Google   www kalachuvadu.com

கடிதங்கள்
நழுவிப்போன தமிழினத் தலைவர் பட்டத்தைத் திருமங்கலம் தேர்தல் பாணியைப் பின்பிற்றிக் கலைஞர் மீட்டெடுக்கப் போகிறார் என்றே மே 13 தமிழகத் தேர்தல் நிலவரம் காட்டுகிறது. மே 13 மாலை 5.30வரை 62 சதவிகிதமாக இருந்த வாக்குப் பதிவு, மறுநாள் 72 சதவிகிதமாகக் காணக் கிடைத்த மாயத்தின் பின்னணி என்ன? இந்த மாயத்தின் தொடர் விளைவுகளால் மன்மோகன் சிங் மீண்டும் நாற்காலியைப் பிடித்தால் முதல் வேலையாக ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காகப் பல கோடிகளைச் சிங்கள அரசுக்கு ஒதுக்குவார். அந்த நிதியைக் கொண்டு கடைசித் தமிழனையும் கடைத்தேற்றும் பணியை ராஜபக்சே சிரமேற்கொள்வார். காசுக்கு விற்ற ஓட்டுக்களும் போடாமல் விட்ட ஓட்டுக்களும் (மிறிலி கிரிக்கெட்டை விடவா தேர்தல் முக்கியம்?) ஈழத்தில் இனி நிகழப்போகும் அவலங்களுக்கான மறைமுகக் காரணிகளில் முதன்மையானவை.

சீனு, கடலூர்

ஈழப் பிரச்சினையை நம் அரசியல்வாதிகள் எப்படித் தங்கள் சுயநலத்திற்காக ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க் கிறார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிக்கிறார்கள் என்பதைக் கணக்குத் தீர்க்கும் தருணம் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

முத்துக்குமாரின் மரணத்தைத் தற்கொலை எனப் பதிவுசெய்துள்ளீர்கள். ஒரு தற்கொலைக்குப் பின்னால் மக்கள் எழுச்சி ஏற்படுமா? வீர மரணம், தியாகம் போன்ற சொற்களைப் பயன்படுத்த உங்களுக்கு மனத்தடை இருக்கலாம். குறைந்தபட்சம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய ‘உயிர் நீத்தல்’ என்னும் வார்த்தையாவது பயன்படுத்தி இருக்கலாம்.

இன்று உலகின் எந்த மூலையில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடை பெற்றாலும் அங்கெல்லாம் முத்துக் குமாரின் நிழற்படம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. இதுதான் முத்துக் குமாரின் அரசியல் வெற்றி. இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர் வரும் தோல்விகளிலிருந்து நாளை பாடம் கற்பார்கள். அன்று கழக வளர்ச்சிக்கு உழைத்தவர்களில் கருணாநிதியும் ஒருவர். இன்று கழக வீழ்ச்சிக்குக் காரணம் கருணாநிதி மட்டுமே. அதிகார போதையினால் அழிவு மட்டுமே சாத்தியம்.

எண்பது நிறையும் எம்.எஸ். உடல் ஆரோக்கியத்துடனும் மன எழுச்சியுடனும் நீண்ட காலம் வாழ, அவருடைய சீரிய இலக்கியப் பணி தொடரப் பிரார்த்திக்கிறேன். வாசிப்பிலுள்ள ஈடுபாட்டை அவர் எழுதுவதில் வெளிப்படுத்தாதது வியப்பாக உள்ளது.

கிழக்கத்தியக் கலாச்சாரத்தில் பிறந்து மேற்கத்தியக் கலாச்சாரத்தில் வாழ நேர்ந்த அதுவும் அகதியாய் வாழ நேர்ந்த பெண்ணின் மன உணர்வுகளை “அமெரிக்கக்காரி” சிறுகதை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

இன்று சமூகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. புறச் சூழலும் குடியை ஊக்கப்படுத்துகிற மாதிரியே உள்ளது. குடி நோயால் பாதிக்கப்பட்டவரே தன் தவறு உணர்ந்து, குடி நோயை சிகிச்சை மூலம் சீர்படுத்திக்கொண்டு, தன் சொந்த அனுபவத்தைக்கொண்டு சமூகத்தை அல்லது குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சீர்படுத்த முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது.

