|
சுதந்திர இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் சரியாகவும் முழுமையாகவும்
அமலாக்கப்படாதபோதும்கூட, சென்ற கட்டுரையில் நாம் கண்ட பல நல்ல திட்டங்களின் மூலம்
நம் விவசாய நிலங்கள் வளமடைந்துவந்தன; விளைச்சலும் சீராகப் பெருகியது. அப்போது
பசுமைப் புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருந்த உலக நிகழ்வுகள் என்ன?

இரண்டாம் உலகப் போர் ஓய்ந்து, முதலாளித்துவ மற்றும் கம்யூனிச நாடுகளுக்கிடையே
பனிப்போர் தொடங்கியிருந்தது. 1949இல் சீனாவைக் கம்யூனிசத்துக்கு இழந்த
அதிர்ச்சியில், சோவியத் யூனியனிலிருந்து மற்ற ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய
நாடுகளுக்குக் கம்யூனிசம் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதையே தன் முக்கியக்
குறிக்கோளாகக் கொண்டிருந்தது ஐக்கிய அமெரிக்கா. அதே சமயத்தில், மாபெரும் மந்த
நிலையிலிருந்து மீண்ட அமெரிக்கப் பொருளாதாரம் புத்துணர்ச்சி பெற்று, தழைத்து வளரத்
தொடங்கியது. போர் ஆயுதங்கள் தயாரித்த தொழிற்சாலைகள், போர் ஓய்ந்த பின்னும்
இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் ஏராளமாகத் தயாரிக்கத் தொடங்கின.
டிராக்டர் போன்ற பிரம்மாண்டமான விவசாய இயந்திரங்களையும் உற்பத்திசெய்து தள்ளின.
இந்த நவீன இயந்திரங்களையும் இரசாயனங்களையும் நிலத்தில் கொண்டு கொட்டி விவசாயம்
செய்ததால் இயற்கைக்கு மாறான வேகத்திலும் வழிமுறையிலும் விளைச்சல் எக்கச்சக்கமாகப்
பெருகி, சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மேலும், உலகிலேயே அதிக
அளவில் தங்கச் சுரங்கங்களைக் கொண்டதால் அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் சக்தி
மிக்கப் பொருளாதாரமாக உருவெடுத்தது. இவற்றால் பணப் புழக்கம் அதிகரித்த
அமெரிக்காவில் நுகர்பொருள் உற்பத்தியும் வேகமாக வளர்ந்தது.
தேவையான அளவுக்கு உற்பத்திசெய்துவிட்டு, தேவை ஏற்படும்போது அடுத்த கட்ட
உற்பத்தியைத் தொடங்கலாம் என முதலாளித்துவ அமைப்பிலான தொழிற் சாலைகள்
இயந்திரங்களைச் செயல்படாமல் நிறுத்திவைக்குமா என்ன? அமெரிக்காவின் தேவைக்கு
மிகுதியான உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தன் பொருளாதாரத்தை மேலும்
வலுப்படுத்த வேண்டிய திட்டங்களைத் தீட்டும் பணியில் ஈடுபடுவதே அமெரிக்க அரசு
எடுத்துவைத்த அடுத்த அடி. ஆனால் போரால் பேரழிவைச் சந்தித்திருந்த பல ஐரோப்பிய
நாடுகளில் அடிப்படைப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகியவைகூடச் சேதமடைந்திருந்ததால்,
அமெரிக்கப் பொருட்களை வாங்கும் பொருளாதார நிலையில் அந்நாடுகள் இல்லை.
அமெரிக்காவின் முதலாளித்துவ மூளை இதற்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தது. முதலில்
நிதி உதவிசெய்து அந்த நாடுகளின் பொருளாதார நிலையைச் சற்றே உயர்த்திவிட்டால், பிறகு
தங்களின் ஏற்றுமதி வேலைகளைத் தொடங்கலாமே! நிதியுதவியைக் கொடுத்து முதலாளித்துவப்
பாதையில் அடியெடுத்துவைக்க நிர்ப்பந்தித்துக் கம்யூனிசம் பரவுவதையும் தடுக்கலாமே!
இப்படிப்பட்ட சுயநல நோக்கத்துடன்தான் அமெரிக்க நிதியுதவித் திட்டங்களும்
நிறுவனங்களும் தொடங்கின.
