Google   www kalachuvadu.com

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கம்
வாசகர்களை வசப்படுத்திய பிரபஞ்சன்
அ. கார்த்திகேயன்

கடந்த ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்துகொண்டார். தன் தரமான படைப்புகளால் ஏராளமான விருதுகளையும் வாசகர்களையும் பெற்றிருக்கும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.

வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களோடு பேசுவதும் தன்னை வளர்த்தெடுத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்று தொடங்கிய பிரபஞ்சன், தன்னுடைய குடும்பச்சூழல் குறித்தும் சிறு பிராயத்து நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டார்.

தன் தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்ததோடு தான் எழுத்தாளராய் மாறியதற்கும் அவரே காரணம் என்றார். அவருடைய தந்தை எதற்கும் கலங்காத மனிதராகவும் தன்னுடைய பிறந்தநாளின்போது புத்தகங்களைப் பரிசளித்த வித்தியாசமானவராகவும் விளங்கியதாகக் கூறினார்.

காதல் கடிதம் ஏராளமாய் எழுதிய அனுபவத்தின் விளைவாகத் தான் எழுத்தாளனாய் மலர நேர்ந்தது என்பதை நகைச்சுவை மிளிரக் குறிப்பிட்டார். எழுத்தாளனாய் இருப்பதில் எந்தவித வருத்தமும் இல்லை ஆனால் தமிழகத்தில் எழுத்தை நம்பிப் பிழைக்கும் சூழல் இல்லை என்பதில்தான் தனக்கு வருத்தம் மிக அதிகம் என்றார்.

தம்முடைய கதைகள் பெண்ணியச் சிந்தனையை மையம் கொண்டு திகழ்வதற்கும், பெண் விடுதலை குறித்து முழுவீச்சுடன் பேசுவதற்கும் குடும்பச் சூழலே காரணமாக இருந்தது என்றார். காரணம் தன் தந்தை தாயிடம் நடந்துகொண்ட விதமும் அடிமையாக நடத்திய முறையும்தான் தம்மைப் பெண்ணியம் குறித்து எழுதவைத் திருக்கிறது என்று கூறினார். “தன்னுடைய மனைவியை அடிமை யாக வைத்திருப்பவன் தானும் ஓர் அடிமையே” என்ற விஷயத்தைத் தான் படித்த கதை ஒன்றின் வாயிலாக உணரவைத்தார்.

தன் தந்தை பரிசளித்த முக்கிய நூல்களுள் ‘ஆனந்தரங்கன் பிள்ளை டைரிக் குறிப்பு’ம் ஒன்று என்ற பிரபஞ்சன் அந்த நூல் அவரைப் பாதித்த விதம் குறித்து நெகிழ்வுடன் குறிப்பிட்டார். சிலர் கூறுவதைப் போல அந்தக் குறிப்பே தம்முடைய நாவல் அல்ல என்றும், அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து எழுதிய நாவல்தான் வானம் வசப்படும் என்றார். ‘ஆனந்தரங்கன் பிள்ளை டைரிக் குறிப்’பை மிகச் சரியாக உணர்ந்துகொள்ள ஆறு மொழிகள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்ற செய்தியைக் கூறிப் பார்வையாளரை வியக்கவைத்தார்.

பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் தனக்கு உண்டு என்றாலும் எந்தப் பத்திரிகையிலும் ஊழியராய் நிலைத்ததில்லை என்றும், ஒரு வெகுஜனப் பத்திரிகையுடன் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை, சிரிப்பலைகளின் ஊடே எடுத்துக் கூறிய பிரபஞ்சன், தான் மோசமான கதைகள் அநேகம் எழுதியிருக்கலாம். ஆனால் ஆபாசமான கதைகளை ஒருபோதும் எழுதியதில்லை என்றார்.

ஒரு நல்ல எழுத்தாளன் உலக அரங்கில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவது அவசியம். அதற்கு வாசிப்பு மிக முக்கியம். அந்த வகையில் பெரும்பான்மையான நேரத்தை வாசிப்பதில் தான் செலவழிப்பதாகக் கூறினார். இந்தத் தேசத்தை, சமூகத்தைப் புரிந்துகொள்ள கதைகளும் கவிதைகளும் உறுதுணையாக விளங்குகின்றன. எனவே கதை, கவிதைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும் எழுத்தாளனைவிட வாசகன் மேம்பட்டவன். ஆகவே வாசகனுக்குப் புரிந்துவிடக் கூடாது என்று எந்த எழுத்தாளனும் எழுதமாட்டான் என்பதைச் சுட்டிக் காட்டினார். பிறகு பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக ஒரு பார்வையாளர் அவருடைய இயற்பெயர் பற்றிக் கேட்டபோது, பெயரைப் படித்தால் சாதி தெரிய வேண்டியதில்லை; மனிதன் என்ற அடையாளம் கண்டுகொள்ளப்பட்டால் போதும் என்றார். நோபல் பரிசு தமிழ்ப் படைப்புக்குக் கிடைக்குமா என்றதற்கு மொழிபெயர்ப்புகள் அதற்குரிய வகையில் மிகச் சரியாக அமைய வேண்டும் என்றும் நோபல் பரிசு பெறுவதற்கு உரிய படைப்பாளிகள் தமிழில் சுமார் 20 பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

இலக்கியத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் கொண்டுவர முடியுமா என்ற பார்வையாளரின் வினாவுக்கு, ‘முடியும்’ என்ற நம்பிக்கையால்தான் இன்னமும் தான் எழுதிக்கொண்டிருப்பதாகப் பதில் அளித்த அவர் சமகாலப் படைப்பாளிகளில் தமக்குப் பிடித்தமானவர்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

உள்ளடக்கம்