குடி ஒரு நோய் என்பதை விளக்க ‘வருகை’ சிறுகதையைச் சான்றாகக் கூறலாம்.

சா.ரு. மணிவில்லன்,சென்னை

திருமங்கலம் திருவிளையாடல் என்னும் வரலாறு காணாத நிகழ்வுக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியாத தேர்தல் ஆணையம், வருண் காந்தி விவகாரத்தில் அறிவுறுத்தியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது இது போன்ற உயர்நிலை நிர்வாகத்திற்கும் பொருந்தும்.

பொம்மைகள் வசிக்கும் உலகம், வளரும் சமுதாயத்தின் வளங்குறித்த புதிய பார்வையாக உள்ளது.

அநாமதேயனின் ‘யாழ்ப்பாணக் குறிப்பேடு’ நெஞ்சை ரணமாக்கியது. புண்ணை முள்ளால் குத்திக் குத்திக்கிளறும் எந்த ஒரு மனிதனும் புத்தன்வழி நடப்பவனல்ல. இது போன்ற அவலங்கள் ஹிட்லர் காலத்தில்கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே! அக்கிரமமான அடக்குமுறைகளால் போராட்ட உணர்வு மங்கியது போன்று தோன்றலாம். ஆனால் அவர்கள் போராடக் காரணமாகயிருந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஒருபோதும் மங்காது. இந்நிலை ஈழத் தமிழர்களுக்கு உலகளாவிய அளவில் புதிய கவனத்தையும் சலனமற்ற ஆதரவையும் உருவாக்கி உள்ளது என்பதே உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் உலகத் தமிழர்களே ஒன்று சேருங்கள் என்ற அறைகூவலுக்கு வலுவூட்டியுள்ளது நிதர்சனம். தமிழ் ஈழம் மலர்வது காலத்தின் கட்டாயம்.

கா. இர. குப்புதாசு, செஞ்சி

காலச்சுவடு மே மாத இதழின் அட்டைப்படம் மனிதநேயம் கொண்டவர்களுக்குக் கண்ணீரை வரவழைத்துவிடுவதாக இருந்தது. இறந்து கிடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது இலங்கைத் தமிழர்களின் அவல நிலை நாகசாகி, ஹிரோஷிமாவைவிடக் கொடுமையானது. இதற்கெல்லாம் இந்த நாட்டை ஆளும் காங்கிரஸ், கபட நாடகமாடும் தி.மு.க அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

காங்கிரஸ் இயக்கம் தமிழ்நாட்டில் வேரோடு பிடுங்கப்பட வேண்டிய இயக்கம். அவர்களுக்குக் கதர் ஆடை அணிவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. திமுக தலைவர் தன் பதவி, குடும்பத்தைக் காப்பாற்ற எத்தனை தமிழன் இறந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்குச் சென்றுவிட்டார். தன் பதவி, தனது ஆட்சியை ராஜினாமா செய்திருந் தால் ஓர் ஒப்பற்ற தலைவராக மதிக்கப்பட்டிருப்பார்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

“யாரெடுத்துச் சொல்வார்?” கட்டுரையின் முதல் பத்தியைப் பன்முறை படித்தேன். கவித்துவமான நடை. நீள வாக்கியத்தில் ஏதேனும் ஒரு பிழை ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். ஐந்தாவது வரியில் ‘சிதைந்தும்’ என்றிருக்க வேண்டியது ‘சிதைந்ததும்’ வந்திருப்பது பிழையாக இருக்கும். மொழியைப் பயன்படுத்தும் போது வாசகனும் மூளையைப் பயன்படுத்த வேண்டிய நிலையான உரைநடை எளிதில் கைவரப் பெறாது.

சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்குத் தாம் பாடிய இரங்கற்பாவை வாசித்து ஜெயலலிதாவுக்குப் பதிலளித்துவிட்டதாக மனநிறைவு கொள்ளும் கருணாநிதி கடந்த ஏழு மாதங்களில் எத்தனை ஆயிரம் இரங்கற்பாக்களை எழுதியிருக்க வேண்டும். சென்னையில் நடந்த பெண்களின் போராட்டம் கருணா நிதியின் கண்களைத் திறக்கவைக்கும் வலிமையற்றுப் போனதற்குக் காரணம் அவருடைய இதயத்தில் நாடு இருந்த இடத்தைக் குடும்பம் பிடித்துக்கொண்டதுதான்! நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட அஞ்சாத பழைய கருணாநிதியை இன்றைய கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே மனம் கூசுகிறது.

தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சி அமைத்திருந்தால் “இந்திரா அம்மையாரின் இளைய பேரனே வருக, இனிதான ஆட்சி தருக” என வரவேற்புக் கூறியிருப்பார் வருண் காந்திக்கு! அலெக்சாண்டர், போரஸ் எனப் பேசும் நவீன அம்பி கருணா நிதி, நேரு குடும்பத்துக்குப் பட்டுள்ள கடன் தீர்க்கவேனும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு நீடு வாழ வேண்டும்!

தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு

“பொம்மைகள் வசிக்கும் உலகம்” இன்றைய கல்விமுறையின் அவலத்தை விளக்குகிறது. பெரும்பாலான ‘நல்ல’ பள்ளிகள் சிறைக்கூடங்களாகவே உள்ளன. இதற்கான முழுமுதல் காரணம் பெற்றோர்களே. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறன் உண்டு. அதனைக் கண்டறிந்து வளர்த்தலே கல்வியின் பணி. ஆனால் நம் நாட்டில் பெற்றோர்களின் “ஆசைகள்” குழந்தைகளிடம் திணிக்கப்படுகின்றன. முதலாளிக்குப் பணம் முக்கியம், பெயர் முக்கியம், நூறு விழுக்காடுகள் மிகமிக முக்கியம். பெற்றோர்களுக்குக் குழந்தை முக்கியம் என்று உணர்த்துவது யார்?

வேறுபாடுகளைக் களைய வேண்டிய கல்வியே வேறுபாட்டை வளர்க்கும் மூலதனமாக உள்ளது தான் வியப்பு. ஆங்கிலவழிக் கல்வி, தாய்மொழிவழிக் கல்வி, கிராமப்புறத்தில் படித்த மாணவர், நகர்ப்புறத்தில் படித்த மாணவர், சுயநிதிப் பள்ளிகளில் படித்தோர், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளியில் படித்தோர் என இளம் நெஞ்சங்களில் வேற்றுமை விதைகளைத் தூவுவது இன்றைய கல்விமுறையே. இலவசங்கள் பலவற்றை ஒழித்துவிட்டுத் தரமான, சரியான இலவசக் கல்வி எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்வதுதான் ஒரு நல்லரசின் தலையாய பணி. இதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. தன்னை ஒரு “டாக்டரின்” தந்தை “இஞ்சினீய”ரின் தாய் என அடையாளப்படுத்திக்கொண்டு பொய் முகங்களுக்கு ஆசைப்படும் பெற்றோர்களுக்குக் குழந்தைகளின் மனநலம் பற்றி என்ன கவலை? அவர்களின் “தனித்திறன்” பற்றிக் கண்டறிய நேரம் ஏது?

இரா. சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை

மே இதழில் வெளிவந்த அகமுடை நம்பியின் எதிர்வினை குறித்து.

திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்ப்பதில்லை என்பதற்குத்தான் பார்ப்பனர்கள் பற்றிய ‘அடைமொழிகள்’ குறிப்பிடப்பட்டனவே தவிர அதைச் சொன்னது அண்ணாதுரையா, ஆபிதுபாவா என்பதல்ல சாரம். ஆரிய இனம், திராவிட இனம் என்று இரு வேறு இனங்கள் இருப்பதாகச் சொல்வது பகுத்தறிவா என்பதுவே வினா.