1947இல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளுக்குக்
கம்யூனிசத்தின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான நிதியுதவியும் இராணுவ உதவியும் அளித்தார்.
அதே ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் “மார்ஷல் திட்டம்”
என்னும் பெரிய திட்டத்தைத் தீட்டினார். அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தேவையான
நிதியுதவியை அளிப்பதையே அது தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. அந்த
நிதியையும் அமெரிக்க வல்லுநர்களின் ஆலோசனைகளையும் அமெரிக்காவில் உற்பத்தியான
பொருட்களையும் கொண்டு இந்த நாடுகள் தங்கள் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தம் இருந்தது. இந்த மார்ஷல் திட்டம்தான், பசுமைப் புரட்சியை உலகெங்கிலும்
பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன், ஃபோர்டு ஃபவுண்டேஷன்,
யு.எஸ்.ஏ.ஐ.டி. (USAID - United States Agency for International Development)
போன்ற அமைப்புகளின் பிறப்புக்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது.1
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்குப் பிறகு இந்திய வேளாண்மையின் நிலை
சுதந்திரத்திற்குப் பின் நிலச்சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு
ஓயாமல் முயன்றுகொண்டுதான் இருந்தது. ஆனால் மாநில அரசியல்வாதிகள் தாங்களே
நூற்றுக்கணக்கில் விவசாய நிலங்களை வைத்திருந்ததாலும் சக்தி வாய்ந்த பல நில
உரிமையாளர்கள் அவர்களுடன் கைகோத்ததாலும் அத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு
ஒத்துழைப்புத் தராமலே இருந்துவந்தனர். இப்படி, நில உரிமைகளைப் பற்றிய சரியான
முடிவுகள் எட்டப்படாததால், முதலாளிக்கும் வேலையாட்களுக்கும் விவசாயத்தில் அவர்கள்
நேரத்தையும் உழைப்பையும் முதலீடுசெய்யவும் அரசாங்கத்தின் கிராம வளர்ச்சித்
திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் குறைந்தது.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் வேளாண் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட
பல நல்ல வளர்ச்சிகளைப் பற்றிப் பார்த்தோம். ஆனால் 1955இல் வெளியான இரண்டாம்
ஐந்தாண்டுத் திட்டம் தன் குவிமையத்தைத் தொழில்மயமாக்கல் என்னும் திசையில்
திருப்பியதால் வேளாண் வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கான திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதன்
காரணமாக, கிராமங்களிலிருந்து பல விவசாயிகள் தொழிற்சாலைகளில் வேலை தேடி
நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். நாடெங்கிலும் முளைத்துக்கொண்டிருந்த
தொழிற்சாலைகளுக்குத் தீனிபோடுவதற்காகவும் ஏற்றுமதிக்காகவும் (அதுவரை உணவுப் பயிர்
விளைவித்துக்கொண்டிருந்த) விவசாய நிலங்கள் மீண்டும் பணப்பயிர் வளர்ப்பை நோக்கித்
திருப்பப்பட்டன. இப்படிப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்ததால், இந்திய உணவு உற்பத்தியின்
வளர்ச்சி தேங்கத் தொடங்கியது. இத்தனைக்குப் பிறகும்கூட நம் நாட்டில் உணவுப்
பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. ஆனால் பணம் பண்ணும்
நோக்கத்துடன் வியாபாரிகள் உணவு தானியங்களைப் பதுக்கும் பழைய தந்திரத்தை மீண்டும்
கையாளத் தொடங்கியதால், அங்கும் இங்குமாகச் செயற்கையான பற்றாக்குறைகள்
ஏற்பட்டுவந்தன.
