணரல்லாத ஆதிக்கச்சாதியினரின் வன்முறை குறித்தும் எதுவும்
பேசாமல் மௌனம் காத்துவருகின்றனர்.
தமிழ் நாளேடுகள் தலித்துகளின் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை.
தவிர்க்க முடியாமல் வெளியிடும்பொழுது அவற்றின் சாதியப் பின்புலத்தைத் தந்திரமாக
மறைத்தும் திரித்தும் வெளியிடுகின்றன. கடந்த காலங்களில் பார்ப்பன
மேலாதிக்கத்திற்கெதிராகப் போராடிய சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளின் மீதான சாதி
இந்துக்களின் வன்முறைக்கெதிராக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தலித்
இயக்கங்கள் மைய நீரோட்ட அரசியலின் பகுதிகளாக மாறிவரும் சூழலில் கிராமப்புற ஆதிக்கச்
சாதியினரின் இத்தகைய வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களில் சமரசங்களற்ற நிலைபாடுகள்
எடுக்கமுடியாத நிர்ப்பந்தம் உருவாகும் அபாயமுள்ளது. பிராமணரல்லாதோரின் அரசியலின்
ஒரு பகுதியாகத் தலித் அரசியலை மாற்றும் மைய நீரோட்ட அரசியல்கட்சிகளின்
தந்திரங்களுக்குத் தலித் அமைப்புகள் பலியாகிக்கொண்டிருக்கின்றனவோ?
வைதிகத்திற்கெதிராகச் சிறுதெய்வ வழிபாட்டை அடையாளப்படுத்திய தமிழ் அறிவுத் துறையினர்
அதன் சாதிய அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. சாதியம் இந்தியத் தன்மை கொண்டது
என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அது வட்டாரரீதியில் வெவ்வேறு
பண்புக்கூறுகளால் பிளவுபட்டிருக்கிறது என்பதும். ஒவ்வொரு இடத்திற்கும்
காலத்திற்கும் சாதிகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப அதன் சமன்பாடுகள் மாறுபடுகின்றன.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அதனதன் சமன்பாடுகளுக்கேற்ப சுயேச்சையான வழிபாட்டு முறைகள்,
சடங்குகள், தீட்டுக் கோட்பாடுகள் இருக்கின்றன. மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில்
வைதிக மயப்பட்ட பெருங்கோயில்களோ சமஸ்கிருதமயப்பட்ட வழிபாட்டு முறையோ இல்லை.
வறண்ட நிலப்பகுதியில் பொருளாதாரரீதியில் பின்தங்கி உள்ள கள்ளர்கள் வன்முறையின்
துணையோடு தம் சிறுதெய்வ வழிபாடு சார்ந்த சாதியத்தைப் பாதுகாத்து வருகிறார்கள்.
குலதெய்வக் கோயில்கள் சார்ந்த கருத்தியல்களை ஆதாரமாகக்கொண்டு அதிகாரம்
கட்டமைக்கப்படும் இப்பகுதியில்தான் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமாக
உள்ளன. ஓர் இனக் குழுவாகத் தன்னை நிறுத்திப்பார்க்கும் பிரமலைக் கள்ளர் சமூகம்
குலதெய்வ வழிபாடு சார்ந்த சடங்குகளையும் பிற சாதியை விலக்கிவைக்கும் தீட்டுக்
கோட்பாட்டையும் தன் சாதிக்கான தனி அடை யாளமாகக் கொண்டிருக்கிறது. கிராமப்புறக்
கோயில்களை முற்போக்காகப் பார்க்கும் அணுகுமுறையும் பிராமணர்கள் பங்கேற்கும்
கோயில்களை மட்டும் பிற்போக்கானதாக, சாதிய அடிப் படையிலானவை எனப் பார்க்கும்
அணுகுமுறையும் மறுபரிசீலனைக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியம். சாதியின் இயங்குமுறை
குறித்த நுட்பமான பார்வைகளும் இதற்கு அவசியம். மனுதர்மம், இந்து வேதங்கள்
போன்றவற்றை ஆராய்ந்து இந்துயிசத்தை மறுத்த அம்பேத்கரின் “சட்டபூர்வமற்ற சட்டங்கள்”
என்ற கருத்தினூடாகக் கிராமச் சாதி அதிகாரத்தை விரிவாக ஆராய முடியும்.
பிராமணியம் சிறுதெய்வ வழிபாடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் கருத்து முழுக்க
ஏற்கத்தக்கதல்ல. பிராமணியம் இவற்றைத் தன்னுடைய பகுதியாக்கி வருகிறது. அதற்குச்
சாதகமான சாதி உள்ளிட்ட கூறுகள் சிறுதெய்வ மரபில் இருக்கின்றன. சுயாட்சிமிக்க
வட்டாரத் தன்மைகள்தான் இந்துயிசத்தின் ஆதாரம். வட்டாரரீதியிலான அடையாளங்களைக்
காப்பாற்றிக் கொண்டு இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள முடியாது. வட்டாரரீதியிலான
அடையாளங்களைக் குறித்த கவலை என்பது அடிப்படையில் சாதியைக் குறித்த அதைப்
பாதுகாப்பது குறித்த கவலையே.
தன்னுடைய காலனிகளில் மத நடைமுறைகளுக்குள் தலையிட்ட பிரிட்டீஷார் இந்தியாவில்
தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். கொள்கை வைதிக நம்பிக்கைகளுக்கு மட்டுமல்லாமல்
சிறுதெய்வ மரபுக்கும் பொருந்தியிருந்தது. 1852இல் மத நடைமுறைகளிலுள்ள
மூர்க்கத்தனமான வழிபாட்டு முறைகளைக் கைவிட வேண்டுமெனக் கூறிய பிரிட்டீஷாரின்
அறிக்கை, 1854இல் அதில் சில மாற்றங்களை வலியுறுத்தியதோடு நின்றுவிட்டது.
கிராமப்புற ஆன்மிக நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட சலுகை சாதியத்தின் தீமையை
மறைப்பதற்கே பயன்பட்டது. சிறுதெய்வ வழிபாடுகளில் கடைபிடிக்கப்படும்
சாதியக்கூறுகளைக் களைவதற்கு முயல வேண்டும். இக்கோயில்கள் இந்து அறநிலையத் துறையின்
கீழ் கொணரப்பட்டு அரசின் கண் காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான்
2008இல் தமிழக அரசு கொணர்ந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற
சட்டத்தைக் கிராமப்புற ஆதிக்கச் சாதியினருக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கும் விதமாய்
விரிவுபடுத்த முடியும். கோயில், கோயில் சொத்து ஏலம் போன்றவற்றில் பொதுவிதிகளை
உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும்விட தலித்துகள் மீதான சாதியப் பாடுபாடுகளுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும் அரசின் சட்டரீதியிலான நடைமுறைகள் உண்மையான அக்கறையோடு
இருக்க வேண்டும். இவற்றைச் செயல் படுத்துவதற்கான நெருக்குதல்களைத் தம்
போராட்டங்களின் மூலம் அரசுக்கு அளிக்க வேண்டியதே தலித் இயக்கங்கள் முன்னுள்ள
உடனடிக் கடமை.
நன்றி: மதுரை எவிடன்ஸ் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை. |