சேர, சோழ, பாண்டியர்கள் பணிவுடன் நடந்துகொண்ட பல விவரங்கள் இருக்கையில், “பெரியோரை வியத்தலுமிலமே, சிறியோரையிகழ்தல தனினும் இலமே” என்ற மரபு இருக்கையில், ஒரேயொரு குறிப்பைச் சொல்லி, பார்ப்பனர்களைத் தமிழ் மக்கள் கேலிக்குரியவர்களாக, இழிவாக நடத்தினர் என்பதாக ஒரு பொய்யைச் சொன்ன அண்ணாதுரையின் ஆரிய மாயை ஆராய்ச்சிக் கட்டு ரையா என்பதுதான் வினாவே தவிர, மூவேந்தர்கள் ஆரிய மாயைக்கு ஆட்பட்டவர்களா என்பதல்ல. பதில் இல்லாதவர்கள் திசைதிருப்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

எம்.எஸ். இராமசாமி ஐயங்கார் அல்லது பி.டி. சீனிவாச ஐயங்கார் சொல்லிவிட்டால் அது சரி என்றாகிவிடுமா? அதற்கு ஆதாரங்களே தேவையில்லை என்பதுதான் பகுத்தறிவா? அவர்களின் ஆய்வுகளைக் கடந்து எத்தனை ஆய்வுகள் வந்திருக்கின்றன என்பது நம்பிக்குத் தெரியுமா? நான் குறிப்பிட்டிருந்த கால்டு வெல்லின் குறிப்புகள் இன்றைக்கு அசைக்க முடியாதபடிக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பதாவது நம்பிக்குத் தெரியுமா?

மனுதர்மம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் வாய்க்கு வந்ததைப் பேசுவது திராவிட இயக்க ஆதரவாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது தெரிந்துதான் ‘மனு பற்றிப் பல பரிமாணங்களில் ஆய்வுகள் தேவைப்படுகின்றன’ என்று சொல்லியிருந்தேன்.
ஒரு கடவுள், அதுவும் ஊன் உண்ணாத கடவுள் என்று அண்ணாதுரை சொல்லியது பற்றி அமைதி காக்கும் அகமுடைநம்பி அதுதான் பகுத்தறிவு என்று மௌனத்தின் மூலம் சைவத்தை ஆதரிக்கிறாரா?

ப்ரவாஹன், சென்னை

திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு, மலர்மன்னன் எழுதிய எதிர்வினை தொடர்பாக:

திருநாவுக்கரசின் எகத்தாளமான விமரிசனத்திற்கு மலர்மன்னன் மிகவும் அமைதியாக, ஆனால் பதில் கொடுக்க முடியாதபடி ஆணித்தரமாக எழுதிய எதிர்வினையிலிருந்து பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஜனவரி 2009, காலச்சுவடில்) மலர்மன்னன் எழுதிய அறியப்பட வேண்டிய அண்ணா கட்டுரையை மீண்டும் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. அதைப் படித்ததில் ஒரு முக்கியமான விஷயம் கவனத்திற்கு வந்தது. சார்பு எதுவும் இருக்கக் கூடாது என்று அதில் மலர்மன்னன் தெரிவித்த கருத்து ஆய்வாளருக்குத் தானேயன்றி ஆய்வுக்குரியவருக்கு அல்ல. அதாவது திருநாவுக்கரசு சார்பின்றி அண்ணாவைப் பற்றி எழுதியிருந்தால் சிறப்பாக இருக்கும் என்றுதான் மலர்மன்னன் சொல்லியிருக்கிறாரே தவிர, அண்ணாவைச் சார்பற்றவராகப் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் திருநாவுக்கரசு இதனைத் திசைதிருப்பி, சார்பற்றவரல்ல அண்ணா என்று அனாவசியமாகப் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். இந்தத் திசைதிருப்பலை மலர்மன்னன் தன் எதிர்வினையில் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தால் திருநாவுக்கரசுவின் விமர்சனம் எடுத்த எடுப்பிலேயே அடிபட்டுப் போயிருக்கும். ஆனால் மலர்மன்னன் இவ்வாறு செய்யாததும் ஒரு விதத்தில் நல்லதுதான். அண்ணாவைப் பற்றியும் அண்ணாதுரை - ஈவேரா உறவு பற்றியும் மேலும் பல திடுக்கிடும் தகவல்களைப் பெற முடிந்துள்ளது அல்லவா?