அமெரிக்காவின்
PL-480 திட்டம்
1950களில் நிரம்பி வழிந்த அமெரிக்க உணவுக் கிடங்குகளில் அந்நாட்டுக்குத் தேவையான
கோதுமையைவிட இரண்டு மடங்குக் கையிருப்பு இருந்தது. தேவைக்குப்போக மீதிக் கோதுமையை
என்ன செய்வது என்றறியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி
ஐசன்ஹோவருக்கு ஒரு யோசனை. நாம் சற்று முன்பு பார்த்த அமெரிக்க நிதியுதவி / உணவு
உதவியின் பின்னணியைக் கொண்டு, 1954இல் அவர் பொதுச்சட்டம் 480 [Public Law (PL)
480] என்கிற சட்டத்தை அறிமுகப்படுத்தினார். “இந்தச் சட்டத்தின் குறிக்கோள், நமது
வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை விரிவாக்குவதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்கி,
நாமும் நம் மக்களும் பயனுற வேண்டும்; மற்ற நாடுகளின் மக்களும் பயனுற வேண்டும்
என்பதுதான்” என்று அதன் முக்கிய (சுயநலக்) குறிக்கோளைத் தெளிவாகக் கூறினார்
ஐசன்ஹோவர். 2
இதே காலகட்டத்தில், மேலே நாம் கண்ட சில காரணங்களால் நம் நாட்டின் உணவு உற்பத்தி நிலை
சற்றே தேங்கத் தொடங்கியது. அப்போது அமெரிக்க அரசு இந்தியாவிற்கு உணவு வழங்க
முன்வந்தது. 1956இல், முதன்முதலாக PL-480இன் மூலம் கோதுமை இந்தியாவில்
வந்திறங்கியது. இந்திய அரசாங்கம் இந்த இறக்குமதியை மக்களுக்கு உணவு போய்ச்
சேருவதற்கான நடவடிக்கையாகத்தான் அறிவித்தது. பற்றாக்குறை நிலவும்போது
பயன்படுத்துவதற்கான கையிருப்பாகவே இதைச் சேமித்து வைக்கப்போவதாகவும் சொன்னது.
இந்த PL-480 எவ்வாறு செயல்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்பவை, நாம் முக்கியமாகத்
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். கோதுமையை அமெரிக்க நாட்டிலேயே இந்திய அரசாங்கப்
பிரதிநிதிகளுக்குக் கைமாற்றம் செய்தது அமெரிக்க அரசு. அங்கிருந்து இந்தியாவிற்கு
அனுப்புவதற்கான போக்குவரத்து, சேமிப்பு, விநியோகம் போன்ற அனைத்துமே இந்திய
அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தன. இப்படி நம் நாட்டில் வந்திறங்கிய கோதுமையை
இந்திய அரசாங்கம் விற்றதால், இந்திய ரூபாயில் வருமானம் கிடைத்தது. அப்போது இருந்த
ஒப்பந்தத்தின்படி, விற்பனையில் கிடைத்த பணத்தில் 57% இந்திய அரசாங்கத்தின் பல்வேறு
வளர்ச்சித் திட்டங்களுக்கான கடனுதவிக்காகவும் 22% அதே உபயோகத்துக்கான மானியத்
தொகையாகவும் (grants) 14% அமெரிக்க அரசாங்கத்தின் உள்ளூர்ச் செலவுகளுக் காகவும் 7%
தனியார் நிறுவனங்களுக் கான கடனுதவிக்காகவும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்தத்
தனியார் நிறுவனங்கள் வழக்கமாக, அமெரிக்கக் கம்பெனிகளின் துணைநிறுவனங்களாகவும்
அமெரிக்கப் பொருட்களை விற்ற கம்பெனிகளாகவும் இருந்தன. 3
உணவு இறக்குமதி பற்றிய தேசிய விவாதம்
அப்போது உணவு இறக்குமதிகள் பற்றி இந்தியாவில் பல தரப்பட்ட கருத்துகள்
இருந்துவந்தன. மத்திய மற்றும் மாநில அரசாங்க அளவில் பல விவாதங்கள் நடைபெற்றன. ஒரு
தரப்பினர் (கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள்),
“இறக்குமதிகளைச் சார்ந்து இருக்க ஆரம்பித்தால் உள்நாட்டில் (நமது பாரம்பரிய
அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு நிலவளத்தைப் பெருக்கி, விதையின் தரத்தைப்
பெருக்கி) விளைச்சலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க உந்துதல் இல்லாமல்
போய்விடும். அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டு, அந்நாட்டின்
பேச்சுக்கெல்லாம் ஆட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிடுவோம்” என்றெல்லாம்
எச்சரித்தனர். இதற்கு மாற்றாக, நிலச்சீர்திருத்தத்தைச் சரியான முறையில் செய்து,
சிறு விவசாயிகளை ஊக்குவித்து ஆதரித்து, கிராம அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தி,
விவசாய வளர்ச்சியில் மேலும் கவனம் செலுத்தினால், உணவுப் பிரச்சினையை எளிதாகச்
சமாளிக்கலாம் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைத்தார்கள். அந்தச் சமயத்தில் உணவுப்
பிரச்சினை அத்தனை பெரிதாக உருவெடுத்திருக்க வில்லை என்பது இங்கே குறிப்பிடத்
தக்கது.
