|
தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு
துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ்
தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல்
விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின்
முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது.
இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று
நடந்தது.

நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும்
மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும்
இட்டுச்சென்றதில் வெற்றிகண்ட அம்பைக்கு இந்த ஆண்டு விருது கிடைத்திருக்கிறது.
மரபார்ந்த பெண்ணுக்குக் கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும் தன்
சுதந்திரத்தைத் தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காகப் பேசினாலும் அவர்
பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர்.
அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு
முந்தைய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக
வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.
ஏற்புரையில் அம்பை இவ்விருது பெறும் தருணம் தன்னைப் பொறுத்தவரை அபூர்வமானது,
நடமாடிக் கொண்டு, விரைந்து இயங்கிக்கொண்டிருக்கும்போதே கிடைக்கும் விருது
என்பதால் தன்னைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அதிகமாகவே சிந்திக்க
வேண்டியிருக்கிறது என்றார். பிற எழுத்தாளர்கள் சொல்வதுபோல் சன்னலைத் திறக்கக்
கதைகள் தானாகத் தன்னிடம் வருவதில்லை என்றும் வானெழும் மேகங்கள் தன்னிடம் எழுத
வேண்டும் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை என்றும் சொன்னார். பதினாறு வயதில் சாகசக்
கதையாக முதல் நாவல் எழுதியதைத் தொடர்ந்து தன் எழுத்தின் வளர்நிலைகளைக் கூறினார்.
எழுத்தில் உண்மை - போலியைப் பாகுபடுத்துவது எளிதான காரியமல்ல. மேலும் உண்மையின்
வரையறை என்ன என்ற கேள்வியும் உண்டு: “எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து?
எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது
இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள
உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே
உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம்
வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு
கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம்
என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும் அவற்றின் மறைப்பு
சில சமயங்களிலும் உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின்
கண்ணாமூச்சிதான் இலக்கியம்.”
தொடர்ந்து பின்வரும் வருடாந்திர இலக்கிய விருதுகளும் நிகழ்வில் வழங்கப்பட்டன.
புனைவு விருது - தமிழவன் - வார்ஸாவில் ஒரு கடவுள்
அபுனைவு விருது - முனைவர் முருகர் குணசிங்கம் - இலங்கையில் தமிழர்
கவிதை - லீனா மணிமேகலை - உலகின் அழகிய முதல் பெண்
காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர
ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு
வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து
வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984
முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர்
புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information
electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து
வருகிறார்.
தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா
எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி,
அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE)
மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும்
பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில்
தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது
பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில்
தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல
தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட
இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.
தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த
நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.
இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான
யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி
போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில்
பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to
speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.
இவ்வாண்டு மாணவர் கட்டுரை இலக்கியப் பரிசு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ்விருது அஞ்ஜெலா பிரிட்டோவுக்கு “Naan Poitu Varan”: The Importance of Tamil
Studies in a Diasporic Context என்னும் கட்டுரைக்காக வழங்கப்படுகிறது. |