பின் குறிப்பு: மேலும் ‘அறியப்பட வேண்டிய அண்ணா’ கட்டுரையில் மலர்மன்னன் தெரிவித்துள்ள அடிப்படையான தகவல்களைத் திருநாவுக்கரசு மறுக்கவும் இல்லை. அண்ணாதுரை பிராமணர்களைத் திமுகவில் சேர்த்துக்கொள்ள விரும்பியதை ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணா சரணவபெலகொலா கோமட்டீசுவரனார் சிலை கண்டு போற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். உலக வரலாறு தெரிந்த அண்ணா ராபர்ட் புரூஸ் கதையைச் சொல்லி சிலந்தி விடாமுயற்சியுடன் மனம் தளராமல் வலை பின்னியதைச் சொல்லியிருக்கலாமே.

அந்திமக் கால அண்ணாதுரை திராவிட இயக்கத்திலிருந்து விலகிவரத் தொடங்கிவிட்டார் என்பதைத் தான் இதிலிருந்து கணிக்க வேண்டியுள்ளது. அவர் முற்றிலுமாக மனமாற்றம் அடைவதற்குள் மரணம் நேர்ந்துவிட்டது அவருக்கு.

கருணாநிதி தனக்கு ஏதேனும் சங்கடமான பதில் சொல்ல முடியாத சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் தன்னைச் சூத்திரன் என்று சொல்லிக்கொள்வார். அண்ணாதுரை அவ்வாறு சொல்லிக்கொண்டதில்லை என மலர்மன்னன் தெரிவித்த தகவலையும் திருநாவுக்கரசால் மறுக்க இயலவில்லை. கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் ஆலயம் நிறுவுவதை அண்ணாதுரை ஆதரித்தார் என்னும் தகவலையும் திருநாவுக்கரசு மறுக்கவில்லை. அவராகவே இல்லாத ஒரு விஷயத்தை முன் வைத்து ஏராளமாக எழுதியிருக்கிறார். இதுதான் திராவிட இயக்க ஆய்வாளரின் ஆய்வுத் திறமை!

எஸ். பி. செங்கோடன், சென்னை

‘கருத்தியல் (ideology) என்பது ஒரு வகையான மென்றோல். அது அனைத்தையும் உள்ளடக்கியது. ஒரு வலைபோல (அ) மூடிய இமைபோல நம்மை மூடி இருக்கும் அந்தத் தோல் நாம் கட்டாயம் அறிய வேண்டிய ஒன்றாகும்’ என்ற பெண்ணியவாதியான ஹெலன் ஷீக்ஸுவின் கருத்தின்படி, பெண்ணியம் என்ற கருத்தியலின் புரிதலற்ற நிலையில் எழும் விவாதங்களே முக்தார் மாய் பெண்ணியவாதியா? இல்லையா? என்பதை, கவிதாவின் கட்டுரை விளக்கியுள்ளது. திருமணம் செய்யாமலிருப்பது, தன் விருப்பப்படி ஆடைக் குறைப்பு என்ற கருத்தை முன்வைத்துத் தங்களைப் பெண்ணியவாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளும் சிலராலே பெண்ணியம் என்ற கருத்தியலைப் பற்றிய தவறான புரிதல் சமுதாயத்தில் நிலவிவருகின்றது. இவ்வாறாக, தங்களைப் பெண்ணியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலர் படைப்பில் மட்டுமே தங்களது கருத்துகளை வெளியிட்டுப் பொது வாழ்வில் செயல்படத் தயங்குகின்றனர். சைமன்-டி-போவார், ஹெலன் ஷீக்ஸ், பெட்டி பிரைடன் போன்ற பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்ட பெண்ணியக் கருத்தியல், சிலரால் திசை மாறிச் செல்கின்றது. முக்தார் மாய் போன்று இவர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடுவார்களா என்பது சந்தேகமே? திருமண வாழ்க்கையில் நுழையும் பெண், குடும்பச் சூழ்நிலையிலும் பொது நிலையிலும் ஈடுபட்டு பெண் விடுதலைக்காகப் போராடும் பெண்ணே உண்மையான பெண்ணியவாதியாவார். இதனை முக்தார்மாய் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.

கிருத்திகா சுந்தர், நெல்லை

உள்ளடக்கம்