மறுதரப்பினர், (பெரும்பாலும் இளைய தலைமுறையினர்) இதையெல்லாம் அத்தனை
பொருட்படுத்தாமல், “இறக்குமதி இன்றைய தேவை. அமெரிக்காவே நமக்கு உதவ முன்வரும்போது
நாம் ஏன் அதை மறுக்க வேண்டும்? அவர்கள் நமக்குத் தர விழையும் தொழில்நுட்பங்களைக்
கொண்டு நாம் விரைவில் சுயசார்பு நிலையை அடைந்துவிடுவோம். கவலை வேண்டாம்” என்று
பேசினார்கள்.
உணவு இறக்குமதியின் அதிகரிப்பும் அதன் பாதிப்புகளும்
PL-480 ஏற்றுமதியை அதிகரிப்பதில் அமெரிக்காவுக்கும் இறக்குமதியை அதிகரிப்பதில்
இந்திய அரசாங்கத்துக்கும் பல லாபங்கள் இருந்தன என்பது தான் உண்மை. இறக்குமதியான
கோதுமை விற்பனையில் கிடைத்த பணத்தில் 80% தன்னுடைய வளர்ச்சித் திட்டங்களுக்கான
நிதியுதவியாக உபயோகித்ததால், இறக்குமதி அளவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஊக்கமோ
முனைப்போ இந்திய அரசாங்கத்துக்கு இல்லாமல் போயிற்று. அமெரிக்காவுக்கோ, மிகுதியாக
விளைந்திருந்த கோதுமையை அள்ளிக்கொடுப்பதில் (அதுவும் பெரும்பாலும் கடனாக)
அவர்களுக்கு எந்தக் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. ஆனால் அதற்கான பலனாக, உலகிலேயே அதிக
மக்கள்தொகையைக் கொண்டிருந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மீது கிடைத்த
கட்டுப்பாடு, விலைமதிப்பே இல்லாத ஒன்று என அமெரிக்கர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
அதுவும், அண்டை நாடான சீனாவின் கம்யூனிஸத் தாக்கத்திலிருந்து இந்தியாவைக்
காப்பாற்றுவதற்கான ஓர் ஆயுதமாக அமெரிக்கா தன் உணவு ஏற்றுமதியைக் கருதியது.
இந்த விளக்கம், பசுமைப் புரட்சியின் கதையை சுவாரசியமான அரசியல் கதையாகக் கொண்டு
செல்வதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கக் கூடுமோ என்று சிலர் நினைக்கலாம்.
அமெரிக்க அதிகாரி ஒருவரே ‘உணவு உதவி’யின் உள்நோக்கத்தை விளக்கியதைப் படித்துப்
பார்த்தால் இதில் நமது கற்பனை எதுவும் இல்லை என்பது புரியும்.
1974இல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனின் வேளாண் துறைச் செயலாளர் அர்ல் பட்ஸ் என்பவர்,
“பசியோடு இருப்பவர்கள் யார் கையில் உணவு இருக்கிறதோ அவர் பேச்சைத்தான்
கேட்பார்கள். உணவு என்பது ஒரு கருவி. அமெரிக்காவின் கிடங்கில் இருக்கும் முக்கியமான
ஆயுதம்” என எல்லோருக்கும் புரியும்படி வெளிப்படையாகவே சொன்னார். இவர் கூறியதைப்
போலவே, கோதுமையைக் கொண்டு அமெரிக்கா நம்மை மிரட்டிய சம்பவத்தைப் பிறகு
பார்ப்போம். 4
“உணவுக்காக மக்கள் நம்மைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன். அது மற்றவர்களைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல செய்தியல்ல
என்பதை அறிவேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால்,
மக்கள் முதலில் உண்ட பிறகுதான் வேறு எதுவும் செய்ய முடியும். அவர்கள் நம்மைச்
சார்ந்து, நம்முடன் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்ந்தால், உணவுச் சார்பு ஒரு
அற்புதமான ஒன்று!” என்று
PL-480யைப் பற்றிப் பேசும்போது செனெட்டர் ஹ்யூபர்ட்
ஹம்ஃப்ரே கூறினார். 5
இவ்வாறு அதிகரித்துக்கொண்டு போன இறக்குமதியால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
இறக்குமதியான கோதுமையின் குறைந்த விலை, நம் உள்நாட்டுக் கோதுமையின் விலையையும்
பலவந்தமாகக் குறைத்தது. இதனால், இந்திய விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாமல்,
ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோதுமை, மற்றும் இதர உணவு தானியங்களை விளைவிப்பதைக்
கைவிட்டுவிட்டுப் பணப்பயிர்களுக்கு மாறினார்கள். இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தி
குறைந்தது. குறைந்த விளைச்சலைக் காரணம் காட்டி, உணவு இறக்குமதி அதிகரிக்கப்பட்டது.
அதன் விளைவாக மேலும் உற்பத்தி குறைந்தது. இப்படி ஒரு மீள முடியாத சுழலில் இந்திய
உணவு உற்பத்தி சிக்கிக்கொண்டது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு விஷயம்
நாளடைவில் நிதர்சனமாக மாறுவதற்குச் (self-fulfilling prophecy) சிறந்த உதாரணம் இது.
உணவுப் பிரச்சினை அதிகமாக இல்லாதபோதே உணவுப் பிரச்சினை இருப்பதாகச் செயற்கையாகப்
புலம்பிய அதிகார வர்க்கத்தின் வாக்கு பலித்த கதை இதுதான். ஆனால் வெளியில்
சொல்லப்பட்ட காரணங்கள் என்ன? ‘மக்கள்தொகை அதிகரிப்பு’ மற்றும் ‘பிற்போக்கான
தொழில்நுட்பம்’ ஆகியவைதான் இதற்கான முக்கியக் காரணங்களாகக் காட்டப்பட்டன.* 6
புதிதாகப் பிறந்த நிறுவனங்களும் அவற்றின் குறுக்கீடுகளும்
கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்தக் கிழக்கு ஐரோப்பாவில் கையாண்ட உத்தி விவசாய
நாடுகளான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வளவாக எடுபடாது, வேறுவகையான உத்தியைக்
கையாள வேண்டும் என்று நன்றாகப் புரிந்து வைத்திருந்தது அமெரிக்கா. ஏற்கனவே உலக
வேளாண்மையின் போக்கைப் பார்க்கும்போது, இந்தத் திட்டத்தை வடிவமைப்பது ஒன்றும்
அத்தனை பெரிய வேலையாகத் தென்படவில்லை. இந்திய வேளாண்மையை முற்றிலுமாக
அமெரிக்கமயமாக்கிவிட்டால், அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆலோசனைகளையும் அமெரிக்கக்
கம்பெனிகள் உற்பத்தி செய்த இரசாயனங்கள், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றையும் இந்தியா
சார்ந்திருக்கும் நிலைமை வரும். உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய
மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு வர்த்தகத்தை
வளர்த்துக்கொள்ள இதைவிடச் சிறந்த வழி வேறென்னவாக இருக்க முடியும்?
பசுமைப் புரட்சியை ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் மாபெரும்
திட்டத்தின் அடித் தளத்தை அமைப்பதில் மூன்று குழுக்கள் முனைந்து செயல்பட்டன. அவை,
அமெரிக்க அரசாங்கம், தனியார் அமெரிக்க ஃபவுண்டேஷன்கள் மற்றும் உலக வங்கி.
அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேஷன், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் ஆகியவை மெக்ஸிகோ
மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தன. 1953ஆம்
ஆண்டு முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சியைத் திசைதிருப்புவதில் ராக்ஃபெல்லர்
ஃபவுண்டேஷன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. ஹிஷிகிமிஞி மற்றும் உலக வங்கி இந்தப்
பணிகளுக்கு நிதியுதவி அளித்தன. பிறகு ஃபோர்டு ஃபவுண்டேஷன் இதில் சேர்ந்துகொண்டது.
இதற்காக 1958ஆம் ஆண்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Agricultural
Research Institute, IARI, 1905இல் துவக்கிவைக்கப்பட்டது) மாற்றியமைக்கப்பட்டு,
அதன் முதல் முதல்வராக ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷனின் ரால்ஃப் கம்மிங்க்ஸ்
அமர்த்தப்பட்டார். இதோடு விட்டுவிடாமல், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களை
இந்தியர்கள் சென்று பார்வையிட்டு வருவதற்கு நிதியையும் வழங்கியது ராக்ஃபெல்லர்
ஃபவுண்டேஷன். 1956-70 காலகட்டத்தில், சுமார் 70 இந்தியத் தலைவர்கள் அமெரிக்கா
சென்றுவர நிதி ஒதுக்கப்பட்டது. நூற்றுப்பத்து விஞ்ஞானிகள் அமெரிக்காவில் பயிற்சி
பெற்றுத் திரும்பினார்கள். மேலும், 2,000 இந்திய வேளாண் பட்டதாரிகளை
அமெரிக்காவுக்கு அழைத்து வேளாண் உயர்கல்வி கொடுத்துத் திருப்பியனுப்பியது USAID
நிறுவனம். இப்படி அமெரிக்கப் பயணம் சென்று வந்தோரெல்லாம், நவீன வேளாண் ஆராய்ச்சி
மையங்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, நவீன வேளாண்மையின் முழு ஆதரவாளராக மாறினர்.7
ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் தனது பணியைத் துவங்குவதற்கு முன்பாகவே, சமுதாயத்தில்
விநியோகச் சம உரிமையை (equity of distribution) நிலைநாட்ட வேண்டும் என்று
பலதரப்பினராலும் எச்சரிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை.
மாறாக, அமெரிக்க வேளாண்மை வளர்ச்சிக் குழுவின் தலைவர் அர்தர் மோசஸ்
கூறியதற்கிணங்க, “சந்தையில் அதிரடியான போட்டி உணர்வை ஊக்குவிப்பதற்காக வேளாண்
சமூகங்களில் செயல்பட்டுவரும் கூட்டுறவுச் சமூக அமைப்புகளைக் கலைத்துவிட வேண்டும்”
என்பதுதான் அமெரிக்காவின் அனைத்து வேளாண் வளர்ச்சிப் பணிகளின் நோக்கமாகவும்
அணுகுமுறையாகவும் இருந்தது. 8
o
மெக்ஸிகோ நாட்டில் ஏற்கனவே அதிக விளைச்சலைக் கொடுக்கும் கோதுமை
கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நெல்லிலும் அப்படிப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக,
ராக்ஃபெல்லர் மற்றும் ஃபோர்டு ஃபவுண்டேஷன்கள் கைகோர்த்து பிலிப்பின்ஸ் நாட்டில்,
மணிலாவில் ‘சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம்’ International Rice Research Institute
(IRRI) ஒன்றை நிறுவின. இந்த இரண்டு இடங்களிலிருந்து நம் நாட்டில் வந்திறங்கிய
விதைகள்தான் ‘பசுமைப் புரட்சி’யைப் பிரம்மாண்டமாகத் துவக்கிவைத்தன. ஆனால் அந்தத்
தொடக்கம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை.
*மக்கள்தொகை அதிகரித்தது என்னவோ உண்மைதான். ஆனால், உணவுப் பற்றாக்குறைக்கான
காரணங்களைப் பட்டியலிட்டால், இது முதல் மூன்று இடங்களில் ஒன்றைக்கூடப் பிடிக்காது.
றீ
உதவிய நூல்கள்:
1. http://www.usaid.gov/multimedia/video/marshall/marshallspeech.html
2.http://www.usaid.gov/our_work/humanitarian_assistance/ffp/50th/history.html
3. Swamy, Kumar Dr.; India's Food Problem and US PL 480; Intereconomics Journal;
Vol. 3, Number 7, July 1968; Pg.213
4. USDA Secretary Earl Butz; World Food Conference in Rome, 1974. Reference:
Daly, Herman & Farley, Joshua; Ecological Ecoonomics - Principles and
Applications; 2004; Pg - 340; Island Press, Washington DC
5. Senator Hubert Humphrey in naming PL 480, the 'Food for Peace' program; Wall
Street Journal; May 7, 1982; Reference: Daly, Herman & Farley, Joshua;
Ecological Ecoonomics - Principles and Applications; 2004; Pg - 340; Island
Press, Washington DC
6. Kamath, Shyam; Foreign Aid and India: Financing the Leviathan State; Cato
Institute, Washington, DC; 1992;
7. Shiva, Vandana; The Violence of the Green Revolution; Third World Network;
Penang, Malaysia; Pg. 29-30; 1991
http://www.usaid.gov/about_usaid/usaidhist.html
8. Perlas, Nicanor & Vellve, Renee; Oryza Nirvana; Pg.3; 1997; Searice,
Manila, Philippines |